தேர்தல் நெருங்கி விட்டது. இன்னும் சில வாரங்களே உள்ளன. கூட்டணிகள் பங்கீடு முடிந்து, பெரும்பான்மையான வேட்பாளர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.
யார் எந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றார்கள் என்பதெல்லாம் இனி நமக்குக் கேள்வியில்லை. திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும், வெற்றிக்கு உழைப்பதே நம் கடமை!
என்ன காரணம்? இது ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் வழக்கமான தேர்தல் இல்லை. திராவிட இயக்கத்தையே இம்மண்ணை விட்டு அழித்துவிட வேண்டும் என்று கருதும் தீயநெஞ்சர்கள், இரட்டை இலைக்குப் பின்னால் ஒளிந்து நின்று கொண்டு நடத்தும், போர் இது! சுருக்கமாய்ச் சொன்னால், சமூக நீதிக்கும், மனுநீதிக்கும் இடையில் நடக்கப்போகும் யுத்தம் என்றே இதனைக் கூற வேண்டும்.
ஏன் அவர்கள் பின்னால் நின்று அதிமுகவை இயக்குகின்றனர்? நேரடியாக அவர்களே களத்திற்கு வந்திருக்கலாமே என்று தோன்றும். நேராக வந்தால், அவர்கள் நம்மோடு போட்டியிட முடியாது. மீண்டும் நோட்டாவுடன்தான் போட்டியிட வேண்டியிருக்கும். எனவேதான், ராமனைப் போல் ஒளிந்து நின்று வாலியை வீழ்த்த வேண்டும் என்று கருதுகின்றனர்.
அதற்கு ஏன் அதிமுக இடம் கொடுக்கிறது? மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம் இருக்கத்தானே செய்யும்! அவர்கள் மடி முழுவதும் கனம் இருக்கிறது. அவர்களின் மடியில் இருக்கும் கொள்ளைப் பணம் பற்றிய முழு விவரமும் பின்னால் இருப்பவர்களிடம் உள்ளது. எனவே அவர்கள் இயக்குகின்றார்கள் இவர்கள் இயங்குகிறார்கள்.
அதிமுகவையும் அழித்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். "கழகங்கள் இல்லாத தமிழ்நாடு" என்பதுதானே அவர்கள் வைத்த மூல முழக்கம்! "இரண்டில் ஒன்றை அழி, இரண்டாம் இடத்தைப் பிடி" என்பதுதானே எப்போதும் அவர்களின் திட்டம்!
அதற்கு இந்தத் தேர்தலில் இடமில்லை என்பதால், இப்போது உள்நுழைந்து விடலாம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டுள்ளனர். எந்தத் தேர்தலிலும், தமிழ்நாட்டில் அவர்களால் கால் பதிக்க முடியாது என்பதை, ஏப்ரல் 6 அன்று விழப்போகும் வாக்குகள் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
இரண்டே செய்திகளில் நம் கவனம் பதிய வேண்டும்! ஒன்று, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி மாபெரும் வெற்றியாக இருக்க வேண்டும். இன்னொன்று, பாஜக ஓர் இடத்தில் கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது. 20 இடங்களிலும் அவர்கள் கட்டுத்தொகை இழப்பார்கள் என்றால், அதுவே பெரியார் மண் பெறப்போகும் உண்மையான வெற்றியாக இருக்கும்!
போருக்கான சங்கொலி காதில் விழுகிறது! புறப்படட்டும் திராவிடச் சேனை!!
திக்கெட்டும் உதிக்கட்டும் சூரியன்! திசையெங்கும் உதிரட்டும் இரட்டை இலை! தனக்கொரு இடமின்றித் தானே மறையட்டும் தாமரை!!!
- சுப. வீரபாண்டியன்