நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட தமிழ்ச் சிறுகதை இலக்கிய வகைக்கு அணி கூட்டும் மேலும் ஓர் ஆய்வு நூல் தி.சு.நடராசனின் “தமிழில் சிறுகதையெனும் வரைபடம்.” புதிய தலைமுறைப் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் தான் எவ்விதத்திலும் சளைத்தவனல்ல என்று தி.சு.நடராசன் இந்நூலின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நூலில், தமிழ்ச் சிறுகதை இலக்கிய வகையின் குறுக்குவெட்டுத் தோற்றம் எவ்வாறிருக்கிறது என்று காட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறார். இந்நூல் ஒரே சமயத்தில் பழைய தலைமுறையினருக்கும் புதிய தலைமுறை வாசகர்களுக்கும் தகவல் களஞ்சியமாக உதவக்கூடும்; ஒரு சிறுகதையினை எவ்வாறு வாசிக்க வேண்டும் என்றும் இந்நூல் வழிகாட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.
இலக்கியத் திறனாய்வின் தொடக்க காலங்களில் அதிகம் பேசப்பட்ட விம்சாட் என்னும் அறிஞர் “Affective Fallacy” என்று ஒரு முறையியலைக் கூறுவார்; இதனைப் பேராசிரியர் க.கைலாசபதி “மகிழ்ச்சி தரும் போலி நியாயம்” என்று குறிப்பிட்டுள்ளார். இம்முறையியலில், ஒரு கலைப்படைப்பு வாசகனின் மனத்தில் ஏற்படுத்துகின்ற உணர்ச்சி விளைவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுவதாகும். முற்காலங்களில் நாடகங்கள், அரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் கரவொலி, கண்ணீர் விசும்பல்கள் ஆகியவற்றைக் கொண்டு அளவிடப்பெற்றன என்று இலக்கியக் கொள்கை நூலாசிரியர்கள் ரெனிவெல்லக், ஆஸ்டின் வர்ரென் ஆகியோர் குறிப்பிடுவதுண்டு. இது ஒரு முறை.
பிரிதொரு முறை “Intentional Fallacy” அதாவது “உள்நோக்கப் போலி நியாயம்” என்பதாகும். இதன்படி இலக்கியப் படைப்புக்களின் தோற்றங்களில் ஆசிரியனின் வாழ்க்கை நிகழ்வுகளின் எதிரொலி/பிரதிபலிப்பு இருக்கும் என்பது வற்புறுத்தப்படும். பேராசிரியர் தி.சு.நடராசனின் இந்நூல் ஓரளவிற்கு மகிழ்ச்சி தரும் போலி நியாய முறைப்படி - அதாவது மனத்தில் படைப்புக்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனலாம்; ஆனாலும் இந்நூல், முழுவதுமாக மனப்பதிவுகளை மட்டும் நம்பியிருக்கவில்லை என்பது உறுதி! சிறுகதைகளைத் தழுவித் தழுவி ஆராய்ந்து அவற்றின் ஆழத்தில் தங்கியிருக்கும் கவியுள்ளத்தினை இந்நூலாசிரியரும், காணத்தவறவில்லை. எனவே இது ஆரவாரமாகக் கருத்துக்களை முன்வைக்கும் நூலல்ல; ஆழமான வாசிப்பைக் கோரி நிற்கும் நூல் என்பது என் துணிபு.
இந்நூலின் முதற்பகுதி ‘கதையெனும் பேழை’ என்பதாகும். இதில் கதை எழுதுதல் என்பது அனைவராலும் செய்யக்கூடிய பணி என்பதை விளக்குகிறார். பாட்ரிஸா ஹேம்பில் என்பவர் எழுதிய ஒரு நடைச் சித்திரத்தை எடுத்துக்காட்டி, ஒவ்வொருவரிடமும் உள்ள ஒரு நினைவுப் பேழையிலிருந்து சிறுகதைகளை வெளியே கொணரமுடியும் என்று தி.சு.நடராசன் கூறுவது புதுமையானது. “சரியான தூண்டலும் சரியான தருணமும் வந்து போகிறபோது அவை சொல்லு சொல்லு என்று படைப்பாற்றல் உடையவனை இடிக்கின்றன” என்று தீர்வு கூறுகின்றார். வாழ்க்கை அனுபவங்களே இலக்கியப் படைப்புக்களாக வெளிப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான்! எனினும் அதனைப் பேராசிரியர் தி.சு.நடராசன் வெளிப்படுத்தியுள்ள திறம் வாசிக்கத் தூண்டுவதாகும்.
புதுமைப்பித்தனின் சிறுகதைகளின் பொதுப்பண்பு ‘நம்பிக்கை வறட்சி’ என்பதாகும் என்பது சிறுகதை விமர்சகர்கள் பலரும் ஏன்? புதுமைப்பித்தனே கூறும் ஒரு கருத்து. அதனைப் பரிசீலிக்க வேண்டிய தேவை இன்றுள்ளது. தி.சு.நடராசன் இப்பணியை இந்நூலில் செய்திருக்கிறார். புதுமைப்பித்தனின் தனித்துவங்களாக பதினெட்டுச் சாத்தியங்களை முன்வைக்கிறார். இது வாசகருக்கும் ஆய்வாளர்கட்கும் வழிகாட்டியாகவும், இதுவரை பலருடைய சிந்தனையில் கிளைவிடாத செய்தியாகவும் உள்ளன. புதுமைப்பித்தனின் கலைப் பிரபஞ்சம் ஒரு சுரங்கம் போன்றது; அதில் தோண்டத் தோண்டப் புதிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன; அதன் மீது தி.சு.நடராசன் புதிய ஒளியைப் பாய்ச்சி இருக்கிறார். கு.ப.ரா.வை ஒரு மென்மையான, உணர்வு ரீதியான படைப்பாளி என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கையில் தி.சு.நடராசன் இந்நூலில், “கு.ப.ரா. எனும் படைப்பாளியின் மனத்தில் எப்போதும் ஒரு கலகக் குரல் - நியாயத்தின் குரல் - கேட்டுக் கொண்டிருக்கிறது” என்று புதிய கருத்தை முன்வைக்கிறார்.
மௌனியின் சிறுகதைகள் குறித்து தி.சு.நடராசன் கூறும், “எண்ணத்தை நோக்கிய உணர்ச்சிகளின் நகர்தல்கள்தான் அவை” என்ற கருத்து மேலும் சிந்திக்கத் தூண்டுவது. “எண்ணங்களின் நகர்வு” என்பது புதிய கருத்தியல். உள்நோக்கப் போலி நியாயத்தின்படி சிந்திக்க மௌனியின் கதைகள் ஏற்றவை என்பது என் கருத்து. மௌனி ஏன் ஒரு “இன்ட்ரோவெர்ட்” (Introvert) படைப்பாளியாக மாறினார் என்பன போன்ற வினாக்கள் இந்தப் புத்தகத்திற்கு வெளியிலும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
பொதுவாக விமரிசகர்கள் திராவிட இயக்கச் சிறுகதைகள் குறித்து மிகச் சிலவான பதிவுகளையே செய்துள்ளனர். இவர்களுள் அறிஞர் அண்ணாவிற்குத் தனித்த இடம் உள்ளது என்பதைத் தி.சு.நடராசன் நிறுவியுள்ளார். “அற்புத நவிற்சியின் சொகுசிலும் கனவுத் தோற்றத்தின் சுகத்திலும் திளைக்கும் ஒரு பிரிவுப் படைப்பாளிகளுள், அறிஞர் அண்ணா ஆழ்ந்த சமுதாய உணர்வு கொண்டவர் என்ற கருத்தைப் பேராசிரியர் நடராசன் உறுதிபடத் தெரிவிக்கிறார். சிறுகதை ஜாம்பவான், தான் எழுதிக் கொண்டிருந்த காலத்தைத் தன்னுடையதாகவே ஆக்கிக் கொண்ட ஜெயகாந்தன் குறித்த விரிவான விமரிசனத்தைத் தி.சு.நடராசன் இந்நூலில் முன்வைக்கிறார். அவரது மதிப்பீடு, “பிராமண வைதீக சமய ஈடுபாடும் இந்தியத் தேசியவாதமும் இணைந்த ஒரு கருத்தியல்வாதம் அவருக்கு உகந்த ஒரு கொள்கைத் தளமாக இருந்தது” என்று கூறப்படுகின்றது. இது எத்தகைய கணிப்பு...! ஜெயகாந்தன் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்ளத் தன்னைப் பல சமயங்களில் பொதுவுடைமைவாதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார் என்பதும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய பதிவு.
இலங்கையர் கோன் என்ற படைப்பாளி குறித்த கட்டுரை, தொன்மங்களைப் புதிய உளப்பகுப்பாய்வு வெளிச்சத்தில் காட்டுகிறது. லா.ச.ரா., தி.ஜானகிராமன், பிரபஞ்சன் பற்றிய கருத்துக்களும் குறிப்பிடத்தக்கவை. வழக்கமாக அனைவரும் மேற்கோள்காட்டும், கதைகளை விடுத்துப் பிரபலமாகாச் சிறுகதைகளை இவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார்.
கரிசல் இலக்கியங்களைப் பற்றிய ஆய்வில் தி.சு.நடராசனின் நடுவுநிலைமை வெளிப்படுகிறது. கு.அழகிரிசாமி, கி.ரா., பா.செயப்பிரகாசம், வீர.வேலுச்சாமி, சோ.தருமன், பூமணி, தனுஷ்கோடி ராமசாமி, ஆ.சந்திரபோஸ் என்றவாறு பல படைப்பாளிகளை நமக்குத் தொட்டுக் காட்டுகிறார். ஓரிடத்தில் தி.சு.நடராசன், “அழகிரிசாமியின் பங்களிப்பு மழுங்கடிக்கப்பட்டது. கரிசல் எழுத்து ஒற்றைப் பரிமாணம் கொண்டதாக விளங்குவதற்கு இது இடம் தந்தது. ஆனால் காலம் வலுவானதாயிற்றே” என்று கூறுவதற்கு ஒரு துணிச்சல் தேவைதான்! கி.ரா.வை, மீரா மிக விமரிசையாகத் தூக்கி நிறுத்தினார். “ஒரு படைப்பாளி தன் சொந்த மக்களிடமும் வெளிநாடுகளிலும் அளவிறந்த புகழ் பெறுவதற்கு அவரது நூல்கள் எளிதாகக் கிடைப்பது முக்கியக் காரணம்” என்று பிரபல ஒப்பிலக்கிய விமரிசகர் ஹார்ஸ்ட் பிரன்ஸ் கூறுகிறார். கி.ரா. விஷயத்தில் இது மிகவும் பொருந்தும். அன்னம் பதிப்பகம் முழு வேகத்துடன் பதிப்புப் பணிகள் செய்யத் தொடங்கிய காலத்தில் கி.ரா., மீராவின் கருத்தில் பதிகிறார். பிறகென்ன...? கு.அழகிரிசாமி மட்டுமல்லாமல் ஏனைய கரிசல் படைப்பாளிகளும்கூட, கி.ரா. அளவிற்குப் பேசப்படவில்லை என்பதற்கும் கூடக் காரணங்கள் உண்டு. படைப்பாளிக்கு இருக்கும் தனித்திறன்களுடன் அவரது சார்பு நிலைகளும் குறிப்பிட்ட விகிதத்தில் இணைகிறபோது, பரபரப்பாகப் பேசப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். தி.சு. நடராசன் குறிப்பிடுகின்ற பல படைப்பாளிகள் இன்று அதிகம் கொண்டாடப்படுவதைக் காணும் போது, “காலம் வலுவானதாயிற்றே” என்ற தொடர் பொருளுடையதாகிறது.
சுந்தர ராமசாமியின் சிறுகதைகள், ஜெயமோகனின் சிறுகதைகள் போன்றவற்றையும் ஆ.மாதவன், ஜி.நாகராஜன் போன்றவர்களின் சிறுகதைகளையும் அவ்வவற்றுக்கான அளவு கோல்கள் கொண்டு அலசுகிறார். பிறழ்வு மனநிலைகளை ஜி.நாகராஜன் பதிவு செய்திருக்கும் நேர்த்தியை தி.சு.நடராசன் சுட்டிக்காட்டுகிறார்.
‘புலம் பெயர் புனைவுகள்’ என்ற பகுதியில் இவர் செய்திருக்கும் பதிவுகள் விசேடமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. சந்திரவதனா செல்வகுமாரன், நிருபா, சிவலிங்கம் சிவபாலன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், இளங்கண்ணன் போன்றவர்களின் கதைகள் புலம் பெயர்தலின் வலியை எங்ஙனம் சித்திரிக்கின்றன என்பதை மிக விரிவாக எடுத்துக்காட்டுகிறார் தி.சு.நடராசன். “புலம் பெயர்வுக்குரிய சூழமைவு, புலப்பெயர்வு எனும் நிகழ்வு, புலம் பெயர்வுக்குப் பின்னர் புகலிடங்களில் தோன்றும் பிரச்சினைப்பாடுகள், புகலிடங்களில் நிலை கொள்ள முயலுகிறபோது எழும் பண்பாட்டு அதிர்வுகள், மாற்றங்கள், புகலிடங்களின் கருத்தமைவுகள், மக்களின் சிந்தனைகள் மற்றும் வெவ்வேறு நிலைப்பாடுகள் சிந்தனை வெளிகளில் செய்கிற தாக்கங்கள் - என்பன இவை” என்று புலம் பெயர் இலக்கியங்களை ஆய்வு செய்வதற்கான அளவுகோல்களைத் தி.சு.நடராசன் தந்து விடுகின்றார்.
பெண்ணின் மொழி பற்றிய பகுதியில் அம்பை, ஆர்.சூடாமணி, உமா மகேசுவரி போன்றவர்களின் சிறுகதைகளை விவாதித்திருக்கிறார். “வலி, மனிதனின் அடிப்படையான உணர்வுகளில் ஒன்று” என்ற ஜான் கார்டனரின் கருத்தை மேற்கோள் காட்டி மேற்குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் பெண்ணியப் புனைவுகளை மதிப்பீடு செய்திருக்கிறார்.
எழுபதுகளில் தொடங்கி இன்றுவரை இயக்கத்தில் இருக்கும் வண்ணதாசன் பற்றியும் லட்சுமி மணிவண்ணன், ஜே.பி.சாணக்யா, கண்மணி குணசேகரன், விழி பா.இதயவேந்தன், சு.வேணுகோபால், கோணங்கி என்ற மிக முக்கியமான படைப்பாளிகளின் சிறுகதைகள் பற்றியும் நிறைவாகக் கூறுகிறார் தி.சு.நடராசன். இதில் முக்கியமான ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார். “பின்னை நவீனத்துவச் சூழலோ, அதற்குரிய சமூகப் பொருளாதார நிலைகளோ, அரசியல் நிலைப்பாடுகளோ இன்னும் சரியாகக் காலூன்றி விடவில்லை. இது உண்மையாயிருந்தாலும் கவர்ச்சியோடு கூடிய ஐரோப்பாவின் சில பகுதிகளிலிருந்தும் முக்கியமாக ‘எதிர்ப்பு’ என்ற சிந்தனை மரபோடு நினைக்கக் கூடிய லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்தும் சில கருத்தியல்கள் நூதனமான வலுவான சில எழுத்து முறைகள் - அதற்கேயுரிய பிரசித்தங்கள் முதலிய திரண்டு வந்தன... புதிய எழுத்துக்கான வடிவமல்லாத வடிவத்திற்கான (anti-form) ஈடுபாடும் முயற்சியும் மேற்கொள்ளப்படுதலுக்குரிய சூழல் தோன்றியது” என்று தமிழின் அண்மை எழுத்துப்போக்குகள் பற்றிய அறிமுகத்தினையும் காரணகாரியச் சூழல்களையும் விளக்குகிறார். இலக்கியத் திறனாய்வுத் துறையில் தோய்ந்த, புலமையும், எழுத்தில் அதீத நிதானமும் கொண்ட ஒரு அறிஞர் இவ்வாறுதான் எடுத்துரைப்பு முறையைக் கையாளுவார்.
இலக்கிய விமரிசனம் குறித்துச் சி.சு.செல்லப்பா, “மனப்பதிவுகளால் ஆன கலைப்படைப்பை நுட்பமாகத் தொடர்ந்து அதன் பொருளை ஆராய்ந்து அதன் தன்மையை, அதிலிருந்து கிடைத்த அனுபவத்தை மனப் பதிவுகளாகவே ஒரு விமர்சகன் கொடுக்கிறான். பார்க்கப்போனால் இலக்கிய விமர்சனம் அகப்பார்வையில் ஆனதுதானே? அத்தகைய பார்வை மனப் பதிவுகளாகத்தானே இருக்க முடியும். அவனது மனப்பதிவுகள் அந்தக் கலைப்படைப்பை வாழவும் ஒலிக்கவும் வைக்கமுடிந்தால் அந்த விமர்சகன் தன் தொழிலைச் சரியாகச் செய்து விட்டான் என்று நாம் சொல்லலாம்” என்று கூறுகிறார். பேராசிரியர் தி.சு.நடராசன் தமது நிதான அணுகுமுறையால் அவர் தேர்ந்து கொண்ட சிறுகதைகளை வாசகர்களின் மனத்தில் ஒலிக்குமாறு செய்துவிட்டார் இந்நூலின் மூலம் என்று கூறலாம்.
தமிழில் சிறுகதையெனும் வரைபடம்
தி.சு.நடராசன் / நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்., சென்னை / விலை: ரூ.270/-