வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவிற்கு, இரங்கல் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புகழ்மிக்க வேளாண் விஞ்ஞானியும், மக்கள் நலப் போராளியுமான நம்மாழ்வார் அவர்கள் தனது 75வது வயதில் தஞ்சை மாவட்டத்தில் இயற்கை எய்தினார். தனது, வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்த அந்த மனிதநேயருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் நமது அஞ்சலியைத்த் தெரிவித்துக் கொள்கிறோம்.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் அமைந்த இளங்காடு என்னும் ஊரில் பிறந்தவர். வேளாண் பட்டப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்து, அரசுப் பணியில் சேர்ந்து, பின்னர் விருப்ப ஓய்வைப் பெற்றவர். தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற அமைப்புகளை உருவாக்கித் தமிழகத்தில் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்கிக் காட்டியவர். சுயசார்பு வேளாண்மையின் சாத்தியத்தை நிரூபிக்க ‘வானகம்’ என்னும் இடத்தை உருவாக்கி இதில் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியைத் தொடர்ந்து அளித்து வந்தார்.

உலக நாடுகள் பலவற்றிற்குச் சென்றுள்ளார். அங்கு இயற்கை விவசாயம் குறித்த அனுபவங்கள் அனைத்தையும் திரட்டி அதனைத் தமிழகத்தில் செயல்முறைப்படுத்திக் காட்டியுள்ளார். கியூபாவின் இயற்கை விவசாயத்தை, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். உழவுக்கு உண்டு வரலாறு, தாய் மண்ணே வணக்கம், விதைகளே பேராயுதம் என்பன போன்ற நூல்களை எழுதி விவசாயிகளைச் சிந்திக்க வைத்தார்.

தமிழகத்தின் பெருமையை உலக அளவில் உயர்த்திக் காட்டிய நம்மாழ்வார் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தா.பாண்டியன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Pin It