ops eps and police

என்ன கேட்டார்கள் அந்த மக்கள்?

மாசுபடாத நிலமும் நீரும் கேட்டார்கள். 13 உயிர்கள் பறிபோயின. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

தமிழக முதலைமைச்சரோ, அமைச்சர்களோ இன்னும் தூத்துக்குடி சென்று மக்களைப் பார்க்கவில்லை. ஏன் நீங்கள் யாரும் அங்கு செல்லவே இல்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “144 தடை இருக்கும்போது ஸ்டாலின் அங்கு சென்றதே தப்பு. சட்டத்தை மதிக்க வேண்டும்“ என்கிறார் முதலமைச்சர். 144 பேர் இறந்து போனாலும், 144 தடைச் சட்டம்தான் முக்கியம் என்று கூறும் அரிய முதல்வர் நமக்குக் கிடைத்துள்ளார். அதனால்தான் திமுக செயல்தலைவர் தளபதி, வைகோ, கமல்ஹாசன், திருமாவளவன் என்று எல்லோர் மீதும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இவ்வளவு பேரைச் சுட்டுக் கொல்வதற்கு யார் அனுமதி கொடுத்தது என்ற வினாவிற்கு, அனுமதி எல்லாம் இல்லை. இப்போ உங்களை யாராவது அடிக்க வந்தா நீங்க சட்டுன்னு தடுக்கத்தானே செய்வீங்க என்கிறார். ‘சிரிப்பு போலீஸ்’ மாதிரி இவர் என்ன சிரிப்பு முதலமைச்சரா என்று நமக்கு ஐயம் வருகிறது. சட்டென்று தடுப்பதும், சட்டென்று துப்பாக்கி எடுத்துச் சுடுவதும் ஒன்றாகுமா?

“உங்களுக்குத்தான் தெரியுமே, நான் இங்கேதான் இருந்தேன். தொலைக்காட்சியிலதான் பாத்தேன்” என்று சற்றும் கூசாமல் கூறுகின்றார். காவல்துறை, உளவுத்துறை எல்லாவற்றையும் தன் பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் சொல்லக்கூடிய விடையா இது?

அந்த ஆலைக்கு மின்சாரத்தைத் துண்டித்து விட்டோம், இனி அது தொடர்ந்து நடக்காது என்று முதல்வர் கூறிய சுவடு மறைவதற்குள், ஸ்டெர்லைட் ஆலையின் அதிபர் அனில் அகர்வால், “பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டுள்ளன. விரைவில் அனுமதி பெற்று மீண்டும் ஆலை இயங்கும்“ என்று தன் காணொளியில் கூறுகின்றார்.

முதல்வர் எடப்பாடி எந்த அதிகாரமும் இல்லாத, எந்த விவரமும் இல்லாத 24 ஆம் புலிகேசி மன்னனைப் போல் அரசுக்கட்டிலில் அமர்ந்துள்ளார். தில்லியிலிருந்து பாஜக தமிழ்நாட்டையும் ஆள்கின்றது.

என்ன செய்தாலும் தனக்கு வாக்குகள் விழாது என்பதால் பாஜக தமிழ்நாட்டை அழித்துவிட முடிவு செய்து விட்டதா என்று தெரியவில்லை. தமிழ்நாடு என்ன ஆனாலும் குற்றமில்லை, தன் நாற்காலி மட்டும் தனக்கு இருந்தால் போதும் என்று எடப்பாடி நினைத்துவிட்டார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரை இடமாற்றம் செய்துவிடுவது எல்லாவற்றுக்குமான தீர்வு ஆகாது. மின்சாரம், தண்ணீரை நிறுத்தி விட்டோம் என்னும் ‘கண்ணாமூச்சி’ விளையாட்டு நிரந்தரமானதும் ஆகாது.

துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி விசாரணை வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

எடப்பாடி அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும். மோடி அரசு முடிவுக்கு வர வேண்டும்.

இவை அனைத்தும் நடந்தால்தான் நாடு உருப்படும்.

Pin It