இந்தியாவின் தலைமைப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மோடியின் ப.ஜ.க அரசினால் நிலை குலைந்து போய் விட்டது.
2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு நிதிஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதுவும் பலவீனமாக இருக்கிறது.
மாநில அரசின் கீழ் இருந்த கல்வியை மத்திய அரசின் பட்டியலுக்குக் கொண்டு போய் அதுவும் சீர் குலைந்து கிடக்கிறது.
இப்படி நாட்டின் முக்கியமான துறைகளில் எல்லாம் சீர்கேடுகளை உருவாக்கிய பிரதமர் மோடி உலகம் சுற்றிக் கொண்டிருப்பதை வேலையாகக் கொண்டிருக்கிறார்.
எப்போதாவது இந்தியாவுக்கு வந்தால் ஏதாவது குளறுபடியைச் செய்து விட்டு மீண்டும் வெளிநாடு போவது அவர் வழக்கம்.
இப்பொழுது ரிசர்வ் வங்கிக்குள் நுழைந்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக இருந்த நேர்மையான அதிகாரி ரகுராம் ராஜன் அப்பொறுப்பிலிருந்து விலக நிர்பந்திக்கப் பட்டார்.
தமக்குச் சாதகமான குஜராத்தை சேர்ந்த உர்ஜித் பட்டேல் ஆளுனராக ஆக்கப்பட்டார்.
பொருளாதார மாற்றம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வாராக்கடன் போன்றவைகளால் தடுமாறிப் போனது மத்திய அரசு.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கியின் வாராக்கடன் 2.45 லட்சம் கோடி. இப்பொழுது அது 10 லட்சத்தையும் தாண்டியுள்ளது. மல்லையா முதல் நீரவ் மோடி, மொகுல் சோக்ஷி வரை பல்லாயிரம் கோடிகளில் கடன் வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர். ரிசர்வ் வங்கி நிலை குலைந்து போனது.
வாராக்கடன் உயர்வுக்கு ரிசர்வ் வங்கிதான் காரணம் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இல்லை மத்திய அரசே முடிவுகள் எடுகின்றன என்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுனர்.
மொத்தத்தில் முக்கியத் தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனங்கள் பா.ஜ.க. மோடி அரசினால் சீர்குலைந்து போய்க்கொண்டிருக்கின்றன.
இது நாட்டுக்கும் நல்லதில்லை. மோடிக்கும் நல்லதில்லை.