School students

பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்க, இன்றைய இந்தியப் பிரதமர் அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த போதே முயற்சி செய்தார். கணிதப் பாடத்தில்கூட இடம்பெற்ற கருத்துக்களை மீண்டும் இங்கு எழுதத் தேவையில்லை. நாடு முழுக்கக் கொந்தளிப்பு ஏற்பட்டது. தேசியக் கல்வித் திட்டத்தில் வகுப்புவாதக் கருத்துகள் பாடத் திட்டத்தில் இடம்பெற வழி செய்ததால், அவை நீக்கப்பட்டு 2005ஆம் ஆண்டு தேசியக் கல்வித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இன்று, சாமியாடிகள் பள்ளிப் படிப்பிற்கான பாடத் திட்டத்தைத் தாங்கள் வகுத்துத்தரப் போவதாக அறிவித்து இருக்கிறார்கள். இந்தியாவில் ஆரியர்கள் கைபர், போலன் கணவாய்கள் வழியாக வந்தார்கள் என்ற வரலாற்றையே மாற்றி எழுதிய நபர், தற்போது இந்திய வரலாற்று மன்றத் தலைவர். அவ்வாறே மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் அனைத்துக் கல்வி அமைப்புகளுக்கும் அவரைப் போன்றவர்கள் தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இது போதாது என்று, விஸ்வ இந்து பரிஷத், இந்தியா முழுக்க உள்ள தனியார் பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்றுத் தர வேண்டுமென்றும், இந்துக் கலாச்சாரம் கற்றுத்தரப் பட வேண்டும் என்றும் முழங்கத் தொடங்கி உள்ளது.

இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் நடந்த கேந்திரிய வித்தியாலயா ஆணையத்தின் கூட்டத்தில் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் ‘உடனடியாக’ ஜெர்மன் மொழி கற்றுத் தருவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. அதற்கு மாற்றாக சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழி கற்றுத் தரப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.

சுமார் 70 ஆயிரம் குழந்தைகளின் மனநிலையைக் குறித்தோ அவர்களின் குடும்பத்தினர் மனநிலை குறித்தோ கவலைப்படாமல் ஒரு ஆணையை அரசு வெளியிட முடியுமா? வெளியிட்டுள்ளதே? இதுதானே வெறிச்செயல் என்பது! ஹிட்லரின் நாஜிப் படைகள் பிரான்ஸ் நாட்டின் மீது படையெடுத்த போது, நாஜிப் படை பிரான்ஸ் நிலத்தில் கால் வைத்தவுடன் பிரஞ்சு பயின்று கொண்டிருந்த மாணவர்கள் உடனடியாக ஜெர்மன் மொழி கற்கக் கட்டாயப் படுத்தப் பட்டார்கள். இது பதிவாகிவுள்ள வரலாறு. அதே முறையில்தானே கேந்திர வித்தியாலயாவின் இந்த ஆணையை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே மக்கள், ஒரே தலைவர் என்பது பாசிசம். இந்தியாவில் இத்தகைய கருத்துக்களுக்கு இடமில்லை. இது தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் உள்ளிட்ட தலைவர்களால் பண்படுத்தப்பட்ட பூமி. சோஷலிசம் மற்றும் பகுத்தறிவு கருத்துக்கள் விதைக்கப்பட்ட பூமி. இங்கு பிஞ்சு மனதில் நஞ்சைக் கலக்கும் எந்த முயற்சியையும் அனுமதிக்க இயலாது. ஆதிக்கச் சாதிய அமைப்புகளின் தூண்டுதலால் பள்ளியில் படிக்கும் மாணவர் சாதிய அடையாளம் தெரியும் வகையில் கையில் வண்ணத்துணி கட்டி வருதல், நெற்றியில் அடையாளம் இடுதல் என்று ஆரியப் பழக்கம் பெருகி வருகிறது. மதவெறி, சாதியவெறி இரண்டும் அற்றதாகப் பள்ளியும், கல்லூரியும் திகழ வேண்டும். சாதிய அமைப்புகளும் மத அமைப்புகளும் கூட்டுச் சேர்ந்து வகுப்புவாதத்தை வகுப்பறைக்குள் நுழைக்க முற்பட்டால் சமத்துவத்தை விரும்பும் இந்தியர்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என எச்சரிக்கும் வகையில்தான் ஜம்மு, இம்பால், புவனேஸ்வர், கோவா, கன்னியாகுமரி என இந்தியாவின் 5 முனைகளிலிருந்து நவம்பர் 2 அன்று புறப்பட்டு, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் டிசம்பர் 4 அன்று பேரணி, பொதுக் கூட்டமாகச் சங்கமிக்கிறது கல்விக்கான அகில இந்தியப் போராட்டப் பயணம் 2014. வகுப்புவாதத்தையும் வணிகமயத்தையும் எதிர்த்து இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் மக்களைச் சந்தித்து அனைவருக்கும் சமத்துவமான, சமச்சீரான கல்வி வேண்டும் என்று ஒற்றை முழக்கத்தை முன்வைக்கிறது.

வரலாற்றை திருத்தி, இந்திய மக்களின் பேச்சு மொழிகளையெல்லாம் அழித்து, பெண் அடிமைத்தனம், சாதிய பாகுபாடு, சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றை வளர்த்திட முனையும் எந்த ஒரு முயற்சியையும் முறியடித்திட விழிப்புடன் இருந்து செயலாற்ற வேண்டிய அவசியம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

Pin It