யானைக்கு மதம் பிடித்தால் எப்படி நாச விளைவுகளை ஏற்படுத்துமோ, அப்படித்தான் மத வெறியர்களால் இன்று நாடு நாசமாகிக் கொண்டிருக்கிறது.

உத்திரப் பிரதேசத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரின் உடைகளை உருவிக் கேவலப்படுத்தி இருக்கிறார்கள், ஒரு காவல் நிலையத்தின் முன்னே.

இக்லக் என்பவர் மட்டிறைச்சி சாப்பிட்டார் என்று, மத வெறிக்கும்பல் அவரை அடித்துக்கொன்றிருக்கிறது. நோயினால் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக, ஒருவரைக் கொல்ல இன்னொரு மதவெறிக்கும்பல் முயற்சி செய்திருக்கிறது ஆக்ராவில்.

பகுத்தறிவு பேசியதற்காக கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரைச் சுட்டுக்கொன்றார்கள் மதவெறியர்கள். அடுத்த கூறி கே.எஸ்.பகவானுக்கு வைத்திருந்திருக்கிறார்கள் இந்தக் காவிகள்.

இனவெறி மதவெறியைத் தூண்டும் வகையில் பா.ஜ.க. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்து அமைப்புகளும் இதே வேலையைச் செய்துக்கொண்டிருக்கின்றன.

இதுகுறித்துப் பிரதமர் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசியதில்லை.

இப்படி மத, இனவாதம் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சொல்கிறார், அவர்கள் பேச்சுக்கும் பா.ஜ.க.வுக்கும் சம்பந்தம் இல்லை என்று.

ஆட்சியாளர்களின் வாள் வலிமையைவிட எழுத்தாளர்களின் எழுதுகோலுக்கு வலிமை அதிகம். அப்படிப்பட்ட எழுத்தாளர்களே நொந்து நூலாகி, இப்பொழுது கொதித்து எழத் தொடங்கிவிட்டார்கள், இந்துத்துவ வெறிக்கு எதிராக.

நேருவின் சகோதரி விஜயலட்சுமியின் மகள் நயன்தாரா சேகல், எழுத்தாளர் உதய் பிரகாஷ், கவிஞர் வாஜ்பாய் ஆகியோர் தமக்குக் கிடைத்த சாகித்ய அகடமி விருதைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

கன்னட சாகித்ய அகடமி விருது பெற்ற 6 எழுத்தாளர்கள் அவ்விருதுகளைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

மராத்திய உருது எழுத்தாளர் ரகுமான் அப்பாஸ், மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் என்று எழுத்தாளர்கள் தங்களுக்குக் கிடைத்த சாகித்ய விருதுகளைத் திருப்பித் தந்து கொண்டிருக்கிறார்கள். சாகித்ய அகடமிக் குழுவிலிருந்து சசிக்குமார் பாண்டே, கே.சச்சிதாநந்தன், பி.கே.பரகத், ரவிக்குமார் ஆகியோர் விலகிவிட்டார்கள்.

“நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்தே நாட்டில் பீதி ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது. மத நல்லிணக்கமும், மதச்சார்பின்மையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. விரும்பிய உணவை உண்பதற்கும், நேசிப்பவரைத் திருமணம் செய்வதற்கும் சுதந்திரம் இல்லை. தற்போதைய நிலை நேருக்கடிக் காலக் கருப்பு நாள்களை விட மோசமாக உள்ளது.” என்கிறார் சார ஜோசப்.

ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்காரரின் நலத்தை விசாரிக்கும் மோடிக்கு, மதிப்பு வாய்ந்த எழுத்தாளர்களின் கோபக் குரல் கேட்கவில்லை. இந்நிலை, மோடி ஆட்சியில் இருக்கும் வரை நீடிக்கும் என்றே தெரிகிறது.

தந்தை பெரியாரின் கைத்தடியும் புரட்சியாளர் அம்பேத்கரின் பேனாவும் தடுத்து நிறுத்திய இந்துத்துவ சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டிய நேரம் இது.

அன்பு ஓடுகிறது. அமைதி விரட்டப்படுகிறது. ஆறலைக் கள்வர்களுக்குப் பயந்து கொண்டு, பயணம் செய்பவர்களின் நெஞ்சில் இருக்கும் அச்சம்தான் இன்று நாட்டு மக்களிடம் நிலவுகிறது.

Pin It