தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிற்சாலைகள் அதிகம். தீப்பெட்டித் தொழிலில் பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இதை நம்பியே அவர்களின் வீட்டின் பொருளாதாரத் தேவையும் அடங்கியிருக்கிறது. பெண்களின் முதுகெலும்பான தீப்பெட்டித் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதை நம் கண்முன்னே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

வரலாற்றுப் பின்னணி

தீப்பெட்டித் தொழிலை முதன் முதலில் இங்கு வந்த வரலாற்றுப் பின்னணியையும் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

விருதுநகர்; மாவட்டம் சாத்தூர், சிவகாசி பகுதிகளில் மழை அதிகம் பெய்யாததால் விவசாயம் அருகி, மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரம். வெயிலுக்கு மட்டும் பஞ்சமில்லை. இனி இப்படியே காலம் தள்ள முடியாது என்ற நிலை வந்தபோதுதான் தீப்பெட்டித் தொழில் இங்கு உதயமானது.

கல்கத்தா நகரில் எம்.ஜி.நந்தி என்பவர், கையினால் தீப்பெட்டி செய்யும் முறைகளை விரும்புவோருக்கு கற்றுக் கொடுத்தார். அப்போது சிவகாசியிலிருந்த திரு.ப.அய்யநாடார் அவர்களும், திரு.ஏ.சண்முக நாடார் அவர்களும் கல்கத்தா சென்று தீப்பெட்டி செய்யும் முறைகளை நன்றாகக் கற்றுணர்ந்து சிவகாசி திரும்பினார்கள். சிவகாசியில் தீப்பெட்டித் தொழில் துவங்கப்பட்டது. பின்னர் அத்தொழில் பெருமளவில் முன்னேறி சாத்தூர், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களிலும் தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன. அதன் மூலம் மக்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றார்கள்.

match box work1936இல் சாத்தூர், சிவகாசிப் பகுதிகளின் உயிர் நாடியாக விளங்கியது தீப்பெட்டித் தொழிலேயாகும். கையால் செய்யும் தீப்பெட்டி லைசென்ஸ் முறை மிகுந்த கட்டுப்பாட்டில் இருந்தது. அதிக வசதி படைத்தவர்கள்தான் தொழில் செய்ய முடியும் என்ற வகையில் சட்டங்கள் இருந்தன. சாதரணக் குடிமகனும் சிறிய அளவில் குடிசைத் தொழில் தொடங்க சிந்தித்த காமராஜர் பாமர மக்களுக்கும் இத்தொழில் பயன்படத் திட்டம் தீட்டினார். முடங்கிக் கிடந்த தீப்பெட்டித் தொழில் குடிசைத் தொழிலாக மாறியது. மாநிலத் தொழில் அமைச்சராய் இருந்த திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களையும், மத்திய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் அவர்களையும், பிரதமர் நேரு அவர்களையும் அணுகி, தீப்பெட்டித் தொழில் குடிசைகளுக்கும் பரவும் வண்ணம் செய்தார். காமராஜர் முயற்சியால் கிராமந்தோறும் அத்தொழில் இவ்வட்டாரத்தில் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றிப் பரவியது. (ஆதாரம்: தியாக தீபம் காமராஜர், ஆ.மு.ராஜேந்திரன், பக்கம் 128-129, 136)

இயந்திரமயமாக்கல்

1980 ஆம் ஆண்டு முதல் தீப்பெட்டித் தொழிலில் மெல்ல இயந்திரமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனது. அன்றைக்கு உரிமையாளர்கள் வேலை நேரம் மிச்சம் பிடிப்பது, அதிக உற்பத்தி இலக்கு போன்ற காரணங்களால் இயந்திரமயமாக்கலுக்கு பச்சைக் கொடி காட்டினர். இயந்திர வரவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய அவலம்.

தொழிலில் போட்டி

1990களுக்குப் பிறகு இந்தத் தொழிலின் போக்கு மாறியது எனலாம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்பரஸ், பொட்டாஷியம் குளோரைடு, மெழுகு, வஜ்ஜிரம் உள்ளிட்டவை டாலர் வர்த்தகத்திற்கு மாறியதால் தீப்பெட்டித் தொழிலின் வளர்ச்சிப் போக்கும் மாறி விட்டது. ஏற்றுமதியை ஊக்குவித்த மத்திய அரசு வழங்கிய 8 சதவித மானியம் போதவில்லை. உலக சந்தைகளுக்கு ஏற்ப தீப்பெட்டிக்கான மூலப்பொருள் விலை ஒரு பக்கம் கூடிக் கொண்டே சென்றாலும், மறுபக்கம் இந்திய தீப்பெட்டி வர்த்தகத்தின் வாய்ப்புகளை சீனா, பாகிஸ்தான் நாடுகள் அபகரிக்கத் தொடங்கின. இந்திய தீப்பெட்டி விலையை விட சீனா, பாகிஸ்தான் தீப்பெட்டிகளின் விலை குறைவு. ஆப்பிரிக்க நாடுகளிலே சிலர் தீப்பெட்டித் தொழிற்சாலையை ஆரம்பித்த காரணங்களால் இங்குள்ளவர்களின் சந்தை வாய்ப்பு மங்கிப் போனது.

மூலப்பொருட்கள் உயர்வு

தீப்பெட்டி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து பெறப்படுகிறது. மரக்குச்சிகள் கேரளாவில் இருந்தும், குளோரேட் புதுச்சேரியில் இருந்தும் வருகின்றன. லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் போதெல்லாம் தீப்பெட்டி மூலப்பொருட்கள் வந்து சேருவதில் சிக்கல் இருப்பதால் அப்படிப்பட்ட நேரங்களிலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்;.

தீக்குச்சிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சாப்ட்வுட் மரங்கள் கேரள மாநிலத்தில்தான் அதிகம் விளைகின்றன. மரங்களாக வாங்கப்பட்டு இங்குள்ள மரம் அறுக்கும் ஷா மில் உதவியுடன் குச்சிகளாக மாற்றப்படுகின்றன. கேரள மாநிலத்தில் இருந்து மரங்கள் வாங்குவதைவிட தமிழகத்தில் விவசாயிகள் உதவியுடன் பயிரிட மானியங்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையில் 2002 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு தீக்குச்சி மரங்கள் வெட்டவும், ஷா மில்களில் இந்த மரங்களை அறுக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. வேறு வழியின்றி மீண்டும் கேரள மாநில வியாபாரிகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போதைய தொழிலின் நிலை

தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 300 பகுதியளவு இயந்திரத் தொழிற்சாலைகள், 25 முழு இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றின் மூலம் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்திலுள்ள தீப்பெட்டி ஆலைகளில் தினமும் 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தயாரிக்கப்பட்டு வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இத்தொழிலில் 90 சதவீதம் பெண்களே உள்ளனர்.

வரி விதிப்பும் ஆட்சியாளர்கள் சந்திப்பும்

வீட்டுப் பயன்பாட்டில் அத்தியாவசியத் தேவையாக தீப்பெட்டி உள்ளது. ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் தீப்பெட்டிக்கு 18 சதவித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களுக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ, அதே வரிதான் தயாரிப்புப் பொருட்களுக்கும் இருக்கும். ஆனால் தீப்பெட்டியின் மூலப்பொருட்களான குச்சி, அட்டை, பேப்பர் ஆகியவற்றுக்கு 12 சதவிதம் தான் ஜிஎஸ்டி வரி உள்ளது. ஆனால் தீப்பெட்டிக்கு மட்டும் 18 சதவிதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டித் தொழிலில் சம்பள உயர்வு அளிக்க முடியாததால் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது தீப்பெட்டிக்கான ஏற்றுமதி ஊக்கத்தொகையை 4 சதவிதத்திலிருந்து 1.50 சதவிதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இது தீப்பெட்டித் தொழிலில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில் தங்களது தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்தனர்.

தீப்பெட்டிக்கான ஏற்றுமதி ஊக்கத் தொகை 7 சதவிதமாக இருந்ததை காங்கிரஸ் ஆட்சியில் 4 சதவிதமாகக் குறைத்தனர். அதன் பின்பு பாஜக மத்திய அரசு சிறுதொழில் பட்டியலிலிருந்து தீப்பெட்டித் தொழிலை நீக்கியது. தீப்பெட்டித் தொழில் மூலம் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருவதால், தீப்பெட்டித் தொழிலை மீண்டும் சிறுதொழில் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர்களின் கோரிக்கை.

இதேபோல் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து தீப்பெட்டி உரிமையாளர்கள் ஆட்சியாளர்களை இன்றல்ல... இதற்கு முன்பும் பலமுறை சந்தித்துள்ளனர்.

1975 இல் தீப்பெட்டித் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது திரு.சி.சுப்பிரமணியம் நிதி அமைச்சராய் இருந்தார். குடிசைத் தொழிலாய் நடைபெற்று வரும் தீப்பெட்டித் தொழில் ஒரு குறிப்பிட்ட தேதிக்குப் பின் தொடங்கப்பட்டால் பெருந்தொழிலுக்குச் சமமான கூடுதல் வரி கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதனால் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடப்படும் அவல நிலை உருவாகியது. வரி பாக்கியாக ஒவ்வொரு தீப்பெட்டித் தொழிற்சாலையும் அரை லட்சத்திற்கும் மேல் கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தொழில் முடக்கம் ஏற்படாது தடுக்கக் கருதி திரு.எஸ்.எஸ்.பி. சண்முக நாடார், திரு.வி.தாமஸ் நாடார், திரு.அ.இராஜேந்திரன் ஆகிய ஐவர் தூதுக் குழுவாக டில்லி செல்லத் திட்டமிட்டு, முதலில் சென்னையில் உடல்நலம் சரி இல்லாமலிருந்த காமராஜரைச் சந்தித்து விபரங்களைத் தெரிவித்தார்கள்.

தன்னுடைய உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் தீப்பெட்டித் தொழிலைக் காப்பாற்ற உடனே டில்லியில் எம்.பி., ஆக இருந்த ஆர்.வி.சுவாமிநாதனுக்குப் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி, நல்ல வழி கிடைக்க ஆலோசனை கூறினார். தூதுக் குழுவினர் டில்லியில் ஆர்.வி.சுவாமிநாதனைச் சந்தித்து விபரங்களைக் கூறினார்கள். மறுநாள் அவர் குழுவினரை நிதி அமைச்சரிடம் அழைத்துச் சென்றார். அவரிடம் குழுவினர் தொழிலைக் காக்க வேண்டினார்கள். நிதி அமைச்சர் ஆவண செய்வதாய் உறுதியளித்தார். டில்லி வருவாய்த் துறை, கலால் வரி ஆய்வாளர்கள் அடங்கிய பரிசீலனைக் கமிட்டி அமைத்து உண்மையை நேரில் வந்து தெரிந்து, மத்திய அரசு கலால் வரிகளை மூன்றில் ஒரு பங்கு கட்டினால் போதும் என்று உத்தரவு இட்டது. அதன் நிமித்தம் தொழில் முடக்கம் நீங்கி நல்ல முறையில் செயல்படத் துவங்கியது. காமராஜரின் உதவியினால் இது சாத்தியமானது. (ஆதாரம்: தியாக தீபம் காமராஜர், ஆ.மு.ராஜேந்திரன், பக்கம் 128-129, 136-138)

தன்னுடைய சொந்த மண் சார்ந்த மக்கள் தொழில் வளம் பெற்று வளமாய் வாழ வேண்டும் என்ற நோக்கோடு அன்று காமராஜர் இருந்தார். ஆனால் இன்றுள்ள பலர் அப்படியில்லை என்பதே இங்கு வருந்தத்தக்க செய்தி. எதில் தனக்கு கமிஷன் கிடைக்கிறது என்றுதான் இருக்கிறார்கள்.

இறுதியாக...

ஒரு பக்கம் மூலப்பொருட்கள் உயர்வாலும், வரி விதிப்பாலும் வர்த்தகம் பாதிப்பு. அதனால் நலிவடைந்த உரிமையாளர்கள் தீப்பெட்டித் தொழிலை கைவிட்டுச் செல்ல வேண்டிய அவலம். இதன் மூலம் வேலையைப் பறிகொடுக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

இதை ஓரளவேனும் சரிசெய்யும் முயற்சியாக ஜிஎஸ்டியைக் குறைத்து ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை மீண்டும் 7 சதவீதமாகக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உற்பத்தியாளர்கள் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டு கொள்ளாமல்தான் இருக்கின்றன.

- மு.தமிழ்ச்செல்வன்

Pin It