1. தொடக்கக் குறிப்புகள்

இந்திய தேசிய அறிவியல் கழகம் ‘இந்தியாவில் அறிவியல்கள் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு’ (1971) என்ற நூலை வெளியிட்டுள்ளது. இப்பெருநூலில் பொருள் முதல்வாதிகள் “நாத்திகர்கள், உலகாயதர்கள், சாருவாகர்கள்” எனக் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கி.மு.600-200க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள் என்று துணிந்து அந்நூலில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பொருள்முதல்வாதிகளுக்கு அறிவியல் வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் பற்றி “நமது அறிவின் இன்றைய நிலையில் வேதநெறியை ஏற்காத இந்தச் சிந்தனைப் போக்குகள் அறிவியல் முன்னேற்றம் அல்லது சமயத் துறை சாராத கற்பித்தல் மீது தாக்கம் ஏற்படுத்தியுள்ளனவா என்று கேட்டால் பதிலளிப்பதற்கு வாய்ப்பு ஏதுமில்லை” என்று நேர்மையற்றுக் கூறப் பட்டுள்ளது.

statue_309இந்த அறிவியல்கள் வரலாற்று நூலுக்குக் கட்டுரைகள் வழங்கியவர்களின் இன்றைய “அறிவு நிலை” மிகவும் கஷ்டப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டியது என்பதை இங்குக் காட்டப் போகிறோம். ஒருவன் இந்திய மெய்யியல் பற்றி அலட்சியப் போக்கில் எழுதப்பட்ட நூல்களை மட்டுமே சார்ந்திருக்காமல் இருந்தால், நம் பண்பாட்டு மரபில் அறிவியல் முன் னேற்றத்திற்கும், சமயத்துறை சாராத கற்பித்தலுக்கும் பொருள்முதல்வாதம் மிகப் பெரிய அளவில் பங்களித் திருப்பதைக் காண முடியும் என்பது உண்மை. இந்திய மெய்யியல் மரபில் நிலவிய அதீதக் கருத்துமுதல் வாதத்தின் பெருமைகள் குறித்து வாய் கிழிய எவ்வளவோ பேசப்படும் இன்றைய வேளையில், ஒருமுறை ஹெகல் “குடிவெறியர்களுக்கு நடுவில் தெளிந்த அறிவோடு இருந்த மனிதன்” என்று அனக்சகோரசைப் பற்றிக் கூறிய கூற்றை அப்படியே திருப்பி இந்தியச் சூழலில் பொருள்முதல்வாதிகளை நோக்கிக் கூறத் தோன்றுகிறது. இந்தக் கூற்றை ஹெகல் கருத்துமுதல்வாத நோக்கி லிருந்தே கூறினார் என்பதில் ஐயமில்லை. முக்கிய மாகப் பண்டைய இந்தியாவில் நடப்பில் இருந்த அறிவியலின் கோட்பாட்டு அடிப்படைகளை நிறுவி யவர்களைத் தேடத் தொடங்கும் வேளையில், பொருள் முதல்வாதிகள் பற்றி ஹெகலின் கூற்றைக் கூறவேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயல வில்லை.

இந்தத் தேடலுக்குப் பண்டைக் காலத்தில் தன்னளவிலேயே அதீதக் கருத்துமுதல்வாதத்தை ஏற்றுக்கொண்ட முனிவர் கூறிய முறையியலை விரிவாகப் பயன்படுத்துவோம். அந்த முனிவருடைய பெயர் யாக்ஞவல்கியர் என்று தெரியவருகின்றது. நேதி - அது இது இல்லை - என்ற எதிர்மறைப் பாதையின் மூலம் உண்மையைத் தேடுவது வசதியானது என்பது அவருடைய பரிந்துரை. இந்த முறை அவருடைய சொல்லாடலில் தலைகீழாக நின்றுகொண்டிருக்கிறது. ஆயினும் அதை நேராக நிற்க வைப்போம். நாம் பயன்படுத்தவிருக்கும் முறையை வேறு சொற்களில் கூறினால், இயற்கை அறிவியல் வளர்ச்சியைத் தடை செய்தவை எவை என்று முதலில் நோக்கி, அவற்றைக் கண்டறிந்து, அவற்றுக்கு எதிரானவை நேரடியாகவோ மறைமுகமாகவோ அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களித் திருப்பதை ஊகித்துக்கொள்ளுவதே ஆகும். பிறகு பொருள்முதல்வாதத்திற்கும் இயற்கை அறிவியலுக்கும் உள்ள உறவிற்கான நேரடிச் சான்றுகளைத் தேடிக் கண்டறிந்து தெளிவுபடுத்துவோம். பிற்காலத்தில் அவர்கள் மீது குவிக்கப்பட்டிருக்கின்ற ஏராளமான அறிவுலகக் குப்பைக்கூளங்களின் அடியில் இத்தகைய சில சான்றுகளும் இருக்கின்றன.

2. அறிவியலின் வீழ்ச்சியும் பொருள்முதல்வாதிகளுடைய கண்டனமும்

‘எது அறிவியல் முன்னேற்றத்திற்குப் பகையாக இருந்து, இறுதியில் அறிவியலுக்கு அழிவைக் கொண்டு வந்தது?’ என்ற கேள்விக்கு நமது நவீன அறிவியலாளர் களில் திறமைமிக்க பி.சி.ராய் நல்வாய்ப்பாக ஏற்கனவே பதிலளித்திருக்கின்றார். இப்பதிலை விரிவாக்கிப் புரிந்துகொள்ளும் வேலையை மட்டுமே நமக்கு விட்டு வைத்திருக்கின்றார்.

பி.சி.ராய் தாம் எழுதிய ‘இந்து வேதியியலின் வரலாறு’ என்ற நூலில் ‘தொழில்நுட்பக் கலைகள் பற்றிய அறிவும் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பிலான இயலைச் சேர்ப்பது மிக அவசியம் எனக் கருதினார். இந்தப் பேசுபொருள் பற்றிய விவாதத்தின் தேவையை ராய்க்கு முன்பு எவரும் உணரவில்லை. ராயின் வழிவந்த அறிவியலாளர் களிடையேகூட எம்.என்.சகா மட்டுமே இந்தப் பொருளைத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொண்டார். பி.சி.ராயின் ‘தொழில்நுட்பக் கலைகள் பற்றிய அறிவும் அறிவியல் மனப்பாங்கும்’ என்ற இயல் சுருக்கமானது. ஆயினும், இந்தியாவில் அறிவியல் வரலாற்றியலாளர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உடையது.

பி.சி.ராய் இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணியை அறிவியலின் பொதுச்சட்டகத்தினுள் காணாமல், அதற்கு வெளியே நாட்டின் சமூகச் சூழ்நிலை வளர்ச்சியில் முதன்மையாகக் காண விரும்பினார் என்பதே, அவருடைய விவாதத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்க முதல் அம்சம் ஆகும். ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் கைமாற்றித் தரும் தீப்பந்தங்களைப் போல் கைமாற்றிக் கொடுக்கப் பட்ட கருத்துக்களின் தொடர்ச்சி, கொள்கைகள், மனனம் அல்லது கணிதம் சார்ந்த நுட்பங்கள், நடை முறைக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் அகநிலை அல்லது தன்னிலை உறவுகளில் மட்டுமே அறிவியலின் வரலாற்றை விளக்கும் அகநிலைவாதிகள் அல்லது தன்னிலைவாதிகளின் கருதுகோள் மீதான அண்மைக் கால மறுதலிப்புகள் பற்றி எந்த அறிவும் இன்றி, பி.சி.ராய் அக்கருதுகோளைத் தன் சொந்த வழியில் ஒதுக்கித் தள்ளினார் என்பதே இதற்குப் பொருளாகும். இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணி சாதி சமூக முறையின் கோட்டைக் கொத்தளங்களும், அவை தொழில்நுட்ப வல்லுநர், கைவினைஞர் உள்ளிட்ட உடல் உழைப்பாளிகளின் சமூக மதிப்பை மிக மோசமான வகையில் கீழிறக் கியதுமுமே ஆகும். “வேத காலத்தில் மக்கள் தம் சொந்த இயல்புக்கும் வசதிக்கும் ஏற்ப தொழில்களைத் தேர்ந்து கொள்வதைத் தடுக்குமளவுக்கு சாதி உருப்பெறவில்லை”, ஆனால் “பவுத்தத்தின் வீழ்ச்சிக்கும், வெளியேற்றத் திற்கும் பிறகு பார்ப்பனர்கள் கேள்விக்கே இடமற்ற உயர்நிலையை அடைந்தபோது” இந்த நிலைமை ஏற்பட்டது என்று பி.சி.ராய் வெளிப்படுத்தினார். சாதி சமூக அமைப்பின் வெற்றி பற்றிய இந்தப் பார்வையை இக்கால வரலாற்றியலாளர்கள் எந்த அளவுக்குத் திருத்த வேண்டும் என்பது முற்றிலும் வேறுவகைக் கேள்வி. இந்தியாவில் அறிவியலின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் மீது சமூகத்தின் சாதிக் கட்டமைப்பு ஏற்படுத்தியுள்ள விளைவு பற்றி ராய்யுடைய பகுப்பாய்விலிருந்து வரலாற்றியலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது என்பது நாம் கூறும் அம்சம் ஆகும். அவர் பின்வருமாறு கூறினார்.

“மிகமிக ஆணவம்மிக்க, மோசடிச் செயல்பாடுகளை நிறுவிய புரோகித வர்க்கத்தின் புகழ்பாடும் திசை யிலேயே பிற்காலத் தொன்மங்களும் மனுவின் குப்பைக் கூளங்களும் சென்றன. சுசுருதரின் கூற்றுப்படி அறுவை மருத்துவ மாணவர்கள் இறந்த உடல்களை அறுத்துப் பார்ப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். சுசுருதர் இச்செயல்பாட்டின் மூலம் பரிசோதித்து, உற்றறிந்து பெறப்படும் அறுவைத்துறை அறிவுக்கு மிகப்பெரும் முதன்மை அளிக்கின்றார். ஆனால் மனு இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மனுவின் கருத்துப்படி புனிதமான பார்ப்பனன் பிணத்தைத் தொடுவதால் தீட்டாகி விடுகின்றான். எனவே வாக்பட்டரின் காலத்துக்குப் பிறகு விரைவிலேயே அறுவை மருத்துவக் கருவிகளைத் தொடுவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; உடற்கூற்றியலும், அறுவை மருத்துவமும் கைவிடப் பட்டன. இதனால் அவை இந்துகளுக்கு மறைந்து போன அறிவியல்கள் ஆகிவிட்டன. இதேபோல் உலைக்களத்தில் சைக்ளாப்சைப் போல வியர்வை சிந்தி உழைப்பது உவப்பானதாக இல்லாமல் கண்ணியக் குறைவானதாகக் கருதப்பட்டது (சைக்ளாப்சு கிரேக்கத் தொன்மங்களில் வரும் நெற்றியில் மட்டும் ஒற்றைக் கண்ணுடைய அரக்கர் இனக் கொல்லர்கள்). எனவே சமூகத்தின் மிகவும் திறமையுடைய வர்க்கங்கள் பேணி வளர்த்த கலை மரபுகள் பற்றிய பதிவுகள் மிகமிக நெடுங்காலத்துக்கு முன்பு இருந்த பண்டைய வடமொழி இலக்கியங்களில் மட்டுமே எஞ்சி இருப்பதைக் காண்கிறோம்.”

“கலைகள் கீழான சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டு, தொழில்கள் குடிவழிமரபுத் தொழில்கள் ஆக்கப்பட்டு, சமூகத்தின் அறிவாற்றல் மிக்க பகுதியினர் உழைப்பில் செயலூக்கத்தோடு பங்கெடுப்பதிலிருந்து விலகி விட்டதால், கைத்தொழில்களில் நுட்பமும், நேர்த்தியும் மிகப்பெரும் சிரமத்தின் மூலமாகப் பாதுகாக்கப் பட்டன. காரணி, விளைவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நோக்கி, ஏன், எவ்வாறு என்று கேள்வி எழுப்பி, தோற்றப்பாடுகளைப் பரிசோதித்து, ஊகித்து அறியும் அறிவியலுக்குத் தலைமுழுகிவிட்ட அறிவுசார்ந்த மக்கள் யோகத்திலும், நிலையான பரம்பொருள் பற்றிய ஆராய்ச்சியிலும் மூழ்கிவிட்டனர். நமது மண் அறிவியல்உலகின் வரைபடத்திலிருந்து விலக்கப் பட்டு, ஒரு பாயிலோ, டே கார்வ்டெசோ, நியூட்டனோ பிறப்பதற்குத் தகுதியற்றதாகிவிட்டது.”

“அறிவுத்துறையில் மந்தமும் தேக்கமும் நிலவிய இந்த நாட்டில் மிகப் பெரும்பாலும் தமக்குள்ளேயே வாழ நேர்ந்துவிட்ட கைவினை வர்க்கங்கள் மரபு சார்ந்த சுயமான அறிவுக்கூர்மை, பொது உணர்வு ஆகியவற்றின் மூலம் பழைய மரபுகளைக் காப்பாற்றி வந்துள்ளன. கைவினைத் தொழிலாளர்கள் தம் சொந்த வழியில் பொன் - வெள்ளி அணி வேலைப் பாடுகள், உலோக வேலைப்பாடுகள், தந்த வேலைப் பாடுகள், எனாமல் பூச்சு, நெய்தல், சாயம் தோய்த்தல், நூல் பின்னல் வேலைப்பாடுகள் ஆகியவற்றில் தமது வியக்கத்தக்க தொழில் நுணுக்கத்தைக் காட்டி வருகின்றனர்.”

இக்கூற்றுகளில் சாதி சமூக முறையின் தீமைகளைக் கண்டிப்பதில் புதுமை ஒன்றுமில்லை. பி.சி.ராயின் சமகாலத்தவர் உள்ளிட்ட நமது பல சமூகச் சீர்திருத்த வாதிகள் ராய் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமான கோபத்துடனும், சொல்வன்மையுடனும் சாதி சமூக முறையைக் கண்டித்தனர். ஆயினும் அறிவியலை முடக்குவாதத்திற்கு இரையாக்கிய ஏதோ ஒன்றைச் சாதி அமைப்பில் ராய் கண்டார் என்பதே அவருடைய தனிச்சிறப்பு. இக்காலக் கலைச்சொற் களில் சொன்னால் சாதி சமூகமுறை கொள்கையை நடைமுறையிலிருந்து பிரிக்கும், அதாவது மூளை உழைப்பை உடல் உழைப்பிலிருந்து பிரிக்கும் அழிவு வேலையைத் தொடங்கி வைத்து, வேரூன்றச் செய்து, அதன் விளைவாக உடல் உழைப்பாளிகளான கை வினைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரைச் சமூகத்தில் கீழ்நிலைக்குத் தள்ளி இழிவுபடுத்தியது. ஆனால் அவர்களிடம் மட்டுமே இயற்கையோடு வினைபுரியும் கருவிகளும் உடல் உழைப்பும் இருந்தன. இவ்வினைபுரிதல் இல்லாமல் தோற்றப்பாட்டை ஏன், எவ்வாறு என வினவிப் புரிந்து கொள்ளுதல் இயலாது. கைவினைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் தங்களிடம் மட்டுமே இருந்த தொழிற் கருவிகளைத் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வந்தனர். ஆனால் அக்கருவிகளைப் புதுமையாக்கு வதற்கும், மேம்படுத்திச் செல்வதற்கும் அறிவியலைப் பயன்படுத்த முடியவில்லை.

இந்த விசயத்தைத் தெள்ளத்தெளிவாகக் கண் டறிந்து, 1902-ஆம் ஆண்டிலேயே துணிவோடு அறுதியிட்டுக் கூறிய முதல் இந்திய அறிவியலின் வரலாற்றியலாளராக பி.சி.ராய் இருந்தார். இதன் முக்கியத்துவத்தை மேலும் புரிந்துகொள்ள முயல் வோம்.

முதலாவதாகக் கைவினைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் சமூக மதிப்பு கீழிறக்கத்திலிருந்தே அறிவியலின் வீழ்ச்சிக்கான உண்மையான விடையைத் தேட வேண்டுமென்னும் போது, தொழில்நுட்பங்களிலிருந்தே அறிவியல் ஊட்டம் பெற்றது என்பதும் தெளிவாகின்றது. இக் கூற்று அறிவியலுக்குச் சமமானதாகத் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன என்று உறுதியாகப் பொருள் தருவதில்லை. மாறாக, தொழில்நுட்பங்களிலேயே அறிவியல் குடி கொண்டிருப்பதால் தொழில்நுட்பங்கள் இல்லாத அறிவியலை எண்ணிப் பார்க்க இயலாது என்றே பொருள் தருகின்றது. இந்த விஷயத்தை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பி.சி.ராய் அறிந் திருந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 1942-இல் வெளியான “இயற்பியல் விதி பற்றிய கருத்தாக்கத்தின் தோற்றம்” என்ற இ.ஜில்செலின் புகழ்பெற்ற ஆய்வுரை, 1944-இல் வெளிவந்த பி.பாரிங்டனின் “கிரேக்க அறிவியல்”, 1954-இல் முதன்முதலாக வெளியிடப்பட்ட ஜெ.டி.பெர்னலின் “வரலாற்றில் அறிவியல்” ஆகிய அறிவியல் வரலாற்றியலுக்குத் திருப்புமுனையாக அமைந்த படைப்புகள் பி.சி.ராய் அறிந்து ஏற்றிருந்த தையே சிறப்பாகப் புரிந்து கொள்வதற்கு அதிகமான வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொணர்ந்தன.

பாரிங்டனின் “கிரேக்க அறிவியல்” என்ற நூலும், அதற்குப் பிறகு 1947-இல் வெளிவந்த அவருடைய சுருக்கமான சிறந்த நூலான “பண்டைய கிரேக்கத்தில் தலையும் கையும்” என்ற புத்தகமும் பி.சி.ராய் அழுத்தமாக வலியுறுத்திய அறிவியல் வீழ்ச்சிக்கான காரணம் உடல் உழைப்பாளிகளின் சமூக மதிப்பு கீழிறக்கம் என்பதைக் காணுவதற்கு வழிகாட்டின. பாரிங்டனின் விரிந்த கிரேக்க ஆய்வுகளைப் போன்ற புலமைப் பாட்டை ராயிடம் எதிர்பார்க்கவில்லை. ஆயினும், உடல் உழைப்பை இழிவுபடுத்தியதின் விளைவாக அறிவியலுக்கான அழிவுச் சூழல் நடப்பிற்கு வந்தது என்ற உலகளாவிய உண்மைக்கான சான்று பண்டைய கிரேக்கத்திலும் இருக்கின்றது என்பதைத் தம் சொந்த வழியிலேயே ராய் புரிந்துகொள்ள முயன்றார் என்ற உண்மையைக் காணாமல் இருப்பது தவறு. இந்த அம்சத்தை அடிப்படையாகக் கொண்டே பாரிங்டன் பண்டைய கிரேக்கர்களின் அறிவியல் சாதனைகள் பற்றிய எழுத்துகளில் அவர்களின் கொள்கையளவிலான முன்னேற்றங்களுக்கு ஒருதலைச் சார்புடன் வழக்கமாக அழுத்தம் கொடுப்பதைத் திருத்தினார். “ஐயமின்றி பண்டைய கிரேக்கர்களுள் சிலரால் ஊக்கம் பெற்ற இக்காலத்தவர்கள் பலர் கிரேக்க அறிவியலின் கொள்கை சார்ந்த தேர்ச்சியைப் புகழ்ந்து, அதன் நடைமுறை வெற்றிகளைப் புறக்கணிக்கின்றனர் அல்லது மறுக்கின்றனர்.”

அரிஸ்டாட்டில் எவ்வளவுதான் மேதையாக இருந்தாலும் அடிமைமுறை பற்றிய அவருடைய நியாயப்படுத்தல் கிரேக்க அறிவியலின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதைப் பலரும் கவனத்தில் கொள்ளவில்லை. இதைப்பற்றி பாரிங்டனுடைய ‘கிரேக்க அறிவியல்’ நூலில் மிகச் சிறந்த பகுப்பாய்வைப் பெறுகின்றோம். இந்தியாவில் நடந்தது போன்று கிரேக்கத்திலும் உடல் உழைப்பாளர்களின் சமூக மதிப்பு கீழிறக்கம், இழிவுபடுத்தல் ஆகியவற்றின் விளைவாக அறிவியலுக்கான அழிவுச் சூழல் தோன்றியதை வரைந்துகாட்டுவதற்கு, பாரிங் டனுடைய படைப்பிற்கு முன்பு, ஒப்பீட்டளவில் கிரேக்க நிலைமைகள் பற்றி மிகக் குறைவான தரவு களைக் கொண்டு மிக ஆழமான தோற்றத்தை பி.சி.ராய் அளிக்க முயன்றார் என்பதே மிகவும் குறிப்பிடத்தக்கது. பி.சி.ராய் பின்வருமாறு கூறினார்.

“இதுபோன்ற ஆபத்துகள் காலத்துக்குக் காலம் ஐரோப்பாவை அச்சுறுத்தின. ஆனால் காலப் போக்கில் அவர்களிடையே தோன்றிய உறுதி வாய்ந்த மனிதர்கள் அந்த அச்சுறுத்தல்களை வென்று விட்டனர். கீழானவர் களுக்கே தொழில் சார்ந்த வேலைகள் என்ற அரிஸ்டாட்டிலுடைய கருத்து அங்கும் அறிவில் சிறந்தவர் களிடையே உறுதியான செல்வாக்கு செலுத்தியது. இதனால் தொழில்நுட்ப வேதியியல் முன்னேற்றத்தின் நடைமுறையிலும், உற்றறிதலிலுமிருந்து கல்வி கற்ற கிரேக்கர்கள் விலகியே நின்றனர். வேதியியல் செயல்பாட்டின் கொள்கை சார்ந்த விரிவாக்க ஆர்வமும் கூட அவர்களின் விருப்ப வட்டத்திற்கு வெளியே இருந்தது.”

பாரசெல்சஸ் தம் காலத்து பண்டுவக்காரர்களை (Physicians) இரசவாதிகளுடன் (Alchemists) ஒப்பிட்டு ஏளனம் செய்தார். அவர் இரசவாதிகளைப் பற்றி பின்வருமாறு கூறினார். “பகட்டுத்தனம் அல்லது வெல் வெட் ஆடைகள் அணிதல், விரல்கள் அனைத்திலும் மோதிரங்கள் அணிந்துகொண்டு மினுக்கித் திரிதல் அல்லது வெள்ளிப் பிடிகளைக் கொண்ட உடை வாள்களை இடையில் தரித்தல் அல்லது கைகளில் வேலைப்பாடு மிகுந்த கையுறைகளை அணிதல் போன்ற பகட்டார்வங்களுடன் இரசவாதிகள் சோம்பிக் கிடப்பதில்லை. மாறாக, இரவு பகல் பாராமல் முழுப் பொழுதும் உழைப்பதிலேயே இனிமை காண்கின்றனர். தாம் புத்துணர்ச்சி பெறுவதற்காக இரசவாதிகள் அயலகங்கள் செல்வதில்லை; ஆய்வுக் கூடங்களிலேயே புத்தொளி பெறுகின்றனர். அவர்கள் சிறிய சட்டைப் பையுடைய தோல் ஆடைகளை அணிகின்றனர்; அதிலேயே தம் அழுக்கான கைகளைத் துடைத்துக் கொள்கின்றனர். அவர்கள் மோதிரங்களில் விரல் களை நுழைத்துக் கொள்வதில்லை; கரித்துண்டு முதல் களிமண் வரையிலான பொருள்களிடையே விரல்களை நுழைக்கின்றனர். அவர்கள் சுத்தமான அழகான முகங்களுடன் இருக்காமல் கொல்லரைப் போன்றும், சுரங்கத் தொழிலாளி போன்றும் புழுதி படிந்தும், கருப்பாகவுமே இருக்க விரும்புகின்றனர்.”

“18ஆம் நூற்றாண்டின் நடுவிலே கூட இங்கிலாந்தில் வேதியியல் துறை முன்முயற்சிகள் விருப்பார்வ ஒளியில் பதிவாகவில்லை. மருந்து விற்பவர்களும் தங்களை வேதியியலாளர் என்று அழைத்துக் கொண்டதால், தங்களை வேதியியலாளர் என்று குறிப்பிட்டுக் கொள் வதை வேதியியலாளர் வெறுத்தனர். இச்சூழ்நிலை யினால் ‘இங்கிலாந்து அறிவியல் நிலமன்று’ என்று அறிவிப்பதற்கு 1837-இல் லியபிக் உந்தப்பட்டார்.”

புதுதினுசான சமூகப் புல்லுருவிகளாக மட்டுமே இருந்த, அழிந்துகொண்டிருந்த அறிவியலை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்திய பாரசெல்சஸ் காலத்தின் பண்டுவக்காரர்கள் வாழ்ந்த போது, உடல் உழைப்பிற்கு இரசவாதிகள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதில் இயற்கை அறிவியலின் மறுபிறப்பிற்கான உண்மையான வாய்ப்பை பாரா செல்சஸ் தம் வழியிலேயே கண்டார். இதையே ஐரோப்பிய மறுமலர்ச்சியில் நவீன அறிவியல் மனப் பாங்கு உதித்தெழுவதற்கான மிகப் பெரும் முக்கியத் துவம் வாய்ந்த மெய்மைகள் பற்றிய கேள்விக்கு விடை யாக ஏற்கின்றோம். “அச்சுறுதல்களைத் தாண்டிய ஐரோப்பாவின் உறுதி வாய்ந்த மனிதர்கள்” என்று ராய் குறிப்பிட்ட, விருப்பிற்குகந்ததாக இல்லாத உண்மையின் மூலமே நவீன அறிவியல் உருவாக்கப் பட்டது. பி.சி.ராய் தன் சொந்த வழியில் மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்ட உண்மையை, நமது இந்திய வரலாற்றில் அறிவியல் பற்றிப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான அம்சத்தைத் தன்னுள் கொண்டிருக்கும், மிகப் பெரும் தரவுகளில் இந்த அம்சத்தை வெளிப் படுத்திக் காட்டும் ஜெ.டி.பெர்னலிடம் திரும்புவோம்.

“மறுமலர்ச்சிக் காலம் ஒரு பகுதி அளவுக்கு கொடுங்கோலான கொள்கைக்கும், அடங்கி நிற்கும் நடைமுறைக்கும் இடையிலான பிளவை நீக்கியதே” நவீன ஐரோப்பாவில் அறிவியல் மறுபிறப்பிற்கான மிக முக்கியமான ஒரு காரணி என்று நாம் அறிதல் வேண்டும் என பெர்னல் விரும்புகிறார். இதைப் பற்றி வாசகர்கள் விரிவாக அறிய விரும்பினால் அவருடைய படைப்பை நோக்குக. அவருடைய கூற்றில் ஒரு துண்டை மேற்கோள் காட்டுவோம்.

“நூல் நூற்றல், நெய்தல், பானை வனைதல், கண்ணாடிப் பொருள்கள் தயாரித்தல், வாழ்வுக்கும் போருக்கும் தேவையானவற்றை நிறைவு செய்த உலோகக் கலைஞர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் முதலான தொழில்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டதே உண்மையான புதுமை. கலைகளின் தொழில்நுட்பங்கள் தொல்சீர் காலத்தில் அடிமைகளிடம் இருந்தது போன்று இல்லாமல், நவீன காலத்தில் சுதந்திர மனிதர்களிடம் இருந்தன. கலைத் தொழில்நுட்பங்களிடமிருந்து இடைக்காலக் கோமகன்கள் விலகிலிருந்தது போன்று இல்லாமல், புதிய சமூகத்தின் ஆட்சியாளர்கள் பொருளாதார அளவிலும், சமூக அளவிலும் நெருங்கியே இருந்தனர். ஆகவே அவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றன...

“பழைய நாகரிகங்களின் தொடக்கம் முதற் கொண்டே கைவினை மரபுகளுக்கும், அறிவாளி களுக்கும் இடையே அறுந்துவிட்ட தொடர்பு, கை வினைஞர்களின் சமூக மதிப்பு உயர்ந்ததால் மீண்டும் இணைய வாய்ப்பு ஏற்பட்டது.”

இந்தியச் சூழலுக்குத் திரும்புவோம். நமது பண்டைய வரலாற்றில் அறிவியல் செயல்பாடு களையும், அறிவியல் மனப்பாங்கையும் வளர்த் தெடுத்தலில் சாருவாகர்கள் அல்லது உலகாயதர் களின் பங்களிப்பை நோக்குவதற்காக பி.சி.ராய் உற்றறிந்ததின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள் வதற்கு முயல்வோம். பி.சி.ராய் எடுத்துக்காட்டியபடி, இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கின் வீழ்ச்சிக்கான மிகவும் முக்கியமான காரணிகளுள் ஒன்று உடல் உழைப்பு பற்றிய இழிவுபடுத்தல் ஆகும். இந்த இழிவு படுத்தல் நாட்டில் சாதி சமூகமுறை நிலைபெற்றதைத் தொடர்ந்து தவிர்க்க இயலாதவொன்றாக நடை முறைக்கு வந்தது. சாதி சமூகமுறை பற்றி சாரு வாகர்கள் அல்லது உலகாயதர்களுடைய நோக்கை அறிவதற்கு எஞ்சிப் பிழைத்திருக்கும் சான்றுகளி லிருந்து கிடைக்கும் விடையை ஏற்றுக்கொண்டால், அறிவியல் வளர்ச்சித் தூண்டுதலுக்கு அவர்கள் ஆற்றிய பங்கை மதிப்பிட முடியும்.

இப்போது ‘நம்மால் ஏதாவதொரு பதிலைப் பெற முடிகின்றதா?’ என்பது மிக முக்கியமான கேள்வி. இதற்கு நேர்மறையான பதிலை ஏற்கெனவே பெற்றிருக்கின்றோம் என்பது மிகமிகக் குறிப்பிடத் தக்கது.

எதையும் சாதி சமூகமுறை பற்றி விரிவான கண்டனம் அவர்களுடைய உண்மையான மக்கள் பாடல்கள் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ஆயினும், சாதி சமூகமுறையின் அடிப்படையாக விளங்கும் கருத்துநிலைச் சட்டத்தை உடைத்தெறி வதற்கான விருப்பம் அவற்றிலே இருக்கின்றது. அவர்கள் அதிருஷ்டம் என்னும் கருத்தாக்கத்தின் மீது நேரடியான தாக்குதல் தொடுத்தனர். கடந்த பிறவியில் செய்த கர்மம் இந்தப் பிறவியிலும், இந்தப் பிறவியில் செய்யும் கர்மம் அடுத்த பிறவியிலும் பலனை நல்கும் கண்ணுக்குத் தெரியாத ஆற்றலே அதிருஷ்டம் ஆகும். இப்போது ஒருவர் உயர்குடியில் பிறந்திருந்தால், அதற்குக் காரணம் அவர் கடந்த பிறவியில் செய்த நல்வினைகளே; மற்றொருவர் தாழ்குடியில் பிறந்திருந்தால் அதற்குக் காரணம், அவர் கடந்த பிறவியில் செய்த தீவினைகளே. இப்படிப் பட்ட நம்பிக்கையொன்று இல்லாமல் சாதி சமூக முறையை நியாயப்படுத்த முடியாது. இந்திய மெய்யியலில் சாருவாகர்களைத் தவிர வேறு எவரும் கர்மம், அதிருஷ்டம் ஆகிய நோக்குகளை நேரடியாக எதிர்த்துப் போராடவில்லை.

ஆகவே பி.சி.ராய் நோக்கிலிருந்து பார்த்தால் சாருவாகர்கள் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தால் இந்திய வரலாற்றில் அறிவியல் வளர்ச்சியின் எதிர்காலம் வேறானதாக இருந்திருக்கும்; மறுமலர்ச்சிக் கால ஐரோப்பாவில் நடந்தது போன்று, இயற்கை யோடு நேரடியாகத் தொடர்புகொள்ளும் முறையான உடல் உழைப்பு மீதான இழிவுபடுத்தல் வலிமை யற்றிருக்கும்; அறிவியல் மனப்பாங்கு ஆற்றல் பெற்றிருக்கும்.

ஆனால் சாருவாகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் காதுகொடுத்துக் கேட்பதற்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காது கொடுத்தலுக்கான சில வாய்ப்புகளையும் தருமசாத்திரக்காரர்கள் மிகக் கடுமையாக எதிர்த்துஅழித்துவிட்டு, வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு உண்மையான சிந்தனையாளர்களை நடுநடுங்க வைத்து அச்சத்திற்கு உள்ளாக்கினர். இதைப் பற்றி ‘மெய்யியலும் அரசியலும்’ என்ற அடுத்த இயலில் விவாதிப்போம்.

(இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில்...)

Pin It