கடந்த வியாழன் (16.06.22) அன்று சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீதிபதி அரி பரந்தாமன், கலி. பூங்குன்றன், சுப. வீரபாண்டியன், அருள்மொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் கருஞ்சட்டைப் படை தன் கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்த ஆளுநர் எங்களுக்கு வேண்டாம் என்றும், இனி ஆளுநர் என்ற பொறுப்பே வேண்டாம் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
மனிதர்களுக்குள் வருண பேதத்தை ஏற்படுத்தி, ஏற்றத்தாழ்வுகளை நிலைக்கச் செய்யும் சனாதன தர்மத்தை ஆளுநர் வரவேற்பதும், வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், சனாதன தர்மம் என்றால் அது வர்ண தர்மம்தான் என்பதை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமே ஒப்புக் கொண்டிருக்கிறது என்றும் சான்றுகளை எடுத்து வைத்து ஆசிரியர் உரையாற்றினார்.
2020ஆம் ஆண்டு தொடங்கி, இன்று வரையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 மசோதாக்களை, ஊறுகாய் ஜாடியில் ஊற வைத்துவிட்டு ஊரெங்கும் நடக்கின்ற கூட்டங்களில் பங்கேற்கச் செல்கின்றார் ஆளுநர் என்றார் ஆசிரியர். செய்யவேண்டிய தன் வேலையைச் செய்யாமலும் வேண்டாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருப்பதாகவும் ஆளுநர் மீது அவர் குற்றம் சாட்டினார்
நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் தன் கண்டன உரையில், இந்திய அரசமைப்புச் சட்டம் 200 ஆவது பிரிவின் கீழ், ஓர் ஆளுநர் சட்டமன்றம் நிறைவேற்றும் மசோதாக்களை ஆறு வாரத்திற்குள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட வேண்டும் என்றுதான் முதலில் இருந்தது என்றும், அந்தக் கால அவகாசம் கூடுதலாக இருக்கிறது என்று கருதி, பிறகு திருத்தப்பட்டதாகவும் எடுத்துச் சொன்னார். ஆறு வார காலம் என்பதைக் கூடிய விரைவில் என மாற்றம் செய்தனர். ஆனால் நம் ஆளுநரோ இரண்டு ஆண்டுகளாகியும் சில மசோதாக்களை அனுப்பாமல் வைத்திருப்பது அரசமைப்புச் சட்டத்தையே அவமதிப்பது ஆகும் என்றார்.
ஆளுநரிடம் இருந்து அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையும், ஆளுநரைத் தன் வேலையைச் செய்யுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது, மிகப்பெரிய துயரம் என்று அங்கே சொல்லப்பட்டது.
தோழர் முத்தரசன் கூறியிருப்பது சரியானது! ஆர்.என். ரவி அவர்களுக்கு தன் கருத்தை எடுத்துச் சொல்ல எல்லா உரிமையும் இருக்கிறது. அவர் சனாதனத்தை, வைதீகத்தை வலியுறுத்துவது குறித்து நமக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால் அண்ணாமலை போலத் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பிறகு எதை வேண்டுமானாலும் பேசட்டும். அப்படியில்லாமல் இரட்டை வேடம் இனியும்
வேண்டாம். ஆளுநர் அவர்களே, ஒன்று நீங்கள் ஆளுநராக இருங்கள் அல்லது அசல் பார்ப்பனராக இருங்கள். இரண்டுமாக இருப்பது நாட்டுக்கும், உங்களுக்கும், நல்லது இல்லை.
- சுப.வீரபாண்டியன்