modiii 350சென்ற தேர்தலில் தங்களை "வளர்ச்சியின் வழிகாட்டிகள்" என்று சொல்லிக் கொண்டவர்கள், இந்தத் தேர்தலில், தங்களுக்குத் தாங்களே "மக்களின் காவலர்கள்" (Chowkidar) என்று பட்டம் சூட்டிக் கொண்டுள்ளனர்.

எனினும் ஒரு வேறுபாடு உள்ளது. சென்ற தேர்தலில் ஏமாந்த மக்கள் இந்தத் தேர்தலில் ஏமாறப் போவதில்லை!

யார் மக்களின் காவலர்கள்? ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் போடுவோம் என்று சொல்லிவிட்டு, வங்கியிலிருந்த தம் பணத்தைக் கூட எடுக்க முடியாமல், மக்களைத் திண்டாடித் தெருவில் நிற்க வைத்த இவர்களா?

வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, 340 ரூபாய் விலைக்குக் கிடைத்த எரிவாயுவை இன்று 900 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து கொண்டுள்ளனரே, இவர்களா?

ஜிஎஸ்டி வரி என்ற பெயரில், மக்களின் பணத்தைப் பலவகைகளிலும் பிடுங்கிக் கொண்டுள்ளனரே, இவர்களா?

ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவதாகச் சொல்லிவிட்டு, இன்று வேலையில்லாத் திண்டாட்டம் பெருக வழி வகுத்துள்ளார்களே, இவர்களா?

ரபேல் ஊழல் ஒரு பக்கமிருக்க, ஊழலே உருவமாய்க் கொண்டிருக்கும் எடப்பாடி கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் இவர்களா?

மக்கள் காவலர்கள் இல்லை, மக்களால் அரசியல் தளத்திலிருந்து விரட்டியடிக்கப்படப் போகின்றவர்களே இவர்கள் என்பதை, மே 23 ஆம் நாள் இந்திய மக்கள் உரத்துச் சொல்வார்கள்!

Pin It