உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு 18.2.2014 அன்று முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரணதண்ட னையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது. மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435-இன்படி “உரிய அரசு” இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தது.
அப்போது முதலமைச்சராக இருந்த செயலலிதா எழுவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார். உடனடியாக நடுவண் அரசு, இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டதால் இவர் களை நடுவண் அரசின் ஒப்புதல் பெறாமல் விடுதலை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது. 2015 திசம்பர் 2 அன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இதே கருத்தை உறுதி செய்தது. இத்தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்தது. இதன்மீது 7-2-2017 அன்று தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் முன்னைய தீர்ப்பையே உறுதி செய்தது.
அந்நிலையில், இருபது ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்யக்கோரி ஆளு நருக்கு அனுப்பிய விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பு
6-9-2018 அன்று வழங்கப்பட்டது. இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், நவீன் சின்கா, கே.எம். ஜோசப் ஆகியோர் “இராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், நளினி, இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு பேர் விடுதலை குறித்துத் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம்; அதை ஆய்வு செய்து முடிவெடுக் கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு” என்று கூறினர்.
இத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை 9-9-2018 அன்று கூடி, இந்திய அரசமைப்புச் சட்டத் தின் 161ஆவது பிரிவின்கீழ் எழுவரையும் விடுதலை செய்யுமாறு ஆளுநருக்குப் பரிந்துரை செய்வது என்று தீர்மானித்தது. அத்தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப் பியது. 161ஆவது பிரிவு என்பது கூட்டாட்சி அரசமைப் பில் மாநில என்பது அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இறை யாண்மை கொண்ட அதிகாரமாகும். எனவே தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்சுவும் மற்ற சட்ட வல்லநர்களும் கருத்துரைத்தனர்.
எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை யிலிருந்து செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், 161ஆவது பிரிவின்கீழ் அ.தி.மு.க. வினர் மூவரின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித் திருப்பது தமிழர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கொடைக்கானல் ‘பிளசன்ட் ஸ்டே’ விடுதி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 2002 பிப்பிரவரி 2 அன்று செயலலித வுக்குச் சிறைத் தண்டனை விதித்தது. இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரியில் இலக்கியம்பட்டியில் கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேருந்தைப் பெட்ரோல் ஊற்றி தாக்கி எரித்தனர். பேருந்தில் இருந்த மூன்று மாணவி கள் தீயில் கருகி மாண்டனர். பல மாணவியர் காய மடைந்தனர். இது தொடர்பாக, தருமபுரி நகர அ.தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி இரவீந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நெடுஞ்செழியன், இரவிச்சந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கு மரண தண்டனையும் 24 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது. 2016இல் இம்மூவரின் மரண தண்டனை வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் 31-12-2017 அன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பத்து ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். இதற்கான அரசாணை 1-2-2018இல் வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1,858 வாழ்நாள் கைதிகளை அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்படி விடுவிக்க முடிவு இருப்பதாகத் தெரிவித்து, தமிழக அரசு அப்பட்டியலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இவர்களில் 1,627 கைதிகளின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். ஆனால் தருமபுரி பேருந்து வழக்கில் தண்டிக்கப்பட்ட நெடுஞ் செழியன், இரவீந்திரன் முனியப்பன் ஆகியோரின் விடுதலையை மறுஆய்வு செய்யுமாறு அக்கோப்பு களை ஆளுநர் தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.
தமிழக அரசு 25-10-18 அன்று இந்த மூவரின் விடுதலையை ஆளுநரின் மறுஆய்வுக்கு அனுப்பியது. 31-10-2018 அன்று தலைமைச் செயலாளர், தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர், உள்துறைச் செய லாளர் ஆகியோர் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, சிறையில் இருக்கும் 3 பேருக்கும் அந்த மாணவி களைக் கொலை செய்யும் நோக்கம் இருக்கவில்லை என்றும், கும்பலாகச் சேர்ந்து அவசரமாக மேற்கொண்ட நடவடிக்கையால் அப்படி நடந்துவிட்டது என்றும் விளக்கம் அளித்தனர். அதன்பின் ஆளுநர் இம்மூவரின் விடுத லைக்கு ஒப்புதல் அளித்தார்.
இவர்களின் விடுதலையைத் தமிழக அரசு கமுக்க மாகச் செய்தது. 19-11-18 அன்று வேலூர் சிறையி லிருந்து நெடுஞ்செழியன், இரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரையும் விடுதலை செய்து, அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்த பிறகே சிறையதிகாரிகள் செய்தியாளர்களை அழைத்து இம்மூவரின் விடுதலை குறித்து தெரிவித்தனர்.
இதே வேலூர் சிறையில் இராசிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக இருக்கும் எழுவர் விடுதலை குறித்து முடிவு எடுக்காமல், மூன்று அ.தி.மு.க.வினரை விடுதலை செய்த ஆளுநரின் செயலைத் தலைவர்கள் பலரும் கண்டித்தனர். அதனால் மூவர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை 20-11-18 அன்று நீண்ட விளக்க அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை மூலம்தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அ.தி.மு.க. வினர் மூவரின் விடுதலைக்காக எந்த அளவுக்கு முயன்று இருக்கிறது என்பது அம்பலமானது.
இந்நிலையில், 27-11-18 நாளிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் எஸ், விஜய்குமார் என்பவர் பேரறிவாளன் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்திடம் போராடிப் பெற்ற தகவல் குறித்து எழுதியுள்ளார்.
பேரறிவாளன் 2016 சனவரி 8 அன்று உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார். முருகன் என்கிற ஸ்ரீதரன் எதிர் ஒன்றிய அரசு வழக்கில் 2015 திசம்பர் 2 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப் படையில் நடுவண் அரசு உருவாக்கிய தண்டனைக் குறைப்பு விதிகள் படியை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார். மேலும், தண்ட னைக் குறைப்பு அதிகாரம் நடுவண் அரசிடம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தால் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ள வழக்குகளில், தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலை செய்தல் போன்றவற்றில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நடுவண் அரசு மாநிலங்களுக்கு சுற்றறிக் கையோ, ஆணையோ அனுப்பியிருந்தால் அவற்றின் படிகளை அளிக்க வேண்டும் என்றும் பேரறிவாளன் கேட்டிருந்தார்.
நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் பேரறிவாளன் கேட்ட தகவல்களைத் தரமுடியாது என்று கூறியது. அதன்பின் பேரறிவாளன் தகவல் பெறும் உரிமை ஆணையத்திடம் முறையீடு செய்தார். தலைமை தகவல் ஆணையர் யசோவர்தன் ஆசாத் 2018 ஆகத்து 14 அன்று உள்துறை அமைச்சகத்தின் தகவல் பிரிவு அலுவலருக்கு ஒரு மடல் அனுப்பினார்.
“நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்ற காரணத் தைக் கூறி எந்தத் தகவலையும் தரமுடியாது என்று கூறுவதை ஏற்க இயலாது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருந்த போதிலும் எந்தெந்த தகவல்களை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் (பேரறிவாளன்) தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனைக் குறைப்பு பற்றிய அரசின் கொள்கை, விதிகள் ஆகியவற்றின் படிகளைத் தான் கேட்கிறார். அவற்றை அவருக்கு அளிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கேட்டுள்ளவாறு இந்தியாவில் நடுவண் அரசால் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட ஆணைகளின் நகல்களையும் 30-9-2018-க்குள் அளிக்கவேண்டும்” என்று தலைமை தகவல் ஆணையர் அறிவுறுத்தினார்.
இதன்படி உள்துறை அமைச்சகம் 8-11-2018 அன்று தற்போது புழல் சிறையில் இருக்கும் பேரறி வாளனுக்கு மடல் அனுப்பியது. அதில், “2015 திசம்பர் 2 அன்று உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளவாறு, உள்துறை அமைச்சகம் அரச மைப்புச் சட்டப் பிரிவு 72-73 அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 432-435 ஆகியவற்றின் கீழ் தண்டனைக் குறைப்புக்கான விதிகளை இன்னும் உருவாக்கவில்லை, தண்டனைக் குறைப்புச் செய்யப் பட்ட அரசின் ஆணைகளைத் தற்போது கேட்கப் பட்டுள்ள படிவத்தில் தர இயலாது. அவற்றைத் திரட்டிய பிறகு வழங்கப்படும்” என்று அம்மடலில் கூறப்பட்டுள்ளது.
இராசிவ் காந்தி கொலை வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்ததால் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435-இன்படி அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தனக்கே உண்டு என்று உரிமை கொண்டாடும் நடுவண் அரசு, 2015 திசம்பரில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பின்னும் தண்டனைக் குறைப்புக்கான விதிகளை உருவாக்கவில்லை என்பது நடுவண் அரசின் அதிகார ஆணவப் போக்கையே காட்டுகிறது.
பேரறிவாளன் தொடர்ந்து நடத்திவரும் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு நடுவண் அரசு உரிய பதில் தராமல் வஞ்சித்து வருகிறது. எனவேதான் விடுதலை செய்ய வேண்டும் என்கிற எழுவரின் விண்ணப்பத் தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே, அவர்களின் விண்ணப்பங்களைக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டார் என்று பொய் சொன்னது. இந்த உண்மை பிறகுதான் அம்பலமானது. நடுவண் அரசின் உயர் அதிகாரப் பதவிகளில் இருக்கும் பார்ப்பன-பனியா கும்பல் தமிழினப் பகை உணர்ச்சியுடன் இருப்பதால் இராசிவ் கொலை வழக்கை ஒரு கருவி யாகக் கொண்டு தமிழர்களைத் தண்டிக்கப் பார்க்கிறது.
6-9-2018 அன்று உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இன்கீழ் தமிழக அரசே ஆளுநர் ஒப்பதலைப் பெற்று எழுவரை விடுதலை செய்யலாம் என்று கூறிவிட்டது. அ.தி.மு.க.வினர் மூன்று பேரை 161ஆவது பிரிவின்கீழ் விடுதலை செய்த தமிழக ஆளுநர் தமிழக மக்களின் பிரதிநியாக உள்ள அமைச் சரவையின் முடிவை ஏற்று எழுவர் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது அநீதியல்லவா! ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத ஆணவப் போக்கே இது! காந்தியைக் கொன்ற கோபால் கோட்சேவை மகாராட்சி அரசு 16 ஆண்டுகளில் விடுதலை செய்தபோது, 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்யாமல் இருப்பது திட்டமிட்ட சூழ்ச்சியா?
அ.தி.மு.க.வினர் மூவரை விடுதலை செய்ததுபோல் 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எழுவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், இளைஞர்களும், பொது மக்களும், ஆளுநருக்குக் கடுமையான அழுத்தம் தரும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். எழுவரின் விடுதலை என்பது தமிழர்களின் தன்னுரிமையை-சுயமரியாதையை வென்றெடுப்பதாகும்.