தமிழ்த் தேசிய இனத்துக்கான முன்னுரை:-

இந்திய அரசதிகாரத்தை ஃபாசிஸ்ட்கள் கைப்பற்றி பேரழிவுகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அவர்களை இந்தத் தேர்தலில் வீழ்த்துவது எவ்வாறு என்பதற்கான உத்திரீதியான வாக்களிப்பு வழிகாட்டியே இச்சிறு பிரசுரம். தமிழ்நாட்டில் நாம் பார்ப்பனரல்லாதோர் அரசியல், மொழி வழி தேசியம் ஆகிய அரசியல் விவாதங்கள், அதன் அடிப்படையிலான அரசியல் உருவாக்கங்கள் மற்றும் அரங்கங்களுக்கு எல்லாம் பழக்கப்பட்டிருக்கிறோம். இந்திய துணைக்கண்டத்தின் ஏனைய தேசியங்கள் அத்தகைய நிலையில் இல்லை. இந்த நிலையில் தான் இவ்வழிகாட்டி முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. சொல்லப் போனால் இது இந்திய துணைக்கண்டம் முழுமைக்குமான பார்ப்பனரல்லாதோர் அரசியலை முன்வைக்கிறது. நம் நிலத்தில் பார்ப்பனரல்லாதோர் என்ற திணைக்குள் நாம் யாரையெல்லாம் உள்ளடக்குகிறோமே அவர்களை எல்லாம் தான் வட மாநிலங்களில் பகுஜன்கள் என்று அழைக்கிறார்கள். பகுஜன் என்றால் பெரும்பான்மை என்று பொருள். உயர்சாதி ஏகாதிபத்தியவாதிகள் தவிர்த்த அனைவருமே பகுஜன்கள் தான். இந்தப் பார்வையின் அடிப்படையிலேயே இவ்வழிகாட்டி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் தேசிய கட்சிகள் என்று வழக்கமாக எவையெல்லாம் அழைக்கப்படுகிறதோ அவற்றை ஏகாதிபத்தியக் கட்சிகள் என்றும், மாநிலக் கட்சிகள் என்று நாம் கூறுவதை உயர்சாதி அல்லாத வெகுமக்களின் (பகுஜன்களின்) உண்மையான தேசியக் கட்சிகளாகவும் அடையாளம் காண்கிறது இவ்வழிகாட்டி.

people 380பாஜகவைப் பொருத்தவரை அது ஃபாசிஸ்ட் ஏகாதிபத்தியக் கட்சி எனவும், காங்கிரஸ் உயர்சாதி ஏகாதிபத்திய கட்சிதான் என்றாலும் அது சாராம்சமாக ஃபாசிஸ்ட் அல்ல என்றும் வரையறுக்கிறது. இந்நிலையில் ஃபாசிஸ்ட் ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவது முதன்மையானதாகவும், அத்துடன் பகுஜன்-தேசியக் கட்சிகளின் கரங்களை வலுப்படுத்துவது அவசியமானதாகவும் ஆகிறது. ஃபாசிஸ்ட்களை வீழ்த்தும் ஆற்றல் கொண்ட ஒரே அரசியல் அலகாக இவ்வழிகாட்டி பகுஜன்-தேசிய கட்சிகளையே காண்கிறது. ஆயினும் பகுஜன்-கட்சிகள் ஃபாசிஸ்ட்களை எதிர்த்து அணிசேராமலும் சிதறியும் இருக்கின்ற, காங்கிரஸ் இவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பின்வாங்கியிருக்கின்ற மற்றும் இடதுசாரிகள் ஃபாசிஸ்ட்களை எதிர்க்கும் அளவுக்கு வலுவில்லாமல் இருக்கின்ற சூழலில் எவ்வாறு உத்திரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும் வாக்களித்தால் அவர்களை வீழ்த்த முடியும் என்பதையே இவ்வழிகாட்டி தெளிவுபடுத்துகிறது.

உதாரணத்திற்கு, ஃபாசிஸ்ட்களை வீழ்த்தும் ஆற்றல் கொண்ட பகுஜன்-கட்சி இருக்கக்கூடிய வங்கத்தில் மம்தாவின் திரிணாமூலுக்கு வாக்களிக்க வேண்டும். அதேநேரம் குஜராத்தில் அத்தகைய உருவாக்கங்கள் இல்லாததால் காங்கிரஸுக்கே வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ஃபாசிஸ்ட்களை வீழ்த்த பகுஜன்-தேசியக் கட்சியான திமுக இடதுசாரிகளோடும் காங்கிரஸுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் இந்த மக்கள் மகா கூட்டணிக்கான ஒரு யதார்த்தப்பூர்வமான மாதிரியாக தமிழகம் இருக்கிறது என்பதைக் காணலாம். இது தவிர்த்து ஒவ்வொரு தொகுதிவாரியாக நாம் வாக்களிக்க வேண்டிய முறை மற்றும் கையாள வேண்டிய உத்திகளைப் பற்றி இந்த வழிகாட்டி பார்ப்பனரல்லாத வெகுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை அதிகமதிகம் மக்களிடம் கொண்டு சேர்க்க கேட்டுக் கொள்கிறோம்.

பார்ப்பனரல்லாத வெகுமக்களின் சுயாதீனமான மொழி வழி தேசிய அரசியலில் முதிர்ச்சி பெற்றிருக்கும் தமிழ்த் தேசிய இனம் இந்திய துணைக்கண்டத்தின் பிற தேசிய இனங்கள் பற்றி பாராமுகமாக இருக்க முடியாது. ஃபாசிஸத்தை வீழ்த்துவது, இந்திய ஏகாதிபத்தியத்தை வலு குன்றச் செய்வது, அதன்வழி இந்திய ஒன்றியத்தை உண்மையான ஜனநாயகம் நிலவக்கூடிய கூட்டாட்சி ஆக்குவதே அதன் அடுத்த கட்ட நகர்வாக இருக்க வேண்டும். ஆக, இவ்வழிகாட்டி தமிழகத்தில் நாம் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதோடு துணைக்கண்ட அரசியலை நாம் எவ்வாறு பார்ப்பது, எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பவற்றிலும் நாம் தெளிவு பெறுவதற்கு உதவும் என நம்புகிறோம்.

மக்களின் மகா கூட்டணி - 2019 க்கான உத்திரீதியான வாக்களிப்பு வழிகாட்டி

இந்தியாவின் பல்வேறுபட்ட மக்களாகிய நாம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பதற்காகவும், ஃபாசிஸ்ட்டுகளை பகுஜன்களுக்கு எதிரான குற்றங்களுக்காக அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காகவும், 2019 மக்களவைத் தேர்தலில் அவர்களை வீழ்த்த வேண்டிய உடனடித் தேவை நம்முன் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு மக்களின் மகாகூட்டணியை உருவாக்க பற்றுறுதியோடு முடிவெடுத்துள்ளோம்.

மக்களின் மகாகூட்டணி எதற்காக?

ஃபாசிஸ்ட்டுகளை தோற்கடிப்பதற்கு பெரும்பாலான நமது கட்சிகள் தவறியுள்ளதால் மக்களுக்கான ஒரு மகா கூட்டணியின் தேவை நமக்கு இருக்கிறது. நமது கட்சிகள் நம்மை ஏமாற்றியிருக்கலாம், ஆயினும் அவர்களை கொலை பாதக ஃபாசிஸ்ட் சக்திகள் வீழ்த்துவதற்கு நாம் அனுமதித்துவிடக் கூடாது. 2019 மக்களவைத் தேர்தல் தான் கொலை பாதக ஃபாசிஸ்ட் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் ஆறில் ஒரு பங்கு மனித இனத்தின் விதியைத் தீர்மானிக்கப் போகிறது.

நமது மக்கள் மகா கூட்டணி என்பது பகுஜன் உழைக்கும் மக்களின் ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி ஆகும். நம்மை இணைக்கும் கொள்கை என்னவென்றால் நமது அரசியல் வேறுபாடுகள் மனித இனத்திற்கு எதிரான எதிரிகளை தோற்கடிப்பதை விட்டும் நம்மை தடுத்துவிடக் கூடாது என்பதுதான். ஃபாசிஸ்ட்டுகள் தான் நம் மக்கள் அனைவரின் பொது எதிரிகள் ஆவர். அதனால் நாம் அவர்களை நமது வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒன்றிணைந்து அவர்களை வீழ்த்த வேண்டும். இது பகுஜன் கலையான உத்திரீதியான வாக்களிப்பின் மூலம் மக்களின் மகா கூட்டணியை சாத்தியமாக்குவதற்கான ஒரு யதார்த்தப் பூர்வ வழிகாட்டியாகும்.

மக்கள் மகா கூட்டணியின் வலிமை

ஃபாசிஸ்ட்டுகள் இந்தியாவின் அரசு அதிகாரத்தை ஏகாதிபத்திய உயர்சாதியினரை ஒன்றிணைத்து அவர்களது வாக்குகளை ஒருங்கு திரட்டியதன் மூலமாக கைப்பற்றினர். அவர்களை வீழ்த்துவதற்கு நாம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, பஞ்சாபிலிருந்து வங்காளம் வரை மற்றும் நாகாலாந்திலிருந்து கேரளம் வரை, ஒடுக்கப்படும் தேசியங்களைச் சேர்ந்த பகுஜன்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். மக்கள் மகா கூட்டணி என்பது தலித்கள், ஆதிவாசிகள், இதர பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், பால் புதுமையினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் துணைக்கண்டத்தின் ஒடுக்கப்படும் தேசியங்கள் அனைவரையும் உள்ளடக்கிய – பகுஜன் பெரும்பான்மை மற்றும் அதனது அரசியல் அமைப்புகள் - பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். ஏகாதிபத்திய கட்சிகள் போன்றல்லாது, பிராந்திய கட்சிகள் தான் உண்மையான, அதிகாரப் பூர்வமான பகுஜன்-தேசிய கட்சிகளாகும். பகுஜன் பெரும்பான்மை தான் சிறுபான்மை உயர்சாதியினரின் சர்வாதிகாரத்தை வீழ்த்துவதற்கான வலிமையைக் கொண்ட ஒரே அரசியல் சக்தி ஆகும்.

நாம் எங்கே இருக்கிறோம்?

பகுஜன்களின் மாபெரும் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூலமாக நிதர்சனமாக்கப்பட்ட ஃபாசிஸ்ட்டுகளுக்கெதிரான மகாகத் பந்தன் (மகா கூட்டணி) என்ற கருத்து ஒரு துணைக்கண்ட ஆற்றலாக பொருண்மையாகவில்லை. ஆயினும் மகா கூட்டணி எனும் கருத்து வீழ்த்தப்படவில்லை; அது ஃபாசிஸ்ட்டுகள் வெற்றிகரமாக கைக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பாஜக இந்திய மாநிலங்கள் எல்லாவற்றையும் சேர்ந்த சந்தர்ப்பவாத, பிழைப்புவாதக் கட்சிகள் பலவற்றோடும் சேர்ந்து ஒரு மகா கூட்டணியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில், அதனது மகா கூட்டணியை நாம் வீழ்த்துவதோடு, நமக்கான ஒரு புதிய, படைப்பூக்கமிக்க உத்திரீதியான ஒரு கூட்டணி உருவாவதற்கும் நாம் உந்துவிசையாக செயலாற்ற வேண்டும். மற்றுமொரு ஏகாதிபத்திய உயர்சாதிக் கட்சியான காங்கிரஸ், ஃபாசிஸ எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைப்பதற்கான அதனது செயல்பாட்டிலிருந்து சத்தமின்றி பின்வாங்கியிருக்கிறது.

இடதுசாரிக் கட்சிகளும் இந்த இமாலயப் பணியை செய்து முடிக்கும் அளவுக்குத் தயாராக இல்லை. பகுஜன் தேசியக் கட்சிகளும் ஏகாதிபத்திய கட்சிகளை தாங்களாகவே வீழ்த்த முடியாத வகையில் வலுகுன்றியும் சிதறியும் இருக்கிறார்கள். ஆயினும், உத்திரீதியாக வாக்களிப்பதன் மூலமாக நாம் நமது கட்சிகளை ஆற்றல்படுத்துவதோடு, ஃபாசிஸ்ட்டுகளின் கைகளிலிருந்து அரசதிகாரத்தையும் கைப்பற்ற முடியும்.

உத்திரீதியான வாக்களிப்பு எனும் பகுஜன் கலை

கட்சிகளுக்கு அவர்களுக்கே உரிய தேர்தல் உத்திகள் இருக்கின்றன. நம் மக்களுக்கு நமக்கேயுரிய ஒரு வாக்களிப்பு உத்தி அவசியமானதாகும். நாம் பாஜக வை வீழ்த்துவதற்கும் காங்கிரஸை அல்லாமல் நமது பகுஜன்-தேசிய கட்சிகளை வலுப்படுத்துவற்கும் வாக்களிக்க வேண்டும். ஆயினும், இதை நம்மால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் உதவியில்லாமல் செய்ய முடியாது. நாம் நமது பகுஜன்-தேசியக் கட்சிகளின் வலிமை குறித்த யதார்த்தப்பூர்வமான அளவீட்டின் அடிப்படையில் காங்கிரஸுடனும் இடது கட்சிகளுடனும் உத்திரீதியான உறவை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாக்கும் முக்கியம், ஆனால் சமமான அளவில் அல்ல.

சில தொகுதிகளின் சில வாக்குகள் ஒட்டுமொத்த முடிவில் பிறவற்றை விட பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம், குறிப்பாக நாம் மனிதகுலத்தின் எதிரிகளை வீழ்த்துவதற்கு வாக்குகளை ஒருங்கு திரட்டும் போது, நாம் ஒவ்வொரு ஃபாசிஸ்ட்-எதிர்ப்பு வாக்கின் மதிப்பையும் பெருக்க வேண்டும், முக்கியமான வாக்காளர் தொகுதிகளில் உள்ள பகுஜன் வாக்குகளை உத்திரீதியாக ஒருங்கு திரட்ட வேண்டும், இவ்வாறு இனப்படுகொலைப் பண்புகொண்ட ஃபாசிஸ்ட்டுகளுக்கு எதிரான ஒரு வரலாற்று அணியாக வாக்களிக்க வேண்டும். மோடியெனும் மரண வியாபாரிக்கெதிரான ஒரேயொரு வாக்கு கூட வீணாகக்கூடாது.

தொகுதி அடிப்படையிலான வாக்குகளின் அறிவுபூர்வமான திரட்சியின் வழியே நாம் அரசியல் சாசனச் சட்டத்தை உயர்சாதி தாக்குதலிலிருந்து காக்க முடியும். நமது வாக்குகளை பகுஜன் மயப்படுத்துவதன் மூலமாக முடிவுகளை நமக்குச் சாதகமாக சுழச்செய்ய முடியும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் எங்கெல்லாம் நேரடியான மோதலில் ஃபாசிஸ்ட் வேட்பாளரை தோற்கடிக்கும் வலிமையோடு இருக்கிறோமோ அங்கெல்லாம் நமது வாக்குகளை பகுஜன்-தேசிய கட்சிகளின் வேட்பாளர்களுக்காக கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பிட்ட தொகுதிகளில் பாஜக வைத் தோற்கடிக்கும் வகையில் நம்மை விட நல்ல நிலையில் காங்கிரஸோ, இடதுசாரி வேட்பாளர்களோ இருந்தால் அங்கு அவர்களை நோக்கி நமது வாக்குகளை திசைப்படுத்த வேண்டும்.

பகுஜன்களுக்கு எதிரான hate crimes-இல் ஈடுபட்ட வேட்பாளர்களுக்கு, அவர்கள் எந்தக் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், நாம் வாக்களிக்கக் கூடாது.

நாம் பகுஜன்-தேசிய கோரிக்கைகளுக்காக பணி செய்த நீண்ட வரலாற்றைக் கொண்ட வேட்பாளர்களுக்கு, அவர்கள் (தேசிய ஜனநாயகக் கூட்டனி தவிர்த்து) எந்தக் கட்சிப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பிரத்தியேகமான முறையில் நாம் வாக்களிக்க வேண்டும்.

நாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பகுஜன்-தேசியக் கட்சிகளை, அவர்கள் உள்ளிருந்து பாஜக வை வீழ்த்த வேண்டும் என்றும், பாஜக வேட்பாளருக்கு வாக்குகளை திருப்பிச் செலுத்தக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

நாம் காங்கிரஸையும் இடதுசாரி கட்சிகளையும், உயர்சாதியினரில் இருக்கும் மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு பிரிவினரின் வாக்குகளை அவர்கள் கவர்வதன் மூலம் உயர்சாதி வாக்கு வங்கியை உடைப்பதற்காக வேலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

நாம் விரைவில் தொகுதி வாரியான அறிவுப்பூர்வமான மற்றும் உத்திரீதியான வாக்களிப்பு வழிகாட்டியைத் தயாரித்து வெளியிட்டு அதை பகுஜன் வெகுமக்களிடம் கொண்டு சேர்ப்போம்.

ஒரு பகுஜன் முன்னணி அரசாங்கம் அமைவதற்காக

நாம் ஒரு பகுஜன் முன்னணி அரசாங்கத்தை உருவாக்காமல் இந்தியாவை ஒரு பகுஜன் ஜனநாயக ஒன்றியமாக மாற்ற முடியாது. பகுஜன் முன்னணி பல்வேறுபட்ட மக்கள் குழுக்களை பிரதிநித்துவப்படுத்தும் கூட்டணிகளின் கூட்டணிகளாக (Coalitions of coalitions) அமையும். 2019 இல் ஃபாசிஸ்ட்டுகள் வீழ்ந்ததற்கு பிற்பாடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு பகுஜன் முன்னணி அரசாங்கம் குடியரசை ஆளும். அவ்வழியே அதை உண்மையான ஜனநாயகமாக மாற்றும்.

மூலம்: http://www.raiot.in/guide-to-voting-out-the-hindu-fascists-in-2019/

மொழியாக்கம்: ஆசிர் முகம்மது

Pin It