முனைவர் சந்திரன் கடுகின் காரம் என்கிற தலைப்பில் 100 கதைகளை எழுதி தொகுத்து புத்தகமாகியுள்ளார். அவை அனைத்தும் அளவில் சிறுத்தாலும் கருத்தில் குறையாத கதைகளாக நிறைகின்றன. என்.சி.பி.ஹெச். நிறுவனம் இந்த நூலை அழகுற பதிப்பித்து உள்ளது.

kadukin kaaramபொதுவாக, கதை சொல்வது உலகப்பரவலான ஒன்று போல் தோன்றலாம். ஆனால், சொல்லிப் பார்த்தால்தான் தெரியும், கதைகளை உற்பத்தி செய்வதன் பின்னிருக்கும் கடினம். சிறு வயதிலிருந்து, தமிழ்ச்சமூக வாழ்வு என்பது முற்றிலும் கதைகளால் பின்னப்பட்டது. கதைகளை அகற்றிவிட்டு ஒரு பால்யகாலத்தை யாராலும் கற்பனை செய்ய முடியாது. பண்டைய பழக்கவழக்கங்களில் தொடங்கி, இன்றைய கல்வி முறைக்குள் தன் செல்வாக்கை இழந்துவிடாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் வெகுசில அம்சங்களில் கதை சொல்லுவதும் ஒன்று.

கல்விப்புலத்தில் கதைகளுக்கான மரியாதை அதிகம். மாணவர்கள் மனதில் 'பிடித்தமான ஆசிரியர்' என்று ஒருவர் மாறுவதற்கு முதன்மைச் குணச்சித்திரமாக முன்வைப்பது ஆசிரியரின் கதைசொல்லும் திறனைத்தான் . நூற்றாண்டு கண்டு மிளிர்ந்து கொண்டிருக்கும் மதுரையின் பாரம்பரியமிக்க , நான் உள்பட பலரும் பயின்று வந்திருக்கும் எங்கள் பள்ளியில் பயின்று தற்போது ஆசிரியராகப் பணிபுரியும் முனைவர் ஞா.சந்திரன் நேர்த்தியான கதைசொல்லி என்பது இந்தப் புத்தகத்தின் மூலமாக நன்கு புலப்படுகிறது.

நேர்த்தியான தலைப்புகள், சுருக்கமான கதைத் திருப்பங்கள், ஒவ்வொரு கதையிலிருந்தும் வாழ்வுக்கு எடுத்துச் செல்வதற்கான குன்றாத வைர நிகர் விஷயங்கள் எனப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார். தன் கதைகளை. மனிதனின் ஆதார நற்குணங்களுக்கு வாழ்வு பல பரிசுகளை தனக்குள் ஒளித்து வைத்திருப்பதைப் போலவே பொறாமை போன்ற அவனது கீழ்மைகளுக்காக காலமெல்லாம் தூக்கித் கிடப்பதற்கான தண்டனைகளையும் தயாரித்துத் தருகிறது என்பதை ஆணித்தரமாக விளக்குகிற பல கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, கூழும் குச்சியும் என்கிற கதை அப்படிப்பட்டது. அதன் முடிவில் மனைவியின் அறிவற்ற தன்மை கணவன் காலமெல்லாம் தேடிக் கொண்டிருந்த அரிய மூலப் பொருளை நெருப்பிலிட்டு வீணடித்து விடுவதை எடுத்துச் சொல்கிறது. சிந்தித்தால் பலர் வாழ்விலும் கூழும் குச்சியும் வந்து கொண்டே இருக்கின்றன என்பதை உணரலாம்.

மனிதனின் நினைவுத்திறன், எழுத்தும் அச்சும் கண்டறியப்படும்வரை வாய்மொழி இலக்கியங்களாகவே சகலத்தையும் கடத்திவந்தது. பதிப்பிக்கப்படும்வரை பல நூறாண்டுகால நினைவாற்றலின் மூலமாகச் சேமித்து வைக்கப்பட்ட கலை வடிவங்களுக்கு முன்னோர்களை நோக்கி நன்றி சொல்வது நமது கடமை.

கதைகளின் மூலமாகத்தான் காத்திரம் மிகுந்த பலவும் தப்பிப் பிழைத்தன என்பது முழுமுதல் உண்மை என்பதைப் போலவே, காலம் கடந்து பாய்ந்துகொண்டிருக்கும் வெள்ள நிரந்தரமாகவே சந்திரனின் இந்தத் தொகுப்புக் கதைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஏற்கெனவே எல்லாமே சொல்லப்பட்ட கதைகள் என்ற கூற்று எப்போதும் உண்டு. இருப்பவற்றை மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டிருப்பது ஒருபுறம். இல்லாப் புதியவற்றைக் கற்பனித்துக் காண்பது ஒருபுறம், என்னைப் பொறுத்தமட்டில் கதை என்பது கலைப்பூர்வமான சகமனித வாஞ்சை, ஒரு மனிதன் சமூகத்தின் மேல் தெளிக்கும் ஆதுரம். கூட்டுப் பிரார்த்தனைக்கு ஒப்பான தனிநபர் மெனக்கெடல். அப்படித்தான் கதை ஆசிரியர் பல கதைகளைச் செதுக்க முனைகிறார்.

கடவுளும் லாட்டரியும் என்கிற கதை இந்த நூற்றாண்டின் தற்கணத்தைக் கதைப்படுத்தினாற் போல் மினுங்குகிறது. கடைசி வரை தனக்கு லாட்டரி சீட்டில் பரிசு விழாததற்காகக் கடவுளை நொந்து கொள்கிறான் ஒருவன். அவன் முன் தோன்றும் கடவுள் அவனிடம்" நீ ஒரு முறையாவது லாட்டரி சீட்டு வாங்கினால் தானே அப்பா என்னால் உனக்கு உதவ முடியும்?" என்று கேட்டு மறைகிறார்.

வாழைப்பழத்தைத் தந்தால் போது அது யாராவது உரித்து அதை ஊட்டியும் விட வேண்டும் என்று எதிர்பார்க்கும் குணம் மிகுந்த பலரும் பெருகிக் கிடக்கும் காலத்தை சவுக்கால் அடிக்கும் கதை இது.

வலுத்த கதைகள் வாழும் என்பது நியதி. சொல்லும் திறனும் எழுதும் திறனும் மிகுந்து ஒளிர்வது இந்தக் கதைகளின் சிறப்பு. ஆழ்ந்து சிந்திப்பதற்கான முடிச்சுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இக்கதைகள் எளிதில் எடுத்துச்சொல்லுகிற இயல்போடும் இருப்பது சிறப்பு. அந்த வகையில், இந்தத் தொகுப்பில் காணப்படுகிற சந்திரனின் பல கதைகள் கட்டி வெல்லங்களைப் போல் மட்டுமல்லாது நாட்டுச்சர்க்கரை போலும் இனிக்கின்றன.ஏற்கெனவே நன்கு அறிந்த கதைகளை முன்பு பார்த்திராத இன்னொரு கோணத்தில் காணத்தருவதன் மூலமாக புதிய கதைகளாக மாற்றிவிடும் வல்லமை சந்திரனுக்கு வாய்த்திருக்கிறது. தேர்ந்த மாயாஜால நிபுணர்கள் கையிலிருக்கிற ஒரே பொருளை விதவிதமான பொருட்களாக மாற்றுவது போல் உருமாற்றம் பெறுகிற அத்தகைய கதைகள் ஈர்க்கின்றன.

அதிர்ஷ்டமா துரதிஷ்டமா என்கிற தலைப்பை கேள்வியாக்கி அந்தக் கதை முடிகிறது. அந்தக் கேள்வி பலரும் தங்களுக்குள் கேட்டுக் கொள்வதற்கானது. உண்மை எது என்கிற கதையும் அதன் புத்திசாலித்தனமான அணுகுமுறைக்காக ரசிக்க வைக்கிறது. சந்திரனின் பெரிய பலம் இந்தக் கதைகளில் வரக்கூடிய வசனப் பகுதிகள் நடைமுறை பேச்சு வழக்கில் அமைத்து இருப்பது. ஒருவேளை செந்தமிழில் வசனங்கள் இருந்திருக்குமேயானால் கொஞ்சம் செயற்கை நெடி தட்டி இருக்கும் என்பது என் கருத்து.

குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்காகவும் இவற்றில் பல கதைகள் விஷயதானம் அளிப்பது கூடுதல் சிறப்பாகிறது. சொல்லப்போனால், 2000-க்குப் பின்னதான தலைமுறையில் குழந்தைகளோடு பெரியவர்களும் கதைகளைக் கேட்கவேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். காணொளிகளிலேயே குவிந்து கிடக்காமல் காகிதங்களை நோக்கித் திருப்புகிற நற்காரியத்தையும் இக்கதைகள் மேற்கொள்ளக்கூடும். அதற்கு சந்திரன் இவற்றில் சில கதைகளை காணொளிகளாக்கி, கவனம் திருப்பவும் முயலலாம்.

இந்தக் தொகுப்பில் என்னை மிக மிகக் கவர்ந்த கதை என "தேங்காய், வாழைப்பழம், கற்பூரம்" என்ற தலைப்பில் ஆன கதையைச் சொல்லுவேன். ஒரு புத்தகத்தை வாசிக்கும் நிறைந்த தருணம் அஃது. இந்தக் கதையை என் மனம் அப்படியே முழுவதுமாக மனனம் செய்து வைத்துக் கொண்டது. ஞானப் பிழிச்சலும் தத்துவச் செறிவும் நெடுங்கால வாசிப்பின் பயனாக மனத்தில் நிறைந்து ததும்பினால் ஒழிய இத்தகைய கதைகளை எழுத முடியாது.

இனிய நண்பர் முனைவர் சந்திரன் இன்னும் பல கதைத் தொகுதிகளை இனியும் இதுபோலும் படைத்து, இனிமை கூட்டி, புகழில் பலதூரம் தொடுவார் என்பதில் இரு கருத்தில்லை.

கதைகள் வாழ்க.

(விலை: ரூ.210 | வெளியீடு: என்சிபிஎச், சென்னை)

- ஆத்மார்த்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.