இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறும் அனைத்து அம்சங்களும் இராமராஜ்ஜியத்தில் இருந்துள்ளன என்று ஆளுநர் ஆர்.என்.இரவி தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் இந்தக் கருத்தை தெரிவித்தது அரசியலமைப்பைப் பற்றி தெரியாதவர்கள் முன்னிலையில் அல்ல. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில், ஒரு நூல் வெளியீட்டு விழாவில் அவர் இப்படிப் பேசி உள்ளார்.

ஒரு நீதிபதியின் முன்னால் ஒரு ஆளுநர் அரசியலமைப்பைப் பற்றி எவ்வளவு அருமையான கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார்? வேறு எந்த நாட்டிலாவது இது போன்ற காட்சிகளை நாம் காண முடியுமா? இப்படிப்பட்ட ஆளுநர் நமக்குக் கிடைத்ததை நினைக்கும் போது அவ்வளவு பெருமையாக இருக்கிறது.

உண்மையில் இந்திய அரசியலமைப்பின் கூறுகள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பதை நாம் பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்பு ஆங்கிலேயர் ஆட்சியில் 1935ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கவர்ன்மெண்ட் ஆப் இந்தியா ஆக்ட் என்பதை ஏறக்குறைய அப்படியே தழுவி எழுதப்பட்டதாகும்.

 மேலும் அரசியல் நிர்ணய சபைக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சட்ட வல்லுனர் பி.என்.ராவ், அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதிக்க அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அமெரிக்கா, அயர்லாந்து அரசியல் சட்டங்களைப் பின்பற்றியே இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இராமராஜ்ஜியம் அமெரிக்காவிலும் அயர்லாந்திலும் நடந்தது என்று இனிவரும் நிகழ்ச்சிகளில் ஆளுநர் சொன்னால்கூட வியப்பதற்கு ஒன்றுமில்லை.

இவ்வளவு அறிவு கொண்ட ஒருவர் நமக்கு ஆளுநராக கிடைத்திருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பி என்று போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இராமராஜ்ஜியத்தின் கூறுகள் குறித்து சொல்லியிருப்பதை நாம் ஆளுநருக்கு நினைவூட்டுவோம்.

“இராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான் என வால்மீகி குறிப்பிடுகிறார்.

போதாதென்று நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அழகிகள் எல்லாம் அந்த அந்தப்புரத்திற்குக் கொண்டுவரப்பட்டனர். இந்த அழகிகளின் மத்தியில் இராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக்கிடந்தான். இவை இராமனின் ஒருநாள் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அல்ல. இராமனுடைய வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளே இவை.

நாட்டு நிர்வாகத்தில் இராமன் எப்போதும் பங்கேற்றது இல்லை என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.”

(Dr. Babasaheb Ambedkar Writings and Speeches - Volume : 4, Page : 331)

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It