மாணவர் பருவம் தொட்டு தந்தை பெரியாரை, அன்னை மணியம்மையாரை, தமிழர் தலைவர் ஆசிரியரை நேரில் பார்த்தும் பேசியும் அவர்களின் கட்டளைகளுக்கு ஏற்ப கழகப் பணியாற்றியவரும், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவருமான, இன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்களுள் ஒருவருமான வடலூர் துரை. சந்திரசேகரன் அவர்களுடன் சில நிமிடம்...

நேர்காணல் மு.சி.அறிவழகன்

அன்னை மணியம்மையார் பிறந்தநாளை ஏன் எழுச்சியோடு கொண்டாடப்பட வேண்டும்...?

அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் மறைவுக்குப்பின் உடல் நலம் குன்றிய சூழலிலும் பெரும் புயலுக்கு நடுவே ஒளிவிளக்கைப் பாதுகாப்பாக அணையாமல் கொண்டு செல்லும் நிலையில் திராவிடர் கழகத்தை வழிநடத்திச் சென்றவர்.

durai chandrasekaranதந்தை பெரியாரின் மறைவுக்குப் பின் திராவிடர் கழகம் இருக்குமா? என்று வெகுளித்தனமாக கேள்வி கேட்டவர்கள் உண்டு. விசமத்தனமாக ஆசைப்பட்டவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தருவது போன்று அன்னையார் செயல்பட்டதுதான் வியப்பு.

பல்லாயிரம் பேர் திரண்டிருந்த அந்த துயரச் சூழலில் அன்னையார் சொன்னார்..... 30 ஆண்டு 3 மாதம் 13 நாட்கள் பெரியாருடன் இருந்தேன், அவரால் வாழ்ந்தேன்.... அவருக்காக வாழ்ந்தேன். இனியும் அவரின் கொள்கைக்காக வாழ்வேன். . . அவரின் இயக்கத்துக்காக வாழ்வேன் என்ற உறுதி முழக்கத்தை வெளிப்படுத்திய விந்தை... அனைவர் உள்ளத்திலும் பால்வார்த்தது.

பெரியாரின் இயக்கத்துக்கு - பகுத்தறிவு இயக்கத்துக்கு ஒரு பெண்மணி தலைமை தாங்கியதும், விராங்கனையாய் செயல்பட்டதும் ஒரு உலக சாதனைதான்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகக் கோரி அஞ்சலகங்கள் முன்னால் அறப்போர் நடத்தினார்...

அதைத் தொடர்ந்து தமிழகம் வந்த மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நிகழ்த்தினார்...

‘மிசா’ எனும் கருப்புச் சட்டத்தை ஏவி ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது அவருக்கு எதிராகத் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம் ‘கருப்புக்கொடி காட்டி” ‘திரும்பிப் போ” என முழங்கிய தீரமிகு அன்னையாராய் சென்னையை குலுங்கச் செய்து நூற்றுக்கணக்கானத் தோழர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு காராகிருகத்தில் அடைக்கப்பட்டனர்.

Thiru. Ravana Vs. Sri Rama. . . வீராங்கனையாய் அன்னையாரை இந்தியத் துணைக் கண்டமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் நடத்தப்பெற்ற நிகழ்வு ‘இராவண லீலா”. ஆம், டெல்லியில் ‘ராம் லீலா” நடத்தப்பட்டு இராவணன் உருவம் தீயிட்டு எரிப்பது என்பது தென்னாட்டு மக்களை, குறிப்பாகத் திராவிடர்களை இழிவுபடுத்தும் செயலாகக் கருதுகிறோம், கதையாக கற்பனையாக, கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதில் தமிழர்கள் இழிவுபடுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. இராம் லீலா அங்கே நடந்தால் இங்கே ‘இராவண லீலா” நடத்துவோம், ‘பேடி’ இராமன் உருவத்தை எரிப்போம்” என்றார் அன்னையார். அதுபோலவே ‘இராவண லீலா” நடத்தப்பட்டது சென்னையில் உணர்வுப் பேரலையாய், எழுச்சி எரிமலையாய் தோழர்கள் ஆயினர். திட்டமிட்டவாறு சென்னை பெரியார் திடலில் இராவண லீலா நடந்தது. அன்னை மணியம்மையாரும் மேலும் தோழர்கள் சிலரும் கைது செய்யப்பெற்றனர். வெற்றிகரமாக அன்னை இட்டதீ மூண்டு இராமனை, இலட்சுமணனை, சீதையை சுட்டுப் பொசுக்கியது - நாள் 25.12.1974

இல்லஸ்டிரேட் வீக்லி ஏடு இந்நிகழ்வைப்பற்றி எழுதும்போது Thiru. Ravana Vs. Sri Rama... என தலைப்பு போட்டு கழகத்தின் போராட்டத்தை விளக்கி போராட்டத்தின் நியாயத்தை உலகறியச் செய்தது.

கருணை மழை மேகத்தைக் காலம் காக்கும் என்பார்கள். அப்படித்தான் அன்னையார் 1976இல் மிசா கொடுமைக்கு ஆட்பட்டு எப்போது விடுதலை என்று தெரியாமல் சிறையிலடைக்கப்பட்டு இருந்த தோழர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று தக்க உதவிகளை செய்ததுடன், ஆறுதலை, தைரியத்தை குடும்பத்தினர்க்கு வழங்கினார்.

வீட்டுக்கு வீடு பெண்ணைப் பூட்டி வைத்து பழங்கதை பேசும் நாடு நம் நாடு. பெண்ணுக்கு வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்த சூழலில் 1943இல் அன்னையார் பெரியாருக்கு சேவை செய்ய தம் வீட்டை விட்டு வெளியே வந்தது என்பது எப்பேர்பட்ட செயல்?

இளமையை-வாழ்வை ஒரு தலைவருக்காக, ஒரு இயக்கத்துக்காக தத்தம் செய்யும் மனத்துணிவு எத்தனைப் பேருக்கு வரும்? பெண் குலத்தின் பொன்விளக்காய் அம்மா வந்தார். அய்யாவுக்கு அருந்தொண்டாற்றினார்.

இயக்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடாக பெரியார் செய்த ஏற்பாடு தான் பெரியார்-மணியம்மை திருமணம் என்பது. தனிப்பட்ட ஆசாபாசத்துக்கு இடமே இல்லை. ஆனால் எத்தனை ஏச்சு, பேச்சு, ஏகடியம், கண்டனம், நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அத்தனையையும் தாங்கிக்கொண்டு தான் கே.ஏ.மணி ஈ.வெ.ரா.மணியம்மையானார். அறிஞர் அண்ணா சொன்னதைப் போல் ‘தந்தை பெரியாரின் நீண்ட ஆயுளின் இரகசியம் அன்னை மணியம்மையார்தான் என்பதற்கொப்ப பெரியாரை 95 ஆண்டு காலம் பாதுகாத்து பெருமை பெற்றார்.

அய்யா பெரியாருக்குப்பின் இயக்கத்தைப் பாதுகாத்ததைப் போல, தமது மறைவுக்குப் பின்னாலும் இயக்கம் கட்டுக்கோப்பாக இயங்கிட, அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாப்பாக நிறுத்திட ஆசிரியர் அய்யா அவர்களை பெரியார் அறக்கட்டளை, பெரியார் மணியம்மை அறப்பாதைக் கழகம் இவற்றின் ஆயுட்கால செயலாளராக நியமனம் செய்து சென்ற செயல் சாதாரண செயல் அல்ல, பெரியாரின் ஏற்பாடு, எண்ணம் எந்த அளவு சரியானது என்று மெய்ப்பித்தார் அம்மா.

கவிஞரின் எழுத்துப்படி மணியம்மையார்-பெண்ணில் மணிதான், இயக்கத் தோழர்கள் அனைவர்க்கும் அவர் கண்ணில் மணிதான்.

புதிய கல்விக்கொள்கை, நீட் இதை எப்படி பார்க்கிறீர்கள்...?

கல்வி 1976 வரை மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. மாநில உயர்வு, மொழி, பண்பாட்டுக் கூறுகளை கல்வியின், மூலம் வழங்கிடும் வாய்ப்பு அதனால் உண்டு, தாய்மொழி வழிக்க்ல்வி பாடத்திட்டம், தேர்வுமுறை என கல்விக்கான வளர்ச்சி நோக்கிய முடிவுகளை மாநில அரசே முடிவெடுத்திட முடியும். 3.1.1977 முதல் கல்வி மாநிலப்பட்டியலிலிருந்து மத்திய அரசின் மேலாதிக்கம் கொண்ட ‘பொது அதிகாரப்பட்டியலுக்கு, வஞ்சகமாகக் கொண்டு செல்லப்பட்டது, அதன் மூலம் பல்வேறு இழப்புகளை, உரிமைகளை கல்வி சந்திக்க வேண்டிய அவலநிலை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டது.

வாஜ்பேய் ஆட்சிக்காலத்தில் மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சராக முரளிமனோகர் ஜோஷி எனும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடம், வேதக்கல்வி, வேத பொறியியல், யோகா என்றெல்லாம் புகுத்தியதும், சமாஸ்கிருதமயப்படுத்த முனைந்ததும் எதைக் காட்டுகிறது? தமிழ்நாட்டில் காமராசர் பல்கலைக் கழகத்தில் நுழைக்கப்பட்டதா இல்லை?

2001 மக்கட்தொகை கணக்குப்படி 102.86 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 14,135 பேர் மட்டுமே பேசுவதாக பதிவு செய்துள்ள சமஸ்கிருதத்தை கல்வித்திட்டத்தில் நுழைத்திட முனைவதன் காரணம் என்ன? செத்த மொழி என்று உலகில் அறியப்பட்ட ஒரு மொழிக்கு சிங்காரம் தேவையா? சடங்கு மொழியாக-மந்திர ஸ்லோகங்களாக இருக்கும் ஒரு மொழியை பாடத்திட்டத்தில் நுழைப்பதா? இதற்காகத்தான் தேசிய புதிய கல்விக் கொள்கையா? வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசத்தில் ஒரே கல்விக் கொள்கை எப்படி சாத்தியம்? தேசியம் என்ற பேரால் எதுவந்தாலும் நாம் எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

கிராமங்கள் தோறும் கல்வி என்பதை ஒழிக்க, சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்க, குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவிக்க, மாணவர்களை பல்வேறு முறைகளில் வடிகட்டி, மிண்டும் ஒரு குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வரவே தேசிய கல்விக் கொள்கை. மதச்சிறுபான்மை, மொழிச் சிறுபான்மையரின் பள்ளிகளை - உரிமைகளை நசுக்கவே இந்த கொள்கை.

பல்வேறு மத, மொழி, தேசிய இனங்கள் என பரந்து வாழும் பன்முகத் தன்மை உடைய நாட்டில், பல்சமுதாய பிரதிநிதித்துவம் இல்லாத வெறும் இந்துத்துவா-ஆர்.எஸ்.எஸ். குழுவால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை எப்படி அனைவருக்கும் பொதுவானது என்று ஏற்றுக் கொள்ள முடியும்? ஒற்றை ஆரிய கலாச்சாரத்தை திணிக்க முயலும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து முறியடிக்க வேண்டியது நமது கடமை. திராவிடர் கழகம் புதிய தேசிய கல்விக் கொள்கையை அதனால் தான் எதிர்த்து செயலாற்றுகிறது.

அதுபோலவே தேசிய பொது நுழைவுத் தேர்வு என்பதும் மோசடியானது. தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதற்காக, ஏழை-எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவ ஆசையை முளையிலேயே கிள்ளி எறிவதற்காக மோடி அரசால் கொண்டுவரப்பட்டதே ‘நீட்” 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து பெறும் மதிப்பெண்ணுக்கு எந்தவித மரியாதையும் இல்லையாம் - ‘நீட்”டில் பெறும் மதிப்பெண்ணே எம்.பி.பி.எஸ். சேர்க்கையை தீர்மானிக்கும் என்றால் இது மோசடியான முறைதானே. அரசாலும், நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்ட நுழைவுத் தேர்வு முறையை மத்திய அரசு வேண்டும் என்றே நீட் என்ற பேரால் கொண்டு வருகிறது என்றால் - மாநில உரிமையை பறித்திடும் சூழ்ச்சி தானே. தமிழநாட்டில் 90 சதவிகித மாணவர்கள் மாநில பாடத்திட்ட முறையில் படிப்பவர்கள். 10 சதவிகித பேரே மத்திய பாடத்திட்ட முறையில் (சி.பி.எஸ்.இ.) படிப்பவர்கள். சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையிலேயே ‘நீட்” தேர்வுத்தாள் தயாரிக்கப்படும் என்றால் சமபோட்டிக்கான வாய்ப்புண்டா? தமிழில் சி.பி.எஸ்.இ. பாட நூல்கள் உண்டா? கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை எந்த அளவு பாதிக்கும்? அதனால் தான் அரியலூர்-குழுமூர் அனிதா ‘நீட்”டை எதிர்த்து தமது உயிரையே ஈகம் செய்ய வேண்டிய அவலம். 1200க்கு 1176 மதிப்பெண் வாங்கிய தாழ்த்தப்பட்ட ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அனிதாவுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் இடம் கிடைக்காமல் செய்ததே ‘நீட்”

இந்தியா முழுவதும் ஒரே முறையான நுழைவுத் தேர்வு என்று ஏன் சொல்கிறது? வடநாட்டு மாணவர்களை, பார்ப்பனர்களை தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் நுழைப்பதற்கே.

சமூகநீதி மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதான கல்விக்காக.... நாட்டின் முன்னேற்றத்தின் வளர்ச்சிக்கும், பயன்படும் கல்விக்காக, அனைத்து மக்களுக்குமான கல்விக்காக சமத்துவ சமுதாயத்தை நோக்கிய கல்விக்காக நாம் ‘நீட்” தேர்வை எதிர்க்கிறோம். எவ்வளவு காலம் போராடுவது என்று நீங்கள் கேட்கலாம். நீட் அகற்றப்படும் வரை நமது போராட்டம் ஓயாது என்பதே திராவிடர் கழக நிலை. ‘நீட் நீட்டானது அல்ல, நேர்மையற்றவர்களால், மோசடிப் பேர்வழிகளால் கொண்டு வரப்பட்ட மாநில உரிமையை, நமது மருத்துவக் கனவை பறிப்பதற்காக கொண்டு வரப்பட்ட மோசடி தேர்வு முறையே ஆகும். நீட்டை முறியடித்திட டெல்லியிலேயே களம்காண இருக்கிறது திராவிடர் கழகம்.

கடவுள் - மதம் – மூடநம்பிக்கை இம்மூன்றையும் எப்படி பார்க்கிறீர்கள்...?

மூடநம்பிக்கை என்பது தொற்று நோய் போல, கால வெள்ளத்தில் மக்களை காவு கொள்ளும் கொள்ளை நோய் என்று கூட சொல்லலாம். மூடநம்பிக்கை மனித வளர்ச்சிக்குத் தடை. அறிவு வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி மனப்பான்மைக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் தடை. அச்சமும், ஆசையும், தன்னம்பிக்கை இன்மையுமே மூடநம்பிக்கைக்கு அடிப்படை. நகர்ப்புற             மக்களைக் காட்டிலும் கிராமப்புற மக்களே பெரிதும் மூடத்தனத்துக்கு இலக்காகின்றனர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போகின்றனர்.

புற்றீசல் போல மூடநம்பிக்கைகளை மூலதனமாகக்கொண்டு போலிச் சாமியார்கள் புறப்படுவதும் பிரேமானந்தாக்கள் முதல் நித்யானந்தாக்கள் வரை, சாயிபாபா முதல் சங்கராச்சாரி வரை, கல்கி, அமிர்தா, பங்காரு என எத்தனை எத்தனை அவதாரங்கள் உலாவருவதும் மக்களை மயக்கி உல்லாசிகளாக வாழும் அவலம் நம் நாட்டில் தான் அதிகம்.

குறிசொல்வோராக - அருள்வாக்கு அருள்பவராக - பரிகார பூசை நடத்துபவராக - யாகயோகங்கள் செய்பவராக - தோஷம் கலைப்பவராக - மோசம் செய்வோரின் எண்ணிக்கை இந்து மதத்துக்குள்ளே ஏராளம்... ஏராளம்...

கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், மோசடி, போதை, விருந்துகள், சூழ்ச்சிகள், முறைகேடுகள், ஏமாற்றுவித்தைகள் அவர்கள் மூலம் சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்றன. சாமியார்களின் வண்டவாளங்களை திராவிடர் கழகம் மக்கள் மத்தியில் பரப்பினாலும் அவர்கள் மீதான மோகம் குறைந்துள்ளதா? ஒருவன் போனால் இன்னொருவன் வந்துகொண்டே இருக்கிறான். இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளைத் தகர்த்து பகுத்தறிவுப் பாதையில் உங்களை பயணிக்கச் செய்யவே பெரியார் வழியில் நாங்கள் போராடி வருகிறோம்.

மூடநம்பிக்கைகளின் தாய் கடவுள் நம்பிக்கையே. மதம் பற்றுதலே. கடவுள் நம்பிக்கை மனிதனின் மூளைக்கு போடப்பட்ட விலங்கு. தளைகளிலே கொடிய தளை மூளைக்கு இடப்பட்ட தளைதான். அறிவு அற்றம் காக்கும் கருவி என்கிறது வள்ளுவம். அறிவுக்குத் தடை என்கிறது மவுடீகம். அறிவுக்கு விடுதலை தா என்கிறது பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம். கையிலோ, காலிலோ விலங்கு பூட்டப்பட்டிருந்தால் கண்ணுக்கு உடனே தெரியும் - உடைத்துக்கொண்டு விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.

ஆனால் மூளைக்கு போடப்பட்டுள்ள விலங்கு உடனடியாகத் தெரியாததால்.... விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கை தாமதமாகிறது. தத்துவப் பேராசான் தந்தை பெரியார் தமிழனின் மூளைக்குப் போடப்பட்டள்ள விலங்கை ஒடிக்க வந்த பகுத்தறிவுப் பகலவன். அவரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமும், திராவிட கழகமும் தொடர்ந்து பெரியாரின் எண்ணத்தை ஈடேற்றி மக்களின் உள்ளத்திலிருந்து, பழக்கவழக்கத்தில் இருந்து கடவுள் - மத - வேத - இதிகாசப்புரட்டுகளை வெளியேற்றி புதியதொரு பாதையில் நடை பயிலச்செய்ய உழைத்து வருகிறது.

அந்த வகையிலே தான் காமலாபுரத்தை பெரியார் புரமாக - பகுத்தறிவு புரமாக மாற்றிட மான உணர்ச்சியும், அறிவு வளர்;ச்சியும் உள்ளவர்களாக ஆக்கிடும் அறிவார்ந்த பரப்புரை நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கட்சியால், ஜாதியால், மதத்தால் மாறுபட்டு நிற்கும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவும், உரிமையுள்ளவர்களாய் ஆக்குவதற்காகவும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையிலே பாடுபட்டு வருகிறோம். எங்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. மானுடப்பற்று ஒன்றையே கொண்டு போராடி வருகிறவர்கள் நாங்கள் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இருக்கக்கூடாது - சமத்துவ சமுதாயம் படைக்கப்பட வேண்டும் என்று பாடுபட்டு வருபவர்கள் நாங்கள்.

தாங்கள் பொதுச் செயலாளரக அங்கம் வகிக்கும் திராவிடர் கழகம் பற்றி ..?

படிப்பு மறுக்கப்பட்ட மக்கள் நாம். அதனால் வேலை வாய்ப்புக்கு செல்ல முடியாதவர்களானோம். உரிமையும், வாய்ப்பும் மறுக்கப்பட்டவர்களாகக் கிடந்தோம். அடிமைப்படுத்தி ஆதிக்கம் செய்தது ஆரியம். உழைக்காது வாழ பார்ப்பனர்களால் முடிந்தது: உழைத்தும் வாழக் கதியற்றோராக கிடந்தோம் நாம். உற்று நோக்கினார் பெரியார். உடைத்து நொறுக்கினார் பார்ப்பனர் தம் மேலாதிக்கத்தை. எழுச்சி பெற்றோம் - ஏன்? எல்லாமும் பெற்றவரானோம். காரணம் பெரியாரும், பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகமுமே. இன்று வரை தமிழ் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கேடாய் எது வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வீழ்த்தும் பணியிலே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களே முன் நிற்கிறார்.... முனைப்பு காட்டுகிறார்.

அவரின் தலைமையிலே இயங்கிடும் திராவிடர் கழகத்திலே... தன்மான பகுத்தறிவு இயக்கத்திலே இளைய தலைமுறையே சேரவாரீர். ஊராரே வாரீர். திராவிடர் கழகம் ஒப்புமை இல்லா இயக்கம். மனித சமத்துவத்துக்காக போராடிவரும் இயக்கம். உண்மை - நேர்மை - நியாயம் - எளிமை இவற்றை கவசமாகக் கொண்டு சமரில் ஈடுபட்டுள்ள இயக்கம். இன்னமும் நிறைய பேர் சேருங்கள். பெரியார் கொள்கை எனும் ஒளிவீச்சால் உயர்வு பெறட்டும் உங்கள் ஊர். அனைத்து விதமான ஒடுக்குமறையிலிருந்தும் மக்களை மீட்டெடுத்து விடுதலைக் காற்றை, சமத்துவக் காற்றை எல்லோரும் சுவாசிக்க பெரியாரை நேசியுங்கள். பெரியாரின் நூல்களை வாசியுங்கள், வாழ்வில் வளம் பெருகும்: நலம் சூழும்.

பெரியார் சிலை உடைப்பு இதை எப்படி உணர்கிறீர்கள்...?

தேன்கூட்டிலே விரலை விட்ட கதை போல....

பாம்பு புற்றிலே கைவிட்ட கதை போல...

தீக்குள் விரல்பட்டதை போல்...

தமிழ் மக்களின் மானத் தலைவர் பெரியார். சமநீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிடைக்கச் செய்த பெம்மான். உழைத்து உருக்குலைந்த கூட்டத்தின் வாழ்வுரிமைக்கு வழிகாட்டிய தீரர். பெண்ணடிமைப் போக்கி, பெண்ணுரிமை பெற்றிட புயலைப்போல் சீரிய சீலர். கடவுள்-மத-புராணம்-இதிகாச-சாஸ்திர-சம்பிரதாய மடமைச் சரக்குகளை மண்ணுக்குள் இட்டு மூடிட சளைக்காது சமர்புரிந்த போராளி. தமிழர்களின் முகவரி. சுருக்கமாகச் சொன்னால், அவரின் சிலையை உடைப்பேன் என்றான் ஒரு உளுத்தன். பேரலையாய் நாடெல்லாம்... தமிழர் வாழும் ஊரெலாம் எழுச்சிப் பிரவாகம் உடைத்துப்பார் உளுத்தனே உருத்தெரியாமல் ஆக்குவோம் உன்னை... உன் கூட்டத்தை என ஆர்த்தெழுந்தது தான் தாமதம்... அந்த உளுத்தன் சொன்னான்... நானில்லை என் அட்மின் என்று. இதுநாள் வரை எந்த ஒரு பிரச்சனைக்கும் பதில் சொல்லிப் பழக்கமில்லாத பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ‘சொன்னது தவறு” ‘அப்படி யாராவது செய்தால் நடவடிக்கை எடுப்போம்” ‘தலைவர்களின் சிலை மரியாதைக்குரியவை” என்றனர் 24 மணி நேர அவகாசத்தில். ஈடு இணையற்ற தலைவராய் எல்லோர் மனத்திலும் இடம்பெற்றுள்ளார் பெரியார் என்பது எல்லோராலும் உணர முடிந்தது. தமிழர் தலைவரின் எச்சரிக்கை... தமிழகத் தலைவர்களின் கோபாவேச கண்டன குரல்... தோட்டத்துப்புடலங்காய் அல்ல தமிழர்நாடு என்பதை இந்துத்துவா கும்பலுக்குப் புரியவைத்தன. தந்தை பெரியார் மண் தன்மானச் சிங்கங்களின் அணிவகுப்பு என்பதை தெரியவைத்தன... நாடெங்கும் எழுந்த அதிர்வலைகள்.

அமைதியாய் இருப்போம்: கட்டுப்பாடு காப்போம் என்பது ஒரு கட்டம் வரைதான். பெரியாரின் சிலைமீதே கைவைப்பாய் என்றால்... எதையும் இழப்பதற்கு தயாரானவர்கள் நாங்கள் என்பதை... வன்முறையை வன்முறையால் சந்திக்கத் தயார் என்பதை கருஞ்சிறுத்தை பட்டாளம் வெளிப்படுத்தியது. விளைவு மோசமாகும்... தேன் கூட்டிலே கைவைக்கிறீர்கள் பார்ப்பனர்களே... இந்துத்துவா வாதிகளே... எச்சரித்தார் தலைவர். பணிந்தனர்... பெரியாரை... அவரின் ஆளுமையை மக்கட் செல்வாக்கைப் புரிந்து கொண்டதற்கு... ஒரு வாய்ப்பு.

பெரியார் கொள்கை எனும் கவசத்தை அணிந்து நிற்கிறோம் களத்தில். எங்கள் உள்ளமெல்லாம் பெரியார் நிறைந்திருக்கிறார். அவரால் வீரியம் பெற்ற நாங்கள் எதிரிகளை களமாடிடத் தயார்... தயார்...

திராவிட இயக்கங்களின் தாய் கழகமாக இருக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பற்றி, பொதுச்செயலாளராக அய்யாவோடு தொடர்ந்து பயணிக்கும் அனுபவங்கள் பற்றி...

தந்தை பெரியாரின் அறிய கண்டெடுப்பு ஆசிரியர், பால பருவம் தொடங்கி 85 வயதை எட்டி இருக்கக்கூடிய இந்நாள்வரை கொண்ட கொள்கையில் வழுவாது பயணிப்பவர். பவள விழா கண்ட பொதுவாழ்வில் ஒரே கொள்கை, ஒரே தலைமை, ஒரே இயக்கம், ஒரே கொடி என நிலையாகத் தொண்டாற்றி வருபவர் தமிழர் தலைவர். பெரியார் கொள்கையை உலகளாவிய அளவில் கொண்டுபோய் சேர்த்தவர், பெரியாரின் விழா இன்று உலகத்தின் பல நாடுகளில் முன்னெடுக்கப்படுவதற்கு அவரே காரணம், பெரியார் காண விரும்பிய சாதி அற்ற மூடநம்பிக்கை நீங்கிய பெண்ணடிமை இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்குகின்ற பணியில் தொய்வின்றி ஈடுபட்டு வருபவர். பெரியார் காலத்தில் தமிழகம் பெற்ற இட ஒதுக்கிடு 49 விழுக்காடு இவரின் தொடர்ந்த போராட்டத்தால் இடஒதுக்கீட்டின் அளவு 69 விழுக்காடாக உயந்தது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 69 விழுக்காடு உள்ளது. மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு கிடைக்கச் செய்ததில் இவரின் பங்கு மிகையானது, மண்டல் குழு அறிக்கை அமலாக்கதிற்காக திராவிடர்கழகத்தின் பங்களிப்பு அளப்பரியது. இன எதிரிகளால் இவர் தாக்கப்பட்ட போது நாடாளுமன்றத்தில் ‘வீரமணிக்கு ஜிந்தா பாத்’ என்று வடபுலத்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் பாராட்டப்பட்டவர்.

யாருக்கும் எதற்கும் அஞ்சாது பெரியார் கொள்கையை முன்னெடுப்பவர் உலகத்தின் ஒரே பகுத்தறிவு நாளேடான 83 ஆண்டுகால வரலாறு படைத்த ‘விடுதலை’ ஏட்டின் நீண்ட கால ஆசிரியர், இடஒதுக்கிடு, பகுத்தறிவு, மொழி உரிமை, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை என்பதற்காகவே தொடர்ந்து போராளியைப் போல் போராடி வருபவர். பெரியார் கொள்கையின் பால் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை ஈர்த்து வருபவர்.

இன்றைக்கு எரியும் பிரச்சனையாக உள்ள பெரியார் சிலை உடைப்போம் என்ற இந்துத்துவா வெறியர்களின் ஆணவப் போக்கை எதிர்த்து தமிழ்நாட்டுத் தலைவர்களை ஒருங்கிணைத்ததும், இவரின் எச்சரிக்கை உடன் கூடிய கண்டனமும் எதற்குமே பதில் சொல்லாத மோடியையும் அமித்ஷாவையும் அசைத்தது 24 மணி நேரத்திற்குள்ளாக பதில் உரைக்க வைத்ததில் இவரின் ஆளுமைக்கு உதாரணம். பெரியார் மண்ணில் மதவெறிக்கோ சாதி வெறிக்கோ இடமில்லை என்ற நிலை ஏற்பட இவரின் உழைப்பு அடிப்படை.

Pin It