இரண்டாவது உலகப் போரில் சோசலிச சோவியத் யூனியன் ஆற்றிய வீரமான பங்கைப் போற்றுவோம்!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை - மே 5, 2015

இரண்டாவது உலகப் போரில் சோவியத் யூனியனின் தலைமையில் செயல்பட்ட பாசிச எதிர்ப்பு மக்கள் மற்றும் அரசாங்கங்களின் கைகளில் நாசி செர்மனி தோற்கடிக்கப்பட்டதன் 70 ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டின் மே 9 குறிக்கிறது. நாசி ஆட்சியானது, வெளிப்படையாகவே பயங்கரவாத, யூத மக்களுக்கு எதிரான, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ஏகபோக மூலதனத்தின் ஆட்சியாக இருந்தது. அதனுடைய வீழ்ச்சி, காலனியத்தின் பிடியிலிருந்தும், அன்னிய ஆக்கிரமிப்புப் படைகளின் பிடியிலிருந்தும் பல தேசங்களும் மக்களும் விடுதலை பெற வழி வகுத்தது. நாசி பாசிசம் தோற்கடிக்கப்பட்டது, தேசிய சுதந்திரத்திற்காகவும், சனநாயக உரிமைகளுக்காகவும் மற்றும் சோசலிசத்திற்காகவும் போராட்டங்களுக்கு உலக அளவில் உத்வேகமளித்தது. இது, ஆகஸ்டு 1945-இல் சப்பான் சரணடையவும், இறுதியாக இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரவும் சூழ்நிலைமைகளை உருவாக்கியது.

பாசிச சக்திகள் தோற்கடிக்கப்பட்டது, அநியாயமான ஏகாதிபத்தியப் போர்கள் அனைவராலும் கண்டனம் செய்யப்படுவதற்கும், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பற்றிய அறிக்கையை வெளியிடுவதற்கும் வழி வகுத்தது. எல்லா உறுப்பினர் நாடுகளும், தேசிய சுயநிர்ணயக் கோட்பாட்டையும், பெரிய மற்றும் சிறிய எல்லா நாடுகளின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொள்ள வழி வகுத்தது.

கடந்த 70 ஆண்டு அனுபவங்கள், அமெரிக்காவின் தலைமையில் உலகம் பாசிசத்தாலும், இராணுவமயத்தாலும், ஏகாதிபத்திய போர்களாலும் அச்சுறுத்தப்பட்டு வருவது தொடர்கிறதென காட்டுகின்றன. பாசிச நாசி செர்மனி 1945-இல் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் பாசிசத்தைத் தொடர்ந்து வருகிறது. மக்களுக்கு எதிராக பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விடுவது, தொழிலாளர்களுடைய உரிமைகளைக் காட்டுமிராண்டித்தனமாக நசுக்குவது, குறிப்பிட்ட மத, இன மற்றும் தேசிய சிறுபான்மையினத்தவர்கள் மீது வெறுப்பையும், வன்முறைத் தாக்குதல்களையும் தூண்டி விடுவது என இவையனைத்தையும் மற்றும் பிற கீழ்த்தரமான யுக்திகளையும், மனிதாபிமானமற்ற இட்லர் தலைமையிலான நாசி முறைகளையும் கட்டிக் காத்து அமெரிக்க ஏகாதிபத்தியம் அவற்றை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

இரண்டாம் உலகப் போரிலிருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் உரிமைகளுக்கு எதிரான மிகப் பெரிய எதிரியாக வளர்ந்துள்ளது. அது, நாசி செர்மெனியைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், ஆபத்தானதாகவும், சூழ்ச்சியான ஆக்கிரமிப்பாளராகவும் ஆகியிருக்கிறது. பிற்போக்கான ஏகாதிபத்தியக் கூட்டணியாகிய நேட்டோ சக்திகளுக்குத் தலைமையாக, அது எல்லா ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளையும் சகதியில் போட்டு நசுக்கிவிட்டு ஒன்றை மாற்றி இன்னொரு அநியாயமான போர்களை நடத்தி வருகிறது. மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்கா சிறப்புரிமை கொண்டதெனவும், அதற்கு எங்கு வேண்டுமானாலும் தலையிட உரிமை உண்டு என்றும் அதனுடைய தலைவர்கள் வெளிப்படையாகவே அறிவித்து வருகின்றனர்.

பொய்களை மக்கள் உண்மையென்று நம்பும் வரை மீண்டும் மீண்டும் தினமும் கூறுவதென்ற கோயபல்சின் முறையை அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலும் கூர்மைப்படுத்தி எங்கும் நிறுவனப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இராக்கை இராணுவ ஆக்கிரமிப்பு செய்யவும் அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவுவதையும் நியாயப்படுத்த, அது சதாம் உசேனிடம் அணு ஆயுதங்கள் இருந்ததாக ஒரு பொய்யை இட்டுக் கட்டி அதை பரப்புரை செய்து வந்தது.

தற்போது தினசரி அடிப்படையில் அது மீண்டும் மீ்ண்டும் கூறிவரும் ஒரு அப்பட்டமான பொய்யானது, உக்ரேனில் நடைபெற்றுவரும் போருக்கு இரசியா தான் காரணம் என்பதாகும். இதோடு கூட, 70 ஆண்டுகளுக்கு முன்னர் நாசி செர்மனி மற்ற நாடுகளைக் கைப்பற்றவும், ஐரோப்பாவை தங்களுக்கிடையே பிரித்துக் கொள்ளவும் சோவியத் இரசியா ஒத்துழைத்தது என்ற பயங்கரமான பொய்யையும் அது கூறி வருகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு யார் பொறுப்பு?

பாசிசம் பரவியதற்கும் இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட பேரழிவுக்கும் ஸ்டாலினும், இட்லரும் சம அளவில் பொறுப்பானவர்களென ஏகாதிபத்திய பரப்புரையாளர்கள் கூறுகின்றனர். தங்களை இட்லர் நாசி போன்று அமைத்துக் கொண்டுள்ள, அமெரிக்கா மற்றும் நேடோவின் ஆதரவும் கொண்டுள்ள, இன்றைய உக்ரேனினுடைய தலைவர்கள், ஸ்டாலின், இட்லர் இருவரையும் பாசிச ஆக்கிரமிப்பாளர்களென அங்கீகரிக்க வேண்டுமென குரலெழுப்பி வருகின்றனர்.

உலக அளவிலான ஒரு பெரும் போர், ஒன்று அல்லது இரு தனிப்பட்டவர்களால் உருவாக்கப்படுவதல்ல. அது முரண்பாடான நலன்களைக் கொண்ட முக்கிய வர்க்கங்கள் மற்றும் அரசுகளின் செயல்பாட்டின் விளைவாகும்.

இட்லர் பொதுவாக உலக முதலாளி வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியும், குறிப்பாக செர்மன் ஏகபோக முதலாளிகளுடைய பிரதிநிதியும் ஆவார். அந்த நேரத்தில் இருந்த செர்மனியின் பணக்கார முதலாளிகள், மிகவும் பணக்கார அமெரிக்க முதலாளிகளோடு நெருங்கிய உறவு கொண்டிருந்ததோடு, அவர்களிடமிருந்து நிதியுதவியும் பெற்றனர். கம்யூனிஸ்டுகளையும், தொழிற் சங்கங்களையும் நசுக்குவதற்கும், யூத மக்கள் மீது படுகொலையைக் கட்டவிழ்த்து விடுவதற்கும், பொருளாதாரத்தை விரைவாக இராணுவமயப்படுத்தவும், செர்மன் ஏகாதிபத்திய பேரரசை விரிவுபடுத்துவதற்காக வெளிநாடுகள் மீது போர்களைத் தொடுக்கவும் இட்லருடைய நாசி கட்சி முன்னேறி, அதிகாரத்திற்கு வர அவர்கள் ஆதரவளித்தனர்.

உலகத்தின் முதல் சோசலிச அரசிற்கு தலைமை வகித்தவர் ஸ்டாலின். சோவியத் மற்றும் சர்வ தேச தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர், ஏகாதிபத்தியத்திலிருந்து எல்லா நாடுகள் மற்றும் மக்களுடைய அமைதிக்காகவும், விடுதலைக்காகவும் உழைத்தார். நாசி பாசிசவாதிகளுடைய தீவிரப் போர்த் திட்டங்களை முறியடிக்க ஒரு பொதுவான எதிர்ப்பு முன்னணியை உருவாக்க வேண்டுமென 1933-லேயும்அதைத் தொடர்ந்த ஆண்டுகளிலும் மீண்டும் மீண்டும் சோவியத் அரசாங்கம், பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் ஆங்கில பிரஞ்சு ஏகாதிபத்தியர்கள் அப்படிப்பட்ட ஒரு பொதுவான போராட்டத்தில் நாட்டம் காட்டவில்லை. அவர்கள், சோவியத் யூனியனைத் தனிமைப்படுத்தி, நாசி போர் இயந்திரத்தை அதற்கு எதிராக அனுப்புவதில் குறியாக இருந்தனர். உலகின் முதல் சோசலிச அரசை அழிப்பதற்கு இட்லரை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சு நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

20-ஆம் நூற்றாண்டில் உலகை இரண்டு உலகப் போர்களுக்கு இழுத்துச் சென்றதற்கு முதலாளித்துவ வர்க்கமும், அவர்களுடைய அரசாங்கங்களுமே காரணமாவர். இரசியாவில் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைத் தூக்கியெறிவதன் மூலமும், சோவியத் அதிகார வடிவில் தொழிலாளர்கள் - உழவர்களுடைய ஆட்சியை நிறுவியதன் மூலமும் முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த சாதனை தொழிலாளி வர்க்கத்தினுடையதாகும். இரண்டாவது உலகப் போரை ஒரு பாசிச எதிர்ப்புப் போராக மாற்றி, நாசி செர்மனியை வீழ்ச்சியடையச் செய்ததற்கு சோவியத் யூனியனைத் தலைமையாகக் கொண்ட உலகத் தொழிலாளி வர்க்கமும், எல்லா ஒடுக்கப்பட்ட நாடுகளும் மக்களும் காரணமாவர். இவையனைத்தும் நிரூபிக்கப்படக்கூடிய உண்மைகளாகும்.

20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதலாளித்துவம் தன்னுடைய இறுதிக் கட்டமான ஏகாதிபத்திய நிலைக்கு வளர்ச்சி பெற்றுவிட்ட நிலையில், பொது நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அது ஏற்கெனவே நுழைந்துவிட்டது. உலகின் முன்னணி முதலாளித்துவ சக்திகள், எல்லா கண்டங்களையும் தத்தமுடைய காலனிகளாகவும், ஏகபோக ஆதிக்கப் பகுதிகளாகவும் பிரித்துக் கொண்டுவிட்டனர். எனவே, மேற்கொண்டு எந்த விரிவாக்கமும், ஒருவர் மற்றொருவரிடமிருந்து இடங்களைக் கைப்பற்றுவதற்கான போர்கள் மூலம் மட்டுமே வரமுடியும். 1917-இல் புரட்சியின் வெற்றியும், சோவியத் யூனியன் உருவாக்கப்பட்டதும், சக்திவாய்ந்த மிகப் பெரிய சந்தைகளும், கச்சாப் பொருட்களுக்கான ஆதாரங்களும் ஏகாதிபத்தியத்திற்கு மறுக்கப்பட்டுவிட்டது. இது முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கம், நல்ல வேலை நிலைமைகளுக்காகவும், வாழ்க்கை நிலைமைகளுக்காகவும் கோரிக்கைகளை எழுப்புவதற்கும், போராடுவதற்கும் எழுச்சியூட்டியது. இக் காரணிகளுடைய மொத்த விளைவாக, முதலாளித்துவ பொது நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது.

தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைத் தாக்குவதன் மூலமும், சமூக உற்பத்தியில் அதனுடைய பங்கை வெட்டிக் குறைப்பதன் மூலமும், பொருளாதாரத்தை இராணுவமயமாக்குவதன் மூலமும், ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடுப்பதன் மூலமும், நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்காக ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் ஒரு கருவியாக பாசிசம் உருப்பெற்றது.

அமெரிக்க வங்கிகள் மிகப் பெரிய கடன்களைக் கொடுக்காமல் இருந்திருந்தால், நாசி செர்மனியால் ஒரு இராணுவ-தொழில் கூட்டுத் தொகுதியை அவ்வளவு விரைவாகக் கட்டியிருக்க முடியாது. பிரிட்டனும், பிரான்சும் நாசி செர்மெனிக்கு போலந்து மற்றும் செக்கஸ்லோவாகியா மீது சலுகைகளைக் கொடுக்காமல், இட்லரால் தன்னுடைய தீவிர ஆக்கிரமிப்புத் திட்டங்களை அவ்வளவு விரைவாகக் கொண்டு சென்றிருக்க முடியாது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மெனி, இத்தாலி மற்றும் சப்பானிய ஏகாதிபத்தியர்கள் எல்லோரும் இரண்டாம் உலகப் போருக்கு பொறுப்பானவர்கள் ஆவர். அந்த இரண்டாம் உலகப் போரின் விளைவாக முன்னெப்போதும் இருந்திராத அளவில் சாவும், அழிவும், உலக அளவில் ஏற்பட்டது.

ஸ்பெயினில் பரந்துபட்ட சனநாயக இயக்கத்தை நசுக்குவதற்காக நாசி செர்மனியும் பாசிச இத்தாலியும் இராணுவத் தலையீடு செய்ததையும், பாசிச பிரான்கோ ஆட்சியை அந்த நாட்டில் நிறுவியதையும் பிரிட்டன், பிரான்சு மற்றும் அமெரிக்கா மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தன. லீக் ஆப் நேஷன்சுனுடைய ஒரு உறுப்பினராகிய எத்தியோப்பியாவை இத்தாலியப் படைகள் 1935-36 இல் கைப்பற்றிய போதும் அவர்கள் குரலெழுப்பவில்லை. 1938-இல் பிரிட்டனும், பிரான்சும் நாசி செர்மனியோடும், பாசிச இத்தாலியோடும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் முனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, சோவியத்துக்கு எதிரான ஒரு கூட்டணியை நிறுவினர். அதன் மூலம் இரசியாவை எந்தக் கூட்டாளிகளும் இன்றித் தனிமைப் படுத்தினர். அவர்கள் செக்கோஸ்லாவாகியாவை நாசி செர்மனிக்கு வழங்கியதன் மூலம், இட்லருடைய இராணுவத்திற்கு கிழக்குப் பகுதியின் கதவுகளை அகலமாகத் திறந்து வைத்தனர். இதற்கும் மேலாக, 1939-இல் பிரிட்டன் மற்றும் பிரஞ்சு அரசாங்கங்கள் தனித்தனியே செர்மனியோடு ஒருவரை ஒருவர் தாக்கி ஆக்கிரமிக்க மாட்டோமென அறிக்கைகளில் கையெழுத்திட்டனர். சோவியத் யூனியனை முழுவதுமாகத் தனிமைப் படுத்த அரசியல் சூழ்நிலைமைகளை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் ஒருவரை ஒருவர் தாக்கமாட்டோமென்ற உடன்படிக்கையை செர்மெனியோடு 1939-இல் சோவியத் யூனியன் கையெழுத்திட்டது.

செர்மனியோடு வலுச்சண்டையிட மாட்டோமென ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், தன்னுடைய பாதுகாப்பை வலுப்படுத்திக் கொள்ள சோவியத் யூனியனுக்கு அவகாசம் கிடைத்தது. இட்லர் ஒப்பந்தத்தை மீறவேச் செய்வானென அறிந்திருந்ததால், செர்மனியின் கிழக்கு நோக்கிய தாக்குதல் எவ்வித தடையுமின்றி முன்னேறுவதைத் தடுப்பதற்காக அது தன்னுடைய எல்லையை மேற்கு நோக்கி விரிவு படுத்தி வைக்க முடிந்தது. மேற்கு எல்லைப் புறங்களான பைலோருசியன் மற்றும் உக்ரினியன் குடியரசுகளை ஒட்டி ஒரு சக்தி வாய்ந்த பாதுகாப்புக் கோட்டை உருவாக்கப்பட்டது. பால்டிக் நாடுகளோடு ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. இது சோவியத் இராணுவப் படைகளை எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துயேனியா பகுதிகளில் நிறுத்த வழி வகை செய்தது. இவ்வாறு, எதிர்பார்க்கப்பட்ட நாசி செர்மனியின் தாக்குதலை எதிர்த்து ஒரு "கிழக்கு" முன்னணிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

முழு உண்மையையும் கூறாமல், ஏகாதிபத்தியத்தின் பரப்புரையாளர்கள், 1939-இல் செர்மனியோடு சோவியத் யூனியன் ஒரு உடன்படிக்கையைக் கையெழுத்திட்டது என்ற ஒரு உண்மையைத் தனியாக எடுத்து சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத முறையில் அதை மிகைப் படுத்துவதன் மூலம், போருக்கு இதுவே முக்கிய காரணம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த உடன்படிக்கையானது, இந்த இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டோமென தெளிவாகக் கூறுகிறது. இதை நாசி செர்மனி இரண்டாண்டுகளுக்கு உள்ளாகவே மீறியது.

ஏப்ரல் 1940-இல் செர்மனி இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் கைப்பற்றியது. மே மாத நடுவில் செர்மனி ஹாலந்தையும், பெல்ஜியத்தையும், லக்சம்பர்க்யையும் கைப்பற்றியது. பாரீசு சூன் நடுவில் வீழ்ந்தது. சூன் 22 அன்று செர்மனியிடம் பிரான்சு சரணடைந்தது. இட்லருடைய அரசாங்கம் பிரான்சுடனும், பிரிட்டனுடனும் கூட்டாக வெளியிட்ட போரிடமாட்டோமென்ற எல்லா உடன்படிக்கைகளையும் இட்லர் காலில் போட்டு நசுக்கிவிட்டான்.

மார்ச் 1, 1941-இல் செர்மன் இராணுவம் பல்கேரியாவைக் கைப்பற்றியது. சூன் 22 இல் சோவியத் யூனியனுக்கு எதிராக அது மூர்க்கத்தனமான முயற்சிகளைத் துவக்கியது. சோவியத் யூனியனுக்கு எதிரான செர்மனியின் போரில் இத்தாலி, அங்கேரி, பின்லாந்து ஆகியவை சேர்ந்து கொண்டன.

அப்போது அமெரிக்க ஆட்சி மன்றத்தின் ஒரு உறுப்பினராக இருந்து பின்னர் அமெரிக்காவின் தலைவராக ஆகிய டிருமென் வெளியிட்ட ஒரு அறிக்கை அமெரிக்க ஆளும் வட்டங்களுடைய உடனடி எதிர்வினையைக் காட்டுகிறது. 1941 சூன் 24 நாளிட்ட நியூயார்க் டைம்சின்-படி, "செர்மனி வெற்றி பெற்றுக் கொண்டு வருமானால், நாம் இரசியாவுக்கு உதவி செய்ய வேண்டும். இரசியா வெற்றி பெற்று வருமானால் நாம் செர்மனிக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேரை அவர்கள் கொல்லட்டும்" என திருவாளர் டிருமென் கூறியிருக்கிறார். இதே போன்றதொரு அறிக்கையை பிரிட்டனின் விமான உற்பத்தி அமைச்சராக அப்போது இருந்த மூர் பிராசான் வெளியிட்டிருக்கிறார். கிழக்கு முன்னணியில் நடைபெரும் போரின் நல்ல விளைவு என்றால் அது செர்மனியும் சோவியத் யூனியனும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்தி அழித்துக் கொள்வதாகும். அதன் விளைவாக, பிரிட்டன் ஒரு செல்வாக்கு மிக்க நிலைக்குச் செல்ல வழி வகுக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் பெரும்பான்மையான பிரிட்டானிய மற்றும் அமெரிக்க மக்கள், நாசி செர்மனியை எதிர்த்து வெற்றிகரமாகப் போராடுவதற்கு, சோவியத் யூனியனோடு ஐக்கியத்தை விரும்பினர். அதையே தான் பெரும்பான்மையான ஐரோப்பிய தேசங்களும் மக்களும் விரும்பினர். பாசிசத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் மற்றும் எல்லா சனநாயக மற்றும் அமைதியை விரும்பும் சக்திகளோடு ஐக்கிய முன்னணிகளைக் கட்ட வேண்டுமென உலகின் எல்லா கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும், கம்யூனிச அகிலம் வழி காட்டியது. பாசிச இராணுவ ஆக்கிரமிப்பின் கீழிருந்த நாடுகளில் இரகசிய எதிர்ப்பு அணி திரட்டப்பட்டது. அதில் கம்யூனிஸ்டுகள் முக்கியமான தலைமைப் பொறுப்பு வகித்தனர்.

தனக்குச் சாதகமாக உலகெங்கிலும் இருந்த பொதுக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, செர்மனி, இத்தாலி மற்றும் சப்பான் ஆகிய பாசிச அச்சுக்கு எதிராக ஒரு சோவியத் - ஆங்கில - அமெரிக்க கூட்டணியை உருவாக்குவதற்கு சோவியத் யூனியன் முன்முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றது.

நாசி செர்மனி தோற்கடிக்கப்பட்டதற்கு யார் காரணம்?

இரண்டாவது உலகப் போர் பற்றி நூற்றுக் கணக்கான திரைப்படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டுள்ளன. அவை அமெரிக்க, பிரிட்டானிய போர் வீரர்களை வீரதீரர்களாகவும், செர்மானியர்களை வில்லன்களாகவும் காட்டுகின்றன. நிரூபிக்கக்கூடிய வரலாற்று உண்மைகள், சோவியத் யூனியனைச் சேர்ந்த மக்களும், செஞ்சேனையும் மிக அதிகமான தியாகங்களைச் செய்தார்களென்றும், மிக அதிகமான எண்ணிக்கையில் இறப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்தார்களென்றும், நாசி பாசிசத்தைத் தோற்கடிக்கும் போராட்டத்தில் மிகவும் முக்கியமான தீர்மானகரமான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் என்பதையும் காட்டுகின்றன.

நாசி செர்மனிக்கு எதிராக அலையைத் திருப்பிய மிக முக்கியமான போரானது ஸ்டாலின் கிராட் போராகும். (பெட்டியைப் பார்க்கவும்). இரசியாவினுள்ளே கிழக்கு நோக்கி வோல்கா நதிக் கரை வரையிலும் கூட சென்ற நாசியும், அதன் கூட்டணி இராணுவங்களும் ஸ்டாலின் கிராடில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஐந்து மாதங்கள் வரை நீடித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போரில் நாசி இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. எஞ்சியிருந்த ஆக்கிரமிப்புப் படைகளைத் துரத்திக் கொண்டே சென்ற செஞ்சேனை, உக்ரேன் மற்றும் பிற தேசங்களை வழியாக சென்று அவர்கள் அனைவரையும் அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்தும் பாசிச ஆட்சியிலிருந்தும் விடுவித்துக் கொண்டே, செர்மனி வரை சென்றனர்.

இரண்டாவது உலகப் போரில் செஞ்சேனை ஆற்றிய விடுதலை செய்யும் பங்கைத்தான் தற்போது தலைகீழாக மாற்றி பரப்புரை செய்யப்படுகிறது. உக்ரேனில் அமெரிக்காவின் ஆதரவோடு இயங்கும் பாசிச ஆட்சி, இரசியாவையும், செர்மனியையும் ஆக்கிரமிப்பாளர்களாகவும், உக்ரேனுடைய எதிரிகளாகவும் வரலாற்றைத் திருத்தியெழுத வேண்டுமென வெளிப்படையாகவே கோரி வருகின்றனர்.

தற்போதைய இரசியாவுக்கு எதிரான பரப்புரையானது, ஸ்டாலின்கிராட் போரில் நாசி இராணுவமானது தோற்கடிக்கப்பட்டபோது அமெரிக்காவின் தலைவர்கள் என்ன சொன்னார்கள் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த பிரான்கிலின் டி ரூஸ்வெல்ட் 1943 பிப்ரவரி 5, ஜோசப் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், "இந்த நகரத்திற்காக நடத்தப்பட்ட இந்த நூற்று அறுபத்தி இரண்டு நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க யுத்தம், உங்களுடைய பெயரை என்றென்றும் புகழுக்கு உரியதாக ஆக்கியிருக்கிறது. இந்த தீர்மானமான விளைவை எல்லா அமெரிக்கர்களும் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இது, நாசிசத்திற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக ஐக்கியப்பட்டுள்ள மக்களுடைய இந்தப் போரில் மிகவும் பெருமை கொள்ளத் தக்க அத்தியாயங்களில் ஒன்றாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின்கிராட் போர்

இன்று வோல்கா கிராட் என்று அழைக்கப்படும் ஸ்டாலின் கிராட், அன்று 5 இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு நகரமாகவும், சோவியத் யூனியனின் மூன்றாவது பெரிய தொழில் நகரமாகவும் விளங்கியது. நாட்டின் டிராக்டர்கள், வாகனங்கள், டாங்குகள் மற்றும் பீரங்கிகளின் உற்பத்தியில் கால் பங்கு இங்கு உற்பத்தி செய்யப்பட்டன. அது வோல்கா நதியின் கரையில் அமைந்திருந்தது. நாட்டின் முக்கிய நீர்வழி வணிகப் போக்குவரத்தாக அது இருந்தது. மேலும் இது, சோவியத் யூனியனிடமிருந்து நாசிகள் பறித்துக்கொள்ள விரும்பிய, மிகுந்த எண்ணெய் வளங்கள் நிறைந்த காகஸ் மலைகளுக்கு நுழை வாயிலாக அமைந்திருந்தது.

1942 சூலை 22 அன்று ஸ்டாலின் கிராட் போர் தொடங்கியது. அது வானிலிருந்து கடுமையாக குண்டுவீசி தாக்கப்பட்டதோடு, தரை வழியாகவும் ருமானிய, இத்தாலிய, அங்கேரிய மற்றும் கொரோசிய படைகள் செர்மன் படைகளோடு கூட்டாகத் தாக்கின. ஒவ்வொரு வீதி, தொழிற்சாலை, வீடு, அடித்தளம், படிக்கட்டு என ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் கடுமையான போர் நடைபெற்றது.

ஆக்கிரமிப்பாளர்கள் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட படை வீரர்களையும், ஆயிரக் கணக்கான டாங்குகளையும், விமானங்களையும் ஸ்டாலின் கிராடுக்கு மேற்கே குவித்து வைத்திருந்த நிலையில், சோவியத் யூனியனுடைய தலைவர் ஜோசப் ஸ்டாலின், குற்றவாளிகளை இதற்கு மேலே கிழக்கே செல்ல நாம் அனுமதிக்கக் கூடாதென உறுதி கூறினார். "ஓரடிகூட பின்வாங்க மாட்டோம்" என்பது ஸ்டாலின் கிராட் போரின் முழக்கமாக இருந்தது.

அணிதிரட்டப்பட்ட எதிர்ப்பின் முன்னணியில் இருந்தது செஞ்சேனை மற்றும் தொழிலாளர்களின் இராணுவ அணிகளாகும். தொழிலாளர்களின் இராணுவம், ஒவ்வொரு தொழிற்சாலையையும், வேலை செய்யுமிடத்தையும் கோட்டையைப் போல பலப்படுத்தி வைத்திருந்தனர். எனவே, அது வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டாலும், ஆக்கிரமிப்புப் படைகள் அந்த தொழிற்சாலையைக் கைப்பற்ற நினைத்தால் அது முறியடிக்கப்படும். மாணவர்கள், சமூக உறுப்பினர்கள், இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரும் அணி திரட்டப்பட்டு, ஆயுதந் தாங்கி தங்களுடைய நகரத்தையும், அனைவருடைய உரிமைகளையும் பாதுகாப்பதற்குத் தயாராக இருந்தனர். சிறார்களும், அடிபட்டவர்கள் மட்டுமே வோல்காவைக் கடந்து கிழக்கே கொண்டு செல்லப்பட்டனர்.

ஸ்டாலின் கிராட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார அலுவலக செயலாளரின் தலைமையில் செயல்படும் நகர்ப்புற பாதுகாப்புக் குழு, "அன்பார்ந்த தோழர்களே, ஸ்டாலின்கிராட் குடிமக்களே!இரத்த வெறி பிடித்த இட்லர் இராணுவம் ஸ்டாலின் கிராட் வரையிலும், மகா நதியாகிய ஓல்கா வரை வந்திருக்கிறது. ஸ்டாலின்கிராட் குடிமக்களே! நம்முடைய சொந்த நகரை செர்மானியர்கள் இழிவு படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. நம்முடைய அன்பிற்குரிய நகரையும், வீடுகளையும், குடும்பங்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக நாம் ஒன்றிணைத்து எழுவோம். உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, ஒவ்வொரு தெருவிலும் நுழைய முடியாதபடி அரண்களை அமைப்பீர். ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு தெருவையும் வெற்றி கொள்ள முடியாத கோட்டைகளாக மாற்றுவோம். ஒவ்வொருவரும் அரண்களுக்குச் செல்லுவோம். துப்பாக்கியைத் தூக்க முடிந்தவர் அனைவரும் தங்களுடைய சொந்த நகரையும் வீடுகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்!" என்று அறிவித்தது.

ஆக்கிரமிப்பாளர்கள் வந்து சேர்ந்தவுடன், அவர்களுடைய முதல்கட்டத் தாக்குதல்கள் தொடங்கியவுடனே, செஞ்சேனையும், அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களும் குடிமக்களும், பெண்களும், ஆண்களும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சக்திவாய்ந்த எதிர்த் தாக்குதல்களைத் தொடங்கினர். பல மாதங்கள் தொடர்ந்த தீவிரமான சண்டைக்குப் பின்னர், தோற்கடிக்க முடியாது என்று கருதப்பட்ட செர்மன் இராணுவம் நொறுக்கப்பட்டது. 1943 பிப்ரவரி 2 இல் செஞ்சேனை வானிலும் பலம் பெற்றது. செஞ்சேனையின் தரைப் படைகள் செர்மனியின் ஆறாவது இராணுவத்தில் எஞ்சியிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அவர்கள் மதிப்பிழந்து, சரணடைந்தனர்.

தென் மேற்கு பசிபிக்-இன் அமெரிக்காவின் கூட்டுத் தலைவர், ஜென்ரல் டக்லாஸ் மேக்ஆர்தர், "இரசியாவின் இந்தப் போரின் அளவும், மாபெரும் உயர்வும் இதை எல்லா வரலாற்றிலேயே மிகப் பெரிய இராணுவ சாதனையாக குறிக்கப்படும்" என்றார். அமெரிக்க கப்பற்படையின் செயலாளர் பிராங்க் நாக்ஸ், "நாங்களும், நம்முடைய கூட்டாளிகளும் சோவியத் யூனியனுடைய இராணுவத்திற்கும், மக்களுக்கும் என்றுமே ஈடுசெய்ய முடியாத அளவிற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்" என்று கூறினார். அமெரிக்காவின் போர்ச் செயலாளர் ஹன்ரி எல். ஸ்டிம்சன், "சோவியத் யூனியனுடைய மக்கள் காட்டிய வீரத்திற்கு வரலாற்றில் ஈடு இணையே இல்லை" என்று கூறினார்.

சோவியத் மக்களும், செஞ்சேனையும் 1945-இல் ஆற்றிய வீரஞ்செறிந்த பங்கை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், இட்லர் விட்ட இடத்திலிருந்து பாசிச ஏகாதிபத்திய தாக்குதலைத் தொடர்வதற்காக அமெரிக்காவின் தலைவர்கள் வேலை செய்து வந்தனர். செர்மனியிலிருந்து தப்பி ஓடிய நாசி தலைவர்களுக்கு அவர்கள் அடைக்கலம் கொடுத்தனர். கிரேக்க நாட்டுப் பற்றாளர்களுடைய போராட்டத்தை நசுக்கிய அவர்கள், கிரீசில் 1944-இல் ஒரு பாசிச அரசை நிறுவினர். இரண்டாவது உலகப் போரின் முடிவில், சப்பானியர்கள் தூக்கியெறியப்பட்ட போது, தென் கொரியாவை அவர்கள் இராணுவ ரீதியாக ஆக்கிரமித்துக் கொண்டனர். கம்யூனிஸ்டுகளையும் தொழிற் சங்கத் தலைவர்களையும் தம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் தேடி ஒழிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். இந்தோனேசியாவில் ஒரு இராணுவக் கிளர்ச்சியை திட்டமிட்டு நடத்தி, அங்கு பாசிச சுகார்ட்டோ ஆட்சியை நிறுவினர். அந்த ஆட்சி அங்கு இலட்சக் கணக்கான கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப் பற்றாளர்களையும் படுகொலை செய்தது. இரானில் ஐம்பதுகளில் எண்ணெய் வளங்களை தேசியமயமாக்கிய மோசாடிக் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, இரான் ஷாவின் பாசிச ஆட்சியை அங்கு அமைத்தனர். இவையனைத்தும் அமெரிக்காவையும், உலகையும் "சிவப்பு அபாயத்திலிருந்து" காப்பது என்ற பெயரில் நடத்தப்பட்டன.

போருக்கு பிந்தைய காலம் முழுவதும், பாசிச ஏகாதிபத்திய தாக்குதல்களுக்குத் தலைவனாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருந்து வருகிறது. அது சொல்ல முடியாத குற்றங்களை வியத்நாமிலும், மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளிலும் மற்றும் பிற இடங்களிலும் நடத்தியிருக்கிறது. கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், அது எண்ணெற்ற முன்னாள் காலனிய நாடுகளில், பாசிசவாதிகளுக்கு நிதியுதவியளித்தும் ஆயுதம் வழங்கியும் பாதுகாத்து வருகிறது.

புரட்சிக்கும் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் கோட்டையாக இருப்பதற்கு பதிலாக, அப்படிப்பட்ட போராட்டங்களை முறியடிக்கும் சக்தியாக சோவியத் அரசின் தன்மையை,  குருஷ்சேவ் தலைமை மாற்றத் துவங்கியது. ஐம்பதுகளில் துவங்கி, அமெரிக்காவிற்குப் போட்டியாக ஒரு சோவியத் பேரரசைக் கட்டும் ஒரு கருவியாக இப்போராட்டங்களை அது மாற்றியது, நிலைமையை மேலும் சிக்கலாகியது. ஒரு கொள்கை அடிப்படையில் எல்லா நாடுகள் மற்றும் மக்களுடைய அமைதியையும், உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு அரசு என்பதிலிருந்து, ஏகாதிபத்திய முறையில் அப்பட்டமான ஆக்கிரமிப்புகளை சோசலிச வார்த்தைகளைக் கொண்டு நியாயப்படுத்தி ஏகாதிபத்திய முறையில் செயல்படும் ஒரு அரசாக, சோவியத் யூனியன் ஆகியது. 1968-இல் செக்கோஸ்லாவாகியாவையும், 1978-இல் ஆப்கானிஸ்தானையும் சோவியத் ஆக்கிரமிப்பு செய்ததில் இது வெட்ட வெளிச்சமாகியது. ஒவ்வொருவரும் உலகை மற்றவரிடமிருந்து பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு இரண்டு வல்லரசுகளும் நாசி பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டக் கோட்பாடுகளைக் காலில் போட்டு நசுக்கினர்.

பாசிச தாக்குதலை இன்று எதிர்த்துப் போராடுவது

சோவியத் யூனியன் சிதறுண்டதைத் தொடர்ந்தும், இரு துருவ உலகம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்தும், தொழிலாளி வர்க்கமும் மக்களும் இதுவரை வெற்றி கொண்ட எல்லா உரிமைகளுக்கும் எதிராக என்றுமே கண்டிராத அளவில் பாசிச தாக்குதல்களைத் தொடுப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது.

"தத்துவங்களெல்லாம் காலாவதியாகிவிட்டன" என்று கூறிக் கொண்டு, அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் மேற்கத்திய ஏகாதிபத்திய கூட்டணி, ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வதாக இருக்கும் "சந்தைப் பொருளாதாரத்திற்கு" மாற்று இல்லை எனவும், பல கட்சி சனநாயகத்திற்கு மாற்று இல்லையென்றும் அறுதியிட்டுக் கூறி வருகின்றனர். இந்த ஒருதலைப் பட்சமான அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடக்காத நாடுகள், "ரவுடி நாடுகள்" அல்லது "தவறிய நாடு"களென முத்திரை குத்தப்படுவார்கள். அந்த நாடுகள் பொருளாதாரத் தடைகளுக்கும், ஏகாதிபத்திய தலையீடுகளுக்கும், வெளிப்படையான ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் ஆளாக நேரிடும்.

அமெரிக்காவில், பல்லாண்டுகளாகத் தொடர்ந்து தொழிலாளர்களுடைய ஊதியம் குறைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுடைய உரிமைகளும், நலன்களும் காலில் போட்டு நசுக்கப்படுகிறது. ஊடகங்கள் மூலம் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி நிலையான அச்சம் உருவாக்கப்படுகிறது. இதையே பயன்படுத்தி பாசிச காவல்துறை நடவடிக்கைகளும், மேலும் இராணுவமயமாக்கலும் நியாயப்படுத்தப்படுகிறது. "இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு" அல்லது "இஸ்லாமியர்"களுக்கு எதிராக இனவெறியும் பாசிச வெறியும் உருவாக்கப்படுகிறது. வேறு மாதிரியாக உடைகள் அணிந்திருந்தாலோ, தோற்றமளித்தாலோ மக்கள் அவர்களைச் சந்தேகிக்கும்படியும், அதை அவர்கள் காவல்துறைக்கு அறிவிக்க வேண்டுமெனவும் சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. கருப்பாக இருக்கின்ற அல்லது இஸ்லாமிய நம்பிக்கை கொண்டிருக்கும் குற்றத்திற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அமெரிக்க சிறைச்சாலைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

ஏகாதிபத்தியத்தின் பாசிச பொய்ப் பரப்புரையின் படி இன்று, உலக அமைதிக்கும் மக்களுடைய உரிமைகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் "இஸ்லாமியர்"களிடமிருந்தும் பிற "அரசு அல்லாதவர்"களிடமிருந்தும் வருகிறதாம். இந்தப் பரப்புரையைப் பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனமாக உரிமைகள் நசுக்கப்படுவதும், நாடுகளைப் பிடிப்பதற்கான ஆக்கிரமிப்புப் போர்களும் நியாயப்படுத்தப்படுகின்றன. இது, செர்மன் சமுதாயத்தை சுத்தப்படுத்த யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ஒழிக்கப்பட வேண்டுமென்ற நாசி அறிவிப்பைப் போன்றதாகும்.

இஸ்லாமியர்கள் தான் உலக அமைதியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்களென மக்களை நம்ப வைப்பதற்காக, சிஐஏ-வும் பிற ஏகாதிபத்திய உளவு நிறுவனங்களும் ஆதரவளிக்கும் ஆயுதக் குழுக்கள் அவ்வப்போது பயங்கரவாதச் செயல்களை நடத்தி வருகின்றனர். எண்பதுகளில் ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்காக, எண்ணெற்ற "ஜிகாதி" குழுக்களை அமெரிக்க எண்ணெய் ஏகபோகங்களும், சிஐஏ-வும் உருவாக்கி ஆதரவளித்தனர் என வரலாற்று உண்மைகள் காட்டுகின்றன.

இந்த நேரத்தில், அமெரிக்காவின் தலைமையில் உள்ள ஏகாதிபத்தியமே அமைதிக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கிய அபாயமாக இருக்கின்றனர். அதுவே பயங்கரவாதத்திற்கும், பாசிசத்திற்கும், போருக்கும் முக்கிய ஊற்றாக இருக்கிறது.

தன்னுடைய பொருளாதார வலிமை சரிந்துவரும் நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக விவகாரங்களில் தன்னுடைய மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இராணுவமயத்தையும், பாசிசப்படுத்துவதையும் போரையும் மென்மேலும் சார்ந்து இருக்கிறது. சர்வதேச வணிகத்தில் டாலருடைய மேலாதிக்கத்தை நீடிக்கவும், இந்த மேலாதிக்கத்திற்கு சவாலாக எழும் அச்சுறுத்தல்களை அழிக்கவும், இரசியாவை பலவீனப்படுத்தவும், சீனாவைத் தனிமைப்படுத்தவும் அது போர்களைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. ஐரோப்பிய பொருளாதாரங்களைக் காட்டிலும் அமெரிக்கப் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி பெறுவதற்கு போர்கள் உண்மையில் அவசியமாகி விட்டன.

தோட்டாக்கள் மூலம் ஆட்சி செய்து கொண்டு, வாக்காளர்களை வாக்குகள் மூலம் ஏமாற்றுவதென்பது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தியாவில் முதலாளி வர்க்க ஆட்சிக்கு மிகவும் பிடித்தமான முறையாக ஆகியிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் அதிபராக ரிபப்ளிகன் மற்றும் டெமாகிரடிக் கட்சிகள் மாறி மாறி வெள்ளை மாளிகைக்கு வந்திருக்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட மாற்றங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசிச போர் வெறிப் போக்கில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அது கொஞ்சமும் குறையாமல், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் மேலும் அதிகரித்து வந்திருக்கிறது. இது, பாசிசத்திற்கான பொருள் அடிப்படை, முதலாளித்துவ ஏகபோகங்களின் வளர்ந்து வரும் மேலாதிக்கத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. பாசிசம், முதலாளி வர்க்கத்தின் தன்மையிலிருந்தும், நெருக்கடியில் சிக்கியிருக்கும் முதலாளித்துவ - ஏகாதிபத்திய அமைப்பிலிருந்தும் எழுகிறது.

இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்த நேரத்தில், நமது நாட்டில் காலனிய எதிர்ப்புப் போராட்டமானது ஒரு உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. ஆனால் அது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தாலும், காங்கிரசு கட்சி மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளுக்குத் தலைவர்களாக இருந்த ஆங்கிலேயர்களுடைய கூட்டாளிகளாலும் அழிக்கப்பட்டது. வகுப்புவாத அடிப்படையில் இந்தியா பிளவுபடுத்தப்பட்டது. இலட்சக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகில் நடத்தப்பட்ட படுகொலைகளிலே மிகப் பெரிதானவற்றில் ஒன்றாக இது இருந்தது. மேலும் இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டது. மக்களை கலந்தாலோசிக்காமலும், அவர்களுடைய ஒப்புதலைக் கேட்காமலும், ஒரு அரசியல் சட்டமானது "மக்களாகிய நாம்" என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்டது. இறையாண்மையானது, லண்டனிலிருந்து, புது தில்லிக்கு மாற்றப்பட்டது. ஆனால் அது உழைக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு எட்டாததாக இருக்கிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியக் குடியரசின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, கம்யூனிஸ்டுகளையும், தெலுங்கானாவின் தீரமிக்க விவசாயிகளையும் நசுக்குவதற்காக மத்திய இராணுவத்தை அனுப்பியதாகும். வடக்கிலும், வடகிழக்கிலும் உள்ள பல்வேறு தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்கள் 1947-இலிருந்தே தொடர்ந்து பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு லண்டன் இருந்ததைப் போலவே, புது தில்லியும் அன்னியமாகவும், காட்டுமிராண்டித்தனமான ஒரு சக்தியாகவும் அவர்களுக்கு இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டம் பாதுகாக்கும் "சனநாயகமானது", கட்டளைகள் மூலம் நடத்தப்படும் அமைச்சர் குழுவின் ஆட்சியை மூடி மறைக்கும் ஒரு போர்வைதான் என்பதை, 1975-77 நெருக்கடி நிலை ஆட்சி வெட்ட வெளிச்சமாக்கியது. இந்தியக் குடியரசின் உண்மையான பாசிசத் தன்மையை நெருக்கடி நிலை வெளிப்படுத்தியது. இந்திரா காந்தியின் அமைச்சர் குழு, வேலை நிறுத்தப் போராட்டங்களைத் தடை செய்து, தொழிலாளர்கள், உழவர்கள் அல்லது வேறு எந்த ஒடுக்கப்பட்ட பிரிவினரின் ஆர்பாட்டங்களையும் ஈவு இரக்கமற்ற வன்முறையால் நசுக்கியது.

ஏகபோக முதலாளித்துவ குடும்பங்கள், தங்களுடைய ஆதிக்கத்தை அமைச்சர் குழு, பாராளுமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை மற்றும் அதிகாரத்தின் பிற அங்கங்கள் மீது நிறுவியிருக்கின்றனர். மத்திய மாநில அரசாங்கங்கள் ஏகபோகங்களுடைய நலன்களைக் கராராக செயல்படுத்தி வருகின்றனர். அதன் மூலம் ஏகபோகங்களுடைய செல்வங்கள் ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு செழித்து வளர்ச்சி பெற்று வருகின்றன. அதே நேரத்தில் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதற்கே போராடி வருகின்றனர். ஒரு சிறுபான்மையான சுரண்டல் பேய்கள் அளவு கடந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில், பெரும்பான்மையான சுரண்டப்பட்ட மக்களுக்கு கடமைகள் மட்டுமே இருக்கின்றன. தொழிலாளி வர்க்கத்தின் ஒரு சிறுபான்மையானவர்களுக்கு மட்டுமே, அதன் அடிப்படை உரிமைகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் கூட இன்று தாக்கப்பட்டு வருகிறது.

எண்பதுகளில் துவங்கி, தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், அரசு பயங்கரவாதம் முதலாளி வர்க்க ஆட்சியின் மிகவும் பிடித்தமான முறையாக ஆகியிருக்கிறது. இது பஞ்சாபில் பரிசோதிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது. அடிக்கடி நடத்தப்படும் "எதிர் மோதல் கொலைகளும்", மத மற்றும் தேசிய சிறுபான்மையினருக்கு எதிராக அரசு ஆதரவோடு வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதும், 1984, 1992-93, 2002 ஆகியன உட்பட படுகொலைகளும் மக்களிடையே பயங்கரத்தைப் பரப்பப் பயன்பட்டிருக்கின்றன.

அரசு பயங்கரமும், வகுப்புவாத வெறுப்பைத் துண்டிவிடுதலும் தொழிலாளர் விரோத, உழவர் விரோத மற்றும் தேச விரோத தனியார்மய, தாராளமய உலகமயமாக்கல் திட்டத்திற்கு எதிராக மக்கள் ஒன்றுபடுவதைத் தடுக்கவும், பாடுபடும் மக்களைப் பிளவுபடுத்தவும், திசை திருப்பவும் ஆயுதங்களாக ஆகியிருக்கின்றன. எந்த ஒரு கட்சியும் எதிர்கட்சியாக இருக்கும் போது, அது தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிராக எவ்வளவு சத்தம் போட்டிருந்தாலும், இந்த அமைப்பில் அதிகாரத்திற்கு வர விரும்பும் எந்தக் கட்சியும் இந்தியாவின் ஏகபோக முதலாளிகளுடைய நிலைப்பாட்டிற்கு கீழ்படிந்தாக வேண்டும்.

இந்தியாவின் ஏகாதிபத்திய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உதவும் என்ற நம்பிக்கையில், முந்தைய மன்மோகன் சிங் அரசாங்கமும், தற்போதைய மோடி அரசாங்கமும் அமெரிக்காவுடன் இராணுவ, பொருளாதார மற்றும் உளவுத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறார்கள்.

"உழைப்பே வெற்றி பெரும்" என போலித்தனமாக கூறிவிட்டு, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை உட்பட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் எல்லா பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுகின்றன.

நம்முடைய உரிமைகள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களை நாம் எதிர்த்துப் போராடுகின்ற அதே நேரத்தில், நம்முடைய உரிமைகளுக்கு எதிரான பாசிச தாக்குதலுடைய ஆணிவேர், மிகவும் ஏகபோகமாகவும், இரத்தம் உரிஞ்சுவதாகவும் இருக்கும் முதலாளித்துவ அமைப்பிலும் முதலாளி வர்க்கத்தின் தன்மையிலும் இருக்கிறதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய கட்டத்தில், முதலாளித்துவத்தின் கீழ் “அவ்வளவு மோசமில்லாத” வேறு போக்கு இருக்க முடியுமென நமக்கு எவ்வித மாயையும் இருக்க முடியாது. ஆட்சித் தலைமையில் இருக்கும் கட்சியை வெறுமனே மாற்றுவது இந்தப் போக்கிற்கு முடிவு கட்டுமென நாம் கனவு கண்டு கொண்டிருக்க முடியாது.

அரசியல் அதிகாரத்தின் தன்மையிலும், பொருளாதாரத்தின் போக்கிலும் ஒரு முழு மாற்றத்திற்காக நாம் போராடவேண்டும். முதலாளி வர்க்கத்தின் பாசிசத் தாக்குதல்களை, தொழிலாளர்கள் - உழவர்களுடைய ஆட்சியை நிறுவுவதற்குத் தயாரிக்கும் கண்ணோட்டத்தோடும், முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாற்றத்தை நிறைவேற்றும் நோக்கத்தோடும் போராட வேண்டும். எல்லா வாக்காளர்களின் ஒரு வாக்கெடுப்பின் மூலம், ஒரு புதிய அரசியல் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக நாம் போராடவேண்டும்.

ஒரு சனநாயகமான அரசியல் சட்டம், இறையாண்மையை பாராளுமன்றத்திலோ, குடியரசுத் தலைவரிடமோ, அமைச்சர் குழுவிடமோ அல்லாமல் மக்களிடம் கொடுக்க வேண்டும் என்ற நவீன விளக்கத்திற்காக நாம் போராட வேண்டும். உரிமைகள், மக்களுடைய வாழ்க்கை நிலைமைகளிலிருந்து எழுவதால் அவை மக்களுக்கு உரியதாகின்றன என்ற நவீன விளக்கத்திற்காக நாம் போராட வேண்டும். எனவே, மக்களுடைய உரிமைகள் எப்போதும் மீறப்படாமல் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

முதலாளி வர்க்கம் திரும்பத் திரும்பக் கூறி, தினந்தோரும் பரப்புரை செய்து வருபனவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவற்றைக் கேள்வி கேட்க வேண்டும். தகவல்களிலிருந்து உண்மையை அறிவதில் நாம் விடாப்பிடியாக இருக்க வேண்டும். ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு, அது பற்றி ஆராய்ந்து, கண்டுபிடிப்பதில் ஒருவர் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்.

இந்திய ஆளும் வர்க்கமும், சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடைய கூட்டாளிகளும் மேற் கொண்டுவரும் பாசிச, சமூக விரோதத் தாக்குதல்களை எதிர்த்து தீவிரமாகப் போராட எல்லா முற்போக்கு, சனநாயக சக்திகளும் முன்வர வேண்டுமென கம்யூனிஸ்டு கெதர் கட்சி அழைப்பு விடுக்கிறது.

இரசியா உக்ரேனிலும், இஸ்லாமியர்கள் உலகெங்கிலும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆங்கில - அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் பரப்பும் பொய்களை நாம் தீவிரமாக எதிர்ப்போம்.

பாதுகாப்பு மற்றும் உளவுத் துறைகளில் அமெரிக்காவோடு இந்திய அரசாங்கம் கூட்டுறவில் ஈடுபடுவதை நாம் தீவிரமாக எதிர்ப்போம்.

பாகிஸ்தானும், எல்லை கடந்த பயங்கரவாதமும் நமது நாட்டிற்கு முக்கிய அபாயங்களென இந்திய ஆளும் வர்க்கம் தினந்தோரும் பரப்பிவரும் பொய்களை நாம் எதிர்ப்போம்.

பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் அல்லது நக்சலைட்டுகள் என எந்தப் பெயரிலும், அல்லது தேசிய ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது என்ற பெயரிலும் நடத்தப்படும் எல்லா அரசு பயங்கரவாதத்தை எதிர்த்தும், சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்தும் நாம் போராடுவோம்.

ஏகாதிபத்தியப் போர்களில் இந்தியா பங்கேற்க வேண்டுமென பரப்புரை செய்யப்படும் எல்லா வகையான பொய்யான நியாயங்களை நாம் புறக்கணிப்பதோடு, அவற்றைத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.

மனித, தேசிய மற்றும் பிற சனநாயக உரிமைகளைப் பாதுகாத்தும், சர்வதேச அளவில் எல்லா நாடுகள் மற்றும் மக்களுக்கு இடையில் ஒரு சர்வதேச அமைதிக்காக வேலை செய்யும் ஒரு தன்னார்வ இந்திய ஒன்றியத்தின் ஒரு புதிய அரசியல் சட்டத்திற்காக நாம் போராடுவோம்.

Pin It