சில மாதங்களுக்கு முன்பு, ஜி. யு.போப் அவர்களின், திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறாக இருக்கிறது என்று, தமிழ் ஆங்கிலம் இரண்டையும் முற்றாகக் கற்றுணர்ந்த தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி கண்டுபிடிப்பை வெளியிட்டார். இப்போது மொழித் தீண்டாமை (linguistic apartheid) என்னும் புதிய கண்டுபிடிப்போடு அரங்கிற்கு வந்திருக்கிறார்!

இதனைத் தாண்டி திராவிடக் கருத்தியல் காலாவதியாகி விட்டது என்னும் தன் பழைய பல்லவியை பாடவும் அவர் மறக்கவில்லை. தமிழ்நாட்டில், தொடர்ந்து மதவாத - வர்ணாசிரம சக்திகளும், அவர்களின் கைக்கூலிகளாக விளங்கும் சிலரும், திராவிடத்தை எதிர்த்துக் கூக்குரலிட்டுக் கொண்டே இருப்பது வழக்கமானதுதான். அந்த இரைச்சல் கடந்த 80 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதனால் திராவிடக் கருத்தியலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக, அது மென்மேலும் வலிமை அடைந்திருக்கிறதே அல்லாமல் மெலியவோ, தேயவோ இல்லை!

இப்போது ஓரிரு நாள்களுக்கு முன்பு, ஓர் ஆங்கில நாளேட்டிற்கு அளித்த நேர்காணலில், ஆளுநர் ரவி புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். it is an ideology that rapidly enforces linguistic apartheid on the whole of the nation என்பது அவர் கூற்று அதாவது நாடு முழுவதும் மொழித் தீண்டாமையை இந்தக் (திராவிட) கருத்தியல் விரைந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்!rn ravi interviewமேலை நாடுகளில் நிறத்தின் அடிப்படையிலும், இந்தியாவில் சாதியின் அடிப்படையிலும் தீண்டாமை உண்டு என்பதை நாம் அறிவோம். இந்தியாவின் சாதியத் தீண்டாமைக்கு யார் காரணம், எது மூல ஊற்று என்பதையும் உலகம் அறியும். இப்போது இவர் புதிதாக மொழித் தீண்டாமை என்று குறிப்பிடுகிறார்!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பேசும் தமிழ் மரபும், உலகெங்கும் சமத்துவம் சகோதரத்துவம் வேண்டும் என்று வற்புறுத்தும் திராவிடக் கருத்தியலும், என்றென்றும் தீண்டாமைக்கு எதிரானவை! உண்மை இவ்வாறு இருக்க, எந்த அடிப்படையில் நம் மீது இப்படி ஓர் இழிவான குற்றச்சாட்டை ஆளுநர் சுமத்துகிறார்?

விரைவில் அமையவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், தமிழ், ஆங்கிலம் தவிர பிற மொழி நூல்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கவில்லையாம். எப்போதும் இரு மொழிக் கொள்கையை ஏற்றிருக்கும் தமிழ்நாடு, இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள நூல்களை நூலகங்களுக்கு வாங்குவது என்பதுதானே இயல்பு! இது எப்படித் தீண்டாமை ஆகும்?

ஆளுநர் பிறந்த பீகார் மாநிலத்தில், ஆயிரக் கணக்கில் தமிழ், தெலுங்கு, மலையாள நூல்கள் நூலகத்தை நிரப்பி உள்ளனவா? தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் எல்லாம் எல்லா மொழி நூல்களும் போதுமான அளவிற்கு நூலகங்களில் உள்ளனவா?

சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் கோடி கோடியாய் பணத்தை கொட்டிக் கொடுக்கிற ஒன்றிய அரசு, தமிழ் உள்ளிட்ட ஐந்து செம்மொழிகளுக்கு வழங்கப்படும் பணத்தைப் போல 29 மடங்கு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதை ஓர் அமைச்சரே நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். இது மொழித் தீண்டாமை இல்லையா! இந்தியாவில் சமஸ்கிருதத்திற்கு எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன! பிற மொழிகளுக்கு ஒன்றிய அரசு நிறுவியுள்ள பல்கலைக்கழகங்களில் எண்ணிக்கை என்ன? இது மொழித் தீண்டாமை இல்லையா?

மொழித் தீண்டாமை பற்றிப் பேசும் ஆளுநர், ஏன் இங்கு அவர் கூட்டும் கூட்டங்களில், இந்தியிலோ, சமஸ்கிருதத்திலோ, அவருடைய தாய் மொழியான பீகாரியிலோ பேசாமல், ஆங்கிலத்தில் பேசுகிறார்? ஏன் பீகாரியை போலவோ, வடநாட்டுக்காரரைப் போலவோ அல்லாமல், ஆங்கிலேயரைப் போல உடை உடுத்துகிறார்? இவையெல்லாம் மொழித் தீண்ண்டாமை ஆகாதா?

உண்மையாக எண்ணிப் பார்த்தால், தமிழ்நாடுதான் எல்லோரோடும் நேசம் காட்டுகிற, எல்லோருடைய மொழிகளையும் நேசிக்கிற நாடாகவே இருந்து வருகிறது! நாம் எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம் என்பதுதான் உண்மையே தவிர, யார் ஒருவரையும், எந்த மொழியையும் எதிர்க்கவே இல்லை. அப்படித் தீண்டாமை உணர்வு கொண்டவர்களாக இருக்கிறோம் என்றால், தமிழ்நாட்டின் தலைநகரில் இந்தி பிரச்சார சபா இத்தனை ஆண்டுகள் இவ்வளவு பாதுகாப்பாய் இங்கே இருக்க முடியுமா?

இன்னொரு உண்மையையும் ஆளுநர் திட்டமிட்டு மறைக்கிறார். தமிழ்நாட்டு நூலகங்களில். தமிழ் ஆங்கிலம் தவிர வேறு நூல்களே இல்லை என்கிறார். எல்லா நூலகங்களையும் ஆளுநர் சுற்றிப் பார்த்து விட்டாரா? எடுத்துக்காட்டாக, அவருடைய ராஜ்பவனுக்கு மிக அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திலேயே இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி நூல்கள் ஏறத்தாழ 10 ஆயிரம் உள்ளன. அண்ணா சாலையில் அமைந்திருக்கும் தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் 2000 ஹிந்தி நூல்கள் இடம் பெற்றுள்ளன.

தீண்டாமை எதிர்ப்பு வீரர் ஆளுநர் ரவி அவர்கள், பீகார் நூலகங்களில் உள்ள பிற மொழி நூல்களின் எண்ணிக்கையை விரைவில் தருவார் என்று நம்புகிறோம்!

திராவிடப் பெருஞ்சுவரில் மோதி மோதி அழிந்தவர்கள் பலர். இப்போது கடைசியாக வந்திருப்பவர் பெயர்தான் ஆர் என் ரவி!

-  சுப.வீரபாண்டியன்

Pin It