மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற, தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில், 18ம் தேதி நள்ளிரவில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் சென்றடைந்தேன்.

தோழர்கள் நாக.பஞ்சு, ரெ.சு.முத்தையா, அன்பு இதயன், தமிழ்முல்லை, தமிழ்நங்கை உள்ளிட்டோர் வரவேற்றனர். 19ம் நாள் மதியம் 2 மணிக்கு மலேசிய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ சுப்பிரமணியம் விழாவினைத் தொடக்கி வைத்தார்.

அந்தக் கூட்டத்தில் அவர்கள் எனக்குச் செய்த மரியாதை, தந்தை பெரியாரின் கடைசித் தொண்டனாக உள்ளம் உவகை கொண்டது. அந்தக் கூட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ‘மாந்த நேயத்தின் மகத்தான தலைவர் தந்தை பெரியார்’ என்னும் தலைப்பில், மலேசிய மண்ணில் எனது முதல் உரையை நிகழ்த்தினேன். எனது உரை முழுவதும் செவிமடுத்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பாராட்டியது பெரும் உற்சாகமாக இருந்தது. அடுத்த நாள் காலையில் கிளம்பித் தாபா என்னும் நகரில் நடைபெற்ற பெரியார் பாசறையின், பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்வில், புதிய பார்வை ஆசிரியர் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். அன்று இரவு திரு.இலட்சுமணன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஈப்போ மாநிலம் பெரியார் பிறந்த நாள் நிகழ்விலும் கலந்துகொண்டேன். ‘தந்தை பெரியார் ஏற்படுத்திய அறிவுப்புரட்சி’ என்னும் தலைப்பில் சுமார் 50 நிமிடம் உரை நிகழ்த்தி விட்டுக் கிளம்பினோம். இந்த இரண்டு நாள்களும் தோழர் மாணிக்கம் எங்களுடன் உறுதுணையாக உடனிருந்தார்.

21ம் நாள் ஈப்போ நிகழ்வு முடிந்து கோலாலம்பூர் திரும்பினோம். அன்று கெந்திந் மலைச் சுற்றுலா அழைத்துக் சென்றனர். மலேசியா என்கின்ற மலை நாட்டைத் தமிழன் வந்து, காடு திருத்திக் கழனியாக்கினான் எனும் வரலாற்று நிகழ்வுகளை அறிந்து மகிழ்ந்தேன்.

22ம் நாள் யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய நகரம் என்று அறிவிக்கப்பட்ட மலாக்கா மாநிலத் தலைநகர் மலாக்காவில், ‘அடுத்த நூற்றாண்டுக்கும் உரிய தலைவர் பெரியார்’ என்னும் தலைப்பில், தோழர் அன்பரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழா கூட்டத்தில் உரையாற்றினேன். புதிய மக்களிடம் பெரியாரின் கருத்துக்களைச் சொல்லி முடித்தவுடன் அந்த மக்களிடம் பெரியார் குறித்துத் தனியாக உரையாடிவிட்டு தோழர் அன்பரசன் இல்லத்தில் இரவு உணவு முடித்துத் தங்கினோம்.

23ம் நாள் காலையில் தோழர் அன்பரசன் எங்களை மலாக்கா என்ற அந்த நகரின் ஒரு குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே 200க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் இருந்தனர். அவர்கள் பெயரில் தமிழ் இருந்தது. ஆனால் தமிழ் பேசத் தெரியாத ஒரு சமூகத்தைச் சந்தித்தோம். அப்போது தான், ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவன் மொழியை முதலில் அழிக்க வேண்டும் என்ற வரிகள் நினைவில் வந்து நிழலாடின. கனத்த இதயத்தோடு அங்கிருந்து கிளம்பினோம். மலேசிய நாட்டின் எல்லைப் பகுதியில் ‘பெரியார் ஊட்டிய சுயமரியாதை’ என்னும் தலைப்பில், தோழர் ரவிச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில், படித்த ஆனால் பெரியாரியலை அறியாத மக்களிடம் உரையாற்றினேன்.

24ம் நாள் காலை ஜெலீகர் பகுதியிலிருந்து கிளம்பி, மலேசியத் தலைநகர் கேலாலாம்பூருக்குச் சென்றோம். சிலாங்கூர் மாநிலம், பெட்டாலிங் ஜெயா பகுதியில், விவேகானந்தா தமிழ்ப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அய்யாவின் 137வது பிறந்த நாள் விழாவில், ‘ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீ அவர்களின் ‘திராவிடத்தால் எழுந்தோம்’ என்ற நூலில் இருந்து பல்வேறு உதாரணங்களை எடுத்துக்காட்டி உரையாற்றியது நிறைவாக இருந்தது.

பல்லடம் கட்டடப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் பொறியாளர் தனபாலுடன் மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் தோழர் நாக.பஞ்சு, தோழர் தமிழ்முல்லை, தோழர் அன்பு இதயன் ஆகியோர் அனைத்து நிகழ்வுகளிலும் உடனிருந்து நீங்கா நினைவுகளுடன் விடைதந்தனர்.

மனம் நிறைந்த மலேசியப் பயணம் பல்வேறு மாற்றங்களை என் நினைவிலும் வாழ்விலும் உருவாக்கியது எனலாம்.

Pin It