mkstalin twitter 350இது ஆத்திகர் - நாத்திகர் உரிமைப் பிரச்சினை அல்ல; மாநிலங்களின் உரிமைப் பிரச்சினை. தனிநபர்கள் வடநாட்டில்  கோவில்களை வைத்துப் பிழைப்பு நடத்தும், பார்ப்பனச் சுரண்டலுக்காகவே பயன்படுத்தும் பேராபத்துகள் இங்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆசிரியர் கி. வீரமணி
(விடுதலை, 03.03.2020)

மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், கோயில்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, இந்தியத் தொல்லியல் துறையின்கீழ் அவற்றைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் அறிவித்துள்ளார்.

இதனை எதிர்த்துக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாஸ் ஆகியோர் தமது எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்துள்ளனர்.

இந்துக்களுக்கான ஆட்சியை நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க.-வின் ஆட்சி “பார்ப்பனர்களுக்கானதே” என்பதைத் தனது செய்கைகளின் மூலம் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டு வருகிறது நடுவண் அரசு. கோயில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பதைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் பா.ஜ.க.-வின் முயற்சிகளில் ஒன்றே இது என்பதுதான் வெளிப்படையான உண்மை. கடந்த ஆண்டு, மக்களவையில் சத்யபால் சிங் என்ற பா.ஜ.க. உறுப்பினரின் மூலம் கோயில்கள் அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனிநபர் மசோதா ஒன்றைக் கொண்டு வரச் செய்தது நடுவண் அரசு. தற்போது தொல்லியல் துறை என்ற முகமூடியை அணிந்து கொண்டு தனது திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது.

கோயில்களிலிருந்து அரசு வெளியேற்றப்பட வேண்டும் என்ற முயற்சிக்கு ஆதரவோ, அரசு வெளியேறுவதற்கான சாத்தியக் கூறுகளோ தமிழ்நாட்டில் இல்லாத நிலையில், மறைமுகமாக அதனை நிறைவேற்றத் தொல்லியல் துறையைப் பயன்படுத்த நினைக்கிறது பா.ஜ.க. இதற்கான காரணங்கள் எதையும் மத்திய அமைச்சர் தனது பேச்சில் குறிப்பிடவில்லை. மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாகப் பெருமளவு அதிகரிக்கவில்லை என்று குறிப்பிடும் அமைச்சர், தமிழ்நாட்டில் மட்டுமே நூறாண்டுகளைக் கடந்த 7,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் தமிழகம் செயல்பட்டு வருகிறது. தொல்லியல் துறையின்கீழ் கோயில்களைக் கொண்டு வருவது, பார்ப்பனர்களிடம் அவற்றை ஒப்படைப்பதற்கான தொடக்க நிலைதான். இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்துக் கட்டுவதுதான் இதன் பின்னணி.

தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும்போது கோயில்கள் தரமாகப் பராமரிக்கப்படும் என்றும், இப்போதுள்ள தரம் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் தொடர்ந்து ஒரு பிரச்சாரம் முன்வைக்கப்படுகிறது. அது தவறான பிரச்சாரம் என்பதற்கு 2013-ஆம் ஆண்டு இந்தியத் தலைமைக் கணக்கு அலுவலரின் (CAG) அறிக்கையே சான்றாகும். மொத்தம் 1655 நினைவுச் சின்னங்களில் ஆய்வு நடத்தப்பட்டதில், அவற்றுள் 546 ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்தன என்கிறது அவ்வறிக்கை. கடந்த ஆண்டு மே மாதம், ஒடிசாவின் ஜகந்நாதர் கோயில் நிர்வாகத்திடம் மன்னிப்புக் கேட்டது தொல்லியல் துறை. தொல்லியல் துறை அமைத்திருந்த இரும்புச் சாரங்கள் அதன் அலட்சியப் போக்கால்  பானிப்  புயலின் போது கோயில் சிலைகளின் மீது விழுந்து சிலைகளைச் சேதப்படுத்தியதே அதற்குக் காரணம்.

நிலைமை இவ்வாறிருக்க, இதே பா.ஜ.க. அரசால் 2018-ஆம் ஆண்டு மக்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்ட பழங்காலச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் & எச்சங்கள் திருத்த மசோதா (The Ancient Monuments and Archaeological Sites and Remains (Amendment) Bill) பழங்காலச் சின்னங்களுக்கு அருகே பொது நலனுக்காக அரசு நிதியில் கட்டப்படும் கட்டடங்களை அனுமதிக்கிறது. இது பழங்காலச் சின்னங்களுக்கு 100 அடிக்குக் குறைவான தூரத்தில் கட்டடங்கள் எதுவும் கட்டப்படக்கூடாது என்று ஏற்கெனவே உள்ள சட்டத்திற்கு முரணானது. இதன் மூலம் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்களின் வணிக நோக்கிற்கு உதவுவதற்காக அரசு இச்சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் ஐயம் எழுந்துள்ளது. கோயில்களைத் தொல்லியல் துறைக்குக் கீழ் கொண்டு செல்லும் முயற்சிக்குப் பின்னால் இது போன்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கோயில்கள் மாநிலங்களின் பண்பாட்டு அடையாளங்கள். தொடர்ந்து மாநில உரிமைகளுக்கு எதிராக நடந்து வரும் மத்திய அரசின் முயற்சி கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் உள்ள அறநிலையங்கள் (Charitable institutions, religious endowments and religious institutions) மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும், அல்லது தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைச் சிதைக்கும் பொதுப் பட்டியல் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே நீக்கப்பட வேண்டும். அதுவே இறுதியான தீர்வாக இருக்கும்.

கீழடி அகழ்வாராய்ச்சிக்குத் தடை போட்ட மத்திய அரசுக்கு, இப்போது தமிழகக் கோயில்களின் மேல் திடீர் அக்கறை பிறந்துள்ளது. பூனை தன் குட்டியைக் கவ்வுவதற்கும், பருந்து கோழிக்குஞ்சைக் கவ்வுவதற்கும் உள்ள வேறுபாட்டைத் தமிழர்கள் உணராதவர்கள் இல்லை.

பேரவையின் சமூக நீதி மாநாடு, 2018. தீர்மானம் 1

நீதிக் கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையைக் கலைப்பதற்கான பெருமுயற்சி ஒன்று, தன்னலம் மிக்க கூட்டம் ஒன்றினால் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்துக் கோயில்களை இந்துக்களிடம் கொடுத்து விடுங்கள் என்பதாக அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அதில் எள்ளளவும் உண்மையில்லை. இந்துக்கள் என்னும் பெயரில், வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர், மொத்தக் கோயில் சொத்துக்களையும் தாங்கள் மட்டும் அபகரித்துக் கொள்வதற்கான திட்டமே இது. எனவே தங்களை இந்துக்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வெகுமக்களின் சொத்துகளைப் பாதுகாக்கும் கடமை, கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமின்றிப் பகுத்தறிவாளர்களுக்கும் உள்ளது.

ஆதலால், எக்காரணம் கொண்டும் இந்து அறநிலையத் துறை கலைக்கப்படக் கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துவதுடன், தில்லை நடராசர் கோயிலையும், தீட்சிதர்களிடமிருந்து மீண்டும் அரசு மீட்டெடுக்க வேண்டும்.

Pin It