தமிழக அரசு, தமிழக அரசு என்று ஓர் அரசு இருந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக அதனைக் காணவில்லை. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு உரிய பாராட்டுகளைத் தமிழ் மக்கள் வழங்குவார்கள்!

taminadu assembly 360வழக்கமாகத் தமிழக அரசுக்கு ஒரு முதலமைச்சர் இருப்பார். அவருக்கு என்று ஓர் அறை இருக்கும். அந்த அறை இப்போது காலியாக உள்ளது. திரு பன்னீர்ச்செல்வம் என ஒருவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவரை முதலமைச்சர் அவர்களே என்று யாரேனும் அழைத்தால் அவர் அரண்டு மிரண்டு போய்விடுகிறார். முதலமைச்சர் என்னும் சொல்லே ஏதோ கெட்ட வார்த்தை போல் பார்க்கப்படுகின்றது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரை மக்கள் முதல்வர் என்று அழைக்கின்றனர். அவர் மக்கள் முதல்வர் என்றால் இவர் யாருக்கு முதல்வர் என்று தெரியவில்லை.

நாட்டில் எத்தனையோ சிக்கல்கள் உள்ளன. அவை குறித்தெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்றால், எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 22ஆம் நாள் ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றம், குளிர் காலக் கூட்டத் தொடருக்காக இன்று வரை கூட்டப்படவில்லை. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் அக்டோபர் மாதம் கூட்டம் கூடியது. இப்போது அக்டோபர் முடிந்து, நவம்பரும் முடியப் போகிறது. 2001ஆம் ஆண்டில் ஒருமுறை இதே பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, ஒரு முறை கூடச் சட்டமன்றம் கூட்டப்படவில்லை என்பதும் இங்கே நினைவு கூரத் தக்கது. (எல்லாக் கட்சிகளும் வற்புறுத்திய பிறகு, டிசம்பர் 4இல் தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருப்பதாக இப்போது செய்தி வந்துள்ளது)

பாம்பாற்றின் குறுக்கே கேரளாவும், காவிரியின் குறுக்கே கர்நாடகமும் அணைகள் கட்ட முயல்கின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள அமராவதி அணைக்குப் பாம்பாற்றில் இருந்துதான் நீர் வரவேண்டும். குறுக்கே ஆணை கட்டப்பட்டால், நீர் வரத்து, பெரும் அளவிற்குக் குறையும்.

கர்நாடகம் ஏற்கனவே பல அணைகளைக் கட்டிக் காவிரியைத் தடுத்து வருகிறது. எல்லா அணைகளும் 25 முதல் 30 டி.எம்.சி வரையிலான தண்ணீரைத் தேக்குமென்றால், கிருஷ்ண ராஜ சாகர் அணையோ 49 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கும். இப்போது அவர்கள் கட்ட இருக்கும் அணைகளில் ஒன்று 50 டி.எம்.சி. தண்ணீர் பிடிக்கும் என்கிறார்கள்.

ஆக மொத்தம், தென்பெண்ணை, காவிரி, பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை பொருநை நதி எல்லாம் வறண்டு, தமிழகம் பாலைவனமாகப் போகிறதோ என்னும் அச்சம் நம்மை ஆட்கொள்ளுகிறது.

தருமபுரி, சேலத்தில் குழந்தைகள் சாவு, விலைவாசி உயர்வு, சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு என்று ஏராளமான சிக்கல்கள் அரசைக் கவ்விப் பிடித்துள்ளன. ஆனால் பன்னீர்செல்வமோ, எதுவுமே நடக்காதது போல மெல்ல நடக்கின்றார். மெதுவாய்ச் சிரிக்கின்றார். எதுவும் பேச மறுக்கின்றார்.

தொலைந்துபோன தமிழகத்தை எப்படி மீட்டெடுப்பது?      

Pin It