நாட்டின் பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்புகள் குறித்து எந்தத் திட்டமும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. குறிப்பாக மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. கிராமப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதற்கான திட்டங்களை முன் வைக்காமல் கார்ப்பரேட் நலன்களையே குறி வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக நலத் துறைக்கான நிதிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
• கிராமப்புற ஏழை மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் ரேஷன் கடைகள் வழியாக உணவு விநியோகம் என்ற இரண்டு திட்டங்களும் கடும் நெருக்கடி நிலையிலும் கிராமப்புற ஏழை மக்களைப் பாதுகாத்து வந்தன. இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இப்போது குறைக்கப்பட்டிருக்கிறது.
• கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு 61,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் (2019-20) இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.71,000 கோடி தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் 10,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 60,000 கோடி ரூபாயை விடவும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை இல்லாத் திண்டாட்டம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை நெருக்கடிக்குள்ளாக்கி இருக்கிறது. ஏற்கனவே இதில் வேலை செய்யும் மக்களுக்கு ஊதியத் தொகை உயர்த்தியிருக்க வேண்டும். அப்போதுதான் கிராமப்புற மக்களின் வாங்கும் திறனும் நுகர்வுத் திறனும் பயன்பாடும் அதிகரிக்கும்.
• உணவுப் பொருள் இருப்பு கூடுதலாக 600 டன் இருந்தும் கடந்த ஆண்டு கடும் உணவு நெருக்கடி நிலவியது. பசியால் வாடுவோரின் எண்ணிக்கை நாடு முழுதும் அதிகரித்திருப்பதை புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. இந்த நிலையில் உணவு ரேஷன் விநியோகத்தை மேலும் விரிவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில் ரேஷன் அளவை கூடுதலாக்கியிருக்க வேண்டும். ஆனால் நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் முறையில் உணவு விநியோகம் இருந்தும்கூட அது குறித்து கவலைப்படவில்லை. 2020-21க்கான உணவு மான்யமாக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 1.11 இலட்சம் கோடி. இப்போது கடந்த ஆண்டைவிட கூடுதலாக மிகக் குறைந்த அளவே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது 1.08 இலட்சம் கோடி. கடந்த ஆண்டே இத் திட்டத்துக்குத் தேவையான மதிப்பீட்டுத் தொகையைவிட குறைந்த அளவே ஒதுக்கப்பட்டது.
• கடந்த சில ஆண்டுகளாக ‘இந்திய உணவு கார்ப்பேரஷனுக்கு’ கடன் தொகையாக சிறு சேமிப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்தக் கடன் தொகையை உணவு வழங்குவதற்கான பற்றாக்குறைக்குப் பயன்படுத்துவதே இதன் நோக்கம். ஆனால் 2018-19இல் உணவு மான்யமாக அரசு விடுவித்த தொகை 1.7 இலட்சம் கோடி மட்டுமே! நிதிநிலை அறிக்கையில் இந்த தகவல்கள் இடம் பெறாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. உணவு மான்யத்தைக் கடனாக வழங்குவதுகூட உணவுத் துறையை வளர்க்கும் சீரிய திட்டமல்ல; நீண்டகால நோக்கில் வட்டி சுமையையே அதிகரிக்கச் செய்யும். உணவுத் துறை முறையாக நிர்வகிக்கப்படாததால் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது என்று கூறி உணவு கார்ப்பரேஷன் - ரேஷன் விநியோக முறையை நிறுத்தக்கூடிய ஆபத்தும் உள்ளது.
• சுகாதாரம் மற்றும் கல்வித் துறைக்கும் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது 3400 கோடி. இப்போது 300 கோடி மட்டுமே அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
• சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான ஓய்வூதியம், குழந்தைகளுக்கான அங்கன்வாடி சேவைகள், மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்கும் மதிப்பீடு செய்யப்பட்ட தொகையைவிட மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
• இப்படி மக்களின் வாழ்வாதாரத் தேவையான சமூக நலத் துறைக்கு நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டிருப்பதற்கு உள்நோக்கம் உண்டு. இந்தத் துறைகளை அரசு கை கழுவி, தனியார் துறைக்குக் கொண்டு போக முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. மாவட்ட தலைநகர்களிலுள்ள அரசு மருத்துவமனைகளில் தனியார் துறையும், இணைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பதிலிருந்தே அரசின் கொள்கை தனியார் துறையை வளர்ப்பதே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
• நாட்டில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்கள் 70 சதவீத மக்களின் செல்வத்தைப் போல் நான்கு மடங்கு வைத்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே பல சலுகைகள் வாரி வழங்கிய பிறகும், கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகளில் 1.55 இலட்சம் கோடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
• அரசுப் பொறுப்பில் இருந்து வரும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.அய்.சி.) பங்குகள் தனியாருக்கு விற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
• தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையும் குறைக்கப்பட்டு விட்டது.