இந்த மரத்தில் அப்படி என்ன அதிசயம் என்றுதானே கேட்கிறீர்கள்? உயரம் என்று எடுத்துக் கொண்டால் 16 முதல் 98 அடி வரை தான் இருக்கும். செக்வோவியா - ஆஸ்திரேலிய நாட்டு யூக்கலிப்டஸ் மரங்கள் 400 அடிவரை உயரமானவை. மரத்தின் குறுக்களவைக் (விட்டம்) கணக்கிட்டால் 23முதல் 36 அடிவரை உள்ளது. பாவோபாப்தான் வேறு எந்த மரமும் கிடையாது. அதற்கிணையாக மரத்தின் சுற்றளவு 154 அடி வரை உள்ளது. இந்தப் பார்வையில் பார்க்கும்போது பாவோபாப் மரங்கள்தான் உலகின் மிகப் பெரிய மரங்கள்.

tree-255பேரதிசயம் என்னவென்றால் அடிமரத்தின் உட்பகுதி மூங்கில்போல் வெற்றிடம் கொண்ட தாகவும் நீர் நிறைந்தும் இருக்கும். எவ்வளவு தண்ணீர் தெரியுமா? பெரியதோர் பாவோபாப் மரத்தின் கொள்ளளவு 1,20,000 லிட்டர்கள்! மேலும் கடும் கோடைக் காலத்தில் ஒரு சொட்டு நீர் கூட ஆவியாக வெளியேறாதவாறு பாதுகாப் பாக வைக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் வேறு பயனுள்ள சத்துக்களும் உண்டு. வறட்சிக் காலங் களில் மடகாஸ்கர் - ஆப்பிரிக்க நாட்டு ஏழை மக்கள் இதன் நீரைப் பருகிப் பயன்பெறுவர். மேல்மரம் காய்ந்துவிட்ட நிலையில் பல கிராமங் களில் அடிமரத்தை நீர்த்தேக்கத் தொட்டியாகப் பயன்படுத்துகின்றனர்.

லத்தீன் மொழியில் இதை ஆடன்சோனியா என்று அழைக்கிறார்கள். இந்த மரத்தை மடகாஸ் கர் நாட்டில் முதன் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஆடன்சன் என்ற பெயர் கொண்ட விஞ் ஞானி கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்தி னார். அவரை கௌரவிக்கும் விதத்தில் இம் மரத்திற்கு லத்தீன் மொழியில் ஆடன்சோனியா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆடன்சோனியா அதாவது பாவோபாப்பில் ஏழுவகை (ஸ்பீஷிஸ்) மரங்கள் உண்டு. இவற்றில் ஆறுவகை மரங்கள் மடகாஸ்கர் நாட்டிற்குரியவை. இந்த ஆறில் ஒரு வகை மட்டும் ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப் படுகிறது. ஏழாவது வகை ஆஸ்திரேலியா நாட்டிற்குரியது.

பாவோபாப் என்பது இந்த வகை மரங்களின் பொதுவான பெயர். இம்மரத்தை போஆப், போவாபோவா, தலைகீழ் மரம், குரங்கு-ரொட்டி மரம் என்றெல்லாமும் அழைக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவின் லிம்போமா மாகா ணத்தில் உள்ள க்ளென்கோபர்வோபாப் உலகின் மிகப் பெரிய மரமாகக் கருதப்படுகிறது. இதன் சுற்றளவு 47 மீட்டர் (154 அடி). சமீப காலத்தில் இம்மரம் இரண்டாகப் பிளந்து விட்டது. தென் ஆப்பிரிக்காவின் சன்லாண்ட் பகுதியில் அமைந் துள்ள பாவோபாப் மரம் இப்போது உலகின் மிகப்பெரிய மரமாகக் கருதப்படுகிறது. இதன் குறுக்களவு 10.64 மீட்டர், சுற்றளவு 33.4 மீட்டர் (130 அடி).

பல்வேறு பாவோபாப் மரங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவையாகக் கருதப்படுகின்றன. ஏனைய மரங்களில் அவற்றின் வயதைக் குறிக்கும் வளர்ச்சி வட்டங்கள் (க்ரோத் ரிங்ஸ்) போல பாவோபாபில் கிடையாது. ஆனால் கார்பன் டேட்டிங் முறையில் இவற்றின் வயதைக் கணிக்க இயலும்.

மடகாஸ்கர் நாட்டின் காடுகளில் ஆடன் சோனியா மடகாஸ்கரியன்சிஸ் மற்றும் ஆடன் சோனியா ரூப்ரோஸ் ட்ரைப்பா வகை மரங்கள் காணப்படுகின்றன. கடற்கரையை ஒட்டிய பகுதி களில் ஆடன்சோனியா டிஜிட்டாட்டா வகை மரங்கள் வளர்கின்றன. இம்மரத்தின் பல்வேறு பாகங்கள் பயன்களைத் தரவல்லன.

இலைகள்: இவற்றைச் சமைத்துக் கீரை வகை யைப் போல் சாப்பிடலாம். ஆப்பிரிக்க நாடு களாகிய மலாவி, ஜிம்பாப்வே, சஹேல் நாடுகளில் இலை பச்சையாகவும், உலர வைக்கப்பட்ட இலை களைப் பொடி செய்தும் உணவாக உண்கின்றனர். நைஜீரியா நாட்டில் பாவோபாப் இலைகளை கூக்கா என்று குறிப்பிடுகிறார்கள். இலைகளி லிருந்து கூக்கா சூப் தயாரித்து சாப்பிடுகிறார்கள்.

பழம்: ஆரஞ்சுப் பழத்தைக் காட்டிலும் கூடு தலான அளவில் ‘சி’ வைட்டமின் நிறைந்தது பாவோபாப் பழம். கால்ஷியம் சத்து பசும்பாலைக் காட்டிலும் கூடுதல். குரங்கு-ரொட்டி அல்லது புளிக்கும் பழம் என்று அழைக்கப்படும் இப்பழத் தின் விதை நீக்கிய சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் பழத்தின் சதைப் பகுதியைப் பாலிலோ கஞ்சியிலோ கலந்தும் சாப்பிடு கின்றனர். மலாவி நாட்டில் இப்பழத்திலிருந்து பழச்சாறு தயாரிக்கப்படுகிறது. இப்பழத்தை ஜிம் பாப்வே நாட்டின் மாவுயு என்று அழைக்கின்றனர். பழம் அப்படியே சாப்பிடப்படுகிறது. இப்பழத்தி லிருந்து மருந்தாகப் பயன்படும் களிம்பும் தயாரிக் கப்படுகிறது. பழத்தில் சர்க்கரை தூவி வண்ணம் (பெரும்பாலும் சிவப்பு) கொடுத்து இனிப்பு அல்லது புளிப்பு மிட்டாயாகவும் விற்கப்படுகிறது. இந்த மிட்டாய்க்கு உபுயு என்று பெயர்.

விதைகள்: சூப்பை கெட்டியாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஊறவைக்கப்பட்ட விதைகளை வறுத்துச் சாப்பிடுகின்றனர். விதை களிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு சமை யலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மரத்திலிருந்து நார், வண்ணம் மற்றும் எரிபொருள் கிடைக் கின்றன. இதன் நார் மிகவும் கெட்டியானது.

காய வைக்கப்பட்ட பழத்தின் கூழ் அப்படியே உணவாக உண்ணப்படுகிறது - அல்லது கஞ்சி சற்று ஆறிவரும் போது அத்துடன் கலந்து சாப் பிடப்படுகிறது. இப்படிச் செய்வதால் அதிலுள்ள வைட்டமின்கள் அழிவதில்லை. இதைப் பொடி செய்தும் ஜூஸ் தயாரித்துச் சாப்பிடலாம். டான்சானியா நாட்டில் கரும்புச் சாறுடன் பாவோபாப் பழச்சாறைக் கலந்து பீர் தயாரிக் கிறார்கள்.

காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்தால் பழத்தின் கூழ் வெகு காலம் கெடாமல் இருக்கும். இதிலிருந்து குளிர் பானங்கள் தயாரிக் கலாம். சோடியம் மெட்டா சல்பைட் தூளைப் பயன்படுத்தி கூழைக் கெடாமல் பாதுகாக்க இயலும். கூழைத்தூள் பக்குவத்தில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப் போகாதவாறு பாது காப்பாக வைக்கலாம்.

சமீப காலம் வரை ஐரோப்பிய யூனியனில் பாவோபாப் பழ விற்பனை தடை செய்யப் பட்டிருந்தது. 2008-ஆம் ஆண்டு ஜூலை முதல் பாவோபாப்பின் உலர்த்தப்பட்ட பழக்கூழ் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. லாபநோக்கமில்லாத ஒரு தொண்டு நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் 25 லட்சம் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் பாவோபாப் பழம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் பாவோபாப்: ஆஸ்தி ரேலியா நாட்டில் பாவோபாப் பழங்குடி மக் களால் உணவுக்கும் தண்ணீருக்கும் பயன்படுத்தப் பட்டு வந்தது. இலைகள் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டன. சுரைக்காய் போல் கெட்டியான தோல் கொண்ட பழத்தின் மீது சாயம் பூசி அலங் காரத்திற்கும் பயன்படுத்தினர். சிறிய துண்டுகளை ஆபரணமாகவும் அணிந்து வந்தனர்.

வேறு சில தகவல்கள்:

1.    தண்ணீர்த் தொட்டி - வீடு - மதுக்கடை, சிறைச்சாலை:

பாவோபாபின் அடிமரம் சூடான் நாட்டில் தண்ணீர்த் தொட்டியாக (வாட்டர் டாங்க்) பயன் படுத்தப்படுகிறது. பாவோபாப் மரத்தைச் சிலர் வசிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். எர்ன்ஸ்ட் ஹெக்கல் என்ற பெயர் கொண்ட நூலாசிரியர் பாவோபாப் மரம் 5, 000 ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியது என்கிறார். தென் ஆப்பிரிக்காவின் லிம்போப்போ பகுதியில் உள்ள ஸன்லாண்ட் பண்ணையில் பெரியதோர் பாவோபாப் மரத் தைக் குடைந்து 72 அடி உயரம் 155 அடி சுற்றளவு கொண்ட இடத்தில் மதுபானக் கடை வைக்கப் பட்டுள்ளது. கார்பன்டேட்டிங்படி இம்மரம் 6,000 ஆண்டு தொன்மையானது என்று கணிக்கப் பட்டுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி நகரருகே இருந்த பெரியதோர் பாவோபாபின் அடிமரத் தைச் செதுக்கிச் சிறைச்சாலையே உருவாக்கப் பட்டிருந்தது. இது நிகழ்ந்தது 1890களில். இன்றும் அந்த மரம் ஒரு அரும் பொருட்காட்சியாக (மியூசியம்) மாறி மக்களைக் கவர்ந்து வருகிறது.

இதன் விசித்திரமான தோற்றத்தின் காரண மாக அரபு நாடுகளில் இப்படி ஒரு மரபுவழிக் கதை உண்டு. ஒரு பேய் இந்த மரத்தை வேருடன் பிடுங்கித் தலைகீழாக - அதாவது கிளைகளை பூமிக்கடியிலும் வேர்ப்பகுதியைப் பூமிக்கு மேலாகவும் நட்டு விட்டதாம்.

அமெரிக்க நாட்டிலும் ப்ளோரிடா போன்று சற்று வெப்பமான பகுதிகளில் பாவோபாப் மரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவின் மலைப் பகுதிகளில் இம்மரம் காணப்படுகிறது.

இந்தியாவில் பாவோபாப்: இந்தியாவில் கர் நாடகா மாநிலத்தில் சாவனூரில் 50 முதல் 60 அடி வரை சுற்றளவு (14-18மீட்டர்) கொண்ட மூன்று மரங்கள் உள்ளன. இந்த மரங்களும் 5,000 ஆண்டு தொன்மையானவை.

பெங்களூரில் உள்ள பிரசித்தி பெற்ற லால் பாக் தோட்டத்தில் பாவோபாப் மரத்தைக் காண முடியும். இந்தியாவின் வேறு பகுதிகளிலும் இம் மரம் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. சரியான தகவல் நம்மிடம் இல்லை.

தமிழகத்தில் வனத்துறையினர் கொடுத்த தகவல்படி ராஜபாளையத்தில் ஒரு மரம் உள்ளது என்று சொல்கின்றனர். வைகை அணை அருகே அமைந்துள்ள வனத்துறைப் பயிற்சிக் கல்லூரியின் தோட்டத்தில் 7 வயதுள்ள பாவோபாப் மரங்கள் இரண்டு உள்ளன. ஒரு மரத்தின் புகைப்படத்தை இங்கே தருகிறோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சி மடத்தில் பழைய மரம் ஒன்று உள்ளது. சென்னை நகரைப் பொருத்தவரை அடையாறில் உள்ள பிரசித்தி பெற்ற தியோசாபிக்கல் சொசைட் டியில் இரண்டு மரங்கள் உள்ளன. ஆந்திர மஹிளாசபா மற்றும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தலா ஒரு மரம் உள்ளது. நந்தனம் ஹவுசிங் போர்ட் அலுவலகத்திற்குப் பின்புறம் ஒரு மரம் உள்ளது. இன்னும் பல இடங்களில் இம்மரம் இருக்கக் கூடும். நமக்குத் தகவல் இல்லை.

இந்த மரத்தின் பல்வேறு தோற்றங்கள்பற்றி அறிய விரும்புவோர் இண்டர்நெட் வசதி இருந்தால் விக்கிப்பீடியாவில் காணலாம்.

(உங்கள் நூலகம் டிசம்பர் 2011 இதழில் வெளியானது)

Pin It