சுதந்திர இந்தியா காணாத வரலாற்றுப் போராட்டத்தைக் கடந்த மூன்று வருடங்களாக இடிந்தகரைப் பகுதியைச் சேர்ந்த மக்கள் முன்னெடுத்து வருவது உலகம் அறிந்ததே.  சுதந்திர இந்தியாவில் வெற்று அடையாளங்களாகவே போராட்டக்களங்கள் மாறிப்போன சூழலில், ஒரு நாட்டின் மனசாட்சியை உலுக்கிக் கேள்வி எழுப்பும் விதமாக இந்தியாவின் தென்கோடி மக்கள் தொடர்ந்து ஆயிரம் நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறார்கள். இது பலர் குற்றம்சாட்டுவது போல இன்று நேற்று தொடங்கிய போராட்டம் அன்று.

1980களிலேயே கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராக அறிவுலகத் தளத்திலும், மக்கள் மத்தியிலும் போராட்டங்கள் நடைபெற்றன என்பதற்குத் தரவுகள் இருக்கின்றன.

subavee-udhayakumar 600அறிவுலக சக்திகள் முன் வைத்த ஆதாரங்களின் அடிப்படையிலான நியாயங்களைப் புறந்தள்ளியும், இடிந்த கரை மக்கள் கொண்ட அச்சங்களின் அடிப்படையிலான போராட்டங்களை நிராகரித்தும்தான், அதிகார வர்க்கம் கூடங்குளத்தில் அணுவுலை ஒன்று மற்றும் இரண்டை நிறுவியது. இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்று போராடும் மக்களை நோக்கி ஏளனக் கேள்விகள் வீசப்பட்ட போது அந்த மக்கள் சொன்ன பதில் இதுதான்: “அணு வுலை தொடங்கும்வரை போராட்டம் என்று சொல்லவில்லை, மூடும் வரை போராட்டம் என்றுதான் சொன்னோம். போராட்டம் தொடரும்.”

உலகில் எங்காவது போராடும் மக்களின் குரல் இவ்வளவு உதாசீனப் படுத்தப்படுமா என்று தெரியவில்லை. இடிந்தகரை மக்களின் தொடர்ச்சியான, துளி வன்முறையற்ற, காந்திய வழியிலான போராட்டத்தை முற்றிலும் நிராகரித்து, அணுவுலை 3,4ஐ நிறுவும் பணியில் இப்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது அதிகார வர்க்கம்.

பலரும் குற்றம் சாட்டுவது போல அணுவுலை எதிர்ப்புப் போராளிகள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்லர். அந்த வளர்ச்சிவர்க்க பேதமின்றி எல்லோருக்குமான வளர்ச்சியாக, சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத, நீடித்து நிலைக்கக் கூடிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம். ஆனால் அணுவுலைகளைப் பொருத்த வரையில் அதுதான் நடக்கிறதா?

அணுவுலை விபத்துகள் பல தலைமுறைகள் மீது தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. உலக சுகாதார நிறு வனத்தின் அறிக்கையின்படி செர்னோபில் விபத்தில் பல லட்சம் பேர் இறந்திருக் கிறார்கள்.  சமீபத்தில் அமெரிக்கக் கான் சர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் படி, செர்னொபில் விபத்தில் ஐயோடின் 131ன் தாக்கத்தால் இப்போதும் குழந்தைகளைத் தைராய்ட் கான்சர் பாதித்துக் கொண்டிருக்கிறது.

மிகச் சமீபத்தில் நிகழ்ந்த புகுஷிமா விபத்தால், ஜப்பானில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய் நிலத்தை இனி பார்க்க முடியுமா என்று தெரியாமல், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். சொல்லப்போனால் புகுஷிமா அணுவுலை விபத்தின் கோரக் காட்சி களைத் தொலைகாட்சியில் பார்த்த பிறகே வீதியில் இறங்கிப் போராட வந்தார்கள் இடிந்தகரை மக்கள்.

கூடங்குளம் அணுவுலைகள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை என்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர். கூடங்குளத்தில் அமைந்துள்ளது போல வி.வி.இ.ஆர் டைப் அணுவுலைகள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை என்பதை விஞ்ஞானப் பூர்வமாகவே ஏற்று கொள்ள முடியாது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. ஒரு பேரழிவு விபத்தைச் சந்திப்பதற்கான குறைந்தபட்ச ஆனால் நிச்சயமான சாத்தியங்கள் எல்லா அணுவுலைகளிலும் இருக்கின்றன.

அப்படியே விபத்து ஏற்படாது என்றே வைத்துக்கொள்வோம். ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் ஏன் இத்தனை குளறுபடி? கூடங்குளத்தில் நிறுவப்பட்டிருக்கும் அணுவுலைகளை விற்பனை செய்யும் அடம்ஸ்ட்ராய்க்ஸ் போர்ட் என்னும் நிறுவனம்,  விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுக்க முடியாத வண்ணம் இருநாட்டு அரசாங்க ஒப்பந்தம் ஒன்றால் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.

100 சதவிகித பாதுகாப்பு என்று சான்றளிக்கும் அணுவுலை நிறுவனங்கள், அவர்கள் கட்டமைக்கும் அணுவுலை களை நம்பி விபத்துக்குப் பொறுப்பேற்கத் தயங்கும் போது, தங்களது பணத்தைத் தரத் தயங்கும் போது, எளிய மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைக்க வேண்டும் என்று அதிகார வர்க்கம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

கடந்த மே 14, 2014 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடந்த ‘சிறு’ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இருவர் 70 டிகிரி தீப்புண்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக் குக் கொண்டு போகப்பட்டனர். ஒரு மாதமாகியும் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதுபோல, 2013-ம் ஆண்டு சனவரி மாதம் முதல் மே 17, 2014 வரை கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு 5.2 கோடி ரூபாய்க்கு மருத்துவச் செலவு செய்திருக்கிறார்கள். இதில் பெரும்பான்மையான தொகை கண் சம்பந்தப்பட்டப் பிரச்சினைகளுக் காகச் செலவு செய்யப்பட்டுள்ளது.

மே 26, 2014 முதல் ஜூன் 27, 2014 வரையிலான ஒரு மாத காலகட்டத் துக்குள் மட்டும், சுமார் 3.25 கோடி ரூபாய்க்கு ஆறு லட்சம் லிட்டர் டீசல் வாங்கியிருக்கிறார்கள். கூடங்குளம் அணுஉலை 1 துவங்கியதாகச் சொல்லப்படும் அக்டோபர் 2013 முதல் பல கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கியிருக்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இவ்வளவு டீசலுக்கு என்ன தேவை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

இந்திய அணுசக்தி நிர்வாகத்தின் பொய்கள் அம்பலப்பட்டு நிற்கும் தருணம் இது.  தொடங்கப்பட்ட காலத்தில் அணுசக்தி துறை மீது அபரிமிதமான நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் அந்த நம்பிக் கையை அணுசக்தித்துறை காப்பாற்றவில்லை என்பதுதான் உண்மை. 1970களில் அந்த துறையின் குறிக்கோள் 2000ஆம் ஆண்டில் 43,500 மெகாவாட் மின்சாரம்.

ஆனால் உண்மையில் அவர்களால் உற்பத்தி செய்ய முடிந்ததோ 2720 மெகாவாட்தான். நம் நாட்டில் கடந்த வருடம் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மின்சாரத்தில் அணு சக்தியின் பங்கு வெறும் 2.8 சதவிகிதம் மட்டுமே. ஆனால் அதற்கு செலவிடப்படும் தொகை சொல்லி மாளாது. அணுசக்தி ஒரு தோல்வியடைந்த தொழில்நுட்பம் என்பதற்கு இதுவே சான்று.

கூடங்குளத்தைப் பொறுத்த வரையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட்டதாக ஒரு நாள் அறிவிக்கப்பட்டது. அது அன்று ஒரு நாள் மட்டுமே. அதன் பிறகு கூடங்குளம் அணுவுலையில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் பற்றி எந்த வொரு செய்தியும் வரவில்லை.

koodamkulam 350கூடங்குளம் அணுவுலைக் கழிவுகளை எங்கு வைப்பது என்ற பிரச்னை வந்த போது கோலாரில் வைக்கலாம் என்று அப்போதைய மத்திய அரசு முடிவு செய்தது. விஷயம் கேள்விப்பட்ட கோலாரின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஒரே நாளில் முடிவை மாற்றியது மத்திய அரசு. இப்போது அணுக்கழிவுகள் கூடங்குளம் அணு வுலையிலேயே இருக்கும். 

கேரளாவில் அணுமின் நிலையங்கள் கட்டுவதை அம்மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கடுமையாக எதிர்த்து வருகிறார். இத்தனைக்கும் கூடங்குளத்திலிருந்து அதிக மின்சாரம் வேண்டும் என்று கேரளாகோரி வருகிறது. ஆனால் தனது எல்லைகளுக்குள் அணுவுலைகளுக்கு இடம் தரத் தயாரில்லை.

நாளைய தலைமுறையும் அடுத்தடுத்த தலைமுறைகளும் தமிழ் நாட்டிலும் பாதுகாப்போடு வாழ வேண்டும் என்று போராடுகிறவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்களா?

இந்த மக்களுடைய எளிய கோரிக்கைகளைக் கொண்டு சேர்ப்பதற்காக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக இயக்கங்களையும் சந்தித்து வருகிறோம். அந்த மக்கள் எதிர்பார்ப்ப தெல்லாம் இவைதான்.

1. கூடங்குளத்தில் 3,4 அணுவுலைகள் நிறுவப்படக் கூடாது.

2. அணுவுலைகள் 1 மற்றும் 2ஐ பற்றிச் சுதந்திரமான விசாரணை தேவை.

3. இந்தியாவின் அணுசக்திக் கொள்கை குறித்து மறுஆய்வு  செய்யப்பட வேண்டும்.

Pin It