மண்ணுக்கும் மனிதனுக்குமான உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதைப் படைப்பாளர்களின் எழுத்துகளில் காணலாம். அதிலும் எழுத்தாளனுக்கு மண் மீதும், மண்ணுக்கு எழுத்தாளன் மீதும் உள்ள உறவு தீராக் காதலாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பூமணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துரை, தேனம்மாள். பூ.மாணிக்கவாசகம் என்ற தன்னுடைய இயற்பெயரை எழுத்துலகிற்காகப் பூமணி என்று புனைந்து கொண்டவர்.poomani 500பூமணி, இளையரசனேந்தலில் தன் தொடக்ககாலப் பள்ளிப் படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டப் படிப்பையும் பயின்றவர்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த இவர், கூட்டுறவு துறைத் துணைப் பதிவாளராக உயர்ந்து, சென்னையில் முப்பது ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவுக்குப் பின் தன் சொந்த ஊரிலே வாசம் செய்து வந்தார்.

அம்மா என்னும் கதைசொல்லி:

பூமணி கல்வி அறிவும் இலக்கிய அறிவும் பெற்றதற்கு அவர் அம்மாவே முதன்மைக் காரணம் என்று பல நேர்காணல்களில் பதிவு செய்திருக்கிறார். சிறுவயதில் தன் அம்மாவிடம் கேட்டறிந்த நூற்றுக்கணக்காண மாயமந்திரக் கதைகள்தான் அவரின் கற்பனையை வளர்த்து இலக்கியத்திற்கு ஆட்படுத்தியிருக்கின்றன. 'மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு' என சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘அஞ்ஞாடி’ நாவலைத் தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். ‘அஞ்ஞாடி’ என்றால் அம்மாடி என்று பொருள். கரிசல்காடு என்று அழைக்கப்படும் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதியின் வாழ்க்கையை, குறிப்பாக சமூகத்தால் ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தால் நசுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைத் தன் படைப்புகளின் பின்னணியாகக் கொண்டிருந்தார் பூமணி. தன் அம்மா ஒரு தேர்ந்த கதை சொல்லி என்கிறார் பூமணி. நிகழ்ச்சிகளைச் சிறிய சிறிய தகவல்களாகக் கோத்துக் கண்ணெதிரே காட்ட முடியும். அதுவே பூமணியின் அழகியலாக விரிந்தது. இன்று வரையில் நீடித்தது. எது சாராம்சமானதோ, எது சுவாரசியமானதோ அதை மட்டுமே சொல்லவேண்டும் என்ற கதை சொல்லும் வித்தையை பூமணி தன் அம்மாவிடமிருந்தே கற்றிருக்கிறார்.

இலக்கிய அடிநாதம்:

பூமணியின் இலக்கிய வாழ்க்கையின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக இருந்த சி.கனகசபாபதி ஆவார்.

“யதார்த்தம்னு ஒரு வார்த்தையை அவர்தான் சொன்னார். இலக்கியத்தையும் யதார்த்தத்தையும் பிரிக்க முடியாதுன்னு எங்கிட்ட அவர்தான் நிறுவினார். அதோட எனக்குள்ள அட்டைக்கத்தி வீசிட்டிருந்த கல்கி, அகிலன், நா.பா. எல்லாரும் காணாமப் போயிட்டாங்க. இலக்கியம்னா என்னைச் சுத்தி உள்ள வாழ்க்கையோட மொழிப்பதிவுதான்னு புரிஞ்சுக்கிட்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் பூமணி. "எந்த விளக்கமும் இல்லாமலேயே எனக்கு யதார்த்தம்னா என்னன்னு புரிஞ்சது. எங்க அம்மா எனக்குச் சொன்ன வாழ்க்கை நிகழ்ச்சிகள்தான் யதார்த்தம். எங்க ஊர்ல நான் கேட்டு வளர்ந்த மனுஷங்களோட கதைகள்தான் யதார்த்தம்” என்று பூமணிக்கு வாழ்வின் யதார்த்தத்தை விளக்கியவர் சி.கனகசபாபதி.

எழுத்தாளன் யார்?

பூமணியின் இலக்கிய வாழ்க்கையில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மூன்றாவது பெரிய ஆளுமையாக இருந்திருக்கிறார். கி. ராஜநாராயணனின் கதைகள் அளித்த கொந்தளிப்பைப் பலமுறை பல வகைகளில் பூமணி பதிவு செய்திருக்கிறார்.

கதையின் கருவை, அது சொல்லும் செய்தியை, அப்படியே யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். அதை ரத்தமும் சதையுமான மனித வாழ்க்கையாகச் சட்டகத்துக்குள் செதுக்கப்பட்ட ஓவியமாகச் சொல்லவே எழுத்தாளன் தேவைப்படுகிறான். அந்த எழுத்துத் தச்சன்தான் பூமணி.

ஊக்கமும் ஆக்கமும்:

தான் பார்த்துப் பழகிய மண்ணும் மக்களுமே ஒரு படைப்பாளிக்குக் கதைக் களங்களாகின்றன. அப்படித்தான் பூமணிக்கும். வயலில் அறுவடை நடந்து கொண்டிருந்த வரப்பு வழியாக நடந்து சென்ற பூமணி அறுவடை செய்து கொண்டிருந்த பெண்களைக் கவனித்திருக்கிறார். அதில் ஒரு பெண்ணின் கழுத்தில் மட்டும் தாலியில்லை. அவள் அறுத்தவள். அக்கணத்தில் என்னென்னவோ நிகழ்ந்தது என்கிறார் பூமணி. 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு தாமரை இதழின் ஆசிரியராக இருந்த தி.க.சிவசங்கரன் பூமணியைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்திருக்கிறார்.

இலக்கியச் சிந்தனை பரிசு, விளக்கு விருது, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது, விஷ்ணுபுரம் விருது, சாகித்திய அகாதெமி விருது என தன்னுடைய ஆக்கங்களுக்குப் பெற்ற விருதுகளைப் பற்றிக் கூறும்பொழுது, "விருதுகள் மீது எனக்கு விருப்போ வெறுப்போ கிடையாது. அதை எதிர்பார்த்து எழுதினால் அது இலக்கியத்திற்குச் செய்யும் பெரிய துரோகம். என் எழுத்து என்னைச் செழுமைப்படுத்தணும், முழுமைப்படுத்தணும். பிறர் சிந்தனையைக் கிளறணும். என் வலியை, வாதையை, இன்ப - துன்பத்தை அவர்களுக்கு உணர்த்தணும். அந்த வெற்றிதான் எனக்குக் கிடைக்கும் பெரிய விருது" என்று தன்நிலைப்பாட்டைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

பூமணி தேசிய திரைப்பட நிறுவனம் (NFDC) நிதியுதவி பெற்று தன் 'கருவேலம்பூக்கள்’ என்னும் நீண்ட கவிதையை அதே தலைப்பில் ‘கருவேலம்பூக்கள்’ என்னும் திரைப்படமாக எழுதி இயக்கினார்.

'வெக்கை' நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாவல், 2019இல் திரு.வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' என்ற பெயரில் தமிழ்த் திரைப்படமாக வெளிவந்துள்ளது. தெலுங்கில் இப்படம் 2021 ஆம் ஆண்டு 'நாரப்பா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

சிறுகதை, நாவல், திரைப்பட ஆக்கம் என்பதுடன் கவிஞர் என்ற அடைமொழியும் பூமணியுடன் பற்றிக் கொண்டது. 1966ஆம் ஆண்டு முதல் தொடங்கிய எழுத்துப் பயணம் கவிதைகள், சிறுகதைகள், நாவல், திரைப்பட இயக்குநர் என்று விரிந்திருக்கிறது. வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் இவை பூமணியின் சிறுகதைகளாகும். பூமணி எழுதிய எட்டு சிறுகதைகள் ’எட்டு கதைகள்’ என்ற தலைப்பில் க்ரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு இலக்கியக் கவனம் பெற்றிருக்கிறது. பூமணியின் 51 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு “அம்பாரம்” என்ற தலைப்பில் பொன்னி பதிப்பகத்தால் 2007இல் வெளியிடப்பட்டது.

பூமணியின் முதல் நாவலான ‘பிறகு’ 1979ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், அஞ்ஞாடி, கொம்மை ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார்.

’அஞ்ஞாடி’, க்ரியா பதிப்பகத்தால் 2012ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற மோதல், சிவகாசி பகுதியில் நடந்த சாதிக் கலவரம் ஆகியவற்றை ‘அஞ்ஞாடி’ பதிவு செய்திருக்கிறது. கரிசல் நிலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்களை, சாதிய உறவுகளைக் கூறும் நாவலாகத் திகழ்கிறது. ‘அஞ்ஞாடி’, 2014ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றது.

கி.ரா. குறைவாக எழுதிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை நிறைவாக எழுத்துகளால் நிரப்பியவர் பூமணி.

பூமணி காட்டும் புனைவுலகில் சாதியின் ஏற்றத்தாழ்வுகளும் சுரண்டல்களும் மானுட உறவுகளும் நிறைந்துள்ளன.

கரிசல் வாழ்வின் ஆவணங்கள்:

கரிசலைப் பற்றிய சித்திரத்தைத் தீட்டியதில் கி.ரா.வும் பூமணியும் முக்கிய ஆளுமைகள். கரிசல் காட்டின் வெக்கைக்கு வேப்ப மரங்களும் கருவேல மரங்களும் மட்டுமே நீடித்து நிலைத்திருக்கும். அதேபோலத்தான் கி.ரா., ’வேம்பு’ என்றால் பூமணி ’கருவேலம்’ என நெகிழ்வாகச் சொல்லியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

சமூகத்திற்குக் கடத்தியது:

 “அவனுக்கு நாய் போச்சுன்னு கஷ்டமாயிருக்கு.. எனக்கு நாயோட போச்சேன்னு ஆறுதலாயிருக்கு..’’, ‘‘காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ.. ரூபா இருந்தா புடுங்கிக்கிடுவானுவ.. ஆனா, படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது.. .’’ எவ்வளவு பெரிய செய்தியை எழுத்தின்மூலம் மிக எளிதாகக் கடத்தும் திறன் படைப்பாளருக்கே உரியதாகும்.

”பூ உதிர்ந்தாலும்

மணி மணியான எழுத்துகளால்

வாசகன் மனத்தில்

வாசமாக நிறைந்திருப்பார்

பூ. மாணிக்கவாசகம் என்ற பூமணி”

இப்படித்தான் பூமணி என்னும் பொன்மணி ஒலித்துக் கொண்டேயிருக்கும் வாசகனிடம் எழுத்துகளாக.

முனைவர் நா.சுலோசனா, ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.