இந்திய மெய்யியல் ஆய்வு மரபில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘உலகாயதம் : பண்டை இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு’ என்ற வெளியீடு புதிய யுகத்தைத் தொடங்கி வைத்தது. ஆனால் இந்தியாவில் இருந்த கல்வித்துறை சார்ந்த சில புலமையாளர்களுக்கு 678 பக்கங்களைக் கொண்ட இந்த ஆங்கிலப் படைப்பின் பொருளடக்கத் தலைப்புகளின் வரிசையே திகைப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் இருந்த சிந்தனை பற்றிய வரலாற்றியலாளர்களும், தொல்சீர் இலக்கியப் புலமை யாளர்களும் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இந்நூலை வரவேற்றனர். மிக நன்கறியப்பட்ட ‘சீனாவில் நாகரிகமும் அறிவியலும்’ என்ற பல்தொகுதி நூலின் ஆசிரியர் ஜோசப் நீதம் “உங்கள் நூல் என்னுடைய நூலகத்தில் உண்மையாகவே மதிப்புக்குரிய இடத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும். நாம் பண்டைய இந்திய, சீன நாகரிகங்களை ஆராய்ந்து சில ஒத்த முடிவுகளுக்கு வந்தடைந்திருப்பது மிக வியப்புக்குரிய உண்மை” என்று சட்டோபாத்தி யாயாவுக்கு எழுதினார்.

deviprasath_360மூத்த பிரெஞ்சு இந்தியவியலாளர் லூயிஸ் ரெனோ “இந்த நூல் உயர்ந்த மதிப்புடையதாக இருக்கின்றது. இந்தியவியலாளர்கள், சமூகவியலாளர்கள் ஆகியோரால் ஆழ்ந்து கவனமாகக் கற்கப்பட வேண்டியது” என்று கூறினார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகக் கிரேக்கப் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சன் “படைப் பாக்கத் திறனுள்ள மார்க்சியரின் இந்நூலும் அவருடைய பேசுபொருளும் ஒருவர் அறிந்துகொள்ளவும், நேசிக்கவும் வேண்டியது” என்று சொன்னார். ஜே.பி.எஸ். ஹால்டனே “உங்களுடைய புத்தகத்தால் மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று சட்டோபாத்தியாயா விடம் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது குறிப் பிட்டார். ‘உலகாயதம்’ வெளிவந்த பிறகு சட்டோபாத்தி யாயாவின் மிக நெருங்கிய துறை சார்ந்த நண்பராக மாறிய ரூபன் “சட்டோபாத்தியாயாவினுடைய புத்தகங்கள் இந்திய மெய்யியல் பற்றிய தேடலில் இந்தியர்களிடையே புதிய காலகட்டத்தைத் தோற்றுவித்தன” என்று கருதினார்.

இப்போது சட்டோபாத்தியாயாவும், அவருடைய படைப்புகளும் பல்லாயிரம் முறை நினைவுகூரப்படுகின்றன.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா 1918ஆம் ஆண்டு நவம்பர் 19-இல் கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தா பாவனிபூர் மித்ரா நிலையத்தில் தொடக்கப் பள்ளிக் கல்வியையும், கொல்கத்தா மாநிலக் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மெய்யியலையும் கற்றார். 1939-1942 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் B.A. (Honours), M.A. ஆகிய பட்ட வகுப்புகளில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்தார். முதுகலையில் சிறப்புத்தாளாக (வேதாந்தச் சார்புடைய) இந்திய மெய்யியல் இருந்த போதிலிருந்து, அவருடைய பிந்தைய வாழ்வு முழுவதும் வேதாந்தத்திற்கும், வேறு பொருள்முதல்வாதமல்லாத மெய்யியல் முறைகளுக்கும் எதிராகச் சற்றும் உறுதி குறையாத வகையில் போராடினார்.

களைப்புறாமல் எழுதிக் குவிக்கிற எழுத்தாளரான சட்டோபாத்தியாயா ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல் தொகுதிகளையும் (அவற்றில் சில மிகமிகப் பெரியவை) குறிப்பிடத்தக்க எண்ணற்ற நூல் பதிப்புகளையும் அவருடைய பங்களிப்பாக அளித்துள்ளார். அவர் ஏற்கெனவே வங்காளியில் ஒரு உண்மையான படைப் பாளியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். அவருடைய ஆங்கில, வங்காளி மெய்யியல் படைப்புகளுக்காக நெடுங்காலம் அவர் தூற்றல்களுக்கும் போற்றல்களுக்கும் முகங்கொடுத்தார். அவருடைய தெளிவான, சரளமான நடை எல்லாவற்றிலும் உயர்வானது. அவர் 1940களின் தொடக்கத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயல்பாட்டாளர். பின்னர் இச்சங்கம் பாசிச எதிர்ப்பு எழுத்தாளர் சங்கம் என்றழைக்கப்பட்டது. அப்போது வங்காளியின் புகழ்பெற்ற கவிஞரான விஷ்ணு தேயுடன் இணைந்து செயல்பட்டார். அர்ப்பணிப்பு மீதான அவருடைய மிக்கார்வம்பற்றி தேயால் எழுதப்பட்ட கடிதங்களிலிருந்து அவர்களுடைய நெருக்கமான உளமொன்றிய நட்பு தெரியவருகின்றது.

1940கள் பிற்பகுதியிலும், 1950கள் தொடக்கத்திலும் வங்காளியில் சிறந்த சிறுவர் இலக்கிய ஆசிரியராக சட்டோபாத்தியாயா அறியப்பட்டார்; பள்ளி செல்லும் சிறுவர்களுக்காக வாழ்க்கை வரலாறுகள், எளிய அறிவியல் நூல்கள், புதினங்கள், கதைகள் ஆகியவற்றை எழுதினார். அவருடைய அண்ணன் காமாட்சி பிரசாத்துடன் இணைந்து ‘ராங்மசால்’ என்று சிறுவர்களுக்கான இதழை நடத்தினார். இது மிகக் குறுகிய காலமே வந்தாலும் உண்மையான இலக்கிய இதழ். ஜன்பர் கதா (அறிவுப் புத்தகங்கள்), அமரௌ ஹோதே பரி (நம்மாலும் மாற முடியும்) விஞ்ஞான் விச்சிரா (பல்வேறு அறிவியல்கள்) முதலான தலைப்புகளில் இளம் வங்காளி வாசகர் களுக்காகச் சிறுநூல் வரிசையைப் பதிப்பித்தார். மானிடவியல், உயிரியல், உளவியல் முதலானவற்றைப் பற்றிய அவருடைய சிறுநூல்கள் எளிய முறையில் அறிவியல் நூல்களை முழுவதற்கான சிறந்த முன்மாதிரிகள். சுபாஷ் முகோபாத்தியாயா போன்ற பலருடன் இணைந்து வங்காளி உரைநடையில் புதுக்கிளர்ச்சியை உருவாக்கியது அவர் அளித்த பங்களிப்பு.

தாகூருக்குப் பிறகு வங்காளியில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்ற முன்னோடிகள் குழுவுடன் இணைந்து, சட்டோபாத்தியாயா தன் இளநிலைப் பட்டப்படிப்புக் காலத்தில் இளங்கவியாக இருந்தார். மிகச் சிறிய கவிதை நூலான ‘கயக்தி நாயக்’ (மிகச் சில வீரர்கள்) அவருடைய இளமைக்காலத் துணிகரச் செயலுக்கான சான்றாக நினைவுகூரப்படுகின்றது. இந்தக் கவிதை நூல் முதன் முதலாக 1942-இல் பதிப்பிக்கப்பட்டது. பின்பு சட்டோ பாத்தியாயாவின் வாழ்நாளில் மீளப் பதிப்பிக்கப்படவே இல்லை. ஆங்கில மொழியாக்கத்தில் ‘நவீன வங்காளிக் கவிதைகள்’ (1948) என்பதையும் பதிப்பித்திருந்தார். அலுவல்முறையில் கல்கத்தாவில் தங்கியிருந்த படைவீரர் மார்டின் கிரிக்மேன் பல கவிதைகளின் மொழிபெயர்ப்புச் சுமையை ஏற்றுக்கொண்டார். இந்தத் தொகை நூல் நீண்ட காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்தாலும், நம் ஆர்வத்தைக் கிளறக்கூடிய புத்தகம். இதை வட அமெரிக்கப் பழைய புத்தகக் கடைகளில் தேடினால் மிகக் குறைவான விலையில் இன்றும் வாசகர்களுக்குக் கிடைக்கும். மாணிக் காங்கோபாத்தியாயாவின் தேர்ந் தெடுக்கப்பட்ட சிறுகதைகளையும், ஆங்கிலத்தில் “Primeval and other stories” (1958) என்ற தலைப்பில் பதிப்பித்திருக்கின்றார் சட்டோபாத்தியாயா.

கவிஞரும், Frontier இதழின் நிறுவனரும் ஆசிரியருமான சமர் சென் சட்டோபாத்தியாயாவுக்கு மார்க்சு, எங்கெல்சுடைய ‘பொதுவுடைமைக் கட்சி அறிக்கை’யை 1940களின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தினார். சென்னுக்கும் சட்டோபாத்தியாயாவுக்கும் இடையில் ஆழமான அன்பு, மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் நட்பு இருந்தது. சான்று இதற்குச் சென் சட்டோபாத்தியாயாவுக்கு எழுதிய கடிதங்கள். இந்தக் கடிதங்கள் ‘Anustub, Eboug Ei Samay’ ஆகிய இரு வங்காளி இதழ்களில் வெளியாகியுள்ளன.

தொழிலாளர் தலைவர் பங்கிம் முகோபாத்தியாயா, மீரத் சதி வழக்கில் புகழ்பெற்ற இராதாராமன் மித்ரா ஆகியோருடன் இணைந்து மார்க்சியக் கொள்கை, நடைமுறை ஆகியவை பற்றிய அறிவை சட்டோபாத்தி யாயா விரிவாக்கிக் கொண்டார். சிறிது காலம் இராம கிருஷ்ண மித்ரா, சுபாஷ் முகோபாத்தியாயா ஆகியோருடன் தொழிலாளர் கட்சியில் இருந்தார். பிறகு 1944-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பாவனி (சங்கர்) சென் (குப்தா) 1951-இல் பண்டைய இந்திய மெய்யியல் ஆய்விற்கு மார்க்சியத்தைக் கையாளும்படி சட்டோபாத்தியாயாவைத் தூண்டினார். இந்தத் தூண்டுதல் சட்டோபாத்தியாயா வாழ்வின் திசையை முழுமையாக மாற்றியமைத்தது. பிறகு இந்திய மெய்யியல், அறிவியல் மரபுகளில் உள்ள பகுத்தறிவு பொருள்முதல்வாதக் கூறுகளைத் தேடுவதற்கு ஒரே மனதுடன் தன்னை ஒப்படைத்துவிட்டார். இந்தப் பணி அவருடைய வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது.

பாவனி சென் மற்றொரு அடிப்படையான பணியையும் செய்தார். 1940-களில் சட்டோபாத்தியாயா மார்க்சுக்கும் பிராய்டுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தார். 1949-இல் வெளிவந்த பாலியல் பற்றிய சட்டோபாத்தியாயாவின் வங்காளிப் புத்தகத்தைக் கடுமையாக பாவனி சென் விமர்சித்ததின் மூலம் சட்டோபாத்தியாயாவிடமிருந்த பிராய்டு பேயை விரட்டியடித்தார்; அவருடைய வாழ்வின் அடிப்படையாய் விளங்கிய மார்க்சியப் பாதைக்குக் கொண்டு சேர்த்தார். 1950களில் சட்டோபாத்தியாயா எழுதிய வங்காளப் புத்தகங்களில் அவர் இறுதியாகவும் உறுதியாகவும் நெறி வழுவாமல் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டதைக் காண முடிகின்றது. அவருடைய ‘மார்க்சியம்’ (1952) என்ற வங்காளித் தொடக்க நூல் அறிமுக வாசகர்களுக்கு இயங்கியல் பொருள்முதல்வாத நோக்கை மிகச் சிறப்பான முறையில் கற்பிக்கின்றது.

இந்திய மெய்யியல்பற்றி சட்டோபாத்தியாயாவின் முதல் ஆய்வுத் தேடல் படைப்பான உலகாயதம் முதலா வதாக 1956-இல் வங்காளியில் வெளிவந்தது. பின்னர் முற்றிலும் மாற்றி எழுதப்பட்டு 1959-இல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. இந்நூல் ஜப்பானிய மொழி, சீன மொழி, ருஷ்யன் உள்ளிட்ட பல அயல்மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு, பன்முறை திரும்பத்திரும்ப வெளியிடப்பட்டது. இன்றைய நாள் வரைக்கும் இந்த நூல் அவருடைய மிகச் சிறந்த படைப்பாக இருக்கின்றது. மிகச் சிறந்த ஆய்விதழ்கள் மதிப்புரை எழுதின. உலகின் மிகச் சிறந்த புலமையாளர்கள் சட்டோ பாத்தியாயாவுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்களின் மூலம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். நீண்ட காலமாகப் புலமை வட்டத்தில் இந்நூலுக்குத் தேவை இருந்து கொண்டே இருந்தது. இந்தியாவில் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்விற்குப் புதிய வழியைத் தோற்றுவித்தது. எவ்வாறு மெய்யியலை நோக்க வேண்டும் என்பதை உள்நாட்டு, அயல்நாட்டுப் புலமையாளர்களுக்கு ‘உலகாயதம்’ கற்பித்தது என்று கூறுவது மிகைப்படுத்தல் அன்று. பொருள்முதல்வாதத்தை ஆராய்வதற்கு நடப்பில் இருந்த எல்லாமுறைகளையும் சட்டோபாத்தியாயா ஒதுக்கித் தள்ளினார். பொருள்முதல்வாதத்தின் வேர்களை மானிடவியலில் தேடினார்; தந்திரத்திலும் சாங்கியத்திலும் புரட்சிகரமான பார்வையைக் கண்டார்; அதுவரை நோக்கப்படாத முறையில் வேதத்திலும்கூடப் புதிய சான்றுகளை ஆராய்ந்து கண்டார்.

இந்திய மெய்யியலுக்கு ‘எளிய அறிமுகம்’ என்ற சிறிய நூல் அடுத்து வெளிவந்தது. 1964-இல் வெளிவந்த இந்த நூல் இந்தியாவின் முதன்மையான சிந்தனைப் பள்ளிகளைப் பருந்து நோக்கில் விவரித்தது. உலகாயதத்தில் தொடங்கி வேதாந்தத்தில் நிறைவடையும் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சயனர், மாதவர் ஆகியோருடைய சர்வதரிசன சங்கிரகத்திற்கு எதிர்நோக்கில் இந்நூல் அமைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நூல் பல்வேறு சிந்தனைப் பள்ளிகளின் வரலாற்றுத் தோற்றத்தை எடுத்துக் கூறி, அவை வளர்ச்சியடைந்த முறையை வரிசையாக விளக்கிச் செல்கிறது.

‘இந்திய நாத்திகம்’ (1969) நூலில் சட்டோபாத்தியாயா வேதநெறி சார்ந்த ஆத்திக மெய்யியல் பள்ளிகளை ஆய்விற் குள்ளாக்கி, அவற்றின் நாத்திக உள்ளடக்கத்தினை வெளிப் படுத்தினார். சாங்கியம், நியாயம் ஆகியவற்றின் நாத்திகத் தன்மையை விளக்கியுள்ளார். மீமாம்சைகூடத் தன் சொந்தத் தேவைப்பாட்டிற்காக நாத்திகத் தன்மையுடன் விளங்குவதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்தப் புத்தகம் உலகாயதத்தை அடுத்து மிகவும் புலமை சான்றது. ஏராளமான சான்றுகளை, மிக ஒழுங்கமைந்த வாதமுறையில் எடுத்துக் கூறுகின்றது.

‘இந்திய மெய்யியலில் அழிந்தனவும் நிலைத்திருப் பனவும்’ (1976) புதிய களத்தேடல்களில் மிக விரிந்த பரப்பை உள்ளடக்கியுள்ளது. இந்நூலில் நியாயம், பௌத்தம் ஆகியவற்றின் எண்ணற்ற நேர்மறைக் கூறுகளை வெளிக் கொணர சட்டோபாத்தியாயாவின் தலையாய ஆய்வுமுறை உதவியுள்ளது. மிகச் சிறந்த புலமைப்பாட்டைக் கொண்ட, நுண்ணிய ஆய்வு நோக்குள்ள இந்தப் புத்தகம் உலகாயதத்தை அடுத்து வந்த மிகச் சிறந்த படைப்பு. இந்தப் புத்தகத்திற்கு முதலில் “இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய மேலதிக ஆய்வுகள்” என்று பெயரிடப்பட்டது. ‘உலகாயதம்’, ‘இந்திய மெய்யியலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ ஆகிய இரண்டு நூல்களும் செவ்வியல் படைப்புகள்.

சட்டோபாத்தியாயாவின் ‘பண்டைய இந்தியாவில் சமூகமும் அறிவியலும்’ (1977) என்ற நூல் அவர் ஏற்கெனவே புதிய களத்தில் செயற்படத் தொடங்கிவிட்டார் என்பதற்குச் சான்று. அவருடைய முந்தைய படைப்புகளின் தொடர்ச்சி யாக அர்த்தமற்ற சமயச் சடங்குகளுக்கு வெளியே, இந்திய மருத்துவ நூல்களான சரக சம்கிதை, சுசுருத சம்கிதை ஆகிய இரண்டு படைப்புகளோடு இணைந்திருந்த அறிவியலின் மையக்கருவைத் தோண்டியெடுத்தார். சட்டோபாத்தியாயாவின் ஆசிரியர் சுரேந்திரநாத் தாஸ்குப்தா பண்டைய இந்தியாவில் இருந்த மருத்துவச் சிந்தனைப் பள்ளிகள் ஏதோ ஒரு தனித்துவமான மெய்யியல் நோக்கைக் கொண்டிருப்பதாகக் கருதினார். இத்தடத்தில் மேலும் சட்டோபாத்தியாயா முன்னே சென்றார். மருத்துவர்கள் புனிதமான தரும சாத்திரகாரர்களுக்கு எதிரான கருத்துநிலையைக் கொண்டிருந்ததால், அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த பழைமை மரபிற்கு உட்படாத வலிமையான அறிவியல் மரபைக் கைவிடுமாறு மருத்துவர்களை மரபாளர்கள் வற்புறுத்தினர். இதனாலேயே மிகச் சிறந்த தொடக்கத்தைக் கொண்ட இந்திய நோய் மருத்துவமும், அறுவை மருத்துவமும் பிற்காலத்தில் வளராமல் போய்விட்டன என்று சட்டோ பாத்தியாயா சுட்டிக் காட்டுகிறார்.

இந்தப் படைப்பு சட்டோபாத்தியாயாவை மிகச் சிறந்த சிந்தனை வரலாற்றியலாளர் என்று காட்டுகிறது. நோய் மருத்துவ, அறுவை மருத்துவ வடமொழி நூல்களில் அறிவியல் கூறுகளும், அறிவியலற்ற கூறுகளும் ஏன் கலந்துள்ளன என்ற கடுஞ்சிக்கலை சட்டோபாத்தியாயா முதன்முதலாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கலவையை முரட்டுத் தனமான, குறுக்குப் புத்தியுள்ள மதக்காரர்கள் அவற்றில் திணித்துள்ளனர் என்று அவர் விளக்குகிறார். வேதங்களில், குறிப்பாக யசுர் வேதத்திலும், தரும சாத்திரங்களில் குறிப்பாக மனு சுமிருதியிலும் மருத்துவ அறிவியலுக்கான எதிர்ப்பு உள்ளதை வெளிக்காட்டியுள்ளார். இவை எல்லாவற்றையும் பிறகு ஒரு வங்காளி சிறுநூலில் (பிரச்சின் பாரத்தே சிசிச்சாவிஞ்ஞான்) சுருக்கமாய் எழுதியுள்ளார்.

உலகாயதத்திற்குப் பின் ‘பண்டைய இந்தியாவில் அறிவியலும் சமூகமும்’ சட்டோபாத்தியாயாவின் வாழ்வில் இரண்டாவது திருப்புமுனையாக அமைந்தது. இப்போது அவருடைய ஆர்வநோக்கு பண்டைய இந்தியாவில் அறிவியலின் மெய்யியல், வரலாறு ஆகியவை பற்றித் திரும்பியது. 1978-இல் கல்கத்தா நகரக் கல்லூரி கற்பித்தல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அக்கல்லூரியில் இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு மெய்யியல், தருக்கவியல் ஆகியவற்றின் அடிப்படை களைக் கற்பிக்கத் தன்னை மிக அதிகமாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். ஓய்வுபெற்ற பிறகு திரும்பவும் ஒரு மாணவனாக மாறினார்; பல்வேறு பண்டைய அறிவியல் துறை களைத் தனக்குத் தானே கற்பித்துக் கொண்டார். வடிவக் கணிதம், வானவியல், அறுவை மருத்துவம், நோய் மருத்துவம் ஆகியவற்றை ஆராய்ந்து பேரார்வ விருப்புடன் புதியனவற்றைக் கண்டுபிடித்தார். அவருடைய மற்ற படைப்புகளிலிருந்து வேறுபட்ட ‘பண்டைய இந்தியாவில் அறிவியலும் தொழில்நுட்பமும்’ என்ற மூன்று தொகுதி களை உடைய நூல் ஒரு மாபெரும் படைப்பு ஆகும். அம் மூன்று தொகுதிகளும் 1986, 1991, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. மூன்றாம் தொகுதி அவர் இறந்த பிறகு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூல்களில் வேதகால இந்தியாவிலிருந்து தொடங்குவதற்குப் பதிலாக சிந்துசமவெளி நாகரிகத்தின் மீது கவனத்தைக் குவித்தார். இது மிகச் சிறந்த பயன் விளைவுகளை அளித்தது. ஜாகொபியும், திலகரும் வானவியல் துறை வளர்ச்சியில் முக்கியமான கண்ணிகளைத் தவறவிட்டனர். ‘வேதங்க ஜோதிஸ்டா’வின் வளர்ச்சியில் உள்ள இந்தச் சிக்கலை இறுகப் பற்றினார். பண்டைய இந்தியாவில் இரு நகர மயமாக்கங்களுக்கும் இடையே அறிவியல் எழுச்சியில் ஒரு தொடர்உறவு இருப்பதை வெளிக்கொணர்ந்தார். கிழக்கு உலகில் அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை பற்றிய ஆய்விற்கு ஒரு பெருநோக்கைக் கையளித்தார். இத் துறையில் சமூக வரலாற்றுப் பின்புலத்தைக் கவனத்தில் கொள்ளாத மரபு சார்ந்த ஆய்வுகளின் சாதனைகளை மீட்டெடுத்தார். அதே வேளையில், சுல்பசூத்திரங்களின் வடிவக்கணிதம் (வேள்விப் பீடம் அமைக்கும் கலை), செங்கல் அறுக்கும் தொழில்நுட்பம் ஆகியவை வேதப் பரப்பிற்கு வெளியே சிந்துவெளி மரபில் உருவாகித் தொடர்ந்து வந்ததை எடுத்துக் காட்டியுள்ளார்.

அறிவியலின் வரலாற்றில் ஈடுபாடு கொள்வதற்கு முன்னமே சட்டோபாத்தியாயா மெய்யியலை, குறிப்பாக மார்க்சிய மெய்யியலை மிக அதிக அளவில் நேசித்தார். ‘மெய்யியலாளர் லெனின்’ (1979) என்ற நூலை முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். பிறகு 1980-இல் இந்த நூலை வங்காளியில் எழுதினார். மெய்யியல் துறையில் அவருடைய கடைசிப் படைப்பு ‘பாரத்தே வாசுவத் பிரசங்கே’ என்ற இந்தியாவில் இருந்த பொருள்முதல்வாதம் பற்றிய மதிப்புரை ஆகும். இதன் முதற்பதிப்பு 1987-லும் திருத்தப்பட்ட மறுபதிப்பு 1991-லும் வெளிவந்தன. இந்நூலை அவரே 1989-இல் “பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் உள்ளாற்றல் பற்றி” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவருடைய மற்றப் படைப்புகளைப் போன்று இதுவும் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சட்டோபாத்தியாயாவின் வாழ்வு அடிச்சுவட்டில் கடுமையான தடைகள், அடிப்படை வசதிகளின் பற்றாக் குறை, வெளியீட்டில் முறையற்ற சுணக்கம் ஆகியவை எல்லாம் விடாப்பிடியாகத் தொடர்ந்தன. இந்த இடர் களையும், நாம் முன்பே குறிப்பிட்ட நூல் வேலைகளையும் தாண்டி சட்டோபாத்தியாயா 1989 முதல் 1973 வரை ‘இந்திய ஆய்வுகள் : நேற்றும் இன்றும்’ என்ற ஆய்விதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்; எம்.எம்.பாணிபூசன தருக்கவாகிசர் குறிப்புகளுடன் நியாயச் சூத்திரத்தையும், அதற்கான வாத்யாயனர் உரையையும் மிரிணள்காந்தி காங்கோபாத்தியாயாவுடன் இணைந்து மொழிபெயர்த்துப் பதிப்பித்தார். காங்கோபாத்தியாயாவை “என் இளம் நண்பனும் ஆசிரியனும் ஆவான்” என்று குறிப்பிட்டு இருந்தார். இம்மொழிபெயர்ப்பு இரண்டு தொகுதிகளாக 1967-68ஆம் ஆண்டுகளில் வெளிவந்தது. திபெத்திய படைப்பான லாமா தாரநாதருடைய ‘இந்தியாவில் பௌத்தத்தின் வரலாறு’ என்ற நூலினை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1970இல் பதிப்பித்தார். வரலாறும் சமூகமும் (நிகர் ரஞ்சன்ராய் பாராட்டு மலர்) 1978-லும், ‘இந்திய மெய்யியலின் வரலாறு பற்றிய ஆய்வுகள்’ என்ற தலைப்பை உடைய மூன்று கட்டுரைத் தொகுதிகள் 1978-79களிலும் பதிப்பித்தார். இந்திய அறிவியல் வரலாறு பற்றிய ஆய்வுகள் (1980), மார்க்சியமும் இந்தியவியலும் (1981) ஆகியவை மேலும் பதிப்பித்த இரண்டு தொகைகளாகும்.

‘சாருவாகம்/லோகாயதம்; அண்மைக் கால ஆய்வுகள் அடிப்படைச் சான்றுகள் ஆகியவற்றின் தொகை’ (1990) என்ற நூலை மீண்டும் மிரிணள்காந்தி காங்கோபாத்தியாயாவுடன் இணைந்து வெளிக்கொணர்ந்தார். இந்நூல் இத்துறையில் இருந்த நீண்டகாலத் தேவையை நிறைவு செய்தது. இந்த நூல் பன்முறை மறு அச்சிடப்பட்டது. உள்நாடுகளிலும் அயல்நாடுகளிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் வாசிப்பதற்குப் பரிந்துரைக்கப் பட்டது. 1990-91ஆம் ஆண்டுகளில் சட்டோபாத்தியாயா அனைவருக்குமான உலக மெய்யியல் என்ற எட்டுத் தொகுதி களைக் கொண்ட சிறுநூல் வெளியீட்டைத் திட்ட மிட்டார். அவற்றில் மூன்றை அவரே எழுதினார். இந்தியப் பண்பாடு பற்றிய ஆய்வுகள் என்ற தலைப்பைக் கொண்ட பல்தொகுதிக்கு மிகப் பெரிய அளவில் திட்டமிட்டார். ஆனால் முதல் தொகுதி மட்டும் 1992இல் நம் பார்வைக்குக் கிட்டியது. இதுவே அவர் கடைசியாகப் பதிப்பித்த நூல். இங்குக் குறிப்பிட்ட படைப்புகளும், பல்வேறுபட்ட குழப்பமான சான்றுகளைப் புரிந்துகொள்ளும் அவருடைய திறனும் நம்மை மலைக்க வைக்கின்றன.

வேறு இரண்டு படைப்புகளைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். முதலாவது புலமைப்பாடு மிக்க ரஜனி பாமிதத்துடைய ‘இன்றைய இந்தியா’ என்ற நூலை ‘இந்தியா: இன்றும் நாளையும்’ (1955) என்ற தலைப்பில் திருத்திய சுருக்கப்பட்ட பதிப்பாக வெளிக்கொணர்ந்தார். இந்நூலை 1958இல் திலிப் போசுடன் இணைந்து ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து, வெளியிட்டார். இரண்டாவது ரமேஷ் சந்திர தத்தாவினுடைய ‘ரிக்வேத சம்கிதை’ வங்காளி மொழிபெயர்ப்பைப் பல அறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகளுடன் 1963இல் திரும்பப் பதிப்பித்தார். இப் பதிப்பு நீண்ட காலமாக அச்சில் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது.

சட்டோபாத்தியாயா ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் பல சாதனைகளைப் புரிந்ததற்கு அவரைச் சுற்றியிருந்த, அவரால் தாக்கமுற்ற இளம், முதிய ஆய்வுத்துறை நண்பர்கள் ஒரு காரணமாவார்கள். திட்டமிடுதல், எழுதுதல், படியெடுத்தல், மெய்ப்பு திருத்துதல் ஆகிய எந்தப் பணியாக இருந்தாலும் அவருடைய நண்பர்கள் உளமொன்றிய பொறுப்பு உணர்வுடன் பணிபுரிந்து படைப்பின் ஓர் அங்கமாவார்கள். அவர்களைத் தன்னுடைய படைப்பின் முகவுரையில் உண்மையான நன்றியுணர்வோடு சட்டோபாத்தியாயா குறிப்பிடுவார்.

காலம் தாழ்ந்தே அவர் துறை சார்ந்த ஏற்பு மதிப்பைப் பெற்றார். அந்த ஏற்பு முதலில் வெளிநாடுகளில் கிடைத்தது. 1975இல் ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் அறிவியல் கழக உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். 1989இல் சோவியத் குடியரசு அறிவியல் கழக விருந்தினராக அழைத்து முதுமுனைவர் பட்டம் வழங்கியது. பிறகு இந்தியக் கல்வி நிலையங்கள் அவருக்குப் பட்டங்களையும் தகைமை ஊதியங்களையும் வழங்கின. பழைமைவாதிகளுக்கு எதிரான கருத்துநிலைப் போராட்டத்தில் அவருடைய படைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் இளம் செயல்பாட்டாளர்களுக்கு அவர் எப்பொழுதும் உதவி வந்தார். அவர் 1991இல் ‘வ்ராதிரோத்’ (எதிர்ப்பு) மாதம் இருமுறை வெளிவரும் வங்காளி இதழை நடத்தினார். அதில் ராம்மோகன் ராய் முதல் சத்தியேந்தர நாத் வரையிலான புகழ்பெற்ற வங்காளப் படைப்பாளிகளின் எழுத்துகளிலிருந்து சிறப்பான பகுதிகளை உள்ளடக்க மாகக் கொண்ட ‘உத்ஸ மனுஷ்’ என்ற பகுதியை வெளியிட்டு வந்தார். இந்தப் பகுதி பழைமைவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான பகுத்தறிவுப் போராட்டம் தொடக்கத்திலிருந்தே வங்காளத்தில் இருந்து வந்தது என்பதனை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டியது.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், வி.ஜி.சைல்ட், ஜார்ஜ் தாம்சன், ஜோசப் நீதம் ஆகியோர் சட்டோபாத்தியாயா மீது மிகப் பெரிய செல்வாக்குச் செலுத்தினர். இவர்களுக்குப் பட்ட கடனையும் நன்றியறிதலையும் எப் பொழுதும் சட்டோபாத்தியாயா குறிப்பிடத் தவறவில்லை. அவர் ஜே.டி.பெர்னலின் ‘வரலாற்றில் அறிவியல்’ என்ற கையடக்க நூலைப் பயன்படுத்திக் கொண்டார். பரோஸ் டன்ஹாம், ஜான் சாமர்வில்லே, வால்ட்டர் ரூபன் ஆகியோரிடம் மிகப் பெரிய நன்றியுணர்வு கொண்டு இருந்தார். டி.டி.கோசாம்பி, ட்ரேவர் லிங்க், டேல் ரெய்ஃபே ஆகியோருடன் மிக நெருங்கிய உளமொன்றிய நட்பைக் கொண்டிருந்தார். பல்வேறு நாடுகளிலிருந்த அவருடைய நண்பர்களான வரலாற்றியலாளர்கள், மெய்யியலாளர்கள், படைப்பாளிகள் ஆகியோருடன் தனிப்பட்ட அளவில் கடிதத் தொடர்பு கொண்டிருந்ததை சட்டோபாத்தியாயாவினுடைய ஆவணங்கள் காட்டுகின்றன. அவை வெளியிடப்படும்போது சட்டோபாத்தியாயாவின் மற்றொரு ஆளுமைத் தோற்றம் வெளிவரும்.

ஆங்கிலம், வங்காளி ஆகிய இருமொழிகளின் எண்ணற்ற கலைக்களஞ்சியத் திட்டங்களில் சட்டோ பாத்தியாயா இணைந்திருந்தார். அவர் பகுத்தறிவாளர்களுடனும் மக்கள் அறிவியல் இயக்கத்தினருடனும் எப் பொழுதும் தொடர்பில் இருந்தார். இளம் ஆய்வாளர் களுக்குச் சாத்தியமான வகையில் வழிகாட்டினார். விருப்புகளும் வெறுப்புகளும் கொண்ட உறுதி வாய்ந்த மனிதர் என்ற வகையில் அவருடைய பார்வைகளைத் திரும்பத்திரும்ப விமர்சனத்துக்குள்ளாக்கிப் புதுப்பித்துக் கொண்டார். புதிய இடது, மேலை மார்க்சியம் என்று அழைக்கப்பட்ட பகட்டார்வப் போக்குகள் அவரிடம் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் ஓர் உறுதியான மார்க்சியர். பின்நவீனத்துவப் பகட்டுப் பேச்சுகளுக்கு அவர் கொஞ்சம்கூட ஆதரவு தரவில்லை. கருத்துப் போராளியான சட்டோபாத்தியாயா வலிமையாக இருந்த தன்னுடைய பகைவர்களுக்கு எதிராகத் தயக்கமற்ற முறையில் வெளிப்படையாக எப்பொழுதும் பேசினார். அவருடைய தொடக்க கால வங்காளக் கட்டுரைகள் தொகுக்கப்படவில்லை. அவற்றைத் தொகுப்பது அவருக்கு மிகச் சிறிய வேலையாகவே இருந்திருக்கும். வெளியிடு வதற்குத் தகுதியற்ற, முழுமையடையாத சில ஆங்கிலக் கட்டுரைகளும் ஆய்வுரைகளும் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கின்றன.

பகுத்தறிவு, அறிவியல், மனிதகுல வளர்ச்சி ஆகியவற்றின் மீது உறுதியான நம்பிக்கையாளரும், தான் மரணமுறுவதற்குச் சிறிது மனவருத்தமும் அச்சமும் இல்லாத மார்க்சிய லெனினியருமான சட்டோபாத்தியாயா 1993 மே 8 அன்று இறந்து போனார். அவருடைய இல்லாமையை நிறைவு செய்வது சாத்தியமற்றது என்று வாய்ப்பேச்சாகக் கூறவில்லை.

(இக்கட்டுரையை எழுத உதவிய அமித்துவ பட்டாச்சாரியா, அதிதி சட்டர்ஜி, சித்தார்த்த தத்தா, மலயந்து திந்தா ஆகியோருக்கு நன்றிகள்)

Pin It