jallikattu supporters at marina

குறிப்பு: ஜல்லிக்கட்டை நாம் ஆதரிக்கிறோம், தடையை மீறுவதையும் நாம் ஆதரிக்கிறோம். ஆனால், ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலிருக்கும் வர்க்க நலனை மறந்துவிட்டும், கண்ணை மூடிக்கொண்டும் அல்ல!

தோழர்களே! மோடி அரசின் பண பறிப்பைக் கண்டித்து சென்னையிலும், மதுரையிலும் DYFI அமைப்பினர் போராடியபோது அவர்கள்மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து பேசியவர்களெல்லாம் DYFI-யின் கட்சி அமைப்பான CPI (M) சசிகலாவுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கவில்லை என்பதால் ஆத்திரம் கொண்ட சசிகலா காவல்துறையை ஏவி விட்டுள்ளார் என காரணம் கற்பித்தனர்.

இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பலத்த போராட்டங்கள் நடக்கிறது. அதுவும் நீதிமன்றத்தின் தடையை மீறுவதன் மூலம் இந்திய இறையாண்மைக்கே சவால் விட்டு நடக்கிறது. காவல்துறை சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு கருணையோடு விலகி நிற்கிறது.

  • இது எப்படி? சசிகலாதான் காவல்துறையை அடக்கி வாசிக்கச் சொல்கிறாரா?
  • இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் போராட்டங்களை அனுமதிக்கும் அளவில் சசிகலா தமிழ்த் தேசிய விடுதலைப் போராளியாக மாறிவிட்டாரா?
  • மத்திய பாஜக அரசை எதிர்க்கிற துணிச்சல் வந்துவிட்டதா?
  • சசிகலா மத்திய பாஜக அரசை துணிச்சலோடு எதிர்த்து, தமிழ்த்தேசிய விடுதலைப் போராளியாக மாறியதைக் கண்டு மோடியின் மத்திய அரசு பயந்து பின்வாங்குகிறதா?

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமை!

ஜெயலலிதா மரணம், அதன்பின்னால் அவரின் இடத்தில் சசிகலாவை முன்னிறுத்துவது எல்லாவற்றிலும் மோடி அரசின் பங்கிருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கின் கிடுக்கிப்பிடியில் ஜெயலலிதா மட்டும் சிக்கிக் கொள்ளவில்லை. சசிகலாவும் சேர்ந்துதான் மாட்டியிருக்கிறார். சொல்லப்போனால் ஜெயலலிதாவை விட சசிகலாவுக்குத்தான் தீர்ப்பின் ஆபத்து அதிகமிருந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தையொட்டி மோடியின் பாஜக, சசிகலாவை நன்கு பயன்படுத்திக் கொண்டது. சசிகலா விரும்பாவிட்டாலும் இந்த ஆட்டத்தை ஆடியே தீரவேண்டும்.

இந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் நடப்பது பாஜக மோடியின் பொம்மை அரசுதான்.

  • தமிழ்நாட்டில் நடக்கிற இந்த அரசியல் விளையாட்டிற்கு கார்ப்பரேட் முதலாளிகளின் முழு ஆதரவும் உள்ளது. ஏனென்றால் இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான, கார்ப்பரேட்டுகளின் இலாபத்திற்கு இரையாகிற நடுத்தர வர்க்கத்தை அதிகமாகக் கொண்ட தமிழகம் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. அதற்கு தங்களால் உருவாக்கப்பட்ட மோடி தடையில்லாமல் தமிழ்நாட்டில் அதிகாரம் செலுத்த வேண்டுமென்பது அவர்களின் விருப்பம்.
  • பாஜக-வுக்கும் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு இது ஒரு வாய்ப்பையும் அளிக்கிறது.

இவையெல்லாம் தமிழக தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவின் பங்களிப்போடே நடந்தது. பிறகு அவரை பாஜக பலியும் கொடுத்தது. அதற்கு ராம மோகன ராவிடம் இருந்த சிக்கல்கள் என்னவென்றுத் தெரியவில்லை. ஆனால், தனது நலனிலிருந்து மோடி எப்படியெல்லாம் உயர் அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொண்டு பின்னர் கைவிடுவார், தேவைப்பட்டால் பலியும் கொடுப்பார் என்பதை ரானா அயூப்பின் குஜராத் கோப்புகள் நூலைப் படித்தவர்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

குஜராத்தை இசுலாமியர்களின் இரத்தத்தால் நனைப்பதற்கு மோடி காவல்துறையின் உயர்நிலையிலுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தினார் என்பதை ரானா அயூப் துப்பறிந்து அந்நூலில் அம்பலபடுத்தியுள்ளார். பின்னர் அவர்களில் பலரை சட்டத்தின் பிடியில் சிக்கவைத்து பலிகொடுத்துவிட்டு மோடி இலகுவாக தப்பித்தும் கொண்டார் என்பதையும் அதில் தெளிவாக பதிவு செய்துள்ளார். இதற்காக அவர் குஜராத் மாநிலத்தின் ஐ.பி.எஸ் அதிகாரிகளான ஜி.எல்.சிகால், ராஜன் பிரியதர்சி, உஷா ராடா, அசோக் நாராயணன், ஜி.சி.ரெய்கர், பி.சி.பாண்டே, சக்ரவர்த்தி, கீதா ஜோஹ்ரி மற்றும் குழந்தை நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மாயா கோட்நானி ஆகியோரை நேரில் சந்தித்து ஆபத்தை எதிர்கொண்டார்.

ராம மோகன ராவை பலிகொடுத்ததில் பாஜக-வுக்கு என்ன இலாபம்?

ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் மோடியின் மத்திய அரசு அ.தி.மு.க-வை கட்டுப்படுத்தி தமிழகத்தில் ஒரு பினாமி ஆட்சியை நடத்த முயற்சிக்கிறது. பினாமி ஆட்சியில் முழுப் பயனை அடைய வேண்டுமானால் ஆளும் கட்சியை மட்டும் ஆட்டிப்படைத்தால் போதாது, அதிகாரிகள் மட்டத்தையும் தமது கட்டுபாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் பாஜக-வின் அனைத்து மட்டத்திலுமுள்ள நிர்வாகிகள் காரியங்களை சாதித்துக் கொள்வதற்கான சூழல் உருவாகும். பாஜக-வினர் காரியம் சாதிக்கிற நிலைமை உருவானால்தான் மக்கள் அதிகார மட்டத்தில் தங்களுக்குத் தேவையான வேலைகளுக்காக பாஜக-வினரை அணுகுவர். கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அடுத்து நேரடியாக ஆட்சியைக் கைப்பற்றுவது எளிதாகும்.

இதற்குதான் ராம மோகன ராவ் ஐ.ஏ.எஸ் எனும் மிகவும் காஸ்ட்லியான பலிகடா பயன்பட்டுள்ளது. இதன்மூலம் ‘தலைமைச் செயலராக இருந்தவருக்கே இந்த கதியென்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு’ என்று அதிகாரிகள் மட்டம் கிடுகிடுக்கும். பாஜக-வினரின் அதிகாரம் தமிழகமெங்கும் பரவும்.

ஆக தமிழகத்தில் பாஜக மோடியின் அதிகாரம்தான் நடக்கிறது.

DYFI-யினர் மீதான தாக்குதலின் நோக்கமென்ன?

மோடியின் பண பறிப்பு நடவடிக்கையை எதிர்த்து  DYFI-யினர் போராடினர்.

மோடியின் பண பறிப்பு நடவடிக்கை என்பது கார்ப்பரேட்டுகளின் நலனுக்கானது. பணமில்லா பரிவர்த்தனை என்பது ஆன்லைன் வணிகத்திற்கானது. சில்லறை வணிகம் முதல் அனைத்தையும் உள்நாட்டு ரிலையன்ஸ் முதல் அமெரிக்காவின் வால்மார்ட் வரைக்கும் கைப்பற்றுவதற்கானது. கூடவே மக்களுக்கு அவர்களின் ஊதியத்தை நேரடியாக வழங்காமல் அவற்றை வங்கிக் கணக்கில் போட வைப்பது. வங்கியிலுள்ள பணத்தை நேரடியாக பெருமுதலாளிகளின் தொழில்களுக்கு வழங்கி பணக்காரர்களை மேலும் கொழுத்தப் பணக்காரர்களாக்குவது.

இது இந்தியா முழுவதும் முழுமையாக சாத்தியமாகா விட்டாலும் வாங்கும் திறனுடைய நடுத்தர மக்களைக் கொண்ட தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு மாதிரியான வளர்ச்சியடைந்த மாநிலங்களிலும் கூடுதல் சாத்தியமுடையது.

dyfi attack at chennai

இப்படி கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்காடான தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்புவதை கார்ப்பரேட்டுகளின் கதாநாயகன் மோடி விரும்பவில்லை. அதுவும் வலதுசாரிகளுக்கு எதிரான இடதுசாரிகளின் பின்புலத்திலிருந்து எழுவதை கூடுதலாக விரும்பவில்லை.

தமிழ்நாட்டில் தீவிர இடதுசாரிகளை மட்டுமல்ல, சீர்த்திருத்த இடதுசாரிகள் கூட இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சாதியவாத, மதவாத, இனவாத அரசியலை ஊட்டி வளர்த்திருக்கிறது ஆளும்வர்க்கம். இந்நிலையில் மக்கள் போராட்டங்களில் இடதுசாரிகள் செல்வாக்கு பெறுவதை, அதுவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் செல்வாக்கு பெறுவதை ஆளும் வர்க்கம் அனுமதிக்குமா?

மட்டுமில்லாமல் கொல்லைப்புற வழியில் நுழைந்து நேரடியாக அதிகாரம் செலுத்த முனையும் வலதுசாரி பாஜக-வின் பினாமி ஆட்சியில் நடக்குமா?

நடக்காது என்பதைத்தான் DYFI தோழர்கள் மீது கோரமான தாக்குதல் நடத்தி உணர்த்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்குப் பின்னால்...

இந்தப் போராட்டங்களை முதன்மைப்படுத்தியது சென்னை மெரினாவில் திரட்டப்பட்ட பிரமாண்டமான போராட்டம். சமூக வலைத்தளங்களின் மூலம் அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னனியில் மாணவர்களின் தன்னெழுச்சி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்போது மாணவர்களிடம் ஜல்லிக்கட்டுக்கான உணர்வு மட்டும் இருக்கவில்லை. பணச் சிக்கல் குறித்த உணர்வு எழுச்சியும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அன்றாடம் செத்துக்கொண்டிருக்கிற விவசாயிகள் குறித்த உணர்வு கூடுதலாகவே இருக்கிறது.

அளவு ரீதியாக சொல்லப்போனால் போராடும் குணமுடைய மாணவர்களிடம் பணச் சிக்கல் மற்றும் விவசாயிகள் சாவு குறித்த கவலைகளைவிட ஜல்லிக்கட்டுக்கான கவலை குறைவுதான். காரணம் அவர்களிடையே செல்வாக்கு செலுத்துகிற அரசியல் காரணமாக ஜல்லிக்கட்டை சாதியாதிக்கத்திற்கான அடையாளமாகப் பார்க்கும் கண்ணோட்டமே அவர்களிடம் மேலோங்கியிருக்கிறது.

அப்படியானால் இப்போது மெரினா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்களை ஒருங்கிணைத்து, வழிநடத்தியவர்கள் யார்?

மாணவர்களை அரசுக்கு சார்பாக போராட்டங்களில் ஈடுபடுத்தும் போக்கு தொடங்கி வெகுகாலமாயிற்று. ஈழ ஆதரவுப் போராட்டங்களில் அரசுக்கு சார்பாக மாணவர்கள் தூண்டப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. திடீர் தலைவர்களாக ‘கஸ்பர்கள்’ உருவானதையும் மறந்துவிட முடியாது. மாணவர்களைப் பயன்படுத்தி சமூக நிலைமைகளை மடைமாற்றம் செய்வதில் அரசு தேர்ச்சியடைந்து சிறந்து விளங்குகிறது. எப்போதும் மாணவர்களிடையே செயல்படக்கூடிய நபர்களையும், குழுக்களையும் உருவாக்கி தயார் நிலையிலேயே இருக்கிறது. இவ்வாறு அரசு ஆதரவுக் குழுக்களின் செயல்பாடே மெரினாவில் கூடிய கூட்டம். அந்த பிரமாண்ட கூட்டத்தின் வெளிச்சத்தில் தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டிற்கான போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இதன் மூலம் மோடியின் பண பறிப்பு நடவடிக்கையால் குமுறிக் கொண்டிருப்பவர்களையும் விவசாயிகளின் தொடர் சாவால் நிலைகுலைந்திருப்பவர்களையும் திசை திருப்பி விட வேண்டும் அவ்வளவே.

ஏனென்றால் தாமதமாகவேனும் இது சம்பந்தமான போராட்டங்கள் தமிழகத்தில் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியது. இது இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், தனது இலாபத்திற்கு இரையாகிற நடுத்தர வர்க்கத்தை அதிகமாகக் கொண்ட தமிழகத்தில் மூர்க்கமாக முன்னேறிக் கொண்டிருக்கிற கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு எதிரானது, ஆபத்தானது.

ஏற்கனவே ஆன்லைன் வணிகம், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, ரிலையன்ஸ் ஃபிரெஷ், வால்மார்ட் என தமிழகத்தை விழுங்க நினைத்த கார்ப்பரேட்டுகளின் திட்டங்களை போராட்டங்களின் மூலம் நாம் முறியடித்துள்ளோம்.

தனது நடவடிக்கைகள் தோல்விக்குள்ளாவதையும், பின்னடைவை சந்திப்பதையும் கணக்கில் கொண்டே முதலாளிகள் அடுத்த அடியை எடுத்து வைக்கிறார்கள். மக்களின் உணர்வை திசைத்திருப்பி அவர்களின் போராட்டங்களை மழுங்கடிக்க செய்வதற்கு அவர்கள் படாதபாடு படுகிறார்கள். கைக்கூலிகளையும், கைக்கூலி இயக்கங்களையும் செலவு செய்து உருவாக்குகிறார்கள்.

இதற்காகத்தான் சாதி அடிப்படையிலான, மத அடிப்படையிலான, இன அடிப்படையிலான போராட்டங்களைத் தூண்டி வளர்த்திருக்கிறார்கள். தமிழகத்தின் ஈழ  ஆதரவு அனுபவத்திலிருந்து மாணவர்களிடமும் செயல்பட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு முன்னேற்பாடுகளோடு இருக்கிற முதலாளிகளின் அரசு தனக்கு எதிராக இருக்கிற தடைகளை தகர்ப்பதில் வெற்றி காணுகிறது என்பதையே தற்போதைய ஜல்லிக்கட்டு போராட்டங்கள் உணர்த்துகின்றன. பண பறிப்பாலும், பல்வேறு காரணங்களாலும் விவசாயிகள் உட்பட மக்கள் செத்துக்கொண்டிருப்பது ஒரு பொருட்டே இல்லையென்று ஆக்கப்பட்டிருக்கிறது.

தனது மோசமான பொருளாதாரத் திட்டங்களால் மக்களைக் கொல்கிற கார்ப்பரேட்டுகளின் மோடி அரசு துணிச்சலோடு ஆட்டம் போடுகிறது. அரசால் அனுமதிக்கப்பட்ட போராட்டம் ஒரு வரம்பிற்கு உட்பட்ட அளவிலேயே நடக்க வேண்டும். மீறும்போது அரசு தான் உண்மையான கோர முகத்தை காட்டும். அப்போது உங்களுக்குப் படுகாயங்களும், உயிர்பலியும் கூட உருவாகும்!

- திருப்பூர் குணா

Pin It