black money

‘வர வர மாமியா கழுத போல ஆனாளாம்...கழுத தேய்ஞ்சி கட்டெறும்பாச்சாம்’னு, ஒன்னாப்பு படிக்கும்போது எங்கள அச்சம்மா டீச்சர் திட்டுவாங்க. இப்ப என்னடான்னா, ‘அதுவும் தேஞ்சி காணாப்போச்சாம்’ங்கற மாதிரி ஆகிப்போச்சி, பா.ஜ.க.வோட ‘கறுப்புப் பணம் மீட்கும் படலம்’!.

வீராதி வீரர்...அசகாய சூரர்...எதற்கும் அசராத தலைவர் மோடி பிரதமரா வந்தா...நாடே தலகீழ மாறிரும்னு சொன்னாங்க... ஆனா...இப்ப என்ன நடக்குது? காங்கிரசு அரசு சுட்ட அதே தோசயத்தான், புது கல்லுல பொரட்டிப் பொரட்டி போட்டுட்ருக்கு பா.ஜ.க. அரசு. என்னமோ... கறுப்புப் பணத்த மீட்குறதுக்கான போர் முரச பா.ஜ.க.தான் கொட்டியிருக்குன்னு... ‘அரசியல் விமர்சகர்கள்’ நெறயப் பேரு சொல்லிட்ருக்காங்க. அப்டில்லாம் ஒன்னுமில்ல...கறுப்புப் பண விவகாரத்துல, காங்கிரசு சேகரிச்சு வச்ச விவரங்களத்தான், பா.ஜ.க. நீதிமன்றத்துல குடுத்திருக்கிறதாவும், அதுல புதுசா எதுவுமில்லன்னும், சிறப்பு விசாரணைக் குழு சொல்லிருச்சி. என்ன... இதுக்காக ஒரு குழு அமைக்கனும்னு உச்சநீதி மன்றம் சொன்னத காங்கிரசு அரசு செய்யல. பா.ஜ.க. அந்தக் குழுவ அமைச்சிருக்கு. கறுப்புப்பண வெவகாரத்துல ‘புதுசா’ நடந்தது இது ஒன்னுதான்.

 மொதல்ல, பட்டியல வெளியிட்டா, வழக்குக்குப் பாதிப்பு வரும்னு சொன்னாங்க.அப்புறம், நீதிமன்றம் ஓங்கி குட்டுனதுனால, வெளிநாட்டு வங்கிகள்ல கறுப்புப் பணம் பதுக்கி வச்சிருக்கிறவங்கன்னு சொல்லி, 628 பேரோட பட்டியல, ஒட்டுன பைக்குள்ள போட்டுக் குடுத்தாங்க. ஆகா... ஒட்டுமொத்தக் கறுப்புப் பணத்தையும் கோணிப்பையில போட்டு, மோடி இந்தியாவுக்குக் கொண்டு வந்துருவாருனு பாருங்கன்னு...பரபர செய்தியெல்லாம் போடுறதுக்கு தயாராயிட்டு இருக்குற நேரத்துல...சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்துல குடுத்த அறிக்கையப் பாத்து தெகச்சிப் போயி நின்னுட்டாங்க.

மத்திய அரசு நீதிமன்றத்துல குடுத்த பட்டியல் இருக்கே, அது வந்த வழியே வேற. சுவிஸ்ல இருக்குற பிஷிஙிசி வங்கியில வேல பாத்த ஒருத்தரு, அங்க கணக்கு வச்சிருக்கிறவங்களோட பட்டியலத் திருடி, அத பிரான்சுக்கு வித்துட்டாரு. அதுல, பெருமைமிகு இந்தியர்களோட பட்டியல பிரான்சு கிட்டருந்து, இந்தியா வாங்கியிருக்கு. ஆனா, என்ன பயன் சொல்லுங்க? அந்தப் பட்டியல்ல இருந்தது மொத்தம் 628 பேரு. அதுல, 122 பேரோட பேரு, ரெண்டு தடவ பதிவாயிருக்காம். இ - கவர்னென்சுக்கு முக்கியத்துவம் குடுக்குற, மோடியோட அரசாங்கம் தயாரிச்ச பட்டியலோட லட்சணம் எப்படி இருக்கு பாருங்க? சரி, 628டுல 122 போச்சுன்னா, மீதி இருக்கிறது 506. அதாவது மிஞ்சுமான்னு பாத்தா...ம்ம்...எங்க...அதுல 289 பேரோட கணக்குல பணமே இல்லையாமே! கடைசியில, 628டுல 217தான் மிஞ்சியிருக்கு. இதப் பத்தின முழுமையான விசாரணைய முடிக்கிறதுக்கு, 2015 மார்ச் வரைக்கும் கெடு கேட்டிருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு. மேல சொன்னதெல்லாம், ஒரு பத்து நாள் இடைவெளியில கண்டுபுடிச்சது.

மீதியிருக்குற கணக்குல என்ன இருக்கோ... இல்ல எல்லாமே போலிக் கணக்குன்னு சொல்லப் போறாங்களோ... இதுக்கு நடுவுல, ‘நாங்க கறுப்புப் பணத்த மீட்டு, ஒவ்வொரு இந்தியக் குடிமகனோட கணக்குலயும் 15 லட்சத்த வரவு வைக்கப் போறோம்’னு ஆசயக் கௌப்பி விட்டுட்டாங்களா... அத நம்பி நம்மாளுங்க வேற கனவு காணப்போயி, ஏமாந்து கெடக்காங்க பாவம்!

கோழி புடிக்கனும்னா, சத்தம் போடாம, கமுக்கமா பின்னாடியே போயி, சட்டுன்னு கூடயக் கோழி மேல கவுத்துப் போட்டு அமுக்க வேண்டாமா? அதவிட்டுட்டு, கொட்டு மேளத்தோட, ஆடிக்கிட்டே போனா, கோழி தானா வந்து கூடக்குள்ள குந்திக்குமா! கறுப்புப் பணத்த மீட்குறதுக்கு, காங்கிரசு களம் எறங்கினப்பவே, பாதிப் பேருக்கு மேல கணக்க காலி பண்ணிருப்பாப்பல! அதுக்கப்புறம், பா.ஜ.க., ஊதுன ஊத்தாம்பட்டியில ஏறிப்போயி, மிச்சப் பேரும் கணக்க முடிச்சு நல்ல பிள்ளையா ஆகிட்டாப்பல போல. இவுங்க என்னான்னா, ‘இருக்கும் இடத்த விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே’னு ஜெமினி பாடிட்டே தேடி அலைவாரே, அத மாதிரி, பிஷிஙிசி வங்கியில வச்ச கண்ண வேற பக்கம் திருப்புற மாதிரி தெரியல.

இந்த லட்சணத்துல, சிறப்புப் புலனாய்வுக் குழு ஒரு வேண்டுகோள் வச்சிருக்கு. அது என்னன்னா... கறுப்புப் பணம் வச்சிருக்கறவங்களப் பத்தின செய்தி தெரிஞ்சா, ஆதாரத்தோட பொதுமக்கள் தெரிவிக்கனுமாம்... இது எப்படி இருக்கு தெரியுமா? ‘ஏட்டீ...நேத்து ராத்திரி ஒரு கனவு கண்டன்டீ...’னு பாதி கனவச் சொல்லிட்டு, ‘அடடா...அதுக்கப்புறம் மறந்துபோச்சே...மீதிக் கனவு நீ சொல்லேன்டி’னு கேட்டாளாம் ஒருத்தி. அப்படி இருக்கு.

Pin It