தமிழில் திருக்குறள் தோன்றிய வரலாறு என்பது பல்வேறு புனைவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடமளிப்பவையாக உள்ளது. திருவள்ளுவர் பிறப்பு கதை தொடங்கி சமயம், குலம், தொழில் போன்றவை அவற்றில் முதன்மையில் நிற்பனவாகும். திருவள்ளுவரின் மனைவி குறித்த புனைவுகளும் அவற்றில் அடங்கும். திருக்குறள் என்னும் நூலுக்குச் சொந்தம் கொண்டாட பல்வேறு சமயங்களும் சாதிகளும் வரித்துக்கட்டிக் கொண்டு முன்வருகின்றன. அவற்றுள் பல அறிஞர்களும் தம்தம் மனக்கருத்துகளைத் திணித்து வந்தனர்/வருகின்றனர். ஆயினும், ஒருசிலர் பொதுத்தன்மையிலான நேர்கருத்துகளை முன்வைத்து உரை எழுதினயுள்ளனர்.
குறளுக்கு 300க்கு மேற்பட்ட உரையாசிரியர்கள் உரையெழுதியுள்ளனர். அவற்றுள், கருத்து வேறுபாடுகளும் முரண்களும் அதிகம் எழுகின்றன. முதலாவதாக எழுந்த உரைகளாகப் பதின்மர் -10 உரைகளைக் கூறுவர். அதாவது தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர், மல்லர், காளிங்கர், மணக்குடவர், பரிபெருமாள், பரிதியார், பரிமேலழகர் போன்றோரின் உரைகள் எழுந்ததாகத் தனிப்பாடல் வெண்பா சுட்டுகிறது. அவ்வமைப்பு முறையில் இறுதி ஐவரின் உரைகள் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன. அந்தவகையில் இறுதியான பரிமேலழகரின் உரையே சிறந்த உரையாகக் கொள்ளப்பெறுவது என்பது கருத்துமுரணே ஆகும்.
பரிமேலழகரை அடியொற்றியே பலரும் உரை செய்துள்ளனர். எனினும், அவற்றில் கூறும் முறைகளில் தம்தம் மனக்கருத்துகளையும் புகுத்தி உரை எழுதியுள்ளனர். சுவடி வடிவிலிருந்து நூற்பிரதி வரை பல்வேறு மாற்றங்கள் (பாட வேறுபாடு) பெற்று திருக்குறள் இன்றளவும் நிலைத்து நின்று புகழ் சேர்கிறது. அதாவது ‘உலகப் பொதுமறை’ என்னும் நிலைக்கு உயர்ந்துள்ளதை அனைவரும் அறிவர்.
திருக்குறள் நூலுக்குச் சமயம், மதம், சாதி, அரசியல் சார்பு சார்ந்தும் பல்வேறு கொள்கை, கோட்பாடு சார்ந்தும் உரைகள் காணப்படுகின்றன. அவ்வடிப்படையில் தமிழ் – அரசியல் இயக்கங்கள் சார்ந்த திருக்குறள் அணுகுமுறை என்பது மாறுபட்ட தன்மையில் உள்ளது. குறிப்பாகத், திராவிட இயக்கம் திருக்குறளை அணுகிய முறை என்பது புதிய வெளிப்பாடுகளைக் கொண்டதாகும். அரசியல் இயக்கங்கள் தங்கள் வளர்ச்சியோடு இலக்கியப் பணிகளையும் முன்னெடுத்துள்ளன. அதேபோன்று, மொழி – இனம் – நாடு என்ற கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்ட தனித்தமிழ் இயக்கம் திருக்குறளினையும் தம் கருத்தியலுக்கு உட்படுத்தியது.
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளின் திருக்குறள் ஆராய்ச்சி – (1951) என்ற நூலும் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை - (1969) என்ற நூலினையும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்பொருளுரை – (……..) என்றும் உரை செய்துள்ளனர். இதில மறைமலையடிகள் ‘சைவத்தமிழ்’ என்னும் சமயநோக்கில் திருக்குறளை அணுகினார். பாவாணர், பரிமேலழகர் உரையின் நீட்சியாகவே(சில இடங்களில் மாறுபட்டும்) குறளுக்கு உரை செய்தார். இவ்வடிப்படைகளை உள்வாங்கி, அதிலிருந்து மாறுபட்டு, பெருஞ்சித்திரனார் தம் மெய்யியல் அறிவோடு உண்மையினை விளக்கும்பொருட்டு திருக்குறளுக்குப் மெய்ப்பொருளுரையைச் செய்தார். இக்கட்டுரை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்ப்பொருளுரை என்னும் திருக்குறள் உரை நூலின் சிறப்புகளையும் முக்கியத்துவத்தினையும் பெருஞ்சித்திரனாரின் அணுகுமுறையினையும் கருத்தியல் கூறுகளையும் எடுத்தியம்புவதாக அமைகின்றது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் – மெய்ப்பொருளுரை
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர் பாவலரேறு பெஞ்சித்திரனார்.இவர் மரபு பாக்கள் தொடங்கி, சிறுகதை, உரைகள், காவியம் போன்ற பல தளங்களில் செயல்பட்டுள்ளார். அந்தவகையில், திருக்குறளுக்கு …… ஆம் ஆண்டு தம்முடைய மெய்யியல் பார்வையில் உரை வரைந்துள்ளார்.அது திருக்குறள் மெய்பெருள் உரை என்னும் தலைப்பில் அறத்துப்பாலின் 24 அதிகாரங்களுக்கு அதாவது, 240 குறள்களுக்கு மட்டும் உரை எழுதியுள்ளார். தம்மின் இறுதிக்காலத்தின் உடல்நலக்குறைவால் உரைப்பணி பாதியிலே நிறுத்திவிட்டார். திருக்குறளின், துறவறவியல் அதிகாரம் நோக்கிய அவரது பயணம் வாழ்வின் இறுதிப் பயணமாக அமைந்துவிட்டது. இவ்வுரை பல்வேறு மேற்கோள் விளக்கங்களுடன் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீண்டு அமைந்துள்ளது.
திருக்குறளுக்கு உரையெழுதியுள்ள மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் ‘திருக்குறள் மரபுரை’ நூலே தமிழுக்குப் போதுமென்று முன்மொழிந்தவர் பாவலரேறு. ஆயினும், பிற்கால வளர்ச்சி, சிந்தனைகளினூடாக மரபுரையிலுள்ள பிழைகளைக் கண்டுணர்ந்து, அதனினும் பிறிதொரு உரையின் தேவையை உணர்ந்தார். அதன் பயனாக/விளைவாகவே திருக்குறள் மெய்ப்பொருளுரையை எழுத விழைந்துள்ளார். இதனை, சொல்லாய்வறிஞர் ப. அருளியார் அவர்கள் கூறுவதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். அது பின்வருமாறு,
எக்காரணத்திற்கெனத் திருவள்ளுவர் பெருமான் இந்நூலை யாத்தளித்தாரோ – அதற்குரிய கரு பற்றிய சிந்தனையோட்டமே நம் மக்களின் நெஞ்சப்பையுள் முறையுற இன்னும் பாயவில்லை; படியவில்லை! முறைப்படப் படியாமையாலும் – அனைவர்க்கும் தெளிவுறுத்தத் தக்கவகையில் உரிய திறம்பெற அவை இன்னும் விளக்கப்படாமையாலும் – விளங்கிய சிலவரும் முற்றக் கடைப்பிடியாதிருந்தமையாலும் – இந்நூலும் அப்படியே இருந்தபடியே இருந்து கொண்டிருந்தது. (மெய், பக்-18)
என்பதிலிருந்து பல்வேறு உரைகள் வந்தபோதும் குறளுக்கு வள்ளுவர் கூறிய உண்மையான நேரடி பொருளை யாரும் முன்வைக்கவில்லை என்பதனையே இது காட்டுகிறது.
திருக்குறள் பகுப்பு முறை
திருக்குறளுக்குப் பெருஞ்சித்திரனார் ‘அதிகார அடைவுகள்’ என்பதாக இரு பாடல்களைத் தந்துள்ளார். அது குறளின் அதிகார பகுப்பு முறையினைச் சுட்டுவதாக உள்ளது.
அறம்முப்பத் தெட்டு பொருளெழுப தின்ப
உறவிருபத் தைந்தென் றுரை.
பாயிரம் நான்காம் பயனறம்முப் பன்னான்காம்
ஆயும் பொருளெழுப தாகுமே – தோயுமுண்மைக்
காதல் மனைவியொடு நூண்காமம் ஐயைந்தாம்
ஓதும் திருக்குறள்என் றோது. (பக் 3)
என்னும் இப்பாடல்கள் திருக்குறளின் சிறப்பினை முன்வைத்து அமைந்துள்ளது. இதில் பாவலரேறு இன்பத்துப்பாலை அணுகிய முறை என்பது நுட்பமான ஒன்றாகும். அதாவது, முதலாவதில் ‘இன்ப உறவு’ என்றும் பின்பான பாடலில் காதல் மனைவியுடன் ஏற்படக்கூடிய ‘நுண் காமம்’ என்பதாகவும் குறிப்பிடுகின்றார். இதில் ஆண், பெண் சார்ந்த ஊடல், கூடல் வாழ்வியல் முறையினைச் சுட்டுகிறது. இல்லறத்தின் பயனால் விளையக்கூடிய காமமாகிய இன்ப உறவின் செயல்களை முன்வைப்பது இன்பத்துப்பால் என்று விளக்கியுள்ளார்.
திருக்குறளுக்கு மரபார்ந்து கூறிய அறம், பொருள், இன்பம் என்னும் பால் அடிப்படையினையே பெருஞ்சித்திரனாரும் பின்பற்றுகிறார். இன்பத்துப்பாலினை மட்டும் சற்று வேறுபட்டு நின்று ‘நுண்காமம்’ என்பதாக வெண்பாப் பாடலில் குறிப்பிடுகின்றார். எனினும், அறத்துப்பாலின் இல்லறவியல் பகுதி வரை மட்டுமே உரையெழுதி இருப்பதால் இன்பத்துப்பால் பற்றிய நீண்ட விளக்கங்கள், விரிவுகள்/தெளிவுகளைக் காண இயலவில்லை. ஆயினும், அறம், பொருள், இன்பம் என்பதில் தொடர்ந்து நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்று மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.
குறளின் முதல் நான்கு அதிகாரங்களைப் பெருஞ்சித்திரனார் ‘அறவியல்’ என்றே குறிப்பிடுகின்றார். அதேபோன்று ‘கடவுள் வாழ்த்து’ என்ற முறையிலிருந்து வேறுபட்டு, அதற்கு மாற்றாக அறவியலின் முதல் அதிகாரத்தை ‘அறமுதல் உணர்தல்’ என்று தலைப்பிட்டு உரை செய்துள்ளார். கடவுள் வாழ்த்து என்ற ஒன்று உரையாசிரியர்கள் குறிப்பாக, பரிமேலழகர் செய்த ஒன்றே என்று குற்றம் சாட்டுகிறார். மேலும், மற்ற 23 அதிகாரங்களையும் முன்னர் உள்ள முறைப்படியே பின்பற்றுகிறார். ‘பாயிரம்’ என்று மரபாக கூறிவந்த நிலை இவர் இதனை கடவுள் நெறிப்படுத்தாது பொதுமை உணர்வோடு, அறம் கூறும் இயல் என்பதால் அறவியல் என்றே பயன்படுத்தியுள்ளார்.
இது அவருடைய கடவுள் மறுப்பு கோட்பாடாகும். பகுத்தறிவு சிந்தனையோடு கூடிய மெய்யியல் பார்வையாகவே கருத இடமளிக்கின்றது. பெருஞ்சித்திரனார் எப்போதும் தம் கருத்துக்களை உண்மை பொருள்தேட விழையும் ஒளியிலே பயணித்துள்ளார். அதன் விளைவாகப் பல்வேறு புதிய வெளிச்சங்களைத் தமிழிலகிற்குத் தந்துள்ளார் என்பது திண்ணம்.
பெருஞ்சித்திரனாருக்கு முன்னதான உரைகள்
பாவலரேறுவிற்கு முன்பு திருக்குறளுக்குப் பல்வேறு உரைகளை அறிஞர்களும் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் செய்துள்ளனர். எனினும், அது அவரவரின் புரிதலுக்கு கருத்தியலுக்கும் ஏற்ப தகவமைத்துக் கொண்ட உரைகளாகவே அமைந்துள்ளன. இம்முறையிலிருந்து மாறுபட்டும் சிலர் உரை வரைந்துள்ளனர். அவையும் சிற்சில குறைபாட்டுடனே அமைந்ததாக பெருஞ்சித்திரனார் குற்றம் சாட்டுகிறார். தமிழில் பெரும்பாலும் உரையெழுதியவர்கள் பரிமேலழகரின் உரையைப் பற்றியே உரை எழுதியுள்ளனர். இதில் தனித்த இடத்துக்குரியவைகளையும் தமது உள்ளீடான கருத்துகளை நிறைக்கின்றனர் என்கிறார். இதனை, அருளியாரின் விளக்கத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட மதச்சார்புடைய உள்ளத்தவர் ஒருவர் – அதற்கு உரை செய்கையில் – தம் மதத்தின் கருத்துகளை உள்நுழைத்தவாறே கண்டும் – காண்பிக்கவுஞ் செய்கின்றார். கடவுள் மறுப்புக் கொள்கையாளர் தம் கடவுளின்மைக் கருத்துக் கருப்புக் - கண்ணாடியை மாட்டிக்கொண்டவாறே குறளை உறுத்து நோக்கி, தம் கருத்துக்குரிய உரையேற்றிக் கண்டு – அதனையே விண்டு விளக்கி உணர்த்த முற்படுகின்றார். (தகவுரை, பக்-22)
இவ்வாறு மதச்சார்புடைய ஒருவரின் உரை குறளினை எந்தளவு நேர்மையுடன்/ உண்மையுடன் எடுத்தியம்பும் என்பதில் ஐயமே. இதுவரை வந்த உரைநூல்கள் எதுவும் மனநிறைவினை அளிக்கவில்லை என்றே பெருஞ்சித்திரனாரின் வழியில் அருளியாரும் உரைக்கின்றார். திருவள்ளுவர் குறிப்பிட்ட நேரடி/உண்மை பொருளினை யாரும் எடுத்துரைக்கவில்லை என்பது பெருஞ்சித்திரனாரின் அசைக்க முடியாத நிலைப்பாடாக இருந்திருப்பதை உணர முடிகிறது.
தமிழ்த்தென்றல் திரு.வி.க, பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் க. அப்பாத்துரையார், மொழிஞாயிறு பாவாணர், புலவர் குழந்தை, வ.சுப. மாணிக்கனார் போன்றோரின் உரைகளைப் பெருஞ்சித்திரனார் பரிமேலழகரை அடியெற்றி எழுந்த உரைகளாகக் கவனத்தில் கொள்கிறார். இவ்வுரைகளிலிருந்து வேறுபட்டு மெய்யியல் நோக்கில் உண்மை பொருளை உணர்த்த முற்பட்டு, குறளுக்கு உரை செய்துள்ளார். இவ்வுரைகளில் பாவணரின் உரைகளைப் புகழ்ந்து,
தேவநே யன்என்னும் தேர்ந்தமதிப் பாவாணர்
தேவத் திருக்குறட்குத் தீர்ந்தவுரை – மேவியபின்
மற்றோர் உரைசெயவும் மாணுவரோ? மானுவரேல்
கற்றோர் நகைப்பர் கலித்து. (தமிழ் மரபுரை- பக்……)
இதுபோன்று 10 வெண்பாப் பாடல்களை எழுதியும் திருக்குறள் தமிழ் மரபுரை குறித்த சிறப்புகளைத் தமது தென்மொழி இதழியில் வெளியிட்டும் பாவாணரின் உரைக்குச் சிறப்பு சேர்த்தவர் பாவலரேறு. ஆனால், பிற்கால வளர்ச்சியினுடாக, பாவலரேறுவே பாவாணரின் உரையில் பிழைகள் மலிந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். அதாவது, அது பரிமேலழகரின் உரை தொடர்ச்சியாகவே இருப்பதாக எடுத்துரைத்தார். இதுகுறித்து,
எம் விழித்திறவுக்கு மொழிப்புலங்காட்டிய விழுப்பெருந்தோன்றல், தமிழ்ப்பேராசான், மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணார் புலப்படுத்திய, திருக்குறள் தமிழ் மரபுரையும் எமக்கு ஒரு சிறிதும் நிறைவளிக்கவில்லையெனின், பிறர் பிற உரைகளெல்லாம்பற்றிக்கூறுதல், வருட்பாறைக்கண் வளந்தேடுதல் போன்றதே! சருங்கக்கூறுமிடத்து, திருக்குறள்-பரிமேலழகர் உரையே ஒரு பொறுக்குமணியாக உள்ளது. (திருக்.மெய்- ப-40)
இப்படியாக, பாவலரேறு பாவாணரின் உரை குறித்த மதிப்பீட்டை முன்வைக்கின்றார்.சிலகாலம் முன்பு பாவாணர் உரையே போதுமென்று புலப்படுத்தியவர்; பின்பு சிறிதும் நிறைவளிக்கவில்லை என்று இனிவேறு கருத்துநிலைகளின் வழியாகப் பயணிக்கிறார் பாவலரேறு. இந்நிலைப்பாட்டினைக் கால இடைவெளியும் (பாவாணர்-1969; பெருஞ்சித்திரனார் - 1975-76) விரிந்த சிந்தனைச் செயல்பாடுகளுமே ஏற்படுத்தியது. இதன்வழி தமிழுக்குப் புதிய பார்வையில் குறளுக்கு விரிந்த உரை ஒன்று எழுந்தது பெருமையே.
பலரது உரைகளைக் கற்று தெளிந்து, அம்முறைகளிலிருந்தது மாறுபட்டு தன் மெய்ப்பொருளுரையை அமைத்துக் கொண்டுள்ளார். உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தினை முதன்மையாகக் கொண்ட பாவலரேறு குறளுக்கு நேரிய உரையினைச் செய்துள்ளார். தமிழ் இலக்கியப் பரப்பில் பலரது உரைகள் இருந்தாலும் பல்வேறு புதிய தெளிவுகளுடனும் கருத்தியல்களுடனும் காணப்படும் பாவலரேறுவின் உரைக்குத் தனித்த இடமுண்டு.
உரைச் சிறப்பு
திருக்குறளுக்கு எழுந்த பலரது உரைகள் வெவ்வேறு கூறுகளை முதன்மைப்படுத்தி நின்றன. அதனின்று வேறுபட்டு பாவலரேறு குறளுக்குரிய நேரடி/ உண்மைப் பொருளைத் தெளிவாக்கிடும் நோக்கில் மெய்ப்பொருளுரையைப் படைத்துள்ளார்.இவ்வுரையானது பல்வேறு தனிச்சிறப்புகளைப் பெற்று அமைகின்றது.அவற்றுள், முதன்மையானது உரை விளக்கக் குறிப்புகளாகும். பாவலரேறு ஒரு குறளுக்கு மூன்று பகுப்பின் அமைப்பில் உரை கண்டுள்ளார். அது,
- பொருள்கோள் முறை
- பொழிப்புரை
- சில விளக்கக் குறிப்புகள்
என்பதாகும். அதாவது, குறளினை எவ்வாறு நேரிய பொருளமைப்பில் நின்று பொருள் கொள்வது என்றுரைக்கின்றார். சான்றாக,
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
என்னும் குறளினை, பொருள்கோள் முறை அமைப்பில்,
எழுத்து எல்லாம் அகரம் முதல;
உலகு ஆதிபகவன் முதற்றே.
என்று பொருள் கொள்கிறார். அதேபோன்றே பொழிப்புரை பகுதியில் இதற்கான விளக்கத்தினை முன்வைக்கின்றார். எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் மூல(இயங்கியல் அறமுதல் கூறாகிய) இறைவனை முதலாக உடையது என விளக்கமளிக்கின்றார். சில விளக்கக் குறிப்புகள் என்னும் மூன்றாம் பகுப்பில், அக்குறளில் உள்ள சொற்களில் தமிழ்ச்சொல், வடமொழிச் சொல் போன்றவற்றினையும் சொற்களுக்கான விளக்கமும் அவை, இடம்பெறும் இலக்கிய, இலக்கண நூற்கள் என பல்வேறு விசயங்களை முதன்மைப்படுத்தி தம் கூற்றினை நிறுவுகிறார். இம்முறையில் சில குறட்பாக்களுக்கு பொருள்கோள் முறையில்லாத நேரடியான குறட்பாக்கள் என இருவிதமான அமைப்பினைக் கையாண்டுள்ளார்.பொழிப்புரை, சில விளக்கக் குறிப்புகள் அனைத்துக் குறள்களுக்கும் தந்து விளக்கியுள்ளார்.
இவ்வாறு பலரது உரைகளிலிருந்து தனிச்சிறப்புடன் பாவலரேறுவின் உரையானது காணப்படுகின்றது.அதோடு, தமிழ் எண்களைத் தமது உரை முழுவதும் பயன்படுத்தியுள்ளார்.ஆணியல், பெண்ணியல் நோக்கில் அல்லாது பொதுப் பார்வையில் நேர்மையுடன் குறளுக்கு உரை விளக்கம் தருகின்றார்.
பெருஞ்சித்திரனாரின் அணுகுமுறை
பெருஞ்சித்திரனார் பலரும் அணுகிய முறையிலிருந்து மாறுபட்டு மெய்யியல் நோக்கில் குறைகளைக் கண்டுள்ளார்.அதோடு, பல்வேறு விளக்கம், விரிவுகள், தெளிவுகளை முன்வைத்து தம கருத்தினையும் முன்வைக்கின்றார்.இது அவரின் தனி ஆளுமையினை எடுத்துரைக்கும் செயல்பாடாக அமைந்துள்ளது.பெருஞ்சித்திரனார் குறளினைத் தமிழர்களுக்குரியது என்றும் அது வடமொழி சார்பு மிக்கதன்று என்று திடமாக எடுத்துரைக்கின்றார்.அறம் என்பதில் தொடங்கி உரைகளை நோக்கும் அணுகுமுறை வரை தனித்த கவனத்துடன் செயல்பட்டுள்ளார். குறிப்பாக, அறம், நீதி என்பதினை முன்வைக்கும் பாவலரேறு அறம் என்பதினை,
பொதுமையே – பொதுவுணர்வே – மக்கள் யாவர்க்கும் இருக்க வேண்டிய நல்லுணர்வுகளே நன்னெறிகளே அறம் என்பது திருவள்ளுவம். (பக் -75)
என்று அறத்திற்கான விளக்கமும் திருக்குறளில் பயின்று வந்துள்ள ‘அறம்’ என்னும் சொல்லுடைய குறட்பாக்களையும் எடுத்துக்காட்டுகிறார். ‘நீதி’ என்பது எதுவென்று கூறுகையில்
பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும் அவன் நீதி செலுத்தலாம்.சூத்திரன் ஒருபோதும் நீதி செலுத்தலாகாது. (பக் - 75)
எனும் மனுநீதியின்(8-20) கோட்பாட்டினை எடுத்துக்காட்டி நீதி என்பது வடசொல் என்றும் அறம் என்பது தமிழ்ச்சொல் என்றும் நிறுவுகிறார். அதேபோன்று திருக்குறள் நீதி இலக்கியமன்று அது அறவிலக்கியம் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றார். இவ்வாறு ஒப்பீட்டு முறையுடன் மெய்மை (உண்மை) தன்மையினை எடுத்துரைக்கும் பாங்கு, மெய்யியல் அணுகுமுறையுடன் குறளினை அணுகி விளக்கமளிக்கின்றார்.
ஆணின் அதிகாரம் உயர்ந்திருந்த நிலையினைச் சுட்டிக்காட்டும் ஆண்சார் குறட்பாக்களைக் குறிப்பிட்டு அவை தவறு என்பதினையும் விளக்குகிறார். அதாவது, ஆணினை இறை வடிவமாக, ஆட்சித் தலைவனாக, இல்வாழ்க்கைக்குரியவனாக, மக்கட்பேற்றிற்குரியவனாக எனப் பலவகைகளில் ஆணை முதன்மைப்படுத்துகின்றது திருக்குறள் என்பதினை அழுத்தமாக முன்வைத்து விமர்சிக்கின்றார். இதனை விளக்கும் பொருட்டு,
திருவள்ளுவர் காலம் பெண்ணாளுமை படிப்படியாகக் குறைந்து, ஆணாளுமை தலையெழுத்து நின்ற காலமாகும். (பக்-94)
என்று ஆண் சார்ந்த குறட்பாக்களை வள்ளுவர் படைத்ததின் காரணத்தினை முன்நிறுத்துகின்றார்.ஆண் உயர்த்தப் பெற்று, பெண் தாழ்த்தப்படுதலைக் கண்டிக்கிறார்.குறிப்பாக, பிறனியலாள், பிறற்குரியான், பிறன் வரையாள் என்னும் அதிகார வைப்புகளைச் சான்று காட்டுகிறார்.அதேபோன்று, பெண்களுள் ஒரு பிரிவினராக இருக்கக்கூடிய பரத்தைத் தொழிலுடைய பெண்களை ஓரிடத்திலும் பரத்தை என்ற நேரடிச் சொல்லால் குறிக்கப்படவில்லை. அதற்கு மாற்றாக, புனைச்சொல்லாக, விலைமகளிர், பொதுமகளிர், வரைவின் மகளிர் என்ற சொற்களைக் கையாண்டு பெண்களைக் கவனப்படுத்தி நின்றார் என்கிறார் பாவலரேறு. அதேபோன்று பலரோடு தொடர்பில் உள்ள ஆணைக் குறிக்க, பரத்தன்() என்ற சொல்லினை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார்.
` பெண்களைச் சிறப்புறச் செய்யும் நோக்கில், ஆணோடு இணைந்த இல்லற வாழ்வில் வாழும் பெண்களைச் சுட்ட பல சொற்கள் தமிழில் இருக்க, வள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை’ என்னும் அதிகாரத்தின் வழி ‘வாழ்க்கைத்துணை’ எனும் புதுப்புனைவுச் சொல்லினை உருவாக்கி, குறளினைப் படைத்துள்ளார். வள்ளுவர் இன்று வழக்கிலுள்ள கடவுளர் சிலரின் பெயரினை அப்போது பயன்படுத்தியது குறித்து, விளக்கும் பாவலரேறு பின்வருமாறு தமது கருத்தினை முன்வைக்கின்றார். அது,
குறளின் வரும் இந்திரன்(25), திருமகன் (179, 519, 617, 920), மூதேவி (617), கூற்று(எமன்)- 269, 326, 894, 1083, 1085; திருமால் – 1103 முதலிய தெய்வங்கள் சார்ந்த தொன்மக் கதைகளில் அவர் நம்பிக்கைக் கொண்டிருக்கலாம். அல்லது அவ்வகை நம்பிக்கை கொண்ட அக்கால மக்களுக்குத் தெரிந்ததை கூறித் தெரியாதவை உணர்த்தல் என்னும் உத்திக்குத் தக அவர் அதைக் கையாண்டிருக்கலாம். (பக்-220)
என்று வள்ளுவரின் கூற்றிக்கு பாவலேரறு தக்க விளக்கத்தினை அளிக்கின்றார்.இது ஒருவகையில் ஏற்புடையதாகவே அமைகிறது. இவ்வாறு கூரிய நுண்மான் நுழைபுலத்துடன் பாவலரேறு குறளினை ஐந்து வகையான உண்மைகளாகப் பகுத்து ஆராய்கின்றார். அவை,
- அறிவுண்மைகள்
- மனவுண்மைகள்
- செயலுண்மைகள்
- பொருளுண்மைகள்
- வாழ்வியலுண்மைகள்
என்பதாகும். ஒவ்வொரு குறளும் இவ்வுண்மைகள் ஏதோ ஒன்றினுள் அடங்கி பொருள் பயக்கும் என்று விவரிக்கின்றார்.அதேபோன்று குறள்கள் அனைத்தினையும் 28 இருபத்தெட்டு வகையான கூறல் முறைகளில் அணுகலாம் எடுத்துரைக்கின்றார். அது குறளுக்கானப் பொருள்விளக்கம் காணும் உரையில் முறையிலான அணுகுமுறையினைச் சுட்டுவதாக அமைகின்றன. குறிப்பாக, தமிழில் உள்ள பொருள்கோள் விளக்கம் போன்று பாவலரேறு அமைத்துள்ளார். அவை, பின்வருமாறு,
- 1. நேர்முறை 2. எதிர்முறை 3. இணைமுறை 4. எடுத்துக்காட்டு முறை 5. வினா முறை 6. வினா விடை முறை 7. நயப்பு முறை 8. வியப்பு முறை 9. அணி முறை 10. அமைவு முறை 11. தேர்வு முறை 12. தெளிவு முறை 13. காரண முறை 14. கட்டளை முறை 15. ஆய்வு முறை 16. அங்கத முறை 17. நகை முறை 18. தொகுப்பு முறை 19. பகுப்பு முறை 20. வகுப்பு முறை 21. தந்திர முறை 22. மந்திர முறை 23. கடுமை முறை 24. கணிவு முறை 25. என்னுமுறை 26. இருமடி முறை 27. சுருக்க முறை 28. பெருக்க முறை (பக்-228)
இவ்வாறு கூறும் பாவலரேறு அம்முறையுடைய குறட்களையும் சுட்டிச் செல்கிறார். அதாவது, நேர்முறைக்கு சான்றாக,
ஏரின் உழாஆர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால். (குறள்; ……)
எனும் குறட்பாவாகும்.இது நேரிடையானப் பொருளைத் தருகின்றது. இதுபோலவே மேற்கண்ட 28 முறைகளுக்கும் குறட்பாக்களைப் பகுத்துக்காட்டுகிறார். இது பாவலரேறு குறளினை எவ்வாறு நுட்பமாக ஆராய்ந்து, உணர்ந்து ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதினை விளக்குவதாக உள்ளது.
திருக்குறளுக்கு10,11ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாக உள்ள பதின்மர் -10 உரைகளில் முதல் ஐவரின் உரைகள் கிடைக்கப்பெறவில்லை.பின்வந்த ஐவரின் உரையில் பரிமேலழகரின் உரையினையே பலரும் கற்றுவந்தனர்.இந்நிலையில் குறட்பாக்களின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழும்நிலை உருவாகிறது.அதாவது, பரிமேலழகரே சில திருந்த்தங்களை மேற்கொண்டிருப்பினும் அவற்றினை கண்டுதெளிவது என்பது கடினமான ஒன்றே.இப்படியிருப்பின் கிடைத்த ஓலைச்சுவடிகளும் பல்வேறு பாட, பிரதி பேதங்களைக் கொண்டு அமைந்துள்ளது.இதனை கவனப்படுத்தும் பாவலரேறு குறளின் உண்மைத் தன்மையினை ஆய்வுக்குட்படுத்துகின்றார். அதாவது,
பாடபேதங்கள் இல்லாத திருக்குறள் மூலநூல் கிடைக்காததால் இன்றிருக்கும் குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் இயல்பும் உட்பொருளைக் கண்டு தெளிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. (பக். 259)
என்று உரை தொடர்பான தமது ஐயப்பாடுகளை முன்வைத்து செல்கிறார். இந்நிலையில் பாவலரேறுவின் உரைகளில் முன்னர் உள்ள(மரபுவழிப்பட்ட) குறட்பாக்களுக்குத் தான் உரை காண முடிந்தது. தவிர, குறட்பாக்களின் உண்மைத் தன்மைக்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்று தெளிவுறுகிறார். அதேபோல், இதனை எழுதிய பொழிப்புரை விளக்கங்கள் போதுமானதாக அமையாத போது அவற்றின் சில குறட்பாக்களுக்குச் சிறப்புரை, விரிவுரை, விளக்கவுரை, நுட்பவுரை, சொல்விளக்கம், விளக்கங்கள் என மேலும் விரிவாக வெளிவரும் என்ற குறிப்பினையும் சுட்டிச் செல்கின்றார்.
பாவலரேறு - பரிமேலழகர்
பாவலரேறு குறளுக்கு உரை விளக்கம் காணும்போது பரிமேலழகர் கூற்றுகளிலிருந்து மாறி படைத்துள்ளார். குறிப்பாக, பரிமேலழகர் வழுவிய(தவறிய) இடங்களாக 12 இடங்களைச் சுட்டுகிறார். அவை,
1.ஆரிய வழிகாட்டல் 2.பொருளிலக்கணத் திரிபு 3.ஆரிய வழிப்பொருள் கூறல் 4.ஆரியக் கருத்தைப் புகுத்தல் 5.தென்சொல்லை வடசொல் மொழிபெயர்த்தல் 6.தென் சொற்கு வடமொழிப் பொருள் கூறல் 7.சொற்பகுப்புத் தவறு 8.சொல் வரலாற்றுத் தவறு 9.சொற்பொருள் தவறு 10.அதிகாரப் பெயர் மாற்று 11.சுட்டு மரபறியாமை 12.இருகுறளைச் செயற்கையாக இணைத்தல். (பக்: 277)
இப்பணிரெண்டு இடங்களையும் கண்டு தெளிந்து, பாவலரேறு தம் உரையில் அவை தொடராத வண்ணம் கவனக் கொண்டுள்ளார்.அதேபோன்று திருவள்ளுவர் குறித்த புனைவுகளை பாவலரேறு புதுமுறையில் அணுகுகின்றனர். அதாவது, திருவள்ளுவர் நெசவுத்தொழில் குடும்பத்தினர் என்பதாகவும் அவர் அரசக் கட்டளை அறிவிப்பாளர் தொழில் செய்தார் என்ற இருவேறு தொழில்சார்ந்த அணுகுமுறைகளைப் பாவலரேறு தமது இறுதிக்காலத்தில் விரித்து எழுதுவதற்கு குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இதனைப் போலவே ஓளவையார் பற்றியும் மனைவி வாசுகி பற்றியும் பிறந்த இடம் மயிலாப்பூரா, மதுரையா பற்றியும் குறளின் காலம் குறித்தும் குறிப்புநிலை அமைந்த பாவலரேறுவின் செய்திகள் காணப்படுகின்றன. இன்னும் சில காலம் நல்ல உடல்நலத்துடன் இருந்திருப்பாராயின் இக்குறிப்புகள் அனைத்தும் விளக்கம் பெற்று பல தெளிவுகளை முன்னிறுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
குறளின் ‘பாயிரம்’ எனப்படும் ‘கடவுள் வாழ்த்து’ பகுதியினைப் பலரும் பலவாறு பொருளமைத்துக் கொண்டனர்.அது திரு.வி.க – ஆதிபகவன் உலகமுதல் என்று இருநிலைகளில் கூறி, பின்னர் கடவுள் வாழ்த்து என்பதினையே ஏற்றுக்கொண்டார். சுகாத்தியார் – முதற்பொருள் வாழ்த்து என்றும் இலக்குவனார் இறைநலம் என்றும் க. அப்பாத்துரையார் இறை வாழ்த்து என்றும் பாவாணர் முதற்பகவன் வழுத்து என்றும் புலவர் குழந்தை இறை நலம் என்றும் வ.சுப. மாணிக்கனார் ஆதிபகவன் வாழ்த்து என்றும் பலவாறு கூறினர்.
இவற்றையெல்லாம் மனதில் நிறுத்திய பாவலரேறு புதிய சொல்லையும் அது பொதுவான ஒன்றாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பினர். அதேபோன்று தமது மெய்யியல் சிந்தனைக்கும் கருத்து நிலைக்கும் ஏற்றவாறு ‘பாயிரம்’ என்பதினை ‘அறவியல்’ என்றும் கடவுள் வாழ்த்து என்பதற்கு ‘அறமுதல் உணர்தல்’ என்றும் புதிய சொற்பொருள் விளக்கத்தினை முன்வைத்தார். இக்கூற்றினை முன்மொழியும் அருளியாரின் விளக்கம் பின்வருமாறு,
அறத்திற்கெல்லாம் மூல முதலாகிய ஆற்றல்கூறை உணர்தற்கென்றே உணர்த்தியது என உணர்ந்து புத்தம் புதிய தலைப்பாக ‘அறமுதல் உணர்தல்’ என்னும் அழகிய – நேரிய அருந்தொடர்ச்சொல் வழி ஆங்குப் பதித்துள்ள துணிவு – போக்குணர்ந்த நோக்குவீறு காட்டும் கட்டியமாகவே முன்னிற்கின்றது. (தகவுரை; பக் – 23 -24.)
என்பது பாவலரேறுவின் நுட்பமான பார்வையையும் மெய்யியல் நோக்கினையும் எழுத்தியம்பும் விதமாக அமைகின்றது.இவ்வாறு துணிந்து செயல்படும் தன்மை, ஆழ்ந்த புலமை, ஆழமான-அகலமான பார்வை என பலவற்றையும் கொண்டவராகப் பாவலரேறு திகழ்கின்றார்.
‘இறைமை’ என்னும் சொல்லுக்குப் பொருள் விளக்கம் தரும் பாவலரேறு கடவுள், தெய்வம் என்ற சொற்களைத் தவிர்த்து நிற்கின்றார்.அதாவது தங்கியிருப்பது நிலையாயிருப்பது என்றும் இருப்பது, இறுதியாய் இருப்பது மூலமாய் இருப்பது என்றும் ஐந்து தன்மையில் விளக்குகிறார்.
திருக்குறள் – தனித்தன்மைகள்
திருக்குறள் பல்வேறு தனித்தன்மைகளைக் கொண்டு அமைகின்றது.அவை, பல்வேறு விளக்கங்களும் விரிவுகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, திருவள்ளுவமாலை தொகுப்பில் சுட்டப்பெறும் பாடல்களும் தமிழறிஞர்கள், புலவர்களின் வெளிநாட்டு அறிஞர்கள் காட்டும் கருத்துகள் என்பவை குறளுக்கு மேலும் சிறப்புத் தன்மையினைக் காட்டுகிறது. குறிப்பாக, இடைக்காடனாரின் தனிப்பாடல்,
கடுகைத் துளைத்(து) ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள். (திரு.வ. மா: 54)
என்பதும் ஒளவையாரின் பாடலான,
அணுவைத் துளைத்(து) ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள். (திரு.வ. மா: 55)
திருக்குறளின் ஆழமான கருத்துநிலையினைச் சுட்டுவதற்குச் சான்றாகும்.இவ்வடிப்படையிலேயே குறள் எந்த சமயம், மதமும், சாதியும் சாராத பொதுவான தன்மையில் இன்று நின்று இயங்குகின்றது.அதனாலையே, அது ‘உலகப் பொதுமறை’ என்று சிறப்பு பெற்று நிற்கின்றது. இதனை, பாவலரேறு கூறுகையில்,
எந்தச் சமயமும் சாராத அறிவியல் சார்ந்த, நூலாக இருப்பது தமிழிலக்கியப் பரப்பிலேயே திருக்குறள் ஒன்றே. (பக்- 51)
என்ற கருத்தினை முன்வைக்கின்றார்.திருக்குறள் பலருக்கும் உரியதாகத் திகழ்கின்றது.அதனாலையே பலரும் தங்களுக்கு உரியதாகச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.இவ்வாறு திருக்குறளினைக் கற்றுவிட்டாலே புலவர், பாவலர், அறிஞர் என்றெல்லாம் கருதும் மனப்பான்மை உருவாகிவிட்டுள்ளது.இதனைக் கண்டிக்கும் பாவலரேறு குறளினைப் பலரும் கற்பது மகிழ்ச்சிதான் என்றாலும் ஒருபுறம் தீங்கும் விளைவிக்கின்றது என்கிறார். அது,
ஒருசிலர் திருக்குறளைத் தப்பும் தவறுமாகப் படிப்பதும், அதை அவ்வாறே பிறரிடத்து எடுத்துப் பரப்பி, அவரவர் விருப்பத்திற்கேற்பப் பொருள் கூறுவதும், அதன்வழிப் பிழைப்பதும் பெருமை பெறுவதும் அளவினும் மிகுந்து வருவது திருக்குறலில் ஏதோ ஒருவகையில் தாம் தொடர்பு உடையவர் என்று காட்டிக்கொள்வதே தமிழ் கற்றவர்க்கும், ஏன் பிறர்க்கும்கூட பெருமை தருவதாக இருக்கிறது. எனவே, எல்லாரும் திருக்குறள் கற்றவராகவே காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். (பக்: 252-253)
எனும் கூற்று குறளின் பெருமையையும் சிறப்பினையையும் எடுத்தியம்புவதோடு அவற்றின் வழியான தீமையினையும் சுட்டுகிறார்.குறளுக்கும் வள்ளுவருக்கும் முன்பான ‘திரு’ என்னும் அடைக்குத் தமிழில் பலபொருள்களை வழங்குகின்றார்.அது திரு என்பது ஒரு உயர்சொல் மொழியாக விளங்குகின்றது.அதனை, மனதில்கொண்டு பாவலரேறு சில விளங்கங்களை முன்வைக்கின்றார். அவை,
தமிழில் ‘திரு’ என்னும் ஓர் உயர்சொல் பலவகையிலும் பற்பல சிறப்புப் பொருள்களைத் தருவதாகும். அழகு, செல்வம், செல்வத்தெய்வம், தெய்வத்தன்மை, சிறப்பு, ஒளி, பொலிவு, நற்பேறு, நல்வினை, மங்கலம், மங்கலநாண், ஒருவகைத் தலையணி மகளிர் மார்பில் அமர்ந்துள்ளதாகக் கருதும் ஒரு வீற்றுத்தெய்வம், நுகர்ச்சிப் பேறு, எல்லோராலும் விரும்பப்பெறும் தன்மை, கவர்ச்சி நிலை – என்னும் பொருள்கள் அவற்றுள் சில. (பக்: 49)
இவ்வாறாக ‘திரு’ என்பது தமிழில் வழங்கி, வருவதாக எடுத்துக்காட்டுகிறார்.அதேபோன்று குறளை பல்வேறுபட்ட துறை சார்ந்தும் அணுகலாம் என்கிற கருத்தினை முன்வைக்கின்றார். அந்த அடிப்படையில் பாவலரேறு, திருக்குறளினை அறநூலாக, அறவிலக்கிய நூலாக, வாழ்வியல் நூலாக, அரசியல், பொருளியல், சமுதாவியல்(குமுகவியல்), ஒழுக்கநெறி நூலாக, புரட்சி நூலாக, இனநல மீட்பு நூலாக, இன்ப நூலாக எனப் பல பரிமாணங்களில் திருக்குறளினைப் அணுகி ஆராயும் மனப்பாங்கு கொண்டவராகப் பாவலரேறு திகழ்கின்றார்.
பாவலரேறு - திருக்குறள் உரை
பாவலரேறு தாம் எழுதிய திருக்குறள் மெய்ப்பொருளுரைக் குறித்து பல்வேறு கருத்துநிலையினைக் கொண்டிருந்தார். குறிப்பாக, பாவலரேறு தம் கருத்து யாருக்குச் சென்றடைய வேண்டும் என்று எண்ணுகிறாரோ அவர்களுக்குரிய நடையில் தம் கருத்தினை வெளிப்படுத்துவார். அவ்வடிப்படையில் திருக்குறள் மெய்பொருளுரையினையும் விரிவாக எழுதினார். எனினும் அவை அவ்வளவாக அனைவருக்கும் சென்றடையவில்லை. காரணம் அதன் நடையமைப்பு என்பதினை உணர்ந்தார்.இதனை தமது தென்மொழி இதழ் அன்பர் ஒருவரின் கூற்றுவழி விளங்கிக்கொண்டார். அவ்விளக்கம் பின்வருமாறு,
தென்மொழி இதழ் நடையிலிருந்து சற்று இறங்கித் ‘தமிழ்நிலம்’ இதழ் நடையிலோ, அல்லது இன்னும் எல்லாருக்கும் எளிதாக அறிய உதவும் வகையில் ‘தமிழ்ச்சிட்டு’ இதழ் நடையிலோ மேற்படி மெய்ப்பொருளுரை அமையுமானால் வளரும் இளைய தலைமுறையாம் மாணவர்கள் முதல் மற்ற எல்லாரும் பயன்படுத்த பெரும் வாய்ப்பாய் அமையும். (பக்-46)
என்று தென்மொழி இதழ் சுவடி-26; ஓலை – 8 என்னும் இதழில் அன்பர் ஒருவர் எழுதியிருந்த இத்தகவல் அன்றைய தென்மொழி இதழியின் நடையும் திருக்குறள் மெய்ப்பொருளுரையின் நடையும் பற்றி அறிந்து/புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. எனினும், இக்கருத்தினை உள்வாங்கிய பாவலரேறு பின்பான குறட்பாக்களை எளிமையான நடையில் எழுத முற்பட்டார் என்று (சுவடி-26; ஓலை-9)இல் காணலாகும் செய்தியின் வழி அறியமுடிகிறது.
இக்கருத்தோடு, பாவலரேறுவின் உரை குறித்து வாசகர்களுக்கு அவரே குறிப்பிடும் கருத்தானது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். அதாவது, தமிழில் உள்ள திருக்குறள் பல உரைகளை ஒப்பிட்டு நோக்கும்போது இவ்வுரையின் சிறப்பு விளங்கும் என்ரு விளக்குகிறார். அதாவது, ‘இவ்வுரையைப் படிக்க முற்படுவோர்க்கு ஒன்று கூற விரும்புகிறோம்’ என்று தலைப்பிட்டு,
அவர்கள் இதுவரை வெளிவந்த உரைகளுள், மிகச் சிறப்பானது என்று கருதி மதிப்பிடும் உரையை அல்லது உரைகளை, எடுத்துத் தங்கள் முன்னர் வைத்துக்கொண்டு, அதை அல்லது அவற்றை வரிசையாகவும் மிக்க கவனமாகவும் ஒருமுறைக்குப் பலமுறை படித்துவிட்ட பின்னர் இதைப் படிக்க வேண்டுகிறோம். அப்பொழுதுதான், இவ்வுரையின் சிறப்பு, பொருத்தம் முதலியவற்றின் உண்மை இன்மை புலப்படும். (பக்-272)
என்று மெய்ப்பொருள் உரையின் சிறப்பினையும் பெருமையினையும் எடுத்துரைக்கின்றார். அதாவது, பல்வேறு நூற்களின் மேற்கோள் விளக்கம், பொருள்கோள் முறை, பொழிப்புரை, முதற்குறிப்பு அகராதி போன்ற பலவற்றை உள்ளடக்கியதான மெய்ப்பொருளுரை தமிழிலகிற்குப் பெரும் கொடையாகும். இதனை, மெய்பிக்கும் விதமாக, திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனாரின் கூற்றானது வலிமை சேர்ப்பதாக உள்ளது. அவை,
கடின சந்திகள் பிரிக்கப்பட்ட நிலையில் மூலமும் பொருள்கோள் முறையமைப்பும், பொழிப்புரையும், சில விளக்கக்குறிப்புகளும் என அமைந்துள்ள மெய்ப்பொருளுரையில் நூற்றக்கணக்கான நூல்களின்றும் மேற்கோள்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன; தருக்க முறையில் கருத்துகளை வலிவூட்டி நிற்கின்றன. (பக்-10)
இக்கூற்றனாது மெய்ப்பொருள் உரையின் தன்மையினை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.குறிப்பாக, இலக்கண நிலை ஆய்வு முறையியலை முன்னிறுத்துவதன் தன்மை மேற்கண்ட விளக்கவுரையில் காணமுடிகின்றது. இவ்வளவு சிறப்புமிக்க உரை வரலாற்றினை செய்த பாவலரேறு இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்திருந்தால் பல ஆயிரம் பக்கங்களில் குறளுக்கு ஒரு சிரிய உரை முழுவதுமாகக் கிடைத்திருக்கும். இதனை பாவலரேறு அவர்கள் தம் மூத்தமகனிடம் (பூங்குன்றன்) உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில், நகைச்சுவையாகப் பேசியதாக பதிவு செய்துள்ள கூற்று பெருஞ்சித்திரனாரின் வாழ்வியலில் உள்ள உண்மைகளைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
இல்லறவியல் வரையில் முடித்துவிட்டேன் இனி துறவறவியல்தான் போக வேண்டும். (பக்-6)
என்பதாகப் பதிவு செய்துள்ளார். இது குறளுக்கு மட்டுமின்றி வாழ்க்கைக்கும் பொருந்திபோனது இயற்கையின் செயலேயாகும்.
நிறைவாக
தமிழ் இலக்கிய பரப்பில் ‘தனித்தமிழ் இயக்கம்’ முக்கிய பங்காற்றியது.அதன் வளர்ச்சியில் பலரும் உள்ளனர். பல்வேறு போராட்டங்கள், கொள்கை, கோட்பாடு, கருத்துநிலை போன்ற பலவற்றைக் கொண்டும் கடந்தும் இன்றும் இந்நிலையினை இவ்வியக்கம் அடைந்துள்ளது. இவற்றுள் குறிப்பிடத்தக்கவராக, மறைமலையடிகள், பாவாணர், பாவலரேறு ஆவார்.இவர்களுள் முதலாமானவர் தனிநிலையிலும், பின்னிருவர் ஒருநிலையிலும் வைக்கப்பட வேண்டும். காரணம் பாவாணரின் மாணவர் பாவலரேறு என்பதே. இருவருக்கும் ஆசிரியர் – மாணவர் உறவுநிலை என்பதாலே இப்பகுப்பு. அதோடு, கருத்தியல் சார்ந்து மூவரும் மாறுபட்ட தன்மையினைக் கொண்டு விளங்குகின்றனர்.
ஆசிரியரின் கைப்பற்றி நிமிர்ந்த பாவலரேறு ஒரு கட்டத்தில் ஆசிரியரையும் விஞ்சும் அளவிற்குப் புலமைத்திறம் பெற்றார். காரணம் ஆசிரியரின் வழிகாட்டல், நெறிப்படுத்துதல், தொடர் வாசிப்பு, சமூக அக்கறை எனப் பலதளங்களைச் சுட்டலாம். இவ்வடிப்படையில், பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரையினைப் போற்றிய பாவலரேறு பின்பு குறளுக்கு மெய்ப்பொருளுரையைச் செய்ய நேர்ந்தது. இது வளர்ச்சி தானே ஒழிய பின்னடைவு இல்லை என்பதினைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பன்னோக்கு அறிவுத்திறத்துடன் உரை செய்த பாவலரேறு சிலவற்றை கவனத்தில் கொள்ளாதாலே இவ்வுரை நூல் பலருக்கும் சென்றடையவில்லை. அவை,
- நீண்ட உரை விளக்கம் கொண்டதான அமைப்பு முறையியல்
- மெய்யியல் சார்ந்து உரை விளக்கமானது அமைந்திருப்பதால், பொருள் விளங்கிக்கொள்ள சற்று கடினத்தன்மையுடன் காணப்படுகிறது.
- அனைத்து, பொதுத் தரப்பினருக்கும் உரியதாக அல்லாமல், கற்றோருக்கும், ஆய்வுநிலையாளளுக்கும், மெய்யியல் கோட்பாடு அறிவுடன் அணுகுபவர்க்கும் மட்டுமே பெரிதும் பயன்படும் நிலை.
என இதன் காரணத்தைச் சுட்டலாம்.இருப்பினும் இவ்வுரை நூல் தனிச்சிறப்புகளையும் கொண்டு அமைகிறது. அதாவது,
- பல்வேறு இலக்கிய நூற்களிலிருந்து சான்றுகளை எடுத்துக்காட்டியமை.
- ஆழமான, அகலமான, தெளிவான விரிவுரையைக் கொண்டுள்ள பாங்கு.
- எடுத்துரைப்பியலில் உள்ள எளிமை தன்மை, நுணுகி பார்க்கும் ஆய்வுப் போக்குடனானத் தன்மை எனப் பல சிறப்புகளைக் கொண்டு இவ்வுரை அமைகிறது.
இவ்வாறு பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை நூல் தமிழிலகிலும் திருக்குறள் உரை வரலாற்றிலும் தனித்ததொரு இடத்தைப் பெறுகின்றது.
பார்வை நூல்
- பெருஞ்சித்திரனார். பாவலரேறு., - திருக்குறள் மெய்ப்பொருளுரை (உரைச்சுருக்கம்), தொகுதிகள் – 1,2,3,4.; தென்மொழி பதிப்பகம், சென்னை – 601 302. இரண்டாம் பதிப்பு – 2006.
2. தேவநேயப் பாவாணர் ஞா. மொழிஞாயிறு., - திருக்குறள் தமிழ் மரபுரை, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை – 600 035. மூன்றாவது பதிப்பு – 2011.
- மதிவேந்தன்