இலக்கிய விமர்சனத்திற்காக வல்லிக்கண்ணன் / தொ. மு. சி. ரகுநாதன் / க. நா. சு / இறுதியாக வா. செ. குழந்தைசாமி போன்ற ஒன்பது தமிழ் எழுத்தாளர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்றிருந்தாலும், கடந்த 37 ஆண்டுகளுக்குப் பிறகு "தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்" எனும் விமர்சன நூலுக்காக 2025-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள். இந்நூலில் 60-க்கும் மேற்பட்ட முன்னோடிகளின் 3,000 சிறுகதைகளை 900 பக்க அளவில் ஆய்வு செய்து ஆவணமாகத் தந்துள்ளார்.
தமிழ்ச்செல்வன் அவர்களை ஓர் இலக்கிய விமர்சகர் என்ற சிமிழுக்குள் மட்டும் அடைத்துச் சுருக்கிவிட முடியாது. அவர் பன்முக ஆளுமை மிக்கவர். சிறுகதை எழுத்தாளர் / கவிஞர் / கரிசல் படைப்பாளி / நாடக ஆசிரியர் / சிறுவர் இலக்கியக் கர்த்தா / தொகுப்பாசிரியர் / தொழிற்சங்கவாதி / மாற்றுக் கல்வியாளர் / பெண் உரிமைப் போராளி / அறிவொளி இயக்க ஒருங்கிணைப்பாளர் / களச்செயல்பாட்டாளர் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் என்பதாக அவரது ஆளுமை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் அவர், 52 நூல்களைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. புனைவு மற்றும் அல்புனைவு நூல்களை அவர் எழுதி வந்தாலும், அண்மைக் காலங்களில் தொடர்ந்து அல்புனைவுகளை எழுதுவதில் மிக்க ஆர்வம் காட்டி வருகிறார். "ஒரு சிறந்த நூலை ஒழித்துக் கட்டுவதற்கான ஒரே வழி அந்த நூலைப் பற்றிப் பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பதுதான்" என்பார்கள். ஆனால், அந்த அவலத்திற்குத் தமிழ்ச்செல்வன் நூல்கள் உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக "அரசியல் எனக்குப் பிடிக்கும்" எனும் இவரது நூல், மூன்று இலட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகிப் பெரும் சாதனை படைத்துள்ளது என்பது அவருக்கான சிறந்த அங்கீகாரமாகும்.
ஆங்கில இலக்கியத் திறனாய்வின் தந்தை எனக் கருதப்படுபவர் ஜான் டிரைடன். "ஒரு படைப்பின் தகுதியைக் கோட்பாடுகளின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்" என்று அவர் அழுத்தமாக வலியுறுத்தினார். தமிழ்ச்செல்வனின் செல்நெறி அத்தகைய தன்மையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. "என்னை வளர்த்தது சிறுகதை எழுத்துகள். அவை என்னை இடதுசாரியாக மாற்றின. என்னைப் படைப்பாளியாக மாற்றியது தெருநாடகங்கள்" என அவரே ஒருமுறை குறிப்பிட்டார்.
அவ்வகையில் தமிழ் சிறுகதை மரபு எப்பொழுதும் ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது. மேலும் மக்கள் மையப்படுத்தப்பட்ட, சமூக அடிப்படையிலான மற்றும் விழிப்புணர்வுக் கண்ணோட்டம் கொண்டதாக அவை அமைந்துள்ளன என்பதைத் "தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்" நூலில் அவர் தரவுகளுடன் நிறுவுகிறார். அவ்வகையில் எழுத்தாளர்கள் கூறியதை மட்டுமல்லாமல், அவர்கள் கூறாமல் விட்டதையும் இவரது ஆய்வு முறை கண்டறிகிறது.
அவரது படைப்புலகில் குறிப்பிடத்தக்க மற்றோர் கூறு, அவற்றின் பன்முகத்தன்மை ஆகும். புனைவு ஆயினும், அல்புனைவு ஆயினும் எடுத்துக் கொண்ட பொருண்மைக்கு ஏற்ப, அதை அடர்த்தியோடு வெளிப்படுத்துவது தமிழ்ச்செல்வனின் பாணியாகும். இப்படி அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் அசலான, வித்தியாசமான பிரதியாக இருப்பதற்குக் காரணம், அவரது பரந்து விரிந்த பன்முக அனுபவங்கள்தான் என்பதை ஒருவர் எளிதில் உணர முடியும்.
வலதுசாரி மின்மினி வெளிச்சத்தில் இலக்கியவாதிகள் பலரும் அதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், தமிழ்ச்செல்வன் அவர்களது மற்றுமோர் கண்ணோட்டம் இங்கு மிக மிகக் கருதத்தக்கதாகும். அது இடதுசாரி மற்றும் திராவிட இயக்கப் படைப்புகளின் மீதான பிறரது விமர்சனம் குறித்தது. மக்களுக்காக எழுதுவதை இந்த வலதுசாரி எழுத்தாளர்கள், "இலக்கியச் செய்நேர்த்தி இல்லாத வெறும் பிரச்சாரப் பிரதி" என்பதாக அலட்சியமாக ஆணவத்தோடு ஒதுக்குவதற்குத் தமிழ்ச்செல்வன் மரண அடி கொடுக்கிறார்.
"எந்த ஓர் அரசியல் இயக்கத்துடனும் தொடர்பு இல்லாத எழுத்தாளராக இருப்பதில் பெருமை கொள்ளும் ஒரு கலாச்சாரப் போக்கு இங்கு நிலவுகிறது. அந்த எழுத்தாளர்கள் மட்டுமே 'தூய இலக்கியத்தை' உருவாக்குகிறார்கள் என்றும், மற்றவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறிவிட முடியாது. எழுத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஒரு சார்பு நிலையும், அழகியல் நோக்கமும் ஒருங்கே காணப்படுகின்றன. அனைத்துக் கலை மற்றும் இலக்கியங்களும் ஓரளவுக்குப் பிரச்சாரமாகவே செயல்படுகின்றன. நான் ஓர் இடதுசாரி. நான் எழுதும் உழைக்கும் வர்க்க மக்களைப் பற்றிய கதைகள் பிரச்சாரம் என்று முத்திரை குத்தப்படுகின்றன. எனவே என் கதையில் எது பிரச்சாரம் என்று நான் அவர்களைக் கேட்கிறேன். இதுவரை எந்தப் பதிலும் அதற்கு வரவில்லை" என்ற அவரது பிரகடனம், ஓர் இடதுசாரி எழுத்தாளனின் சத்திய ஆவேசத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதை உணர முடிகிறது.
1978-ல் தமுஎகசவில் இணைந்த தமிழ்ச்செல்வன் அவர்களது இலக்கியப் பயணம், இன்றும் தொய்வுறாமல் எழுச்சியுடன் தொடர்கிறது. புதுப்புதுக் கருத்துகள், புதுப்புது உத்திகள், புதுப்புது வெளிப்பாடுகள் என்பதாக அவை மலர்கின்றன. "மனித வாழ்வு, ஆண்-பெண் சமத்துவம், பெண் விடுதலை, குழந்தைகளுக்கான விடுதலை ஆகிய இவை எல்லாம்தான் எனது எழுத்துகளின் பேசுபொருளாக இருக்கிறது, இருக்கும்" என்பது அவரது திசைவழியாக உள்ளது.
சோர்வின்றித் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் இவர், "இலக்கியம், மக்களைச் சென்றடைய ஒரு வாசிப்பு இயக்கம் தேவை. இந்தப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்" என வலியுறுத்துகிறார். இன்று சற்றே பின்னடைவு கொண்டிருக்கும் இலக்கிய வாசிப்பினை மேம்படுத்த இத்தகைய மாற்று வழியை அவர் பரிந்துரைக்கிறார். இவரது வழிகாட்டுதல் செயலாக்கப்பட்டால், எதிர்காலத்தில் புதிய புதிய தமிழ்ச்செல்வன்கள் தோன்றித் தமிழ்ச் சமூகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
- கண.குறிஞ்சி