கடைசியாக ஒருவழியாக தீவிரவாதிகளை இந்த அரசு சமூகத்தின் முன் அடையாளப்படுத்தி விட்டது. தீவிரவாதிகளின் பெயரை உச்சரிக்கலாமா, வேண்டாமா என நீண்ட போராட்டத்திற்குப் பின் தங்கள் குரல்வளையில் மாட்டி சித்திரவதை செய்து கொண்டிருந்த அந்தப் பெயரை உச்சரித்து விட்டனர். அதிகார வர்க்கத்தின் கனவுகளில் கொடும் பேயாக வந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த அந்தப் பெயர் ‘மக்கள் அதிகாரம்’. அவர்கள்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு மூல காரணமானவர்கள். அவர்கள்தான் ஆயிரக்கணக்கான மக்களை போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தவர்கள், அவர்கள்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தகர்த்து, அங்கே மக்கள் அதிகாரத்தின் கொடியை ஏற்றி தூத்துக்குடியை தளப் பிரதேசமாக அறிவிக்க முயன்றவர்கள். அவர்களை இப்படியே விட்டால் ரஷ்யாவில் ஜார் மன்னருக்கு ஏற்பட்ட நிலையை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படுத்தி விடுவார்கள். அவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் மிக அபாயகரமானவை. அவை மூளையைக் குடைந்து செல்லும் சக்திவாய்ந்த ஆயுதங்கள். அதை வைத்தே அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நீங்கள் வேண்டுமென்றால் அவர்களின் அலுவலங்களில் எப்போது வேண்டுமானாலும் சோதனையிட்டு அந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்துகொள்ளலாம்.

dinamalar news

ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அந்த ஆயுதங்களில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் போன்றவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள்தான் இந்த ஆயுதங்களை எப்படி அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவது என்பதை முதலில் சொல்லிக் கொடுத்த ஆசான்கள். அதாவது அதிகார வர்க்கத்தின் மொழியில் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், விஷக்கிருமிகள். இந்த ஆயுதங்களை வைத்துத்தான் அவர்கள் பல ஆண்டு காலமாக காடுகளிலும், மலைகளிலும், நண்பர்களின் வீடுகளிலும், பூங்காக்களிலும், இன்னும் எங்கெல்லாம் இலவசமாக உட்கார அனுமதி கிடைக்கின்றதோ அங்கெல்லாம் மிகக் கடுமையாக பயிற்சி செய்கின்றார்கள். தாங்கள் மட்டும் பயிற்சி செய்தது போதாதென்று தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை பேருந்துகளிலும், ரயில் நிலையங்களிலும், ஜனசந்தடி நிறைந்த இடங்களிலும் வெளிப்படையாக விற்க முயலுகின்றார்கள். இன்ன இன்ன ஆயுதங்கள் இதற்கு இதற்குப் பயன்படும் என்று சொல்லியே விற்கின்றார்கள் பஞ்சப்பராரி தீவிரவாதிகள்.

காலில் போட்டுக்கொள்ள நல்ல செருப்பு இல்லை என்றாலும், உடுத்திக் கொள்ள நல்ல ஆடையில்லை என்றாலும், இந்தத் தீவிரவாதிகள் அடங்குவதில்லை. தங்கள் குரலை பீரங்கியாய் உயர்த்தி இவர்கள் வெடிக்கும்போது அதிகார வர்க்கத்தின் கோட்டைக் கொத்தளங்கள் அனைத்தும் ஆட்டம் காணுகின்றன. நூறு ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் ஆயிரக்கணக்கான கோடி மூலதனத்தை தீப்பந்தமாய் விரட்டி, விரட்டி அடிக்கின்றது. அதனால்தான் துண்டுப் பிரசுரத்தைப் பார்த்தாலே துப்பாக்கிகள் ஒண்ணுக்குப் போகின்றன. இப்போது சொல்லுங்கள் இந்தத் தீவிரவாதிகள் அபாயகரமானவர்களா? இல்லையா? பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பலுக்கு எதிராக, நிதி மூலதன பயங்கரவாதத்திற்கு எதிராக, மூலதனத்தின் பிடியில் இருந்து உழைப்பை விடுவிக்க மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்ற பயங்கரவாத ஆயுதங்கள் வைத்துப் போராடும் இவர்கள் நிச்சயம் தீவிரவாதிகள்தான். எந்த ஜனநாயகத்தின் பேரால் கோடான கோடி உழைக்கும் மக்களின் வளங்களைக் கொள்ளையடிக்க முதலாளித்துவம் உரிமை கோருகின்றதோ, அதே ஜனநாயகத்தின் பேரால் முதலாளிகளிடம் குவிந்து கிடக்கும் மூலதனத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் எனச் சொல்வதும் நியாயமானதுதானே. அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது எப்படி ஜனநாயக விரோதமானது ஆகும்?

ஆனால் போலி ஜனநாயகம் அதைத்தான் தீவிரவாதம் என்கின்றது, பயங்கரவாதம் என்கின்றது. அரசியல் அமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவன் எல்லாம் இன்று பயங்கரவாதிகள் கிடையாது. 130 கோடி மக்களுக்குச் சொந்தமான வளங்களை ஒரு சில பன்னாட்டு முதலாளிகளுக்குக் கூட்டிக் கொடுப்பவனும், பார்ப்பனியத்தைக் காப்பாற்ற பசுவுக்காக மனிதர்களை அடித்துக் கொல்பவனும், கருத்துச் சுதந்திரத்தை துப்பாக்கி தோட்டாக்களால் சிதறடிப்பவனும், நீதியை விலை பேசி விற்பவனும், ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த மக்களை குண்டாந்தடிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் இரையாக்குபவனும் தான் இன்று நாட்டில் தேசபக்தன். ‘நீ உருவாக்கிய சட்டத்திற்கு நீ நேர்மையாக நடந்துகொள்’ என்று கேட்பவன் தீவிரவாதி, பயங்கரவாதி. எப்படி மக்களுக்குப் புரியாத மொழியில் எழுதப்பட்ட இலக்கியத்திற்கு காலந்தோறும் கொடுக்கப்படும் விளக்கங்கள் மாறுபட்டதாய் இருக்கின்றதோ, அதே போல மக்களை சட்டப்படி நடக்க கற்றுக் கொடுக்க முதலாளிகளால் உருவாக்கப்பட்ட சட்டங்களும் காலந்தோறும் தங்களுக்குப் புது புது விளக்கங்களை அளித்துக் கொள்கின்றன. பாசிசம் நாட்டை ஆளும் இந்தக் காலத்தில் ‘அரசியல் அமைப்பு சட்டப்படி நடந்துகொள்’ என்று கேட்பதுதான் மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை! அதனால் மக்கள் அதிகாரம் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்வதில் எந்தவிதத் தவறும் இல்லை.

பாசிஸ்ட்டுகளின் ஆட்சிக் காலத்தில் சாமானிய மக்களின் அதிகாரத்தை உருவாக்க மதிநுட்பத்துடன், அறிவாற்றலுடன், நேர்மையாக, உண்மையாக , தன்னலமற்றவர்களாக, தூய்மையானவர்களாக, தாங்கள் கொண்ட கொள்கையில் தீவிரப் பற்றுடையவர்களாக களத்தில் இறங்கிப் போராடும் அனைவருமே தீவிரவாதிகளாக பார்க்கப்படுவதில், அடையாளப்படுத்தப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காலந்தோறும் வரலாறு முழுவதும் அதுதான் நடந்து வந்துள்ளது. மக்களின் ரத்தத்தைக் காசாக்கும் ஆட்சியாளர்கள் தங்களை அச்சுறுத்தும், தங்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் அனைத்தையுமே ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானதாக கட்டமைக்க எப்பொழுதும் முயலுவார்கள். முதலில் ஆளும் வர்க்கம் ஒரு பொய்யை அவிழ்த்துவிடும்; பிறகு அதன் அடிவருடிகள் அதை ஊர்முழுவதும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

தூத்துக்குடியில் மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதியாக தங்கள் மனைவி குழந்தைகளுடன் பேரணியாக வந்த மக்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்று போட்டு ‘முதலாளிகளை எதிர்த்தால் உனக்கு இதுதான் கதி’ எனப் புரிய வைத்தார் எடப்பாடி. ஒட்டு மொத்த இந்தியாவே காறி உமிழ்ந்தது இந்தக் கொலை பாதகத்தைக் கண்டு. தன் மீதும், தான் வழிநடத்தும் குண்டர் படையான போலீஸ்மீதும் மக்களின் கோபம் ஒட்டு மொத்தமாக திரும்பிவிடாமல் இருக்க, கூட்டத்தில் தீவிரவாதிகள் புகுந்து கலவரம் செய்தார்கள், அவர்களைக் கட்டுப்படுத்துவே துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது எனப் பொய்யை அவிழ்த்துவிட்டது எடப்பாடி அரசு. ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியான ரஜினி உட்பட பலர் இதையே திரும்பத் திரும்ப சொல்லி மக்களை நம்ப வைக்க முயன்றனர். ஆனால் இதுவரை அவர்களால் தாங்கள் சொல்லிய பொய்யை உண்மையாக்க ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியவில்லை. அதனால் அவர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது, தாங்கள் சொன்ன தீவிரவாதிகளையும், பயங்கரவாதிகளையும், விஷக்கிருமிகளையும் மக்கள் முன் காட்ட. அதற்குத்தான் திட்டமிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது பழியைப் போட்டு தங்களின் கேடுகெட்ட பொய்யை உண்மையாக்க முயன்றிருக்கின்றார்கள்.

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், மேலும் இரண்டு தோழர்கள் மீது 52க்கும் அதிகமான வழக்குகளையும் போட்டு கைது செய்திருக்கின்றார்கள். மீனவ மக்களை மிரட்டி தூத்துக்குடி கலவரத்துக்கும் தங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் கிடையாது, மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த அரிராகவன், வாஞ்சிநாதன் என்ற இரண்டு வழக்கறிஞர்கள்தான் இளைஞர்களை மூளைச்சலவை செய்து போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்தார்கள் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு செயலாளரிடம் மனு அளிக்க வைத்துள்ளனர். மேலும் வாஞ்சிநாதன் மீது 40க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைப் பதிவு செய்து போலீஸ் அவரைக் கைது செய்துள்ளது. அத்தோடு மட்டும் நில்லாமல் அவரது வீட்டிலும் அத்துமீறி சோதனை செய்துள்ளது காவல்துறை.

மக்களுக்காகப் போராடிய ஓவ்வொருவரையும் இந்த அரசு திட்டமிட்டு வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் பத்திரிக்கைகள் அரசு தரும் செய்திகளை எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வெட்கம்கெட்ட முறையில் வெளியிட்டு அரசின் பயங்கரவாதச் செயல்களுக்கு சொம்பு தூக்கிக் கொண்டு இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை வெளியிடாமல் இருட்டடைப்பு செய்வதன் மூலம் பெரு முதலாளிகளின் எச்சில் காசில் வயிறு வளர்க்க விரும்புகின்றன. இன்று மக்கள் அதிகாரத்தின் மீது நடத்தப்படும் பாசிசத் தாக்குதல்கள் நாளை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அமைப்பின் மீதும் நடத்தப்படலாம். நிச்சயம் அப்படியான ஒரு அசாதாரணமான சூழ்நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நிலவுகின்றது. இந்த அரசு முற்றுமுழுதாக தன்னை மக்கள் விரோதி என்று அம்மணமாகவே காட்டியிருக்கின்றது. உண்மையிலேயே அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிப்பவர்கள் அதற்கு எதிராக நிற்கும் இந்த அரசையும், அது ஏவிவிடும் அடக்குமுறைகளையும் மிகத் தீவிரமாக கண்டித்து, போராட வேண்டும். இல்லை என்றால் நாளை பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ பயங்கரவாத்திற்கு எதிராகவும் போராடும் அனைவரையும் இந்த அரசும், அதன் அடிவருடிகளும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி ஒழித்துக் கட்டத் துணிவார்கள். மக்கள் அதிகாரத்திற்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளும் கைகோர்ப்போம்.

- செ.கார்கி

Pin It