“காஷ்மீர் யாருக்குச் சொந்தம் ?” சற்று வரலாற்றைப் புரட்டுவோம்.
பிரிட்டிஷ் இந்தியா, 1947 ஆகஸ்ட் 15 இல் மவுண்ட் பேட்டனின் திட்டத்தின்படி இந்து - முஸ்லீம் மத வழித் தேசிய இனச் சிக்கலால், இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாக விடுதலை பெற்றன. அப்பொழுது இருந்த பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா அல்லது தனி நாடாக இருந்து கொள்வதா என்பதை, அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. அப்பொழுது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு மன்னராக இருந்த “இராஜ புத்திர அரசர்” ஹரிசிங் காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையாக முஸ்லீம் மக்கள் இருந்த போதிலும், இனத்தால் நாங்கள் அனைவரும் காஷ்மீரிகள். எனவே இரண்டு நாடுகளோடும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார். 1947க்கு முன்பிருந்தே காஷ்மீர் தனி நாடாக ஆக வேண்டும் என்று “காஷ்மீரின் சிங்கம்” ஷேக் அப்துல்லா போராடி வந்தார். காஷ்மீர் சுய நிர்ணய உரிமைக்குப் போராடியதற்காக இவர் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்குரல் அடங்கவில்லை. இதனால் 1947 ஆகஸ்டில் காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இனி காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் என மன்னர் ஹரிசிங் அறிவித்தார்.
இந்நிலையில் காஷ்மீரைத் தன் வசப்படுத்த முடியாத பாகிஸ்தான் காஷ்மீரின் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்ய, ஆயுதம் ஏந்திய பழங்குடி இன மக்களை முதலில் அனுப்பியது. பின்னர் தான் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. மன்னர் ஹரிசிங்கின் ராணுவ பலம் குறைந்து இருந்ததால் தன்னையும் தம் மக்களையும் காத்துக்கொள்ள ஹரிசிங் இந்தியாவை நாடினார். காஷ்மீரைத் தங்களின் ஆதிக்கத்திற்குள் எப்படியாவது கொண்டு வந்தே தீர வேண்டும் என முயன்று கொண்டிருந்த இந்தியாவிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அப்பொழுது உள்நாட்டு அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் காஷ்மீர் தற்காலிகமாக இந்தியாவுடன் இணையச் சம்மதிப்பதாக ஒப்புக் கொண்டார். இதற்கான ஒப்பந்தத்தில் 1947 அக்டோபர் 26 இல் மன்னர் ஹரிசிங் கையயழுத்திட்டார். அந்த ஒப்பந்தப்படி, காஷ்மீர் இந்தியாவின் இணை நாடாக (புவிவிலிஉஷ்ழிமிe றீமிழிமிe) சேர்க்கப்பட்டது.
ஷேக் அப்துல்லா சில நிபந்தனைகளோடு இந்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்ட பின்னரே இந்தியா ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டது. இதன் பின்னர் இந்தியப் படைகள் காஷ்மீருக்குள் அனுப்பப்பட்டு பாகிஸ்தானின் ராணுவ முன்னேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இருப்பினும் இன்றளவும் ஜம்மு - காஷ்மீரின் ஒட்டு மொத்தப் பரப்பளவான 2, 22, 770 சதுர கிலோ மீட்டரில், ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகின்ற 78,114 சதுர கிலோ மீட்டர் கொண்ட பகுதி பாகிஸ்தான் கைவசம் உள்ளது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்காக வும், காஷ்மீர் மக்களைக் கைப்பற்றுவதற்காகவும் தற்காலிகமாகக் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதாகவும், பின்வரும் காலங்களில் காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் விரும்பினால், காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தி, காஷ்மீர் தனி நாடாகப் போவதை ஏற்றுக் கொள்ளவதாகவும், நேருவும், காந்தியும் இந்திய அரசு சார்பில் ஐ.நா. மன்றத்தில் உறுதி மொழி கொடுத்தனர். இதுதான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த வரலாறு.
இதனை 1950 இல் நேரு அமைச்சரவையில் நிவாரணம் மற்றும் புனர் வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த அஜித் பிரசாத் ஜெயின் “காஷ்மீர் உண்மையில் நடந்தது என்ன?” என்ற தன் நூலில் விரிவாகக் கூறியுள்ளார்.
இது யார் யாருக்கிடையேயான போராட் டம்? தங்களுக்கு எந்த வகையிலும் உரிமையில்லாத காஷ்மீர் பகுதியை உரிமை கொண்டாடும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே சிக்கித்தவிக் கும் காஷ்மீர் இன மக்களின் போராட்டம் . காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இத்தகைய போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது நடைபெறும் போராட்டத்தில் போராட்டக்காரர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மட்டும் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட் டுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் கூறும் காரணம், காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்து வரும் போராட்டங்களை பாகிஸ்தான் தூண்டி விடுவதாகவும், ஏராளமான தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் போராட்டத்தை நடத்துவதாகவும், அவர்களை ஒடுக்கவே லட்சக்கணக்கான ராணுவத்தினர் அனுப்பப்பட்டு, காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றது.
ஆனால் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களை முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை. காஷ்மீர் ஒட்டு மொத்த மக்களும் தங்களுக்கான சுய நிர்ணய உரிமைக்காகக் கையில் எடுத்துள்ள போராட்டமா கவே இது தெரிகிறது. ஏனெனில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் தற்பொழுது போராட வீதியில் இறங்கியுள்ளனர். எவர் கையிலும் துப்பாக்கியோ, வெடிகுண்டோ கிடையாது. மாறாகத் தங்களைக் காத்துக் கொள்ள கற்களை யும், செருப்புகளையும் கூடப் பயன்படுத்துகின் றனர். ஒடுக்கப்பட்டவன் தன் கோபத்தைக் காட்டத் தன் கையில் கிடைத்தவற்றைத்தானே முதலில் ஆயுதமாகப் பயன்படுத்துவான். இவர்களைத் தான் இந்திய அரசு தீவிரவாதிகள் என்று கூறுகின்றதா? இவர்களை ஒடுக்கவும், சுட்டு வீழ்த்தவும் ஐந்து லட்சம் ராணுவத்தினரா? இந்த மக்களை அழித்து விட்டு காஷ்மீரில் யாரைக் காப்பாற்றப் போகிறார்கள்?
முதியோர், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஒட்டு மொத்த மக்களும் போராடும் இந்தப் போராட்டத்தை மறைக்கும் இந்திய அரசு, இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரைப் பிரிக்கவே இத்தகைய போராட்டங் கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், இது பாகிஸ்தான் தூண்டுதலால் காஷ்மீரில் உள்ள சிலரால் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றது. இது ஒரு புறம் இருக்க, காஷ்மீர் தங்களுக்குச் சொந்தமான இடம், இதைத் தங்களிடமே இந்தியா ஒப்படைக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் ஒருபுறம் குரல் எழுப்புகிறது.
நீண்ட காலமாகவே நமக்கு ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. பாட்டி ஒருவர் வடை சுடும் பொழுது காகம் அந்த வடையை வாயில் கவ்விக் கொண்டு போய் ஒரு மரக்கிளையின் மீது அமர, அதைக் கண்ட நரி, காகமே ஒரு பாட்டு பாடு என்றதும் காகம் பாட ஆரம்பித்ததால் வடை கீழே விழுந்தது. இதனால் வடை நரிக்குச் சொந்தமானது. காகம் ஏமாந்து போனது. இது சென்ற தலை முறையில் கூறப்பட்டது. ஆனால் தற்பொழுது காகத்திடம் நரி, காகமே ஒரு பாட்டுப்பாடு என்றதும், காகம் வடையை காலில் வைத்துக் கொண்டு பாடியதால் நரி ஏமாந்து போனது. இதனால் வடை காக்கைக்குச் சொந்தமானது என்று கூறுவர். சற்று சிந்தித்தால் இக்கதையில் ஒரு உண்மை விளங்கும். வடை காக்கைக்கோ அல்லது நரிக்கோ சொந்தமானது அன்று. வடை உண்மையில் பாட்டிக்குச் சொந்தமானது. வடையை இழந்த பாட்டியின் பரிதாபக் குரலைக் கவனிக்காமல் நாம் காகத்தையும், நரியையுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது போலத்தான் காஷ்மீரின் கதையும். காஷ்மீர் இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ சொந்தமானது இல்லை. அது உண்மையில் காஷ்மீரிகளுக்குச் சொந்தமானது.
காஷ்மீர் மக்கள் எதிர்பார்ப்பது ரத்தமும் சண்டையும் அல்ல! மகிழ்ச்சியான, அமைதியான, சுயநிர்ணய வாழ்வு உரிமையைத்தான்!