உலகம் தொடங்கிய நாளிலிருந்து எத்தனையோ மனிதர்கள் தடம் பதித்து வாழ்ந்து முடிந்திருக்கின்றனர். ஆட்சியைப் பிடித்தவர்களிலிருந்து ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் வாழ்ந்தவர்கள் என்று இப்படிப் பலவிதமான வாழ்க்கைச் சூழலைக் கொடுத்திருப்பது காலத்தின் விநோதம். இந்த ஏற்றத்தாழ்வுக்கு ஒரு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டுகிறது பொதுவுடைமைப் பார்வை. ஆனால் சமத்துவம் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய பூவாக அரிதாகி விடுவது ஏமாற்றம் அளிக்கிறது.

padaiveeduநமக்கு முன்பு வாழ்ந்தவர்களின் வாழ்வியல் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணம் மனிதனை வரலாற்றின் பக்கங்களைப் புரட்டச் சொல்லி அழைக்கிறது. வரலாற்றைப் பதிவு செய்வதில் புதினங்களின் பங்கும் அளப்பரியது. புனைவுகளும் உண்மைகளும் பின்னிப் பிணைந்து உருவாக்கப்படும் நாவல்கள் வாசகனை அந்த வாழ்க்கை நடந்த காலத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறது.

அடிமை, அறியாமை, அச்சம் குடி கொண்ட வாழ்க்கையிலிருந்து மகத்தான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தது வரலாற்றுப் புதினம். தேசநலனைத் தூண்டுவதிலும் இப்புதினங்கள் வெற்றி பெற்றுள்ளன. வரலாற்றுக் கதையைப் பதிவு செய்யும் படைப்பாளன் ஒரு வரலாற்று ஆசிரியனாகவும் இருக்க வேண்டும்.

புதினம் எழுதுவதை ஒரு யோகம் என்று சொன்னால் வரலாற்றுப் புதினம் எழுதுவதை ஒரு தவம் என்று சொல்லலாம். வில்லேந்தும் வீரன் அம்பினை முன்னோக்கியும் செலுத்துவான்; பின்னோக்கியும் செலுத்துவான்; தலைக்கு மேலேயும் எய்துவான். அதுபோல நிகழ்காலத்தின் நினைப்போடும் எதிர்காலத்தின் கணிப்போடும் வரலாற்றுப் புதின ஆசிரியர் கடந்த காலத்தை எழுத வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. அந்த வகையில் அரிதாக முயன்று திரட்டிய வரலாறுகளை அதன் சுவை மாறாமல் நேர்த்தியாக இலக்கியம் வடித்திருக்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன். அவரின் ‘படைவீடு’ முடிவுக்கு வந்த கடைசித் தமிழனின் ஆட்சியை வருத்தத்துடன் கண்முன் நிறுத்துகிறது.

பல்லவர்களின் வழித்தோன்றல்களான காடவராயர்கள், வாணகோவராயர்கள் வரிசையில் சம்புவராயர்களுக்கும் இடமுண்டு. சம்புவராயர்கள் ஆட்சிக்கு வந்த காலம் ஆடி மாதத்தின் முழுநிலவு தோன்றிய நாள். மக்களோடு சேர்ந்து மண்ணின் மொழி, சமயம், பண்பாடு, நாகரிகம், கலைகள் ஆகியவற்றையும் வளர்த்தெடுக்கும் உயரிய நோக்கில் ஆட்சிக்கு வந்த தமிழர்கள் இவர்கள்.

சம்புவராயர்களுக்கென்று தனி வரலாறு உண்டு. மற்றவர்களைப் பாதுகாப்பதில் அவர்கள் இணையற்றவர்கள். நாலாயிரவர் படைகளைக் கொண்டவர்கள் அவர்கள். சோழர்கள் தங்கள் பட்டப் பெயர்களைச் சம்புவராயத் தளபதிகளுக்குச் சூட்டுவது வழக்கம். செங்கேணி அம்மையப்ப நாலாயிரவ விக்கிரம சோழ சம்புவராயர் என்று பட்டம் கொடுத்தார் விக்கிரம சோழன். மேலும் தன் தளபதி கருணாகரத் தொண்டைமானை விட்டு ஈசன் வாளைப் பரிசாகத் தரும்படி பணித்தார் என்று பார்க்கும் போது சோழர்களுக்குச் சம்புவராயர்கள் உதவிய சரித்திரத்தைக் கதையின் வழியாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

யாருடனும் பகைமை பாராட்ட மாட்டோம் என்று சொன்னால் போர் ஒடுங்கும், ஆனால் புகழ் ஓங்கும் என்ற கொள்கைப் பிடிப்புடன் ஆண்டவர்கள். அனைத்துக் குறுநில மன்னர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்கள் நாட்டிற்குச் சென்று நேசக்கரம் நீட்டி, தங்கள் தேசத்துத் திருவிழாவுக்கு அழைத்த இளவரசர் ஏகாம்பரநாத சம்புவராயரை அறிமுகப்படுத்தும் கதை படைவீடு.

வாழ்ந்து பார்க்காத வாழ்க்கையை, வாழ வாய்ப்பில்லாத வாழ்க்கையை வாசிப்பின் மூலம் வாழ வைத்திருக்கிறார் எழுத்தாளர். சாதாரண மனிதன் போல் குதிரையில் ஊர் ஊராகச் சென்று அந்தந்த ஊர்களில் இருக்கும் சத்திரத்தில் வழிப்போக்கர்களில் ஒருவராகத் தங்கி, சத்திரத்தில் தரும் உணவை உண்டு அங்கேயே உறங்கிய இளவரசனோடு வாசிப்பாளனும் பயணப்படுவது எழுத்தின் வெற்றி.

பாண்டிய மன்னர்களின் வாரிசுப் போரின் காரணமாக உதவிக்கு அழைக்கப்பட்ட சுல்தானியர்கள் பாண்டியர்களைத் துரத்திவிட்டு மதுரையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். சுல்தானியர்கள் எந்த நேரத்திலும் மொத்த தமிழகத்தையும் பிடிக்க நேரும் என்று எண்ணிய சம்புவராயர்கள் ஆங்காங்கே ஆட்சி செய்து கொண்டிருந்த சிற்றரசர்களை ஒன்று திரட்டி சுல்தானியர்கள் போர் தொடக்க நேர்ந்தால் உதவிக்கரம் நீட்டவேண்டி உடன்படிக்கையும் செய்து கொள்கின்றனர். ஆனால், தமிழ் மன்னர்கள் சனாதனவெறி பிடித்த விஜயநகரப் பேரரசால் வீழ்த்தப்பட்ட அவலத்தை வேதனையுடன் பதிவு செய்கிறது கதை.

நாவலின் ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் ஐம்பூதங்களின் பெயர்களைச் சூட்டி இயற்கையைத் தாண்டிய பெரிய ஆற்றல் எதுவுமில்லை என்று உணர்த்துகிறார் எழுத்தாளர். மேலும் தமிழ்ப் பாடல்களான திருமுறைப் பாடல்களோடு அத்தியாயம் தொடங்கப்படும் ஓர் ஒழுங்குமுறையும், கோயில்களில் திருமுறைப் பாடல்கள் பாடப்படும் தமிழர் வழிபாட்டின் தன்மையும் காணப்படுகின்றன. படைவீட்டு ஆட்சியில் சிவனும், திருமாலும் வழிபாட்டுக்குரிய கடவுளர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களின் வழிபாட்டு முறைக்கும் விஜய நகர மக்களின் வழிபாட்டு முறைக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது என்ற இடத்தில் சாதிவெறித்தனம், சனாதனக் கோட்பாடு ஆகியவை வெளிப்படையாகச் சொல்லப்படுகின்றன.

சமணர்களாக இருந்த பல்லவர்கள் மெல்ல வைதீக மரபை ஏற்கும் போது கல்வெட்டு, செப்பேடு போன்ற அவர்களின் வாழ்க்கையைக் குறிக்கும் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன என்ற வரலாறு வாசிப்பாளனுக்கு ஆதிக்கவாதிகளின் மனநிலையைப் புரிய வைக்கிறது. வைதீக மரபு என்பது சாதி அடுக்குகளை வற்புறுத்தும் கொள்கை கொண்டது. கூம்பு வடிவத்தில் இருக்கும் சாதி அடுக்குகளில் தங்களுக்குக் கீழ் வேறு சாதியினர் உண்டு என்பதில் மனித மனம் திருப்தி கண்டது. அங்கே எல்லோருக்கும் கீழே இருப்பவர்கள் கலகம் செய்யத் தொடங்கினர். அவர்களை மனுதர்மம் என்ற பெயரைச் சொல்லி அச்சுறுத்தியதுடன், சாதிக்கு ஒரு நீதியை உருவாக்கியது வைதீக மரபு.

காந்தத்தை எத்தனை துண்டுகளாக உடைத்தாலும் அதிலே வடக்கு – தெற்கு உருவாகி விடுவது போல இதில் எத்தனை பிரிவுகள் வந்தாலும் அதிலே உயர்வு தாழ்வு உருவாகிக் கொண்டே இருக்கிறது. நெசவுத் தொழிலில் இரண்டு விதமான நூல்களை வைத்து நெசவு செய்யப்படுகிறது. அங்கே பட்டு நெசவு உயர்ந்தது என்றும் பருத்தி நெசவு தாழ்ந்தது என்றும் கருதிக் கொண்டு தங்களுக்குள் பெண் கொடுத்து, பெண் எடுப்பதில் தயக்கம் காட்டுகின்ற மனப்போக்கு ஆதித் தமிழனிடம் இல்லை. ஆனால் இடையில் இந்த வேற்றுமைக்கான அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்ட கொடுமையை நாவல் முழுக்கப் பேசி அங்கலாய்க்கிறார் தமிழ்மகன்.

தில்லி சுல்தானியர்கள் போர் அறத்தைப் பின்பற்றாத முரட்டுத்தன்மை கொண்டவர்கள். செல்வ வளத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டவர்கள். கோயில்கள் செல்வத்தைப் பாதுகாக்கும் களஞ்சியமாக இருந்ததால் கோயில்களைச் சிதைப்பதையும் தவறாமல் செய்து வந்தனர். அந்த வீரர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்தி மிருகத்தனமாக நடந்து வெற்றிக்கு வழிவகுப்பார்கள். அவர்களுக்கான பரிசுப் பொருளாகப் பெண்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த இழிவுகளைச் சாத்தியப்படுத்த மாலிக்காபூர் என்பவன் பக்கபலமாக இருந்தான்.

மிக விறுவிறுப்பாக நகரும் இதே நாவலில்தான் ஒரு திரைப்படம் எடுப்பதற்குத் தேவையான அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. வள்ளியும், தேன்மொழியும் பேசும் குறும்புப் பேச்சு ரசனைமிக்கவை. வேலாயுதத்தையும், பழனிவேளையும் தங்கள் கேலிப் பேச்சில் சிக்க வைத்துவிடுவார்கள். வள்ளி வேலாயுதத்தையும், தேன்மொழி பழனிவேளையும் மனத்தில் நினைத்துக் கொண்டிருந்தாலும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டிருப்பதில் நால்வருமே தனி சுகம் காண்பார்கள்.

ஒருமுறை தேன்மொழியும் வள்ளியும் வயல்வெளிகளில் நடந்து செல்லும் போது ‘காப்பாற்றுங்கள்’ என்று தேன்மொழி அலறினாள். அவளுடைய கணுக்காலைப் பார்த்தபோது பாம்பு தீண்டியது போல இரண்டு இரத்தப் புள்ளிகள் காணப்பட்டன. பதறிப்போன பழனிவேள் மூலிகை வைத்தியம் தெரிந்த தன் நண்பன் வேலனிடம் எப்படியாவது தேன்மொழியைக் காப்பாற்றும்படி கூறினான். மேலும் அவளின் கணுக்காலில் பாம்பு கடித்த இடத்தை வாயில் வைத்து உறிஞ்சி நஞ்சை நீக்கும் முயற்சியில் கலங்கிய கண்களுடன் இருந்தான்.

வேலாயுதம் தூரத்தில் இருக்கும் பச்சை மூலிகைகளைக் கசக்கிக் கொண்டு வந்து தேன்மொழி வாயில் திணித்தான். ‘‘நாக்கு எரிகிறதே’’ என்று சொல்லியபடி எழுந்து நின்ற தேன்மொழி பச்சிலையைத் துப்பிவிட்டுத் தண்ணீரில் வாய்க் கொப்பளித்தாள். முள்ளினால் இரண்டு இடத்தில் குத்தி, பாம்பு தீண்டியதாகச் சொன்னால் பச்சை மிளகாயைத் தராமல் வேறு என்ன தருவார்கள் என்றதும் பழனிவேளும் தேன்மொழியைத் துரத்திக் கொண்டு ஓடினான். திரைப்படங்களில் தோன்றும் காதல் காட்சிகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத பகுதி இந்தப் பகுதி.

ஆழமான கருத்தியலை மக்களிடம் சேர்ப்பதற்குக் கலையைக் காட்டிலும் சிறந்த வழி கிடையாது என்ற கருத்தில் சம்புவராயர்கள் போன்ற தமிழ் மன்னர்கள் உறுதியாக இருந்திருக்கின்றனர். அதனால் கூத்துக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதன் வழியாக மண்ணின் மரபு பாதுக்காக்கப்படும் என்று நம்பினர். மேலும் மதுரை வரை ஆட்சியைப் பிடித்துவிட்ட சுல்தானியர்களை விரட்ட சிற்றரசர்கள் ஒரே அணியில் இருக்க வேண்டிய அவசியத்தை நெசவுத் தொழில் வழியாகவும் நிறைவேற்றி இருப்பது வியப்பைத் தருகிறது.

காகதியர்கள், ராஷ்ட்ரகூடர்கள், சாளுக்கியர்கள் ஆகிய சிற்றரசர்களின் பட்டத்தரசிகளுக்கான பட்டுச் சேலைகள் காஞ்சிபுரத்தில் இருந்தும் ஆரணியில் இருந்தும் செல்வது வழக்கம். அப்படி எடுத்துச் செல்லும் பணியில் வணிகர்களுக்குப் பதிலாக ஏகாம்பரநாதர் ஏற்பாடு செய்திருப்பவர்களும், அவர்களுடன் சேலைகளின் பெருமை தெரிந்த ஒருவரையும், ஒரு மெய்க்காப்பாளரையும் அனுப்பி வைக்கும் திட்டம் தீட்டப்பட்டு வெற்றி கண்டதாக ஆசிரியர் பதிவு செய்கிறார். பட்டத்தரசிகளின் சேலைகளின் வழியாகவும் சிற்றரசர்கள் ஒன்று திரள வேண்டிய திட்டத்தை ராஜதந்திரத்துடன் நிறைவேற்றியது புதுமையானது.

தமிழர்கள் ஆவணப்படுத்துவதில் பின்தங்கியவர்கள், தமிழர்கள் எப்போதும் வேற்றுமை மட்டுமே பாராட்டக்கூடியவர்கள் போன்ற பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டுடைக்கும் புதினம் இது. தமிழ் மண்ணின் மைந்தர்களான மூவேந்தர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்வது வழக்கம் என்றாலும், அயல் மண்ணிலிருந்து யாரேனும் தமிழகம் மீது போர் தொடுக்க வந்தால் அவர்களை விரட்டியடிக்க முனைப்போடு செயல்பட்டிருக்கின்றனர் என்ற மறைக்கப்பட்ட உண்மையை உரக்கப் பேசியிருக்கிறது கதை. ஒவ்வொருவரும் தாங்கள் கப்பம் வசூலிக்கக்கூடிய அளவில் பேரரசர்களாக இருக்க வேண்டித் தங்களுக்குள் சண்டையிட்டது உண்மை என்றாலும் அது மட்டும் முழு உண்மை அல்ல.

பாண்டியர்கள் அவையில் தொகுக்கப்பட்ட சங்க இலக்கியங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. வடபுலத்து அரசர்கள் தமிழ் மன்னர்களைக் கேவலமாகப் பேசியதால் சேர மன்னன் செங்குட்டுவன் வெகுண்டெழுந்தான். சோழனும், பாண்டியனும் இந்த இழிச்சொற்களைக் கேட்டு அமைதியாக இருந்தாலும் என்னால் அப்படி இருக்க முடியாது என்று சொல்லி இமயம் வரை சென்று வென்று வெற்றிக்கொடி நாட்டிவிட்டு வந்தவன் என்ற செய்தி பாண்டியர் காலத்தில் தொகுத்த நூலில் இடம் பெற்றுள்ளது.

தங்களைக் குறைத்துப் பேசும் இந்தப் பாடலை நீக்கிவிட்டு இலக்கியங்களைப் பாண்டியர்கள் தொகுத்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் இருந்ததற்கான காரணம் தமிழ் உணர்வுதான் என்கிறது புதினம். அதே போலச் சிங்களவன் பாண்டிய நாட்டை வளைத்தபோது, சோழன் படையெடுத்துச் சென்று வென்று மீண்டும் பாண்டியனிடம் ஒப்படைத்தான் என்ற சம்பவமும் கதை சொல்லும் உண்மை.

பெண்கள் அழகுப் பதுமைகளாகப் பார்க்கப்படும் இடம் பள்ளியறை. அளவான எளிய அலங்காரத்துடன் மிகவும் வசீகரமாக இருக்கும் விலைமகளைப் பார்க்கும் போது முதலில் ஈர்ப்பு ஏற்பட்டாலும் அவளின் அரசப்பற்று, கண்ணியமான பேச்சு இளரவரசரிடம் மிகுந்த மரியாதையை வரவழைத்தது. பெண்களிடம் அழகைப் பற்றிப் பேசும் ஆண்கள் அவர்களின் அறிவைப் பற்றிச் சொல்வதே இல்லை என்று பகுத்தறிவுப் பகலவன் ஆதங்கப்பட்டதற்குத் தீர்வு சொல்ல வேண்டிய பொறுப்பைத் தானே மனமுவந்து ஏற்றுக் கொண்ட எழுத்தாளர் விலைமகள் இருக்கும் வீட்டில் ஒரு பிரமாதமான காட்சியை அமைத்துள்ளார்.

தந்தையின் பெயரில் (ராசகம்பீரன் குளிகை) இருக்கக்கூடிய தங்கக் காசுகளை விலைமகள் வீட்டுக்குச் செல்லக் கொடுப்பதற்கு வெட்கப்படும் ஒரு தலைமுறையைப் பதிவு செய்கிறது நாவல். மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் ஆண்கள் தமிழ்நாட்டுக் கணிகையர் வீட்டுக்குப் போய் வரும் அக்கால வழக்கமும் கதையில் சொல்லப்பட்டுள்ளது. கம்போச நாட்டில் பிரம்மாண்ட கோயில் கட்டத் தமிழகத்திலிருந்து சிற்பங்கள், சிற்பிகள் மட்டும் கொண்டு செல்லப்பட வில்லை. கம்போச நாட்டிலிருந்து வந்த ஒருவன் தங்கள் அரசனுக்குப் பரிசாக வழங்கத் தமிழ்நாட்டின் ஈசன் வாளைக் கடத்திச் செல்லத் திட்டமிட்டிருந்தான். அவனுக்குக் கடல்மல்லையில் இருக்கும் கணிகையர் வீட்டுக்குச் செல்லும் விருப்பம் இருந்தது.

இதைத் தெரிந்து கொண்ட இளவரசர் ஏகாம்பரநாதர் அவன் சென்று வந்த கணிகை வீட்டுக்குச் சென்று ஈசன் வாளைப் பற்றிய தகவலை அறிய முற்படுகிறார். அந்தப் பெண் வந்திருப்பது இளவரசர் என்று தெரிந்து வைத்திருந்ததையும், என்ன தகவல் வேண்டி வந்திருக்கிறார் என்று கேட்டால் அதற்கான விடையைத் தருவேன் என்று அரசப்பற்றுடன் பேசியதையும் பார்த்து அவள் மீது கூடுதல் மரியாதை கொள்கிறார். பின்னர் அந்த ஈசன் வாளைக் கைப்பற்றிச் சென்று தன் நாட்டில் பெருமகிழ்ச்சியை உண்டாக்கினார் என்று பாராட்டுகிறார் ஆசிரியர்.

வைணவ மரபில் இருந்தவர்கள் இசுலாமியர்களாக மாறி சுல்தானியர்களுக்குக் கீழ் ஆட்சி செய்கின்றனர் என்று சமயத்தைப் பற்றிப் பேசி நீங்கள் மீண்டும் பழைய மரபுக்குத் திரும்புங்கள் என்ற வழிகாட்டுகிறார் சிருங்கேரி சங்கராச்சாரி வித்யாரண்யர். உணர்வுகளால் தூண்டப்படும் புக்கரின் மகன் குமாரகம்பணன் சுல்தானியர்களை எதிர்க்கத் துணிகிறான். அதற்கான பொருள் வளத்தையும் இறைவன் அருளால் சிருங்கேரி மடம் தருவதாக மடாதிபதி கூறுகிறார். அந்த நம்பிக்கையில் மதுரையை நோக்கிப் போர் தொடுக்க நினைக்கும் போது சமத்துவம் பாராட்டும் சம்புவராயர்களும் விஜயநகரப் பேரரசுக்கு எதிரிகளாகத் தோன்றுகின்றனர்.

சம்புவராயர்களுக்கு ஆதரவாக இருந்த குறுநில மன்னர்களை உதவ முடியாமல் தடுத்ததுடன், போர் முறைகளையும் பின்பற்றாமல் மூர்க்கத்தனமாகப் போர் செய்கின்றனர் விஜயநகர மக்கள். மிகப் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டையில் இருந்து போராடிய வென்று மண் கொண்டார், அவரின் மகன் மல்லிநாத ராசநாராயணன் மற்றும் படை வீரர்கள் இனி தோற்றுவிடுவோம் என்று கடைசி நம்பிக்கை இழந்த நேரத்தில் முன்கூட்டியே தளபதிக்குச் சொன்னபடி குதிரையின் கண்களைத் துணியால் கட்டிவிட்டு மலை உச்சியிலிருந்து விழுந்து வீரமரணம் அடைவதாக உறுதி பூண்டனர். ஏகாம்பரநாதராகிய வென்று மண் கொண்டார் தன் உடலில் அம்புகள் மாலையாகப் பாயத் தளர்ந்து போய் மலை உச்சியிலிருந்து விழுந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் பள்ளத்தாக்கில் குதித்து மரணத்திற்கு மாலையிட்டனர்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு மகிழ்ச்சியை மட்டுமே தரும் என்று சொல்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வரும் என்றாலும் மீண்டும் வெற்றி பெற அப்படி ஓர் இனமே இல்லாமல் காணாமல் போய்விட்டது என்பதைப் படிக்கும் இடத்தில் கண்கள் கண்ணீர் சிந்துகின்றன. ஒரு நூற்றாண்டுக் காலம் நியாயமான ஆட்சிக்கு வித்திட்ட தமிழ் மன்னர்கள் எதிரிகளிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத் தங்களுக்கான முடிவையும் தாங்களே தேர்வு செய்து கொண்டதுவரை தமிழரசர்களின் வீரமிக்க வாழ்க்கை முறையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

தோல்வியைத் தழுவுமுன் மக்களையும் வேறு இடங்களுக்குச் சென்றுவிடுங்கள், நம் படைவீட்டம்மன் கோயில் மண்ணைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள் என்று எல்லாவற்றையும் முன்கூட்டியே யோசித்து முடிவு செய்த பெருமை வென்று மண் கொண்டாரின் வாரிசு மல்லிநாத ராசநாராயணனுக்கு உண்டு. எழுபது வயதிலும் உடலளவில் மிடுக்காக இருந்தாலும் சில நேரங்களில் நினைவு தப்பியவராக இருந்தார் வென்று மண் கொண்டார். ஆனாலும் போரில் பங்கெடுத்த வீரமரணத்தைத் தழுவினார்.

படைவீட்டுப் பகுதியில் ராசகம்பீரன் மலை இருப்பது போல, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் ராசகம்பீரம் என்ற ஊர் இருக்கிறது. விஜயநகரப் பேரரசை எதிர்கொள்வதற்கு முன்னால் தங்கள் நாட்டு மக்களைச் சம்புவராயர்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து விடுங்கள் என்று சொன்னதால், அவ்வாறு குடிபெயர்ந்த மக்கள் தங்கள் ஊருக்கு ‘ராசகம்பீரம்’ என்று பெயர் வைத்துக் கொண்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்றும் சிதிலமடைந்த மதிள் சுவர்களால் அடையாளப்படுத்தபடும் தமிழ் மன்னர்களின் படைவீட்டு மலைக்கோட்டை கீழடியைப் போலத் தன்னைக் காண்பவருக்குத் தமிழர்களின் வாழ்வியலை ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறது. அங்கே வைணவக் கோயில் மட்டும் சிரித்து நிற்கிறது.

- முனைவர் சி.ஆர். மஞ்சுளா
தமிழ்ப் பேராசிரியர்,
சென்னை சமூகப்பணி கல்லூரி
எழும்பூர், சென்னை

Pin It