‘இந்தியாவில் (காலனியாதிக்கக் காலத்திலும் அதன் பின்னரும்) ஏற்பட்ட/ ஏற்படக்கூடிய பஞ்சம், பசி, பட்டினி, தொற்றுநோய்கள், ஜாதிய வேறுபாடு, தீண்டாமை, மகளிருக்கு எதிரான குற்றங்கள், கல்லாமை ஆகிய அனைத்திற்கும் காரணம் இந்து சமயமும் அதன் கூட்டாளிகளான பிராமணர்கள் மட்டுமே. பஞ்சம், பசி, பட்டினி எதற்கும் காலனியாதிக்கவாதிகளாகிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பொறுப்பல்ல. எனவே, இந்து சமயமும் பிராமணர்களும் அழிக்கப்பட்டு இப்பூமி சுத்தப்படுத்தப்பட்டாலொழிய இங்குள்ள மக்களுக்குச் சமூக நீதியும் வாழ்க்கையில் நிம்மதியும் கிடைக்காது'. (இக்கொள்கையே பின்னாட்களில் நீதிக் கட்சியும் திராவிடர் கழகமும் தோன்றுதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது). (உமரி காசிவேலு, 2015:254).

caldwel 360நூலாசிரியர், வரலாற்றாசிரியர்கள் மையக் கருத்தாகக் கொண்டிருந்ததை மேலுள்ளவாறு குறிப்பிடுகின்றார். அடைப்புக் குறி இல்லாமலேயே பின்னுள்ள வரிகளைப் போட்டிருக்கலாம். இந்தியாவின் மற்ற பகுதிகளில் பெரிய அளவில் சமூக நீதிக்கான அமைப்புகள் தோன்றவில்லை என்றாலும் தமிழகத்தில் வரலாற்றாசிரியர்களின் மையக் கருத்தே உண்மையாகியுள்ளது.

மாமேதை கார்ல் மார்க்ஸ் மதங்களை அபினோடு தொடர்புபடுத்துகின்றார். எந்த மதமாக இருந்தாலும் அது தன்னைச் சார்ந்துள்ள மக்களைப் போதையிலேயே வழிநடத்தும். அவை வழிநடத்தும் முறையில் கூடக்குறைய இருக்கலாம். மக்களை அறியாமையில் மூழ்கடிப்பதும் அவர்களைச் சுரண்டுவதுமே அடிப்படை நோக்கங்களாகும். பெரிய பெரிய ஆலயங்களை கட்டும்; நூற்றுக்கணக்கான அடி உயரச் சிலைகளை எழுப்பி அறியாமையில் மூழ்கிக்கிடக்கும் மக்களை வியப்பில் ஆழ்த்தும். மத நிறுவனம் தன் சிறிய வயிற்றுக்குப் பேரண்டப் பொருளாதாரத்தையே வளைத்துப் போட்டுக்கொள்ளும். கருத்து முதல்வாதத்தைப் பேசிக்கொண்டு பொருள் முதல்வாதியாக மதம் செயல்படும். கிராம மக்களின் வழக்கில் சொன்னால் 'கழுதை விட்டையில் முன்விட்டை என்ன! பின்விட்டை என்ன! எல்லாமே ஒன்றுதான்'.

மேற்சுட்டிய மேற்கோள் உமரி காசிவேலு எழுதிய 'கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்... உலகளாவிய தாக்கமும்'(2015) என்னும் நூலில் உள்ளது. இதேபோன்ற நீண்ட தலைப்பில் 'பிஷப் கால்டுவெல் பிழையுரையும் பொய்யுரையும்... திராவிட இனவாதமும்'(2018) என்னும் நூலும் வெளிவந்துள்ளது.

இவ்விரண்டு நூல்களையும் எழுதிய உமரி காசிவேலு அவர்களைப் பாராட்டவேண்டும்; அவர் எடுத்து விளக்கிய பொருளுக்காக அன்று. அவருடைய கனமான உழைப்புக்காகத்தான். இரு நூல்களுக்கும் எழுதப்பட்ட ஆசியுரை, வாழ்த்துரை, பாராட்டுரைகளைப் பார்த்தாலே இந்நூல்கள் யாருக்காக, எதற்காக எழுதப்பட்டவை என்கின்றமை புரியும். அவற்றை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமன்று.

தற்போது தடுக்கி விழுந்தால் கிராமம், நகரம் என்னும் வேறுபாடு இல்லாமல் கல்வி நிறுவனங்கள் மேல்தான் விழ வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் நிறைந்துள்ளன. வேலை வாய்ப்புகள் எப்படி இருந்தாலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏதாவது ஒரு வேலையைத் தேடுவார்கள். கல்வி இல்லாவிட்டால் அப்பன் தொழிலை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங் கோட்டையைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எனக்குறிப்பர். கிறித்துவ மத போதகர்களால் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் பலவாகும். அவற்றைப் பார்த்து மேலும் மேலும் கல்வி நிறுவனங்கள் தோன்றின. தமிழகத்தின் பிற பகுதிகளை விடத் திருநெல்வேலி மாவட்டத்தில்தான் அறுபது எழுபதுகளிலேயே நிறையக் கல்வி நிறுவனங்கள் தோன்றிவிட்டன. ஜெசிந்தா அம்மையார், ரினியல் அடிகள், இராபர்ட் கால்டுவெல் போன்றோரால் கிறித்தவ மதமும் அப்பகுதியில் வளர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வும் கல்வியால் வளர்ந்தது. மதம் பரப்பியதாகப் பேசுகின்றார்களே தவிர, காலங்காலமாக ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதைப் பேசுவதில்லை.

திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட்டு கால்டுவெல் A Com­parative Grammar of Dravidian or South Indian Lan­guages(1856) என்னும் கற்பகத்தரு, காமதேனு போன்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். எனக்குத் தெரிந்து மொழி ஆராய்ச்சியில் கால்டுவெல்லுக்குப் பிறகு ஒரு மாபெரும் புரட்சி செய்தவர் நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) என்னும் பேரறிஞர்தான். மாமேதை கார்ல் மார்க்சின் மூலதனம் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டதைப் போலச் சோம்ஸ்கியின் மாற்றிலக்கணம் (Transformational Grammar) உலகிலுள்ள மரபிலக்கணங்களை அப்படியே மறுபரிசீலனை செய்ய உதவுகின்றது. கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ஒரு கலகக்கார நூலாகவே ஆகிவிட்டது.

இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி சமக்கிருதமே, ஆரியரின் தொடர்பு இல்லாவிட்டால் தமிழ், தமிழர், தமிழ்நாட்டிற்கு எதுவுமே பெருமிதம் பேசுவதற்கு இல்லை என இடைக்காலத்தில் தொடங்கி இன்றுவரை பேசுகின்றார்கள்; எழுதுகின்றார்கள். தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமி (The Mirror of Tamil and Sanskrit, 2012 & செந்தமிழ் நாடும் பண்பும், 2021) தம் நூல்களில் வன்மத்தை எல்லாம் ஒன்று சேர்த்து எழுதியுள்ளார்.

F.W. எல்லிஸ்(1816) சமக்கிருத மொழியானது, தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளோடு குடும்ப மொழித் தொடர்புடையது அன்று என்றார். வில்லியம் ஜோன்ஸ்(1788) சமக்கிருதம் கிரேக்கம், இலத்தீன் போன்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளோடு இனவுறவு உடையது என்று கூறிவிட்டார். எனவேதான், வடமொழியாகிய சமக்கிருதம் பிராகிருதம், இந்தி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி போன்ற வடநாட்டில் பேசப்படும் மொழிகளை இந்தோ-ஆரியம் (Indo-Aryan) எனக் குறிப்பிடுகின்றார்கள். இந்தியாவிற்கே அந்நியமான வடமொழியை இந்தியாவின் தொன்மைக்குடியான திராவிட மொழிக் குடும்பத்திற்குத் தாய்மொழி எனப் பல நூற்றாண்டுகளாகச் சொல்லி அறைத்த மாவையே அறைத்து வருகின்றார்கள்.

இராபர்ட்டு கால்டுவெல்லின் இன்னொரு நூல் The Tinnevelly Shanars: A Sketch (1849) என்பதாகும். நூலாசிரியர் உமரி காசிவேலு தம்முடைய நூல்களில் நாடார் எனக் குறிப்பிடாமல் சாணார் என்றும் பிராமணர்களைப் பார்ப்பனர் என்றும் குறிப்பிடுகின்றார் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பல அறிஞர்களின் துணையுடன் கால்டுவெல்லின்மீது சுமத்துகின்றார். பிராமணர்கள் எல்லா இனத்தவரையும் எல்லா வழிபாட்டு மக்களுடன் சேர்த்துக் கொள்வதையே ஒரு முழு வேலையாகச் செய்துவருகின்றனர்(2018:55). இதில் சிறிய அளவில் உண்மை இருக்கின்றது. நால்வருணப் பாகுபாட்டில் கடைக்கோடியில் வைக்கப்பட்டுள்ள சூத்திரர்களைக் கூட இந்து என்னும் போர்வைக்குள் மூடப் பார்ப்பார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் சேர்க்கமாட்டார்கள். பெருவாரியான பட்டியலின மக்களைப் பற்றிச் சொல்லவாவேண்டும்! நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களால் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எவ்வளவு முட்டுக்கட்டைகள்! தமிழக அரசு கொண்டுவந்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு எத்தனை எதிர்ப்புகள்!

திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட்டு கால்டுவெல் கிறித்துவ மதத்தை மட்டும் பரப்பவில்லை. கல்வியைக் கொடுத்துள்ளார். அவரின் துணைவியார் எலிசாவும் பெண்களின் படிப்பிற்காகப் பாடுபட்டுள்ளார்; கைத்தொழிலைக் கற்றுக்கொடுத்துள்ளார். இவற்றை எல்லாம் அவரை எதிர்ப்பவர்கள் கண்ணைத் திறந்து பார்ப்பதில்லை. மரபு கெட்டுவிட்டது என்கின்றார்கள்; மறுமலர்ச்சியைப் பார்க்க மறுக்கிறார்கள். அவர் வாழ்ந்த காலத்­திலிருந்தே அவருக்கு எதிர்ப்பு இருந்துள்ளது

கால்டுவெல் நூலுக்கு மறுப்பாகச் சாதியப் படிநிலையில் நாடார்கள் பிராமணர்களுக்கு அடுத்த மேல் சாதியினர் என்பதாக ஒரு நூல் வெளிவந்தது. அது பரவலான கவனத்தைப் பெறவில்லை. கால்டுவெல் இந்த இயக்கத்திற்குப் பின்னால் இருந்தவர்களைத் தெரிந்துகொண்டார். ஆனால், அலட்டிக் கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இயக்கம் தொடங்கும் காலத்திற்கு முன் கால்டுவெல் நெல்லை மாவட்டத்தின் அசைக்க முடியாத பேராயர் ஆகிவிட்டார். எனவே, இந்த எதிர்ப்பியக்கம் கிறித்துவர்களுக்குள்ளேயே வலுப் பெறவில்லை. (திருநெல்வேலி சாணார்கள், 2018:4) எனப் பேராசிரியர் தொ.பரமசிவம் கால்டுவெல்லுக்கு எதிரான எதிர்ப்பை வரலாற்று நிலையில் குறிப்பிடுகின்றார். கொள்ளிக்கட்டையைக் கொடுத்துச் சொறிந்துகொள்ளச் சொன்னால் பெரும்பான்மையான மக்கள் செய்வார்கள் என இன்னும் சிலர் பழைய பஞ்சாங்கத்தையே புகட்டப் பார்க்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களின் எதிர்ப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எதிர்வினையாற்ற வேண்டியதில்லை. தமிழகத்தில் திராவிட கட்சி மாறினாலும் ஆட்சி மாறவில்லை. கடவுள் பெயரைச் சொல்லி மாற்றிவிடலாம் எனப் பார்க்கின்றார்கள். கடவுள் பெயரைச் சொல்லித் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சீரழிவுகள் மக்களுக்குத் தெரியும். சமூக-சமத்துவ நீதிக்கு மட்டுமே இங்கு இடமுண்டு. திராவிடம் பேசி விழிப்புணர்வு வந்ததைப் போலத் தமிழகத்தை ஆள விரும்புபவர்களும் சமூகநீதி பேசவேண்டும்; ஒரு தேசிய கட்சி காங்கிரஸ் 'ஒரே இந்தியா, ஒரே மொழி' என்னும் கோட்பாட்டில் இந்தியைத் திணிக்க முயன்றதால்தான் தமிழ்நாட்டில் இன்னும் எழமுடியவில்லை.

இராபர்ட்டு கால்டுவெல், அம்பேத்கர், பெரியார் போன்றோரால்தான் சாதி வளர்ந்துள்ளது. பிரிவினை, பகை போன்றவை மிகுந்துள்ளன என்கிறார்கள். சாதியைப் புதிதாக இவர்கள் தோற்றுவிக்கவில்லை. இருக்கின்ற சாதிகளைக் கூறி அவற்றுக்கு இட ஒதுக்கீடு, சம உரிமை கேட்டார்கள். இவ்வாறு சமூகநீதி கேட்பது சாதியை வளர்ப்பதாக ஏகபோகமாக ஒரு குளத்தில் ஒரு வரால் மீனாக எல்லாவற்றையும் எடுத்துப்போட்டு விழுங்கியவர்களுக்குக் கசக்கத்தான் செய்யும்.

இராபர்ட்டு கால்டுவெல் வாழ்ந்த காலத்தில் சமுதாயம் பற்றியோ மொழி பற்றியோ தரவு திரட்டுவது மிகக் கடினம். அறிவியல், மொழி­யியல் வளரத் தொடங்கிய காலம். இப்போது கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலைப் படிக்கும்போது அவ்வளவு வியப்பாக இருக்கின்றது! திராவிடம் என்னும் கோட்பாட்டை இந்திரலோகம், சொர்க்கலோகம் போலக் கற்பனையாகக் கட்டமைத்துவிடவில்லை. தமிழ் பேசுவோரோடு மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசுவோர் உடன்படவில்லை என்பதற்காக இவர்கள் ஒருகுலைக் காய்கள் என்பதை மறுத்துவிட முடியாது. அரசியலில் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; வரலாற்றை மறுத்துவிட முடியாது. மொழியியல் ஆய்வு என்பது தொல்பொருள் எச்சங்களைப் போன்றது. இந்தோ-ஐரோப்பியரும் இந்தோ-ஆரியரும் பங்காளிகள் எனக் காட்டிக் கொடுப்பது ஒப்பியன் மொழியியல்தான்.

கால்டுவெல்லின் திராவிட ஒப்பியன் மொழிக் கொள்கையில் சில முரண்பாடுகள் உள்ளன; அவற்றைத் திராவிட மொழியியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். கால வளர்ச்சியில் குறைகளைச் சுட்டிக்காட்டுவது இயல்புதான். ஆனால், திராவிடம் என்னும் மீட்டுருவாக்கம் அசைக்க முடியாதது. A Comparative Grammar of Dravidian or South Indian Family of Languages (1856) என்னும் ஒப்பியன் மொழிநூலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியுள்ள ஆய்வுகள் வியப்பைக் கொடுக்கும்.

திராவிட மொழியியலின் தந்தை

தி.கீ.எல்லிஸ் (1816) என்னும் அறிஞர் A.D.கேம்பல் என்பவர் எழுதிய தெலுங்கு இலக்கண நூலுக்கு அறிமுக உரை எழுதியுள்ளார். காலங்காலமாக இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி சமக்கிருதமே என்னும் கூற்றை அதில் மறுக்கின்றார்.

It is the intent of the following observations to show that the statements contained the preceding quotations are not cor­rect; that neither the Tamil, the Telugu, nor any of their cognate dialects are derivations from the Sanskrit; that the latter, how­ever it may contribute to their polish, is not necessary for their existence; and that they form a distinct family of languages, with which the Sanskrit has, in latter times especially intermixed, but with which it has no radical connexion. (Grammar of Teloogoo, 1816:2)

இலக்கண நூலார் சிலரும் மேலைநாட்டார் சிலரும் சமக்கிருத மொழியே இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி என்று கூறிய கருத்தை தி.கீ.எல்லிஸ், இராபர்ட்டு கால்டுவெல் என்னும் இருவருமே தெளிவாக மறுத்தனர்.

கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் 1856'இல் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்று மொழியியல், ஒப்பியன் மொழியியல் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலம். பல குடும்ப மொழிகள் இனங்காணப்பட்டிருந்தன. அவ்வகையில், கால்டுவெல் பல குடும்ப மொழிகளோடு திராவிட மொழிகளை ஒப்பிடுகின்றார். சித்திய மொழிக் குடும்பத்தோடு இலக்கண ஒப்புமை இருப்பதை விளக்குகின்றார். இந்தோ-ஆரியமும் திராவிடமும் வேறுவேறு குடும்ப மொழிகள் என்னும் எல்லிஸின் கோட்பாட்டை விளக்கமாக எழுதியதால்தான் அவர்மேல் தீராப் பகை கொள்கின்றார்கள். கால்டுவெல் எல்லிசை மறைத்துவிட்டார் என்றொரு குற்றச்சாட்டும் உண்டு. விரிவாகச் சான்றுகளை விளக்கியவர் இராபர்ட்டு கால்டுவெல்தான்.

திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட்டு கால்டுவெல் செப்பம் செய்த நூல் 1875'இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. அரசியல் காரணமாகச் சில பகுதிகள் நீக்கப்பட்டு 1913'இல் மூன்றாம் பதிப்பு வெளிவந்துள்ளது. இம்மூன்றாம் பதிப்பை 1956 முதல் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.

1875'இல் முழுமையான பதிப்பாக வெளிவந்த இரண்டாம் பதிப்பை அரிதின் முயன்று பதிப்பித்த கவிதா சரண்(2007) போற்றத்தக்கவர். கால்டுவெல்லின் விளக்கம், இடையிடையே வரும் சான்றுகள் போன்றவை புரிந்துகொள்வதைக் கடினமாக்கும். அக்காலத்தில் மொழியியலைக் குறிக்கும் கலைச்சொல் Philology; இக்காலக் கலைச்சொல் Linguistics. இலக்கணக் கலைச்சொற்கள் சிலவும் மாறுபடும். பகுதி அளவும்(காழி சிவ.கண்ணுசாமி, கா.அப்பாத்துரை, 1941) முழுமையாகவும் (கா.கோவிந்தன், க.ரத்னம்,2004) தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்க்க முயன்றவர்களைப் பாராட்டவேண்டும்.

எதிர்கால ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படப்போகும் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 2021'இல் வெளிவந்துள்ளது. முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின்வழி வெளிவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இம்மொழிபெயர்ப்பு நூல் வெளிவர அரிய முயற்சி செய்த இயக்குநர் செ.சரவணன், தொல்காப்பியர் ஆய்வு இருக்கைப் பொறுப்பாளர் அ.சதீஷ் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை) பாராட்டுக்கு உரியவர்கள்.

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை அடிக்கடி பயன்படுத்துவோருக்குத்தான் தமிழ் மொழிபெயர்ப்பின் அருமை புரியும். தாமஸ் ஆர்.டிரவுட்மன் (Thomas R.Trautmann: Languages and Nations – The Dravidian Proof in Colonial Madras, 2006) எழுதிய ஆங்கில நூலைத் திராவிடச் சான்று - எல்லிஸும் திராவிட மொழிகளும்(2007) என்னும் தலைப்பில் பேராசிரியர் இராம.சுந்தரம் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரியும் வகையிலும் மொழி பெயர்த்துள்ளார். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து இந்நூலை வெளியிட்டுள்ளன.

இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது இருந்த தெளிவைக் கால்டுவெல்லின் (A Compara­tive Grammar of Dravidian or South Indian Languages, 1875) ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பிலும் அறியமுடிந்தது. ஆங்கிலத்தில் இராபர்ட்டு கால்டுவெல் எழுதிய நூலைத் திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்(2021) என்னும் தலைப்பில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன்.

இவ்விரண்டு திராவிட மொழிக்குடும்பம் சார்ந்த நூல்களில் மொழிபெயர்ப்புச் சிறப்பாக அமைந்தமைக்கும் காரணம் வேறு ஒன்றுமில்லை.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்           (திருக்.517)

இதுதான் காரணம். பேராசிரியர் இராம.சுந்தரம், பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் இருவருமே மொழியியல் அறிஞர்கள். இருவரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றறிஞர் மு.அருணாசலம் அவர்களின் தலைமையில் இயங்கிய பேரகராதித் திட்டப் பணியில் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் பணியாற்றியது பசுமையாக நினைவுக்கு வருகின்றது. கலை, அறிவியல் தொடர்பான சொற்களைத் திரட்டிப் பொருள் எழுதும்போது ஏற்படும் ஐயங்களைத் தெளிவாகப் போக்குவார். மென்மையாகப் பேசுவார்; ஆழமான கருத்துகள் பொதிந்திருக்கும்.

ஆகச் சிறந்த கால்டுவெல்லின் திராவிட ஒப்பிலக்கண நூல் மொழிபெயர்ப்பைத் தமிழக அரசும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் உலகம் முழுதும் வாழும் ஆய்வாளர்களின்/தமிழர்களின் கரங்களில் தவழ ஆவன செய்யவேண்டும்.

அருட்திரு இராபர்ட்டு கால்டுவெல்

இராபர்ட்டு கால்டுவெல்லின் வரலாற்றைப் பற்றிய பதிவுகள் நூல்களிலும் கட்டுரைகளிலும் நிறைய உள்ளன. 07.05.1814'ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டிலுள்ள பெல்பாஸ்ட்டு என்னும் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். வளர்ந்து கொண்டிருந்த ஒப்பியன் மொழியியல் (Comparative Linguistics) என்னும் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டார். தொன்மையான இலக்கிய, இலக்கணங்களில் ஆழங்கால்பட்டவர்களுக்கு ஆய்வில் ஏற்படும் ஐயங்களுக்கு எளிதில் தீர்வுகாணமுடியும் என்பதற்கு இராபர்ட்டு கால்டுவெல்லே சான்றாவார்.

கிரேக்க மொழியிலும் பிற மொழிகளிலும் சமய இலக்கியங்களிலும் புலமை பெற்ற கால்டுவெல் கிறித்துவ மதம் பரப்புவதற்காகத் தம் 24'ஆம் வயதில் 1838'இல் மத போதகராகச் சென்னை மாகாணத்திற்கு வந்தார். நம்மவர்களுக்கும் மேலை நாட்டினருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. சுரண்ட வருபவர்களுக்கு ஒரு நாட்டில் கிடைக்கப்போகும் வருவாயே முதன்மையானது.

திராவிட மொழிகளுக்கு மட்டுமல்லாமல் இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் அந்நிய நாட்டினர் செய்துள்ள பணி மிகச் சிறந்ததாகும். வடமொழி­யிலுள்ள இலக்கண, இலக்கியங்களை உலகறியச் செய்தார்கள். மற்றவர்கள் மீது திணிக்க முயற்சி செய்வதால் வடமொழியின் மீது வெறுப்பு ஏற்படுகின்றதே தவிர, அந்த மொழியின் மீது அன்று. இன்று வளர்ந்துள்ள மொழியியல் (Linguistics) துறை வளர்ச்சிக்கு வித்திட்டது வடமொழி இலக்கணம் என மொழியியல் அறிஞர்கள் நன்றியுடன் குறிப்பிடுவர் (தாமஸ் டிரவுட்மன், 2007:94-97).

நம்முடைய பெருந் தெய்வங்கள் அனைத்தும் வளமான ஆற்றங்கரைப் பகுதிகளில் வாழவே விரும்பியுள்ளன. ஆனால், கால்டுவெல் வந்து தங்கிய திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி ஒரு குக்கிராமம். பனையும் கள்ளியும் நிறைந்த பகுதி. அவர் சுற்றியுள்ள கிராமங்களையும் தம் சேவையால் ஈர்த்தார். கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள் பல்வேறு வாழ்வாதாரங்களைப் பெற்றார்கள். மானுடநேயம் கொண்ட அருட்தந்தை இராபர்ட்டு கால்டுவெல் அவர்களால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதே திராவிட மொழிக் குடும்பம்.

திராவிட மொழிக் குடும்பம்

கால்டுவெல் அவர் காலத்தில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் பன்னிரண்டைத் திருந்திய மொழிகள்(தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு அல்லது கூர்க்), திருந்தா மொழிகள்(தோதவம், கோதவம், கோண்டு, காண்ட் அல்லது ஒராஅன், ராஜ்மஹால்) என ஆறு ஆறாகப் பகுத்து ஆராய்கின்றார். படிப்படியாக மேலை நாட்டு அறிஞர்களும் நம் நாட்டுத் திராவிட மொழியியல் அறிஞர்களும் தனித்தனியான திராவிட மொழிகளைக் கண்டறிந்து அவற்றுக்கு விளக்க மொழியியல் (De­scriptive Linguistics) அடிப்படையில் இலக்கணம் எழுதினார்கள். பின்வருபவை முக்கியமான சில பேச்சு வழக்கில் மட்டுமுள்ள திராவிட மொழிகளின் இலக்கண நூல்கள் ஆகும். இவற்றுக்கு எல்லாம் விளைநிலம் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலாகும்.

J.Brigel, A Grammar of Tulu Language,1872: Ernest Droese, Introduction to the Malto Language, 1884; H.Wil­liamson, Gond Grammar and Vocabulary, 1890, Denys Bray, The Brahui Language, 1909; J.E.Friend-Pereira, A Grammar of Kui Language, 1909, F.Hahn, Kurukh Grammar, 1911; A. Grignard, A Grammar of Oraon Language, 1924; T.Burrow & S. Battacharya, The Parji Language, 1953; The Pengo Language, 1970; Sisir Kumar Das, Structure of Malto, 1973; R.Balakrishnan, A Grammar of Kodagu, 1977.

இவை வெளிவந்துள்ள ஆண்டுகளைப் பார்த்தாலே கால்டுவெல்லின் திராவிட மொழிக் குடும்பக் கோட்பாடு எவ்வளவு உண்மையானது என்பது பற்றி அவரை எதிர்ப்பவர்களுக்குக் கூடப் புத்தொளியைப் பாய்ச்சும் வகையில் புரிபடும். பேச்சு வழக்கில் மட்டுமுள்ள திராவிட மொழிகளுக்கு இன்னும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இவை அல்லாமல் திராவிட மொழிகளின் பொதுவான இலக்கண அமைப்பை விளக்க நூற்றுக்கணக்கான ஒப்பியன் மொழிநூல்கள் வெளிவந்துள்ளன. ஆயிரக்கணக்கில் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. திராவிட மொழிகளின் இணைச்சொல் அகராதிகள் உள்ளன. 1973'ஆம் ஆண்டிலேயே திராவிட மொழிகள், அவற்றின் இலக்கியங்கள் தொடர்பாகத் துணைநூற்பட்டியல் (Bibliography) வெளிவந்துள்ளது (Busnagi Rajannan, Dravidian Languages and Literature, Madurai Univer­sity, Madurai,1973). குறிப்பிட்ட வரையறையோடு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் பிற திராவிட மொழிகளிலும் வெளிவந்துள்ள நூல்களின் பட்டியலை இன்றுவரை தொகுத்தால் இருபது, முப்பது தொகுதிகள்வரை தொகுக்கலாம். இராபர்ட்டு கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அவ்வளவு தாக்கத்தை உலக அளவில் ஏற்படுத்தியுள்ளது.

இராபர்ட்டு கால்டுவெல் காலத்தில் 12 மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளாக அறியப்பட்டிருந்தன. மென்மேலும் செய்யப்பட்ட ஆய்வுகளால் அண்மைக்காலம்வரை 26 திராவிட மொழிகள் இந்தியாவின் தென்கோடி முதல் வடகோடிவரை கண்டறியப்பட்டுள்ளன (Bh. Krishnamurthi, 2003:19).

T.Burrow & M.B.Emeneau  (1981,1986) தொகுத்துள்ள திராவிட மொழிகளின் இணைச்சொல் அகராதியை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். அவற்றின் ஒப்புமை வடிவங்கள் தற்காலிகமானவை அல்ல; இந்தியாவின் தொன்மைக் குடி திராவிடம், அதன் மொழிக்குடும்பம் திராவிட மொழிக்குடும்பம் என்பதை நிறுவும்.

ஒப்பீட்டுச் சொற்கோவையின் கட்டமைப்பிலுள்ள கோட்பாட்டின் மூலம் மொழிகளும் தேசங்களும் அல்லது இனங்களும் இடையீடு இல்லாத நெருங்கிய உறவுடையன என்பது அறியக்கூடியதாக உள்ளது. மொழி உறவு குறித்த ஒவ்வொரு கூற்றும் தேச உறவு குறித்த கூற்றாகவும் அமைந்து ஒன்றை ஒன்று அடையாளம் காட்டியது. (திராவிடச் சான்று, ப.74)

சமக்கிருதம் அடங்கிய இந்தோ-ஆரிய மொழிகள் இந்தியாவில் குடியேறிய ஆரியரின் மொழிகள் என்பதை இந்தோ-ஐரோப்பிய மொழிகளே காட்டிக்கொடுத்து விடுகின்றன.

கார்ல் மார்க்சின் பொதுவுடைமைச் சித்தாந்தம் எங்கோ ஓரிடத்தில் தோன்றினாலும் அது உலகம் முழுவதும் ஊடுருவி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அது முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும் முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான இடைவெளியைப் புரியவைக்கின்றது. இராபர்ட்டு கால்டுவெல்லின் திராவிடவியல் கோட்பாட்டைத் திராவிடர்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. அரசியலில் முழுமை அடையாவிட்டாலும் திராவிட மொழிக்குடும்பக் கோட்பாடு ஆய்வில் உச்சம் தொட்டுவிட்டது என்பதில் ஐயமில்லை.

திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட்டு கால்டுவெல் திராவிடர், திராவிட மொழிகள் பற்றி விரிவாக ஆராய்கின்றனர். அவருடைய சில முக்கியமான கோட்பாடுகளை விளக்கலாம்.

திராவிடமும் இந்தோ-ஆரியமும்

உள்நாட்டுப் பண்டிதர்கள், மேலை நாட்டினர் என வேறுபாடு இல்லாமல் சிலர் தமிழ் போன்ற திராவிட மொழிகளுக்குச் சமக்கிருதமே தாய்மொழி என்றனர். வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார் (வீரசோ.60), தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையர்(தொ.சொ.401), இலக்கணக் கொத்து நூலாசிரியர் சாமிநாத தேசிகர் (இல.கொத்.7) எனக் கால வரிசைப்படி ஒரு பட்டியலே போடலாம். இக்கொள்கையை உடைய வெளிநாட்டவர் சிலரையும் கால்டுவெல் குறிப்பிடுகின்றார். கோல்புரூக், கேரி, வில்கின்ஸ் போன்றோர்களால் ஆதரிக்கப்பட்ட அனுமானமான திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து எழுந்தவை என்பது இப்போது எவ்வித அடிப்படையும் அற்றது எனத் தெளிவாகிறது (திராவிட அல்லது., ப.58).

அந்தந்தத் துறைகளில் குறைந்த அளவுகூடப் பொதுப் புத்தி இல்லாதவர்கள் புகுந்தால் இப்படிப்பட்ட கூத்தெல்லாம் நிகழும். சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்பதற்கு எவ்வளவோ ஆய்வுகள் வந்துள்ளன. சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று நிறுவியவர் சர் ஜான் மார்ஷல்(1924). இருப்பினும் அது சரஸ்வதி நாகரிகம் எனத் தற்போதும் கூறுகின்றார்கள். ஆன்மிகவாதிகளிடம் வரலாறு, அரசியல் சிக்கிக்கொண்டால் குரங்குக் கையில் அகப்பட்ட பூமாலைதான்.

திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட்டு கால்டுவெல் திராவிட மொழிகள் தனிக் குடும்ப அமைப்பு உடையவை என்பதற்குப் பதின்மூன்று குறிப்புகளைக் கொடுக்கின்றார். சமக்கிருதத்திற்கும் அவற்றுக்கும் மொழியமைப்பு அடிப்படையில் எந்த உறவும் இல்லை என்பதைத் தெளிவாக்குகின்றார்(திராவிட அல்லது., பக்.57-71).

வேறுபட்ட குடும்ப மொழியைச் சார்ந்தோர் ஓரிடத்தில் வாழும்போது சொல் பரிமாற்றம் நிகழ்வது இயற்கை. இதனை மொழியியலார் கடன் வாங்குதல் எனக் குறிப்பிடுவர். உங்க வீட்டது, எங்க வீட்டது; எங்க வீட்டது, எங்க வீட்டது' என்பது போலக் கடன் பெற்ற சொற்களைக் கொண்டு சமக்கிருதமே தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி எனக் கூருவோரைப் பற்றி எப்படி நினைப்பது என்றே தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களைக் கால்டுவெல் ஒப்பியன் மொழிப் பரிச்சயம் அற்றவர்கள் என்கின்றார்.

தி.கீ.எல்லிஸ், இராபர்ட்டு கால்டுவெல் போன்றோரை நினைக்கும்போது தற்போது 'YouTube' இணையத் தளத்தில் பேசும் ஊடகவியலாளர்கள் நினைவுக்கு வருகின்றார்கள். எதிர் அணியில் இருப்பவர்கள் போகிற போக்கில் கொளுத்திப் போட்டுவிட்டுப் போகிறார்கள். அதை அணைக்க அல்லது விளக்கப் பெரும்பாடுபடுகின்றார்கள்; கள ஆய்வு செய்கின்றார்கள்; விடிய விடியப் படிக்கின்றார்கள். அந்தத் தோழர்கள் உரக்கப் பேசும்போது நமக்குத் தண்ணீர்க் குடிக்கவேண்டும் போல் இருக்கும்.

திராவிட மொழிகளுக்குச் சமக்கிருதம் தாய்மொழி இல்லை என்பதை நிறுவக் கால்டுவெல் எத்தனை இரவுகள் கண்விழித்துப் படித்திருப்பாரோ? கொளுத்திப் போடுவதற்கு மட்டுமில்லை; நம்பிக்கைவழிக் கூறினாலும் மறுக்கவோ உடன்படவோ அறிவியல் அறிஞர் கடுமையாக ஆராய்ச்சி செய்யவேண்டும். பூமி தட்டையானது என்னும் மதக் கோட்பாட்டை மறுத்து உருண்டையானது எனக் கூறியதற்கு விஞ்ஞானிகள் எவ்வளவு இன்னல் அடைந்துள்ளார்கள்?

சுருங்கச் சொன்னால் வில்லியம் ஜோன்ஸ் குறிப்பிட்ட இந்தோ-ஐரோப்பியம், இந்தோ-ஆரியம் போன்ற குடும்ப மொழிகளுக்கு எண்ணற்ற ஆய்வுகள் வெளிவந்துள்ளமை போன்று கால்டுவெல்லின் ஆய்விற்கும் வெளிவந்துள்ளன. தாமஸ் டிரவுட்மன் பின்வருமாறு புகழாரம் சூட்டுகின்றார்.

கால்டுவெல்லின் கருத்தாழமிக்க இந்த ஒப்பிலக்கண நூல் செம்மையானது; இன்றும் வழக்கில் உள்ளது. ஒப்பிலக்கணத் துறையில் ஆழக்கால் பதித்தது; சிறந்த புலமையின் சான்றாக உள்ளது; அதனாலேயே, அது இன்னமும் சிறப்பாக மதிக்கப்படுகிறது. (திராவிடச் சான்று, ப.102)

பெரும்பாலான மேலைநாட்டு அறிஞர்கள் அடிப்படை இலக்கண நூல்கள், அகராதிகள் இயற்றும் பணியை மேற்கொண்டிருந்தபோது கால்டுவெல் திராவிட மொழிகளில் ஆராய்ந்து ஒப்பிலக்கணம் எழுதினார்.

பால் பாகுபாடு

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல அவரவர் மொழி அவரவர்க்குக் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும். தேவபாடை, சாதாரண மொழி என்றெல்லாம் இல்லை. எங்கள் மொழிதான் தெய்வங்களுக்குப் புரியும் எனப் பெருமிதமாகப் பேசப்பட்ட சமக்கிருதம், கிரேக்கம், இலத்தீன், ஈப்ரு போன்ற மொழிகள் எல்லாம் இன்று வழக்கழிந்து ஒழிந்துவிட்டன. மொழி மக்களிடம் வாழவேண்டும். எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் நூற்றுக்கணக்கானவை இன்றும் நிலைத்து இருப்பதற்குக் காரணம் அவை பேச்சு மொழிகளாக உள்ளன.

தமிழ் மற்றுமுள்ள திராவிட மொழிகளிலுள்ள பால் பாகுபாடு (Gender Distinction) பற்றிய அருமை நமக்குப் புரியவில்லை. ஆனால், பல குடும்ப மொழிகளை அறிந்த திராவிட ஒப்பியன் மொழி­யியலறிஞர் கால்டுவெல் இம்மொழிகளில் உள்ள பால் பாகுபாட்டை வெகுவாகப் புகழ்கின்றார். திராவிடர்களின் அறிவு வளர்ச்சியின் காரணமாகவே இது எழுந்திருக்கவேண்டும்(திராவிட அல்லது., ப.351) என்பது அவர் கருத்தாகும்.

The peculiar Dravidian law of gender which has now been described would appear to be a result of progressive intellectual and Grammatical Cultivation. (1856:222)

சில திராவிட மொழிகளில் பெண்பால், ஆணல்பால்-ஒன்றன் பாலில் அடக்கப்பட்டாலும் மக்களை உயர்திணையாகவும் அவர் அல்லாதவற்றை அஃறிணையாகவும் பார்க்கும் முறை அறிவு முதிர்ச்சியின் உச்சமாகும்.

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

அஃறிணை என்மனார் அவரல பிறவே  (தொ.சொ.1:1-2)

என்பது தொல்காப்பிய நூற்பாவாகும்.

தொடக்க கால மொழியில் எல்லா இலக்கணக் கூறுகளிலும் சீர்மையை எதிர்பார்க்க முடியாது; விதிவிலக்கு இருக்கும். மூல திராவிட மொழிக்குப் பல மொழிகளில் காணப்படும் சான்றுகள் அடிப்படையில் பெண்பாலை ஆணல் பால்(பெண்பால்-அஃறிணை) என மீட்டுருவாக்கம் செய்கின்றார்கள் (P.S. Subrahmanyam, 1971:414-422).`

பழைய பால் பாகுபாட்டில் இவ்வாறு இருந்தாலும் குறிப்பாகத் தமிழ் போன்ற தென்திராவிட மொழிகளில் பெண்பால் உயர்திணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்

பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி

அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே           (தொ.சொ.2)

தமிழில் பெண்பாலை உணர்த்தும் பெயர்கள் பால்காட்டும் விகுதியைப் பெற்றிருந்தாலும் (அவள், ஐங்.66:2; உழத்தி, சிலப்.12:12:2) பெண்பால் பொருளை உணர்த்தினாலும் (அரிவை, புறம்.122:9; பேதை, அகம்.35:17) பெண்பாலாகவே கருதப்படும். ஆனால், திராவிட மொழிகளின் தாய்மொழியாகக் கருதப்பட்ட சமக்கிருத மொழியில் பெண்ணைக் குறிக்கும் மூன்று பெயர்கள் வெவ்வேறு பாலில் அடக்கப்படும்.

kalatra (களத்திரம்)     - அலிப்பால்

bha:rya (பாரியை)        - ஆண்பால்

da:ra (தாரம்)    - பெண்பால்

சமக்கிருத மொழி மட்டுமல்லாமல் உலகில் பல மொழிகளில் பால்பாகுபாடு இயல்புக்கு முரண்பட்ட வகையில் இருப்பதால்தான் இராபர்ட்டு கால்டுவெல் திராவிட மொழிகளில் பாகுபாட்டை வெகுவாகப் பாராட்டுகின்றார்.

வேர்ச்சொல் விளக்கம்

இராபர்ட்டு கால்டுவெல் திராவிட மொழிகள், அவற்றின் எழுத்தியல், சொல்லியலை விரிவாக ஆராய்கின்றார். அவரின் ஆய்வு பல இடங்களில் மறுபரிசீலனைக்கு இடம் அளித்தாலும் அந்த இலக்கணக் கூறை அவர்தான் அறிமுகப்படுத்துகின்றார். திராவிட மொழிகளின் வேர்ச்சொல் பற்றிய ஆய்வு திராவிட மொழி அமைப்பில் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது.

திராவிட மொழிகளின் வேர்ச்சொற்கள் (Roots) ஓரசையால் அமைந்தவை எனக் கால்டுவெல் கூறுவது திராவிட மொழியியல் ஆய்வில் ஆய்விற்கு ஓர் உச்சக்கட்ட நெறிப்படுத்துதல் ஆகும். 1944'ஆம் ஆண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் இரண்டாவது பிரிவாகிய வேர்ச்சொல்லைத் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மொழிபெயர்த்ததாகக் குறிப்புக் காணப்படுகின்றது(திராவிட அல்லது. ப.9-10).

திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அமைப்புப் பற்றிப் பல திராவிட மொழியியல் அறிஞர்கள் (Bh. Krishnamurti, 1961, 2003; P.S.Subrahmanyam, 1983, 2007) விரிவாக ஆராய்ந்துள்ளார்கள்.

திராவிட மொழிகள் அனைத்தும் பின்னொட்டு (Suffixing) மொழிகள்; வேர்ச்சொல்லுடன் உருபுகள் சேர்ந்தே சொற்கள், தொடர்கள் உருவாகின்றன. வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு மரபிலக்கணங்கள் விளக்கும் புணர்ச்சி இலக்கணத்தை ஆராய்ந்தால் தொல்காப்பியர், பவணிந்தி முனிவர் போன்றோர் கூறியுள்ள விதிகளை அப்படியே மாற்றி எழுதவேண்டியிருக்கும். கால்டுவெல்லின் வேர்ச்சொல் ஆய்வில் ஆய்வுக் களங்கள் அவ்வளவு உள்ளன.

தொல் திராவிடம் (Proto-Dravidian)

தொல் திராவிடம் என்னும் மொழிக் குடும்பம் பொய்யானது என்றால் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம், இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம், மங்கோலிய மொழிக்குடும்பம் போன்ற கட்டமைப்புகளும் பொய்யானவை ஆகும். எலும்பு, முட்டை போன்ற தொல் எச்சங்களைக் கொண்டு தொல் உயிரினங்களைக் கட்டமைப்பதை மறுக்கவேண்டும்.

முதன்முதல் தி.கீ.எல்லிஸ் திராவிட மொழிக் குடும்பத்தைக் கட்டமைத்ததைத் தாமஸ் டிரவுட்மன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

திராவிட மொழிகள் என்று நாம் வழங்குகின்ற தென்னிந்திய மொழிகள் தம்முள் ஒற்றுமையுடையன என்பதும் அவை சமக்கிருத மூலத்தைக் கொண்டவை அல்ல என்பதுமாகும். இந்தக் கண்டுபிடிப்புக்கள் உண்மையில் புதியவையும் எதிர்பாராதவையுமாகும். மொழிகளின் வரலாற்றுவழி உறவை, அந்த மொழிகளைப் பேசும் மக்களே நினைவில் வைத்திராத நிலையில் இன்றும் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் இந்தக் கண்டுபிடிப்புக்கள் வெளிப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கதாகும். (திராவிடச் சான்று, பக்.67-68)

கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும்                                                                                       துளுவும்

உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்   (மனோ.பாயி.)

என்னும் மனோன்மணியம் சுந்தரனாரின் கருத்து மகிழ்ச்சி தரக்கூடியது. 14'ஆம் நூற்றாண்டுவரை தமிழின் வட்டார வழக்காக இருந்து மலையாளம் பிரிந்தது என மொழியியல் அடிப்படையில் நிறுவியதையே சிலர் மறுக்கின்றனர். தொல் திராவிடம் திராவிட மொழிகளில் காணப்படும் சான்றுகள் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகும். தமிழ் எண்பது விழுக்காட்டிற்குமேல் தொல் திராவிடத்தின் அமைப்பைப் பெற்றுள்ளது. ஏன் எல்லாத் திராவிட மொழிகளையும் தமிழுக்குள் அடக்கமுடியாது என்பதற்குத் திராவிட மொழிகளுக்குள்ளேயே பல சான்றுகள் உள்ளன. சிலவற்றை மட்டும் தொட்டுக்காட்டலாம்.

திராவிட மொழிகளுக்கு மீட்டுருவாக்கம் செய்யப்படும் மொழிமுதல் சகரம் பல மொழிகளில் அப்படியே வந்துள்ளது. தமிழில் அது மொழி முதலில் கெட்டுள்ளது.

தமிழ்: ஆறு, நாய்கி: sa:di, கோண்டி: sa:rung, கூயி: sajgi, 'six', (DED.2485)

தமிழ்: உப்பு, கோலாமி, நாய்கி, கதபா: sup, 'salt', (DED.2674a)

மொழி முதலில் வரும் ககரமெய் குறிப்பிட்ட சூழலில் சகர மெய்யாகத் திரியும். அண்ணவினமாதல் என்னும் மாற்றம் உலக மொழிகளுக்குப் பொதுவானது. தமிழில் நிகழ்ந்துள்ளது. வேறுசில திராவிட மொழிகளில் நிகழவில்லை.

தமிழ்: செவி, கன்னடம்: kivi, கோலாமி, நாய்கி, கோண்டி: kev, 'ear', (DED.1977a)

தமிழ்: செருப்பு, கன்னடம்: kervu, கோலாமி, நாய்கி: kerri, 'slipper', (DED.1963)

எல்லாத் திராவிட மொழிகளும் தமிழிலிருந்து பிறந்தவை என்றால் பிறந்தவற்றில் தொன்மை ஒலி கெடவில்லை, மாறவில்லை. ஆனால், தமிழில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன. இராபர்ட்டு கால்டுவெல்லின் திராவிட மொழி ஆய்வில் வேர்ச்சொல்லாய்வு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொடக்க காலத் திராவிடச் சொற்கள் ஓரசைச் சொற்களாகவே தோன்றியுள்ளன. ஆக்க விகுதி பெறுவது பிற்கால வளர்ச்சியாகும். மர்(ஞிணிஞி.4711ணீ) என்னும் வேர்ச்சொல்லே இன்றும் மரத்தைக் குறிக்கப் பெங்கோ, மண்டா என்னும் நடுத்திராவிட மொழிகளில் பயன்பாட்டில் உள்ளது. மரம் என்பது ஆக்கப்பெயராகும்.

செவி என்பதன் தொன்மை வடிவம் kev-i; ஆக்க விகுதி பெற்ற வடிவம் பல திராவிட மொழிகளில் காணப்படுகின்றது. kev (DED.1977a) என்னும் வேர்ச்சொல்லே தற்போதும் கோலாமி, நாய்கி, கோண்டி என்னும் மொழிகளில் உள்ளது.

செ.வை. சண்முகம் கூறுவதும் இவண் குறிப்பிடத்தக்கது. தமிழைப் பிற திராவிட மொழிகளோடு ஒப்பிட்டபோது தமிழ் ஆய்வில் சில ஒளி கிடைத்தது என்பது விளக்கத்திற்கு உரியது. திராவிட மொழிகளில் தமிழ் மிகப் பழமையான எழுத்துச் சான்று பெற்றிருந்தாலும் காலத்தால் பிற்பட்ட திராவிட மொழிகள் சில தொல் வடிவங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கத் தமிழில் மாறிய வடிவங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன (நான் அறிந்த. ப. 27)

தொன்மைத் திராவிடத்திற்கு மீட்டுவாக்கம் செய்யப்படும் சில கூறுகள் பல திராவிட மொழிகளில் அப்படியே உள்ளன. தமிழில் அவை வளர்ச்சியடைந்துள்ளன. பெண்பால் பல திராவிட மொழிகளில் அஃறிணையோடு சேர்க்கப்பட்டுள்ளது. தமிழில் உயர்திணையாக உள்ளது. தொல் திராவிட நிலை தமிழிலும் சில திராவிட மொழிகளிலும் மாற்றப்பட்டுள்ளது பகுத்தறிவின் வெளிப்பாடாகும்.

தொல் திராவிட மொழிக்குச் சான்றுகள் அடிப்படையில் இறந்தகாலம் (Past), இறப்பல்லாக் காலம் (Non-Past) என்னும் இரண்டே காலங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. நிகழ்காலம் என்பது தமிழில் ஒரு வளர்ச்சி நிலையாகும்.

இவற்றை எல்லாம் மனத்திற் கொண்டால் தொல் திராவிடம் அதன் கிளைமொழிகள் பற்றிய தெளிவு பிறக்கும். தமிழிலிருந்து மற்றத் திராவிட மொழிகள் தோன்றின என்றால் மேலே குறிக்கப்பட்டவை போன்ற ஆயிரக்கணக்கான வடிவங்களுக்குப் பதில்சொல்ல வேண்டும்.

எனவே, காழ்ப்புணர்வால் சிலர் திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட்டு கால்டுவெல் அவர்களைக் குறை கூறினாலும் அவர் கோட்பாடே திராவிடர் ஆட்சி அமைவதற்கு அடிப்படையாக இருந்தது. எனவேதான், இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு(1968) நடந்தபோது கால்டுவெல்லுக்குத் தமிழக அரசு சிலையமைத்து நன்றியைச் செலுத்தியது. இடையன்குடியில் அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் நினைவில்லாமாக மாற்றப்பட்டுள்ளது(2010). கோயம்புத்தூரில் நடந்த செம்மொழித் தமிழாய்வு மாநாட்டில் முத்திரை (Stamp) வெளியிடப்பட்டது. திராவிட மொழியியலுக்காகப் பாடுபட்ட வீரமாமுனிவர், ஜி.யூ.போப் போன்றவர்களும் தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். கால்டுவெல்லைத் தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் மொழித் தகுதி பெற்றது எனக் குறிப்பிட்ட பரிதிமாற்கலைஞருக்கும் தமிழக அரசு சிறப்புச் செய்துள்ளது. அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லாமாக மாற்றப்பட்டுள்ளது (2006). தமிழ் மண்ணிற்கு உண்மையாக இருந்தவர்களுக்குத் தமிழகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும் என்பதற்குக் கர்னல் பென்னி குய்க்கும் சான்றாக உள்ளார். தென்தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களின் வறட்சியைப் போக்க முல்லை-பெரியாறு அணை கட்டத் தம் குடும்பச் சொத்தையே விற்றுவந்து செலவிட்டார். தமிழக அரசு அவருக்குச் சிலையும் மணிமண்டபமும் அமைத்துள்ளது. தென்தமிழக மக்கள் தம் குழந்தைகளுக்கு பென்னி குய்க் என்னும் பெயர் சூட்டி மகிழ்கின்றார்கள்.

ஆரிய மாயையில் காலங்காலமாகச் சிக்கித் தவித்த தமிழக மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுத்தவர்கள் மேலை நாட்டு அறிஞர்கள். எனவேதான் தமிழக அரசு நன்றிக்கடன் செலுத்துகின்றது. குறிப்பாக, திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட்டு கால்டுவெல்லின் திராவிட மொழிக் குடும்பக் கோட்பாட்டால்தான் தமிழ்மொழி செவ்வியல் மொழி என்னும் தகுதியைப் பெற்றுள்ளது. தமிழுக்கு அந்தத் தகுதி இருந்தாலும் இவ்வாறு விழிப்புணர்வு வராவிட்டால் சமக்கிருதமே தமிழ்மொழியின் தாய்மொழி என்று தற்போதும் பழைய புராணத்தையே பாடிக் கொண்டிருப்பார்கள்.

காலங்காலமாகப் பொத்திக் காத்த வடமொழியே தமிழின் தாய்மொழி என்ற கோட்பாட்டைக் கால்டுவெல் தகர்த்துவிட்டார். அவரது கோட்பாட்டை முற்போக்குச் சிந்தனையாளரும் பற்றிக் கொண்டார்கள். அதனால்தான் திராவிடம் என்றால் சிலர் எரிச்சல் அடைகின்றார்கள். அவர் ஏற்றி வைத்த திராவிடப் பேரொளியில் எதிர்ப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

மேலை நாட்டவர் சிலரும் பார்ப்பன ஆய்வாளரும் திராவிட மொழிகளுக்கு மட்டுமில்லை, கிரேக்கம், இலத்தின் போன்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் சமக்கிருதமே தாய்மொழி என்றார்கள். இக்கருத்தை பிரான்ஸ் போப் மறுத்து அது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒரு கிளைமொழி என்றார் எனத் தாமஸ் ட்ரவுட்மன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் ஒப்பீட்டாய்வில் சிறந்தவரான பிரான்ஸ் போப் (Franz Bopp; 1816, 1835, 1845-53) சமஸ்கிருதம் மனித இனத்தின் தொன்மையான மொழி என்பதையே மறுத்ததோடு, ஜோன்ஸ் கருத்தையொட்டி அது இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் உடன்பிறப்பே தவிர, தாய் அன்று என்றார். (திராவிடச் சான்று, ப.58)

இராபர்ட்டு கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலால் திராவிட மொழிகளில் கணக்கு வழக்கில்லாத ஆய்வுநூல்களும் கட்டுரைகளும் வந்துள்ளன. பல நூல்களை மொழிபெயர்க்கவும் மறுபதிப்புக் கொண்டுவரவும் தமிழக அரசு முனைப்புக் காட்டவேண்டும்.

முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின்வழி கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் வெளிவந்தமைக்குத் தமிழக அரசைப் பாராட்டி நன்றி தெரிவிக்கவேண்டும். பின்வரும் பட்டியலில் கொடுக்கப்படும் திராவிட மொழியியல், தமிழ் மொழியியல், கல்வெட்டு, தொல்பொருள் ஆய்வியல் தொடர்பான நூல்கள் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழக வரலாற்றை அறியவும் பெரிதும் உதவும். குறிப்பாக, ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும். மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டியவற்றையும் மறுபதிப்புச் செய்ய வேண்டியவற்றையும் இனங்கண்டு செய்தால் தமிழ்கூறும் நல்லுலகம் தமிழக அரசுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும். இன்று தமிழக அரசு பேசும் திராவிட மாடலுக்கு அடித்தளமிட்ட திராவிட மொழியியலின் தந்தை இராபர்ட் கால்டுவெல் அவர்களையும் வளர்த்த தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநதி போன்றோரையும் நாளும் நினைவு கூர்வோம்.

திராவிட மொழியியல்

  1. Andronov M.S., Dravidian Languages Nauka Publish­ing House, Moscow, 1970.
  1. Burrow T., Collected papers on Dravidian Linguistics, Annamalai University, Annamalai Nagar, 1968.
  1. Burrow T. & Emeneau M.B., A Dravidian Etymological Dictionary, Clarendon Press, Oxford, 1961, Supple­ment, 1968.
  1. Emeneau M.B., Dravidian Comparative Phonology: A Sketch, Annamalai University, Annamalai Nagar, 1970.
  1. Israel M., The Treatment of Morphology in Tolka:p­piyam, Madurai Kamaraj University, Madurai, 1973.
  1. Krishnamurit Bh., The Dravidian Languages, University Press, Cambridge, 2003.
  1. Kumaraswami Raja N., Post-Nasal Voiceless Plosives in Dravidian, Annamalai University,  Annamalai Nagar, 1969.
  1. Shanmugam S.V., Dravidian Nouns: A Comparative Study, Annamalai University, Annamalai Nagar, 1971.
  1. - - - - - - - - - - - - -, A Historical Grammar of Tamil : Noun Morphology, Central Institute of Classical Tamil, Chennai, 2021.
  1. Subrahmanyam P.S., Dravidian Verb Morphology: A Comparative Study, Annamalai University, An­namalai Nagar, 1971.
  1. - - - - - - - - - - - - - - -, Dravidian Comparative Phonol­ogy, Annamalai University, Annamalai          Nagar, 1983.
  1. - - - - - - - - - - - - - - -, Dravidian Comparative Grammar-I, Central of Excellence for Classical Tamil, Central Institute of Indian Languages, Mysore, 2008.
  1. - - - - - - - - - - - - - - -, Dravidian Comparative Grammar-II, Central Institute of Classical Tamil, Chennai, 2021.
  1. Zvelebil V.Kamil, Comparative Dravidian Phonology, Mounton, The Hague, Paris, 1970.
  1. - - - - - - - - - - - -, Dravidian Linguistics: An Introduction, Pondicherry Institute of Linguistics and Culture, Pondicherry, 1997

தொல்லியல், கல்வெட்டு

  1. Balakrishnan R, Journey of A Civilization: Indus to Vai­gai, Roja Muthiah Research Library, Chennai, 2019.
  2. Mahadeven Iravatam, Early Tamil Epigraphy: From the Earliest Time to the Sixth Century A.D., Cre-A, Chennai, 2003.

- ச.சுபாஷ் சந்திரபோஸ், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர், இலக்கணவியல் ஆய்வாளர், எழுத்தாளர்.

Pin It