bhagathisingh 350“நான் சத்தமிட்டுச் சொல்கிறேன் - என் பலம் அனைத்தையும் திரட்டி - சத்தமிட்டுச் சொல்கிறேன்- நான் தீவிரவாதி இல்லை - நான் ஒரு போராளி” என்று முழக்கமிட்டார் பகத்சிங்.

உதகை குன்னூர் சாலையில் உள்ள ‘வேர்ல்டு வேக்ஸ்’ அருங்காட்சியகத்தில் உள்ள பகத்சிங் சிலையின் கையில் வெடிகுண்டைக் கொடுத்திருக்கிறார்கள். நேரு, காந்தி, தாகூர், திலகர் உள்ளிட்டவர்களின் சிலைகள் எல்லாம் கண்ணியமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், பகத்சிங்கை வெடிகுண்டுடன் பிறந்தவர் போலக் காட்டியிருப்பது எத்தனை அயோக்கியத்தனமான செயல்?

ஒரு போராளியை, தீவிரவாதியாகக் காட்டி, மக்களுக்குத் தவறான வரலாற்றைச் சொல்லும் மலிவான செயல் இல்லாமல் வேறு என்ன?

1931, மார்ச் 23இல் தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத்சிங்கின் 84ஆவது நினைவு ஆண்டு இது. நாட்டு விடுதலையும், மக்கள் மீதான பேரன்புமே பகத்சிங் என்றால் மிகையாகாது. அன்றைய சூழலில், காந்திக்கு இணையான செல்வாக்குப் பெற்றிருந்தவர் பகத்சிங் என்று பட்டாபி சீதாரமைய்யா குறிப்பிடுகிறார்.

24 வயதில் தூக்கு மேடை ஏறிய பகத்சிங், மதம் குறித்தும், தீண்டாமை குறித்தும் சிந்தித்த மானுடப் பற்றாளர். லெனின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது, தன்னை தூக்கு மேடைக்கு அழைத்துப் போக வந்த சிறை அதிகாரியிடம், ‘சிறிது நேரம் காத்திருங்கள்.

ஒரு போராளி இன்னொரு போராளியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறான்’ என்று சொன்ன படிப்பாளி பகத்சிங். என்றைக்கும் இந்த நாடு உண்மையான போராளிகளை மதித்ததில்லை. போராளிகளை மதிக்காத நாடு என்றைக்கும் உயர்ந்த நிலையை அடைந்ததும் இல்லை.

(மார்ச் 23 மாவீரன் பகத்சிங்கின் 84ஆவது நினைவுநாள்)

Pin It