தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் விஜய் அந்த முதல்வர் பொறுப்பின் தன்மையை மறந்து ஏதோ ஒரு நாலாந்தரப் பேச்சாளர் போல, திமுகவைத் திட்டுவதுதான் தன்னுடைய ஒரே குறிக்கோள் என்பது போலப் பேசி வருகிறார்.
புதிதாகப் பொறுப்பேற்ற ஒரு முதலமைச்சர் இந்த மாநிலத்திற்கான நலத்திட்டங்களை எந்த வகையில் எல்லாம் செய்யப் போகிறோம் என்று இதுவரையும் சொல்லவில்லை. மாறாக எதற்கெடுத்தாலும் சம்பந்தம் இல்லாமல் திமுக கழகத்தை திட்டுவது ஒன்றே தீர்வாகிவிடும் என்று நினைக்கிறாரார் அவர்.
பெரியார் காட்டிய வழியில் அண்ணா காட்டிய வழியில் என்னுடைய ஆட்சி நடக்கும் என்றுவேறு சொல்கிறார் அவர். இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரு பார்ப்பனரை நியமித்திருப்பதன் மூலமாகவே அவருடைய பெரியார் காட்டிய வழி அம்பலமாகி நிற்கிறது.
பேரறிஞர் அண்ணாவின் பேச்சு பாராளுமன்றத்தை அதிர வைக்கும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் பொறுப்பேற்ற அவர் பேசும்போதும், விவாதங்களுக்கு, உறுப்பினர்களின் வினாக்களுக்குப் பதில் சொல்லும்போதும் அவர் பேச்சில் ஓர் உயிர்ப்பு இருக்கும். ஆனால் பேசத் தெரியாத பொம்மையாய் பேரவையில் இருக்கும் விஜய் சொல்கிறார் அண்ணா வழியில் அவரின் ஆட்சியாம்.
விஜய் பொறுப் பேற்ற இந்த 21 நாள்களில் அதிமுகவினுடைய சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்தின் மூலமாக வாங்கி தன்முடைய அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறாரே ஒழிய, வேறு எந்த ஒன்றையும் மக்களுக்காக செய்யவிலலை.ஒரு பள்ளிக்கூடத்துப் பையனை போல காலையில் சீருடை அணிந்து கிளம்பி வருகிறார், மதியம் வீட்டிலிருந்து வந்த டிபன்பாக்ஸ்சில் உணவை சாப்பிடுகிறார், இல்லை சாப்பிடுவதாக நடிக்கிறார். மாலை மணி அடித்தால் கிளம்பிவிடுகிற பள்ளிக்கூடப் பையனை போல கிளம்பி விடுகிறாராம் வீட்டுக்கு. எல்லாம் சரி, என்ன வேலையைச் செய்தார் அலுவலகத்தில்? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. சிறுமியர் உள்படப் பாலியல் வன்கொடுமைகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தது அரசு?
அஜித்குமார் என்கின்ற ஒரு இளைஞர் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட பொழுது அவரது பெற்றோரிடம் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருத்தம் தெரிவித்து ஆறுதல் சொன்னார். அது மனித மாண்பு.
ஆனால் கோவை சூலூரில் பத்து வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். அந்தக் குழந்தையின் இறப்புக்கு இன்றைய முதல்வர் விஜய் இதுவரை எந்த ஒரு பதிலும் சொல்ல வில்லையே?
பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் சிங்கப் பெண்கள் பாதுகாப்பு படை என்று சொல்கிறார், மேடையில். அடுத்து செய்தியாளர்கள் சந்திப்பைப் பார்த்து ஓடுகிறார்.
என்னதான் செய்துகொண்டு இருக்கிறார் முதலமைச்சர்? தைரியாகச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கிச் சொல்வாரா? சொல்ல வேண்டும்!
- சிற்பி செல்வராசு