நூலின் பெயர் :            இராணுவத் தளவாட உற்பத்தியில் நெருக்கடிகள்.

ஆசிரியர்         :           சு. அழகேஸ்வரன்.

வெளியீடு        :           கலை நிலா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி-21.

su azhakeshwaran 340உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் இந்தியாவில் தீவரமாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களில், வங்கித் துறையில், வர்த்தகத் துறையில், கல்வித்துறையில், விவசாயத் துறையில், உயர்கல்வித்துறையில், சுற்றுச் சூழல் துறையில், சுகாதாரத் துறையில், மருத்துவத் துறையில், போக்குவரத்துத் துறையில், சிறு தொழில் துறையில், கலாச்சாரப் பண்பாட்டுத்துறையில், ஊடகத்துறையில், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், விளைவுகள் ஏராளம்.

                இராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியிலிருந்த 1980 களில் மத்திய அரசு புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில், உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு முதலிய அமைப்புகளின் கட்டளைகளையும், நிபந்தனைகளையும் ஏற்று செயல்படுத்தியது. அன்று முதல், இந்தியாவில் உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை பாய்ச்சல் வேகத்தில் மத்திய அரசு அமுலாக்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை , அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதில் தீவரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், மோடி அரசு இந்தியாவில் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, மருந்துத் தயாரிப்பு, உணவுப் பதப்படுத்துதல் முதலியத் துறைகளில் 100ரூ அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது.

                மோடி அரசு 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி இந்திய பாதுகாப்புத் துறையில் 100ரூ அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திட முடிவு எடுத்து அறிவித்துள்ளது. மேலும், பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளுக்குரிய விதிகள், கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் முதலியவற்றை தளர்த்தியுள்ளது.

                இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்திலும், வெளியிலும் எவ்வித எதிர்ப்புகளையும் தெரிவிக்கவில்லை. தற்போது ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தி.மு.க, முதலிய கட்சிகள் ஒப்புக்காக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

                ‘இராணுவத் தளவாட உற்பத்தியில் நெருக்கடிகள்’ என்னும் இந்நூலில், இந்தியப் பாதுகாப்பத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால்,

•             உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

•             அந்நியச் செலாவணி சேமிக்கப்படும்.

•             பாதுகாப்புக் கருவிகள், சாதனங்கள் தயாரிப்பதற்கு வெளிநாட்டு நவீன உயர் தொழில்நுட்பம் இந்தியாவிற்கு கிடைக்கும்.

•             இந்தியா ஏற்றுமதி செய்யும் தொழில் மைய நாடாக மாறும்.

என மோடி அரசு வாய்ப்பந்தல் போடுகிறது. இது இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு மோடி அரசு மேற்கொள்ளும் தவறான அறிவிப்புகள் என்பதை இந்நூல் ஆசிரியர் முன்வைக்கிறார்.

                மேலும், இந்திய பாதுகாப்புத் துறையில் சுயசார்பை எட்டுவதற்கு, ஆயுதத் தளவாடங்கள் தயார் செய்திட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனங்களுக்கு தேவையான நிதி ஓதுக்கீடு செய்யப்பட வேண்டும் . பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சிப் பிரிவுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை மாற்றாகக் கூறியுள்ளார்.

                பாதுகாப்புத் துறையில் அந்நிய நிறுவனங்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நிதி உதவி செய்யும் என மோடி அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்நிய நாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் பாதுகாப்பு நிறுவனங்கள், படைக்கலத் தொழிற்சாலைகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் என மோடி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் நிலை ஏற்படும் என்பதை விளக்கியுள்ளார்.

                ரூ 50 ஆயிரம் கோடி மதிப்பில் அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்கள் வாங்கிட டென்டர் கோரப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதல் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பலை உருவாக்கிச் சாதனை படைத்த, பழமைவாய்ந்த பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிடெட்டுக்கு (ழ.ளு.டு) வழங்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உத்தரவு வழங்கிடவும், அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திடவும் மோடி அரசு முயற்சி செய்து வருகிறது.

                அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தரம் குறித்து அக்கறை கொள்வதில்லை, இலாபம் மட்டுமே குறிக்கோளகக் கொண்டு செயல்படுகிறது என்பது உலகம் அறிந்த இரகசியம் ஆகும்.

                மோடி அரசு ரபேல் ஒப்பந்தத்தின் அடிப்படையில், போர்விமானத்தின் மொத்தத் தொகையில் 50ரூ பணிகளை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தஸால்ட் என்னும் நிறுவனம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

                மோடி அரசு படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேசன் ஆக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. போக்குவரத்துறை, மின்சாரவாரியம், நுகர் பொருள் வாணிபக் கழகம், பி.எஸ்.என்.எல், போன்று படைக்கலத் தொழிற்சாகைளையும் 1990 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் அரசும், பா. ஜ. க. அரசும் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றன. தொழிலாளர்களின் தீவிரப் போராட்டங்களினால் படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேசன் ஆக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

                படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேசன் ஆக்கிவிட்டால் தனியார் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் கூறு போட்டு விற்பதற்கு ஏதுவாக இருக்கும். கார்ப்பரேசன் நிர்வாகத்தின் மூலம் விதிமுறைகளை தளர்த்திடவும், கட்டுப்பாடுகளை நீக்கிடவும் வசதியாக இருக்கும். தனியார் முதலாளிகள் கொள்ளை அடிக்க வழியேற்படும் அதனால்தான் படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேசன் ஆக்கும் முயற்சியில் மோடி அரசு தீவிரம் காட்டுகிறது.

                படைக்கலத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களின் போராட்டம் மோடி அரசிற்கு மிகப் பெரும் அழுத்ததையும், நிர்ப்பந்தத்தையும், நெருக்கடியையும் அளிக்கிறது, எதிர்ப்பு வலுக்கிறது. அந்த தொழிலாளர்களின் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை முறியடிக்கும் நோக்கமும் மோடி அரசுக்கு உண்டு.

                மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும் கார்ப்பரேசன்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை குறைப்பது, பணிக்கொடை மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியை நிராகரிக்கும் அவலம் உள்ளது. அதே நிiயை ஏற்படுத்திடவும், பி.எஸ். என். எல். போல் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஏலம் போட்டு விற்கவும், படைக்கலத் தொழிற்சாலைகளை மோடி அரசு கார்ப்பரேசனாக்க துடிக்கிறது என்பதை நூல் ஆசிரியர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

                தனிநபர்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதற்கும் கடும் கட்டுப்பாடுகளை மோடி அரசு விதித்துள்ளது. குறிப்பாகப் பெண்கள், முதியவர்கள் தங்களது உயிரையும், உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கு துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள மோடி அரசு கடுமையான புதியக் கட்டுபாடுகளை விதித்துள்ளது. துப்பாக்கிகளின் உரிமங்களை புதுப்பிப்பதற்காக கட்டணம் ரூ. 100 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

                காங்கிரஸ் ஆட்சி 2010 ஆம் ஆண்டு துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்கான ஒட்டு மொத்த அதிகாரத்தை உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கியது. படைக்கலத் தொழிற்சாலைகள் மட்டுமே துப்பாக்கிகளைத் தயாரிப்பது என்ற விதிமுறைகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை இந்தியாவில் துவங்க உள்ளது.

                இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சமூக விரோதிகள் சட்டவிரோதமாக துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் நிகழ்வுகளும், துப்பாக்கிச் சூட்டு மரணங்களும் அதிகரித்து வருகிறது. மோடி அரசு துப்பாக்கித் தயாரிப்பில் தனியாரை அனுமதிப்பதன் மூலம் அபாயகரமான முடிவை எடுத்துள்ளது. ஆயுதப் படைகள் மற்றும் போலீஸிற்கு துப்பாக்கிகளை மேலும் கூடுதலாக வழங்குவது தவறான விளைவுகளை ஏற்படுத்தும்.

                படைக்கலத் தொழிற்சாகைளின் ஆயுதக் கிடங்குகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆயுதத் தளவாடங்கள் எரிந்து நாசமடைந்து உள்ளது. படைக்கால ஆயுதக் கிடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் பலர் மரணமடைந்து உள்ளனர். படைக்கலத் தொழிற்சாலை ஆயுதக் கிடங்குகளில் தடுப்பு கருவிகள் கூட போதுமான அளவு நிறுவப்படுவதில்லை. தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தேவையான அளவிற்கு நியமிக்கப்படுவது இல்லை. தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. ஆயுதக் கிடங்கு பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை ஒழுங்குபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தியுள்ளார்.

                படைக்கலத் தொழிற்சாலைகளின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும். தரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆராய்ச்சியை மேம்படுத்திட வேண்டும். புதிய தளவாடங்களுக்கான ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்திட வேண்டும். பிற பொதுத்துறை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் படைக்கலத் தொழிற்சாலைகளுக்கு, இரயில்வே, விண்வெளி, அணுசக்தி முதலிய துறைகளுக்குரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும். பல்கேரியா, இஸ்ரேல் முதலிய வெளிநாடுகளிலிருந்து துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் இவைகள் மூலம் மட்டுமே இந்திய படைக்கலத் தொழிற்சாலைகளை மேம்படுத்த முடியும் என்பதை ஆணித்தரமாக முன் வைத்துள்ளார்.

                அந்நிய நேரடி முதலீட்டால் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகும். பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள மூலாதாரங்கள், உள் கட்டமைப்பு வசதிகள், பாரம்பரிய மனித ஆற்றல் முதலியவைகளும் தனியார்களுக்கு தாரைவார்க்கப்படும்.

                படைக்கலத்துறையை அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதன் மூலம், நமது தாய் நாட்டின் சுய சார்பு, இறையாண்மை பாதிக்கப்படும் அதை தடுத்து நிறுத்திட வேண்டும்.

                மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நிறுவன, பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சங்க கூட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் கூட்டுப்பேராட்டங்கள், கூட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்க பட வேண்டும்.

                மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஊடகத்துறை பொதுத்துறை நிறுவனங்கள் மீது தவறான பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட வேண்டும்.

                தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திட சிந்தனையாளர் மன்றங்கள் தொழிற்சாலை மட்டத்தில் அமைத்திட வேண்டும்.

                மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை முறியடித்திட தொழிற்சங்க எல்லைகளைத் தாண்டி போராட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் முதலிய செயல்திட்டங்களை நூலாசிரியர் முன் வைத்துள்ளார்.

                மோடியின் ஆட்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிராக மோடி அரசு போர் நடத்திவருகிறது. தலித், பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான வளர்ச்சி திட்டங்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டி குறைத்துள்ளது என்பதையும், மோடி அரசு மக்கள் விரோத அரசு என்பதையும், மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும், புரட்சிகர இயக்கங்களும் இணைந்து நடத்திட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

                இந்த நூல் இந்தியாவில் உள்ள படைக்கலத் தொழிற்சாலை தொழிலாளர்களின் கைவாளாக உள்ளது. இந்திய தொழிலாளர் வர்க்க உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் போராடும் தொழிற்சங்கத் தலைவர்களும், நாட்டுப்பற்று உள்ளவர்களும் படிக்க வேண்டிய பயனுள்ள நூலாகும். மோடி அரசின் கார்ப்ரேட் மயக்கொள்கைகளை அம்பலப்படுத்தி தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான நூலாகும். 

- பி.தயாளன்

Pin It