thangapa 350ஒருநாள் நானும் நண்பரும் பாரதியாரின் ‘பிள்ளைப் பிராயத்திலே’ பாடலைப் பற்றிப் பேசிக்கொண்டே நடந்தோம். கல்வியின் மீதான நாட்டமும் பற்றும்தான் அக்கவிதையின் பேசுபொருள். பாரதியார் அதை சரஸ்வதி காதலாக மாற்றுகிறார். பிள்ளைப் பருவத்தில் கல்விமீது கொண்ட ஈடுபாட்டை பெண்மையின் மீது உருவாகும் மையலாக உருமாற்றி, ஒவ்வொரு கட்டத்திலும் பெருகிக்கொண்டே சென்ற விருப்பங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார். அந்த அழகியல் அடுக்கு பாரதியாருக்கு கைவந்த கலை. சரஸ்வதி காதலைப் போலவே லட்சுமி காதலையும் காளி காதலையும் முன்வைத்து மூன்று பகுதிகளாக அக்கவிதையை பாரதியார் எழுதியிருக்கிறார்.

ஒவ்வொரு பகுதியையும் விரிவாக எடுத்துரைத்த பிறகு, “தமிழ்மொழிக்கு பாரதியார் வழங்கிய சிறப்புக்கொடை என அந்த அழகியல் அடுக்குமுறையைச் சொல்லமுடியுமா?” என்று கேட்டார். முடியும் என்று நான் பதில் சொன்னேன். பாரதியார் மட்டுமல்ல, மிகச்சிறந்த ஒவ்வொரு கவிஞரும் தம் கவிதைமொழியில் தமக்கே உரிய தனித்தன்மை மிக்க அழகியல் அடுக்குமுறையை முன்வைத்திருக்கிறார்கள். அந்த அழகியல் அடுக்குமுறையே அவர்களுடைய அடையாளமாக காலம்காலமாக நிலைத்திருக்கிறது. அழகியல் அடுக்குமுறை வழியாக காலம்தோறும் மொழியின் அழகியல் எல்லைகள் விரிவடைந்தபடி செல்கின்றன.

“ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையாளனைக் கண்டனம் எனுமே” என்ற அழகியல் அடுக்குமுறை வழியாகவே சத்திமுத்தப்புலவரின் நாரைவிடு தூது இன்றளவும் நம் நினைவில் நீடித்திருக்கிறது. “வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி இழைத்தவாறோ கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி” என்பதுபோன்ற நூற்றுக்கணக்கான அழகியல் அடுக்குமுறை வழியாகவே கம்பரின் கவியாளுமை நினைக்கப்படுகிறது. கானல் வரி பாடல்களிலும் ஆய்ச்சியர் குரவை பாடல்களிலும் வழக்குரை காதையிலும் காணப்படும் அழகியல் அடுக்குமுறை படிக்கும்தோறும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அழகியல் அடுக்குமுறைகளின் வழியாக நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த மகத்தான மரபுக்கவிஞர் தங்கப்பா. அவர் இயற்கையாற்றுப்படை எழுதி வெளிவந்த காலத்திலேயே மரபுக் கவிதையுலகில் அவருடைய இடம் தனித்தன்மையுடன் வரையறுக்கப்பட்டுவிட்டது. செவ்வியல் இலக்கியங்களில் மனம் தோய்ந்தவர் அவர். தொடக்கக்காலத்தில் அதன் செல்வாக்கு அவருடைய படைப்புகளில் தெளிவாகவே காணக்கிடைக்கிறது. மொழிபுமுறையில் மட்டுமே அதன் சாயல் தெரிகிறது. ஆனால் கவித்தருணங்கள் அவருக்கே உரியவை. அடுத்தடுத்து வந்த தொகுப்புகளில் அந்தச் சாயலையும் அவர் முற்றிலும் கடந்துவிட்டார். அவருடைய கவிமொழி தனித்தன்மையுடன் வெளிப்படத் தொடங்கியது. தன் அழகியல் அடுக்குமுறையால் தன் கவிமொழியை மேலும் மேலும் செழுமைப்படுத்தியபடியே சென்றார் தங்கப்பா.

அவருடைய பெரும்பாலான கவிதைகளை இரண்டு பெரும்பிரிவுகளாக வகுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஒரு பிரிவில் அவருடைய கண்கள் கண்டெடுத்த அபூர்வமான காட்சிச் சித்தரிப்புகள். அழகும் கற்பனையும் கொண்டவை. இரண்டாவது பிரிவில் அவருடைய ஏக்கம், கனவு, வேட்கை, துயரம், சலிப்பு, சீற்றம் என்பவைபோன்ற ஆழ்மன உணர்வுகளின் பதிவுகள், லயம் மிக்க சொல்லிணைவுகளும் வேகமும் கொண்டவை. இரு பிரிவுகளிலும் மையம் வேறுபடுகிறதே தவிர, பாடலின் விசையில் வேறுபாடில்லை. அழகியல் அடுக்குகளே அற்ற கவிதையில்கூட விசையில் குறைவில்லை

அழகியல் அடுக்குமுறை ஒரு பாட்டுத் தருணத்தை மேலும் மேலும் பொலிவுறச் செய்கிறது. மேலும் மேலும் கூர்மைகொள்ளச் செய்கிறது. தங்கத்தை உருக்கி பளிச்சென ஒளிகொள்ளும் நகைகளாக மாற்றுகிறது. ஒவ்வொரு அடுக்குமுறையின்போதும் மொழி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது.

அடிப்படையில், ஒரு மொழிக்கு, அதற்கேயுரிய தர்க்கக் கட்டமைப்பு உண்டு. ஆனால் அழகியல் அடுக்குமுறை எவ்விதத்திலும் அந்தத் தர்க்கக் கட்டமைப்புக்கு உட்பட்டதல்ல. மாறாக, அழகியலுக்கே உரிய தர்க்கமுறைக்கு மட்டுமே அந்த அடுக்குமுறை கட்டுப்பட்டதாகும்.

தங்கப்பாவின் ‘உன்னை நிரப்பிவைப்பேன்’ என்னும் கவிதையிலிருந்து நாம் தொடங்கலாம்.

மண்ணில் கிடக்குமோர் சுள்ளியை நான் ஒரு

வானவில் ஆக்கிவைப்பேன் - உன்றன்

கண்ணில் உறுத்திடும் காட்சியை மின்னும்

கனவுகளாய்ப் படைப்பேன்

புல்லின் நுனிப்பனி தன்னை அடுக்கியே

பொற்கம்பியில் தொடுப்பேன் - கருங்

கல்லினை காலில் மிதிப்பவர் ஆயினும்

கண்டு தொழ வடிப்பேன்

கன்னங் கருங்கரித் துண்டையும் பொன்னின்

கனற்பிழம்பு ஆக்கிவைப்பேன் - ஒரு

சின்னஞ்சிறு சுண்ணக்கட்டியுள் ஆயிரம்

சித்திரம் காட்டி நிற்பேன்

தேங்கு தெருப்புனல் நான் அள்ளித் தந்திடின்

தேன்சுவை போல் இனிக்கும் - ஒரு

மூங்கைக் குரல் கருங்காக்கையும் என் கையில்

முல்லையம் பண்மிழற்றும்

புழுதியை அள்ளிமுன் நீட்டுவேன்; சந்தனம்

போல மணங்கமழும் - நீ

பழுதென வீசி எறிந்ததை நான் தொட

பளபளப்பாய்த் திகழும்

மண்ணில் நெளியும் உன் உள்ளம் அளித்திடு

வான்சுடர் ஏற்றிவைப்பேன் - அன்பின்

உண்மை கமழ்தெய்வப் பண்கள் ததும்பிட

உன்னை நிரப்பிவைப்பேன்

தங்கப்பாவின் கவிதைகளில் முதன்மையான கவிதை இது. இதில் உள்ள தர்க்கம் நடைமுறைச் சாத்தியத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. புத்தம் புதிய அழகியல் அடுக்குமுறையால் கனவுநிலையில் அருவியென தானாகப் பொங்கிப் பெருகும் தர்க்கம். கனவின் வழியாக அவர் கண்டடையும் தர்க்கம். கொதிநிலையில் பாத்திரத்திலிருந்து பொங்கி வழியும் பாலென கிட்டத்தட்ட ஒரு பித்துநிலையில் ஒவ்வொரு சொல்லும் பொங்கி வழிகிறது. அவருடைய தர்க்கம் குழந்தைமையும் நம்பிக்கையும் கலந்தது.

ஒரு நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது. ஓர் ஊரில் மாடு மேய்க்கிற ஒரு சிறுவன் வசிக்கிறான். ஒவ்வொரு நாளும் மாடுகளை அழைத்துச் சென்று ஏரிக்கரையோரம் மேயவிட்ட பிறகு புல்வெளியில் விளையாடி பொழுதுபோக்குவான். மரங்களில் ஏறி அமர்ந்து வானத்தையும் மேகத்தையும் வேடிக்கை பார்ப்பான். ஏராளமான கிளிகள் பறந்துவந்து அமரும் இடம் அது. ஒரு இலையைத் தொடுவதுபோல அவன் ஒவ்வொரு கிளியையும் தொட்டு வருடிக் கொடுப்பான். கிளிகளும் அவனை ஒரு மனித உயிராகவே நினைப்பதில்லை. மரத்தில் உள்ள கிளைகளில் ஒரு கிளையாகவே அவனை நினைத்து, அவன் தலைமீதும் தோள்மீதும் சுதந்திரமாக உட்கார்ந்து விளையாடும். கிளிகளுக்கும் அவனுக்கும் இடையில் நல்ல இணக்கமானதொரு உறவு நிலவியது. ஊரே அதைப் பார்த்து ஆச்சரியம் கொள்கிறது.

ஒருநாள் அந்த ஊரில் வசிக்கும் பணக்காரன் அச்சிறுவனை அழைத்துவரச் செய்கிறான். பணக்காரனுடைய மகள் ஒரு கிளி வளர்க்கவேண்டும் என ஆசைகொள்கிறாள். அவளுக்காக ஒரு கிளியைப் பிடித்துவந்து கொடுக்குமாறு பணக்காரன் சிறுவனிடம் கட்டளையிடுகிறான். பணக்காரனின் ஆதரவில்லாமல் யாரும் அந்த ஊரில் வசிக்கமுடியாது என்பதால் ஒருவரும் அவன் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு சொல்வதே இல்லை. பணக்காரனின் கட்டளை சிறுவனை ஒரு நெருக்கடியில் தள்ளிவிடுகிறது. அது முறையல்ல என்றும், தன்னால் முடியாது என்றும் எவ்வளவோ எடுத்துச் சொல்லி மன்றாடுகிறான் சிறுவன். ஆனால் பணக்காரன் தனக்கு கிளி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். அடுத்த நாள் மாலை கிளியோடு வந்து சந்திக்கும்படி மீண்டும் கட்டளையிட்டு, அவனை வெளியே அனுப்பிவிடுகிறான். இரவு முழுதும் தூக்கமின்றி தவிக்கிறான் சிறுவன். தன் சொந்த நலத்துக்காக கிளியைப் பிடிப்பது என்பதையே அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மறுநாள் காலை மாடுகளை ஓட்டிக்கொண்டு ஏரிக்கரைக்குச் செல்லும்போது அவன் மனம் குழம்பித் தவிக்கிறது. தன் இயலாமையை நினைத்து மனம் குமைந்தபடி அன்று மரக்கிளையில் உட்கார்ந்து வானத்தைப் பார்க்கிறான் அவன். நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒரு பெரிய கிளிக்கூட்டம் அம்மரத்தை நோக்கி வழக்கம்போல இறங்கி வருகிறது. ஏதாவது ஒரு கிளியுடன் இன்று வீடு திரும்பவேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் கிளிக்கூட்டத்தை வரவேற்றபடி கை நீட்டுகிறான். அவனை நோக்கிவந்த கிளிக்கூட்டம் ஏதிர்பாராத ஒரு கணத்தில் சட்டென வட்டமடித்துத் திரும்பிப் பறந்து பக்கத்தில் இருந்த மரத்துக்குச் சென்று அமர்கின்றன. ஒரு கிளிகூட அவனுக்கு அருகில் வரவில்லை. அவன் அமர்ந்திருந்த மரத்தின் பக்கம் கூட வரவில்லை. அவன் மனத்தில் படிந்துவிட்ட எண்ணத்தை அவை எப்படியோ உணர்ந்து திசைமாறிச் சென்றுவிடுகின்றன.

சிறுவனுக்கும் கிளிகளுக்கும் இடையில் உருவான நெருக்கத்துக்குக் காரணம் களங்கமின்மை. அது அழியும்போது நெருக்கமும் அழிந்துவிடுகிறது. நிரூபணத்துக்கு அப்பாற்பட்டது இந்த உறவின் தர்க்கம். ஆனால் வாய்மொழிக்கதைகளில் அமைந்திருக்கும் இந்தத் தர்க்கத்தின் வழியாகவே மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்ளமுடியும். பண்பாட்டையும் வரலாற்றையும் புரிந்துகொள்வதற்கும்கூட இந்த அறிவு அவசியம். வாய்மொழிக்கதைகளில் உள்ள இந்தத் தர்க்கத்தை கவிஞர்கள் தம் கவிதைகளில் அமைக்கும்போது, ஒரு புதிய அழகியல் பிறக்கிறது. அந்த அழகியலால் மொழியின் அழகும் வளமும் பெருகுகின்றன. தேரை நகர்த்துவதுபோல, மொழியின் அடுத்தடுத்த எல்லைகளை நோக்கி இந்த அழகியல் நகர்த்திக்கொண்டே இருக்கிறது.

இப்போது தங்கப்பாவின் கவிதைக்கு மீண்டும் வருவோம். சுள்ளியை வானவில்லாக்கும் தர்க்கமும் பனித்துளிகளை பொன்மாலையாக்கும் தர்க்கமும் களங்கமின்மையின்மீது கட்டமைக்கப்பட்டவை. உள்ளத்தில் களங்கமின்மையை - அதாவது பனிபோன்ற தூய்மையை - தூய்மைமிக்க அன்பின் ஊற்றை அடையாளம் காட்டுகிறார் தங்கப்பா. ஒருவருடைய நெஞ்சிலும் எண்ணத்திலும் அந்த ஊற்றுநீரைப் பெருகச் செய்து நிரப்பிவிடமுடியும் என்பது தங்கப்பாவின் ஆழ்மன நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் மீது அழுத்தமாக கால்பதித்தபடி ‘உன்னை நிரப்பிவைப்பேன்’ என்று மொழிகிறார் தங்கப்பா. களங்கமின்மையை நிரப்பிக்கொள்ளும் சமூகமே தங்கப்பாவின் ஆழ்மனக்கனவு.

களங்கமின்மையின் அடையாளமாகவே இயற்கையைக் கருதுகிறார் தங்கப்பா. தன் கவிதைகளில் அவர் இயற்கைக்காட்சிகளை முன்வைக்கும்போதெல்லாம் ஒரு கோணத்தில் களங்கமின்மையையே முன்வைக்கிறார் என்றே சொல்லவேண்டும். இயற்கையில் தோய்தல் என்பதை, களங்கங்களை உதறி விடுதலை அடைவதாகும் என்றே அவர் நம்புகிறார். ‘இயற்கையின் அழைப்பு’ என்னும் கவிதையின் வழியாக தங்கப்பாவின் எண்ணத்தை நாம் உணரமுடியும்.

இயற்கை உன்னை அழைக்கவில்லையா - தம்பி

இயற்கை உன்னை அழைக்கவில்லையா

மயற்கை மிகும் கொள்கைகளில்

மகிழ்ச்சி தேடி உழல்கின்றாயே

செயற்கையான பாகுபாடு

தெளிவில்லாத உள்ளம் மேடு

முயற்கொம்பு தேடுதல்போல் தம்பி - நீ

முட்டுகிறாய் எதைஎதையோ நம்பி

உள்ளத்தின் வரம்பை உடை

உண்மை காண வரம்பு தடை

வெள்ளத்தில் துளியாவாய் தம்பி - இயற்கை

விரிந்தபொழில், நீ அதிலோர் தும்பி

இயற்கையை வாழ்த்தும் பாடல்களும் இயற்கையின் ஆற்றலை விதந்தோதும் பாடல்களும் தொடக்க காலத்திலிருந்தே ஏராளமான கவிஞர்களால் எழுதப்பட்டு வருகின்றன. ஆற்றலும் கருணையும் ஒருங்கே கொண்டது இயற்கை. களங்கமில்லாத மனத்தோடு, அதன் மடியில் படுத்திருக்கும்போது, அது அன்னையென நம்மை அரவணைத்துக்கொள்கிறது. தந்திரங்கள் நிறைந்த மனத்தோடு இயற்கையைப் பார்க்கும்போது, நம் கண்களுக்கு கொள்ளையிட வைக்கப்பட்ட புதையலாக மாறித் தெரிகிறது. நாம் உடனே வேட்கையுடன் வேட்டையாடத் தொடங்குகிறோம். நாட்கள் கழியக்கழிய, நம் வேட்கையும் குறையவில்லை, வேட்டையையும் நிறுத்தமுடியவில்லை என்பதை மிகமிகத் தாமதமாகவே நாம் புரிந்துகொள்கிறோம். நம் உள்ளத்தில் தந்திரங்கள் எதையும் வளர்த்துக்கொள்ளாமல், வரம்புகள் எதையும் எழுப்பிக்கொள்ளாமல் இயற்கையான எழுச்சியோடும் இயற்கையான விசையோடும் இயற்கையான முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கையை இன்பமயமானதாக வாழ அது ஒன்றே வழி. இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் இனிமை மிக்கதாக உணரும் பார்வை நமக்கு அக்கணத்தில் வசப்படும்.

இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;

காற்றும் இனிது, நிலம் இனிது, நீர் இனிது, தீ இனிது

ஞாயிறு நன்று; திங்களும் நன்று.வானத்துச் சுடர்களெல்லாம்

மிக இனியன. மழை இனிது, மின்னல் இனிது. இடி இனிது.

கடல் இனிது, மலை இனிது காடுநன்று. ஆறுகள் இனியன.

உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும், காயும், கனியும் இனியன.

பறவைகள் இனியன. ஊர்வனவும் நல்லன, விலங்குகளெல்லாம் இனியவை, நீர் வாழ்வனவும் நல்லன.

மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது.முதுமை நன்று.

உயிர் நன்று. சாதல் இனிது.

என்னும் பாரதியாரின் கவிதையை ஒரு கணம் இங்கு நினைத்துக்கொள்ளலாம். பாரதியார் சுட்டிக்காட்டும் இந்த இனிமையை நோக்கியே தங்கப்பாவின் இயற்கை விருந்தும் இயற்கையாற்றுப் படையும் அமைந்திருக்கின்றன.

‘விழிக்கு விருந்து’ என்பது தங்கப்பாவின் இன்னொரு கவிதை.

விழிக்கு விருந்து செய்தாள் - அன்னை

விழிக்கு விருந்து செய்தாள்

மொழிக்குள் அடங்காக் காட்சித் தேனில்

மொய்க்கும் விழியும் நெஞ்சும் தேனி

உழக்குப் பிட்டு மலர்ந்தது போல

ஒளிசேர் பூவால் மலர்ந்தது காலை

கிழக்குத் தட்டில் கதிர்ப்பழத்தோடு

கிளறிப் படைத்தாள் அன்னை அன்போடு

அருவிச் சுவைநீர் நுரைபட ஆற்றி

ஆவி பருகத் தந்தாள் ஊற்றி

பருகும் போதில் மேலும் அன்போடு

பக்கம் நின்றாள் தென்றல் விசிறியோடு

அருவிக்கரையோரம் நின்று சூரிய உதயத்தைக் கண்டுகளிக்கும் காட்சிதான் கவிதை. ஈர்ப்பான சொல்லிணைவுகளோடு தங்கப்பா உருவாக்கி அளிக்கும் அழகியல் அடுக்கின் காரணமாக கவிதை மிகச்சிறந்த படைப்பாக மரிவிடுகிறது. அருவிக்காட்சியும் சூரியோதயக்காட்சியும் சங்ககாலத்திலிருந்து இன்றுவரைக்கும் தமிழ்க்கவிதைகளில் எண்ணற்ற விதங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் எவைஎவை வாசகர்களின் நினைவுகளில் பதிந்து நிலைத்திருக்கின்றன என்று கேட்டுப் பார்த்தால் மரபுவழக்காக அல்லாமல் புத்தம்புதிய கோணங்களில் புத்தம்புதிய சொல்லிணைவுகளோடு காட்சிப்படுத்தும் கவிதைகள் மட்டுமே தொடர்ந்து கவிதை உரையாடல்களில் இடம்பெற்றுவருகின்றன என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தங்கப்பாவின் கவிதையில் ஆவியெழ ஆற்றப்படும் சுவைநீராக அருவியைக் காட்சிப்படுத்தும் வரியைப் படிக்கும்போதே, அதன் புதுமையும் தனித்துவமும் நம்மை ஈர்த்துவிடுகின்றன. தனிப்பெரும் மரபுக்கவிஞராக தங்கப்பா நிலைத்திருப்பதற்குக் காரணம் இந்தத் தனித்தன்மையே.

அருவியை சுவை நீராகப் பார்த்த தங்கப்பா இன்னொரு கவிதையில் திரும்பிப் பார்த்துச் சிரிக்கும் பெண்ணாக அருவியை முன்வைக்கிறார்.

குன்றெலாம் நடந்துலாவிக்

குழியெலாம் குனிந்து தேடி

மன்றலம் பொழிய நுழைந்து

மடியினில் மலர்பறித்து

சென்றுபோய் மூலையன்றில்

சிரித்தனை, திரும்பிப் பார்த்தேன்

அன்றுநீ புகுந்தாய் நெஞ்சில்

வாழிநீ அருவிப் பெண்ணே

அருவி நின்றகோலத்தில் சிரிக்கவில்லை. பாய்ந்து நெளிந்து நெளிந்து செல்லும் கோலத்திலும் சிரிக்கவில்லை. வெட்கப்பட்டு ஓடோடிச் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பும் தருணத்தில் சிரிக்கிறது. சிரித்த காட்சி மனத்தில் உறைந்திருக்க, சிரித்த அருவியோ மறைந்துவிடுகிறது.

அள்ளூர் நன்முல்லையாரின் ஒரு குறுந்தொகைப் பாடல் அருவியை புன்னகை பூத்த நங்கையென சித்தரிக்கிறது.

அருவி வேங்கை பெருமலை நாடற்கு

யான் எவன் செய்கோ என்றி யான் அது

நகையென உணரேன் ஆயின்

என் ஆகுவை கொல் நன்னுதல் நீயே

அருவிக்கரையோரம் அழகாகப் பூத்திருக்கும் வேங்கை மரம் புன்னகை செய்கிறது. அதைப் பார்த்ததும் அருவியும் சிரிக்கிறது. ஒரு புன்னகையைப் பார்த்ததும் இன்னொரு புன்னகை தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடுகிறது. குறுந்தொகை காட்டும் பெண்ணைப்போலவே தங்கப்பா காட்டும் பெண்ணும் புன்னகை புரிகிறாள். ஆனால் இவள் அவளைவிட சற்றே குறும்பு மிகுந்தவள். அவன் புன்னகையைக் கண்டதும் அவளுக்கும் புன்னகைக்க வேண்டும்போல இருக்கிறது. ஆயினும் அந்த விருப்பத்தை கணநேரம் கட்டுப்படுத்திக்கொண்டு பாராமுகத்துடன் சிறிது தொலைவு செல்கிறாள். ஆயினும் ஒரு கணத்தில் விருப்பம் வென்றுவிட கட்டுப்பாட்டை உதறிவிட்டு ஒரு திருப்பத்தில் வெட்கத்தைக் கடந்து திரும்பிப் பார்த்து புன்னகைத்துவிடுகிறாள். சற்றே குழம்பவைத்து, தடுமாறவைத்து, சலிப்புறவைத்து இறுதிக்கணத்தில் தன் விருப்பத்தையும் மகிழ்ச்சியையும் சேர்த்து வெளிப்படுத்தும் விதமாக மாயப்புன்னகை செய்கிறாள். அருவியின் புன்னகை ஒருவகையில் களங்கமின்மையின் புன்னகை.

புன்னகையின் மற்றொரு அபூர்வமான தருணத்தை விவரிக்கும் இன்னொரு கவிதை ‘மாமர மங்கை’.

வேனிலெனும் காதலனின் வரவைஎதிர் நோக்கி

விரிகிளைகள் மலர்குலுங்கிப் பசுமை எழில் பூத்து

மேனியிலே புதியஒளி, புதுநாணம் கமழ

மிளிர்கின்ற மாமரத்தின் செழுமையினைக் கண்டேன்

வானத்துச் செந்நீலம் தோய்ந்தஇளந் தளிர்கள்

வயிரமணி விண்மீன்போல் பூங்கொத்து மின்ன

தேனிலவில் திகழ்கின்ற புதுக்கனவாய் மலர்ந்து

தென்றலிலே மணம்பரப்ப பூத்தஇள மங்கை

ஓவியத்தை மனக்கண்ணில் கொணர்ந்தபடி   மீண்டும்

ஒருநாளில் அத்திசையில் நான்நடந்தேன், அடடா

பூவிரித்த கிளைகளிலே பொற்கிழிகள் தூங்கும்

புதுப்பொலிவு நான்கண்டேன், மகவீன்ற மங்கை

மேவுநெல்லை முதுபெண்டிர் காதணிகள் போல

மின்திகழும் பொற்காய்கள் தாய்தழுவிக்கொள்ள

ஆர்வலனாம் இளவேனில் அணைந்தருகில் நின்றான்.

ஆரணங்கும் எனைக்கண்டு நாணத்தால் கவிழ்ந்தாள்.

இங்கே புன்னகைப்பது மாமர மங்கை. இளவேனிலையும் மாமரத்தையும் தலைவனும் தலைவியுமாக உருமாற்றி தங்கப்பா தீட்டிக் காட்டும் காட்சி நாம் நாள்தோறும் பார்க்கத் தவறுகிற பலநூறு காட்சிகளில் ஒன்று. ஆனால் தங்கப்பாவின் கவிதையைப் படித்த பிறகுதான் அபூர்வமான தருணத்தை எவ்வளவு அலட்சியமாகப் புறக்கணித்துவிட்டு வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட காட்சிகளையே தங்கப்பா இயற்கையின் அழைப்பு என்று முன்வைக்கிறார்.

இந்தப் பாடல்களின் வரிசையில் வைத்து கவனிக்கத்தக்க இன்னொரு கவிதை ‘வானவில்’. கதிரவனும் மழையும் வானவில்லும் அந்தக் கவிதையில் புன்னகைக்கிறார்கள்.

எழில்சிரிக்கும் செங்கதிரோன்

வான்ஓரம் நின்றிருந்தான்

மழைமங்கை அன்னவனின்

மாமன்மகள் அங்குவந்தாள்

கண்டாள்தன் காதலனை

கண்புதைத்தாள் நாணத்தால்

அன்பன் கதிர்க்கையால்

அவள்கையைத் தான்பிடித்தான்

பிடித்த கதிர்க்கையில்

பெண்ணின் வளைநழுவ

விடுத்து மறைந்துவிட்டாள்

விண்வில்தான் அந்தவளை

மழையின் கையிலிருந்து நழுவிய வளையென வானவில்லைச் சித்தரிப்பது அழகான கற்பனை. கதிரவனின் ஆசைப்புன்னகை. மழைமங்கையின் நாணப்புன்னகை. இரண்டுக்கும் நடுவில் வானவில்லின் ஆனந்தப்புன்னகை. இதுதான் இயற்கையின் விருந்து.

‘மழைத்தாய்’ என்னும் கவிதையில் மழையின் புன்னகையைக்’ காட்டுகிறார் தங்கப்பா. நீண்ட காலமாக வானமென்னும் சிறையில் அடைபட்டுக் கிடந்த மழைத்தாய் விடுதலை பெற்றதும் மண்மீது உள்ள மரம், செடி, கொடி, பயிர், குன்று என கண்ணில் பட்ட ஒவ்வொன்றையும் தொட்டுத்தொட்டு அன்பை வெளிப்படுத்தி புன்னகைத்தபடியே செல்கிறாள். அவள் விசையையும் விருப்பத்தையும் அழகாக அடுக்கிக் காட்டுகிறார் தங்கப்பா.

வானச்சிறைக்குள் வலிந்து அடைபட்டு

மாதக் கணக்கில் மக்களைப் பிரிந்து, பின்

விடுதலை பெற்று விரைந்த பெருமழை

வாடி வதங்கி வான்பார்த்துக் கிடந்த

ஒவ்வொரு மகவாய் ஓடி அணைத்தது

பச்சைப் பயிர்களை உச்சி மோந்தது

புற்களை அன்பாய் நக்கிக் கொடுத்து

முத்தியும் கொஞ்சியும் முதுகைத் தடவியும்

பித்து மொழிகளைப் பேசித் தழுவியும்

செடிகொடி யாவையும் சிலிர்க்கச் செய்தது

வடியும் மகிழ்ச்சிக்கண்ணீர் பொழிதர

வன்பசி கொண்ட உயிர்க்கெலாம்

பன்மடி சுரந்து பாலூட்டிற்றே

சிறையிலிருந்து பெற்ற விடுதலையைக் கொண்டாடுவதற்காகவே மழைத்தாயின் முகம் முதலில் புன்னகையை வெளிப்படுத்துகிறது. பிறகு, இத்தனைக் காலமும் பிரிந்திருந்த ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியடைகிறது. பயிர்களைத் தொடுகிறது. புற்களைத் தழுவுகிறது. செடிகொடிகளைத் தீண்டி மகிழ்கிறது. ஒவ்வொரு தருணத்திலும் மழைத்தாயின் மகிழ்ச்சி பலமடங்காகப் பெருகியபடி செல்கிறது. பசியால் வாடிய உயிர்களுக்குப் பாலூட்டும்போது, அந்த மகிழ்ச்சி இன்னும் பல மடங்காக வளர்ந்துகொண்டே போகிறது. இது ஒரு நேரடிக் காட்சியின் நேரடி விளக்கம். மழைத்தாயின் விடுதலையை மன விடுதலை, எண்ணங்களின் சுமையிலிருந்து கிட்டும் விடுதலை, அறிந்ததினின்று பெறும் விடுதலை என வெவ்வேறு தளங்களுக்குப் பொருந்திப் போகும் வகையில் ஒரு படிமமாகப் பார்க்கும்போது இக்கவிதையில் பொருள் இன்னும் ஆழமுள்ளதாகிறது. அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்ற மனத்தில் தாய்மையுணர்வன்றி வேறெந்த உணர்வுக்கும் இடமில்லை. வழங்குதலன்றி வேறெதையும் அறியாதது தாய்மை. பன்மடி சுரந்து பாலூட்டுவது அத்தாய்மை.

வானத்தின் புன்னகையைச் சித்தரிக்கும் ஒரு கவிதை ‘மலைமேல் மாலைவானம்’.

மைப்புட்டில் எடுத்துவந்த அழகு நங்கை

வானத்தில் கவிழ்த்துவிட்டாள், பதறி பின்னர்

கைப்படவே அள்ளிவைத்த சுவடுகள்தாம்

கறைகறையாய் கருமுகில்கள், எடுத்தவண்ணம்

அப்பிவைத்து குழைக்கும்கைப் பலகையன்றோ

அடிவானம்! பலவண்ணச் சிதறலாலே

எப்புறத்தும் வண்ணஒளி ஓவியங்கள்

எழில்மகளின் கலைக்கூடம், மாலைவானம்

கணந்தோறும் நிறம் மாறியபடி இருக்கும் அந்தி வானம். செம்மை ஏறியபடியே இருக்கிறது. அதன் அருகிலேயே திட்டுத்திட்டாக கருமுகில்கள் நிறைந்திருக்கின்றன. நிறங்களில் கலவையால் ஒருகணம் அடிவானமே ஓர் ஓவியக்கூடமாக மாறிப் புன்னகைக்கிறது. இதுதான் கண்ணெதிரில் நிகழும் காட்சி. ஆனால் தங்கப்பா இதை ஒரு நாடகத் தருணமாக மாற்றுகிறார். ஓவியனொருவன் திரைச்சீலையின் முன் நின்று ஓவியம் தீட்டுகிறான். அவன் அருகில் அவன் பல்வேறு வண்ணங்களைக் குழைத்த வண்ணப்பலகை உள்ளது. வண்ணங்களைக் குழைத்ததால் உருவான பல்வேறு வட்டங்கள் நிறங்களின் கலவையாகக் காட்சியளிக்கிறது. ஓவியனின் தேவைக்காக கரிய வண்ணப் புட்டியை எங்கிருந்தோ எடுத்து வருகிறாள் ஓர் அழகி. அது கைதவறி விழுந்து உடைந்துவிட, வண்ணம் சிதறி எங்கெங்கும் கரிய வட்டங்கள் உருவாகின்றன. ஏற்கெனவே உள்ள நிறக்கலவையோடு கரியநிறமும் இணைந்துகொள்கிறது. இறுதி வரியில் உள்ள ‘எழில்மகளின் கலைக்கூடம்’ என்னும் சித்தரிப்பு மிகமுக்கியமானது. ஒரு கலைக்கூடத்தில் நிறபேதம் என்பதே இல்லை. அங்கு அனைத்தும் நிறங்களே. கருமையும் நிறமே. செம்மையும் நிறமே. கலைக்கூடம் என்னும் படிமம் இந்த உலகம் என்னும் கலைக்கூடம், குடும்ப அமைப்பு என்பது ஒரு கலைக்கூடம், ஓர் அமைப்பு என்பது ஒரு கலைக்கூடம் என பொருளை விரிவாக்கும்தோறும், அது உணர்த்தும் உண்மைகள் ஏராளம். இறுதியில் அன்பால் மட்டுமேயான ஓர் உலகத்தை அது தொட்டு நிற்பதை உணரமுடியும். தடுமாறியதால் கவிழ்ந்துவிட்ட மைப்புட்டில் என்னும் வாக்கியத்தைக் கவனிக்கவேண்டும். தவறுகள் அனைத்தும் தடுமாற்றத்தாலேயே நிகழ்கின்றன. தவறுகள் ஒருபோதும் குற்றங்கள் அல்ல.

அரைநூற்றாண்டு காலமாக தன் இயற்கைப்பாடல்கள் புதுப்புது அழகியல் அடுக்குகள் வழியாக, களங்கமற்ற மனம் அல்லது களங்கமற்ற சமூகம் பற்றிய கனவுகளையே முன்வைத்தவர் தங்கப்பா. எழுத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அக்கனவோடு வாழ்ந்தவர் அவர். அது நடைமுறைச் சாத்தியமற்ற கனவு என உடனடியாக ஒரு குரல் எழக்கூடும். ஆனால் அப்படியரு உலகம் அமைந்தால், நாம் மறுத்துவிடுவோமா, என்ன? தங்கப்பாவின் கனவு ஓர் இலட்சியக்கனவு. உலகக் கவிஞர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இலட்சியக்கனவோடு வாழ்ந்தவர்களே என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

- பாவண்ணன்

Pin It