தூத்துக்குடியில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி, 13 பேரைக் கொன்று போட்டு, ஸ்டெர்லைட் ஆலையின் அனில் அகர்வாலையும், அவனிடம் இருந்து எலும்புத்துண்டுகளை வாங்கிக் கொண்டு வாலாட்டும் காவி நாய்களையும் மகிழ்வித்த பாசிச எடப்பாடி அரசு, இன்னும் தனது கொலைவெறி அடங்காமல், தனது கூலிப்படையான காவல்துறையை ஏவி தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளை அடக்கும் பாசிச நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கின்றது. மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததுள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு அவர்களை கடந்த மாதம் 30 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 9 பேரை தனிப்படை போலீசார் 09/06/2018 அன்று கைது செய்து ரகசிய இடங்களில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக பத்திரிகை செய்தி வந்துள்ளது. ரகசிய இடம் என்றால் கமலாலயமா இல்லை, இந்து முன்னணி அலுவலகமா என்று தெரியவில்லை.

ameerஅதே போல தூத்துக்குடியில் மக்கள் பிரச்சினைக்காக போராடியதற்காக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 தோழர்கள் மீது தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் உத்திரவின் பேரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலையை மூடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்த பின்னால் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதில் இருந்தே, இவர்கள் ஆலையை உண்மையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூடும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதும், இனிமேல் ஆலை செயல்பட முடியாத அளவிற்கு அங்கே மக்களின் எதிர்ப்பு இருப்பதால் அதற்குப் பயந்துதான் ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளார்கள் என்பதும் தெரிகின்றது. தங்களின் விருப்பத்திற்கு மாறாக, பணம் காய்க்கும் மரமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் வெறுப்புதான், அதற்குக் காரணமானவர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் இந்தக் கைக்கூலி அரசை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது. இந்தக் கீழ்த்தரமான வேலையை செய்வதற்காகத்தான் தீவிரவாதி, பயங்கரவாதி, சமூகவிரோதி, விஷக்கிருமிகள் போன்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்கெனவே அரசும், அதன் அடிவருடிகளும் சொல்லி வந்தார்கள். மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்களை வேட்டையாடியதைப் போல மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் களப்போராளிகளை ஒழித்துக்கட்ட அவர்களுக்கு இது போன்ற சொல்லாடல்கள் தேவைப்படுகின்றன.

இதற்கு முன்னால் இலை மறை காய் மறையாக இந்துத்துவ ஆதரவை மேற்கெண்டிருந்த அரசுகளை போல் அல்லாமல், இந்த அடிமை அரசு அப்பட்டமாக தனது இந்துத்துத்துவ சார்பை வெளிப்படுத்தி வருகின்றது. எந்த வகையிலும் காவிப் பயங்கரவாதிகளின் மனம் புண்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றது. எஸ்.வி.சேகர் என்ற தெருபொறுக்கி பார்ப்பானை கைது செய்யத் துப்பில்லாமல் அவனுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் காவல்துறை, மக்கள் பிரச்சினைக்காக தன் சொந்த வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்து கொண்டு செயல்படும் தோழர்களை எல்லாம் விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றது. கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் அமீர் அவர்களைத் தாக்க இந்துத்துவ கும்பல் முயன்ற பொழுது, கலவரத்தில் ஈடுபட்ட காவி பயங்கரவாதிகளை கைது செய்யத் துப்பில்லாத காவல்துறை, அமீர் மீதும், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் அந்தத் தொலைக்காட்சியின் செய்தியாளர் மீதும் வழக்குப் பதிவு செய்து கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறித்துள்ளது. பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிராகவும், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும், அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவும் களத்தில் இறங்கிப் போராடும் போராளிகள் மீது பொய் வழக்குகள் போட்டு, அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் அச்சுறுத்தி, போராட்டக் களத்தில் இருந்தே விரட்டி அடிக்கும் சதிவேலையை வெட்கம்கெட்ட முறையில் இந்த அரசு செய்து வருகின்றது.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைக்காக களத்தில் முன்னணியில் நிற்கும் அமைப்புகளை எல்லாம் மத்திய அரசு தடை செய்யப் போவதாகவும், அதன் தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து ஒடுக்கும் திட்டம் இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது அடிமை எடப்பாடி அரசு அதைத்தான் செய்து வருகின்றது என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. தமிழ்நாட்டில் பார்ப்பனியத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்து கொண்டிருக்கும் பல்வேறு முற்போக்கு அமைப்புகளை அழித்தால் மட்டுமே தங்களால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியும் என்பது இங்கிருக்கும் காவிப் பயங்கரவாதிகளின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவை தங்களுக்குக் கிடைத்திருக்கும் அடிமைகளின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளத்தான் தற்போது மிகத் தீவிரமாக பார்ப்பன பயங்கரவாதத்துக்கும், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கும் எதிராகப் போராடும் இயக்கங்கள் குறி வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சில இயக்கங்களோ, இல்லை தனிநபர்களோ பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிராகவோ, இல்லை முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகவோ மக்களைத் திரட்டி போராட்டக் களத்துக்கு அழைத்து வந்துவிடுவதாக இந்த அரசியல் அற்பர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது உண்மை இல்லை. போராட்டத்துக்கான அடிப்படைச் சூழல் இல்லை என்றால், யார் சொன்னாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கருத்து மக்களை பற்றிக்கொள்ளும் போது அது ஒரு பெளதிக சக்தியாக மாறிவிடும் என்பார் மார்க்ஸ். கருத்து மக்களைப் பற்றிக்கொள்ள அதற்கான சமூக நிலைமை நிலவ வேண்டியது முன்நிபந்தனையாகும். எங்கெல்ஸ் சொல்வார் “புரட்சிகளை ஒரு சில கிளர்ச்சியாளர்களின் தீய எண்ணங்களால் ஏற்படுவதாகக் கற்பிதம் செய்யும் அந்த மூட நம்பிக்கைக் காலகட்டம் என்றோ மலையேறிவிட்டது. எங்கெல்லாம் ஒரு புரட்சிகரக் குமுறல் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் பின்னணியில் ஏதேனும் சமுதாயத் தேவை கட்டாயம் இருந்தே தீரவேண்டும் என்பதை இந்நாட்களில் ஒவ்வொருவரும் அறிவார். அந்தத் தேவை தன்னைத்தானே நிறைவு செய்து கொள்ளப்படுவதை நைந்துபோன நிறுவனங்கள் தடை செய்கின்றன. இந்தத் தேவை உடனடி வெற்றியை உறுதிப்படுத்தக் கூடிய அளவுக்கு அவ்வளவு வலுவாகவும் அவ்வளவு பொதுப்படவும் இன்னும் உணரப்படாததாக இருக்கலாம். ஆனால் பலவந்தமாக இதை ஒடுக்குவதற்குச் செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியும் இது தனது தளைகளை உடைத்தெறியும் வரை மேலும், பலத்துக்கு மேல் பலம் பெற வகை செய்யும். அதற்குள் நாம் தோற்கடிக்கப்பட்டிருப்போமானால் நாம் ஆதிமுதல் துவங்குவதைத் தவிர, செய்வதற்கு வேறு எதுவும் கிடையாது”.(ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்-எங்கெல்ஸ்).

மக்கள் தங்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கருத்தை ஆராய்ந்து பார்த்தே ஏற்றுக் கொள்கின்றார்கள். மக்கள் அதிகாரமோ, இல்லை நாம் தமிழர் கட்சியோ, இல்லை பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களோ முன்வைக்கும் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கான அடிப்படை எதுவும் இந்தச் சமூகத்தில் இல்லை என்றால் காலப்போக்கில் இந்த அமைப்புகள் எல்லாம் கரைந்துபோய்விடும். ஆனால் அதற்கான அடிப்படை இங்கே வலுவாக உள்ளதால்தான் மக்கள் இவர்களை ஆதரிக்கின்றார்கள். தன்னுடைய சகமனிதனை தீண்டப்படாதவன் என்று அவனை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைப்பதும், அவனை கோயில் கருவறையில் விடாமல் விரட்டி அடிப்பதும், கடவுள் தன்னுடைய மொழியை மட்டுமே கேட்பான் என்று சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடித்து மற்ற மொழிகளை இழிவு செய்வதும், இதை எல்லாம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்க முயல்வதும் உள்ளவரை இந்த மண்ணில் இருந்து பெரியாரையும், அம்பேத்கரையும் ஒழித்துக் கட்ட முடியாது, அதே போல இந்த நாட்டில் வளங்களை எல்லாம் கொள்ளையடித்து மண்ணையும், நீரையும், காற்றையும் அழித்து இந்த மக்களை அழிக்கத் துடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் இருக்கும் வரை கம்யூனிஸ்ட்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஒரு தனித் தேசிய இனமாக வாழ எல்லா தகுதியும் உடைய ஒரு இனத்தை அதன் மரபான பண்பாடுகளை அழித்து அவர்களை பிச்சைக்காரர்களைவிட கேவலமாக இந்த மண்ணுக்கு சம்மந்தம் இல்லாத வேறு ஒரு தேசிய இனம் நடத்தும் வரை தமிழ்த் தேசியம் போன்ற கோரிக்கைகள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

சமூகத்தைப் பற்றிய அடிப்படை அறிவற்ற பிற்போக்குவாதக் கும்பல்தான் தன்னை காப்பாற்றிக்கொள்ள தனக்கு எதிராக உள்ள கருத்துக்களை தன்னுடைய அதிகாரத்தின் மூலம் ஒடுக்கப் பார்க்கும். முதலாளிகள் வீசி எறியும் எச்சில் காசில் உடல் வளர்க்கும், மதத்தையும், சாதியையும் வைத்து மனிதர்களைப் பிரித்து முதலாளிகளுக்கு மாமா வேலை பார்க்கும் கும்பல் வரலாறு முழுவதும் இதைத்தான் செய்து வந்திருக்கின்றன. ஆனால் ஒரு மண்ணின் மரபான பண்பாட்டை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. தமிழகம் போராட்டத்தால் தன்னை காத்துக் கொண்ட மண். தற்காலிகமாக சில பிரச்சினைகளில் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் நிச்சயம் நாளை தமிழக மக்கள் போராடி தங்களது உரிமைகளை மீட்டெடுத்துக் கொள்வார்கள். ஒடுக்கு முறையால் மக்களை நிரந்தரமாக அச்சுறுத்தி அவர்களின் உரிமைகளைப் பறித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பிற்போக்குவாதிகளின் கனவு நிச்சயம் நிறைவேறாது.

- செ.கார்கி

Pin It