நாற்பதும் நமதே என்றார்கள். நாளைய பிரதமர் என்றார்கள். மோடி அலை என்றார்கள். இன்னும் இன்னும் ஏராளம் சொன்னார்கள். ஆனால் 2014 மக்களவைத் தேர்தல் முடிவின் வழியாகத் தமிழக வாக்காளர்கள் தமிழக அரசியல் கட்சிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட செய்திகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றைப் பார்ப்பதற்குமுன், தேர்தல் பிரசாரம் நடந்த விதம், தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை, தேர்தல் நடந்த விதம், முடிவுகள் ஆகியவற்றைப் பார்த்துவிடலாம்.

கட்சிகளும் பிரசாரமும் :

அதிமுக அணியில் இடம்பெற்ற உதிரிக்கட்சிகள் எவருக்கும் தொகுதி கொடுக்கவில்லை. ஆகவே, அதிமுக தனித்துப் போட்டியிட்டது. திமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் இடம் பெற்றிருந்தன. மூன்றாவதாக, பாஜக தலைமை யில் தேமுதிக, பாமக, மதிமுக மற்றும் சில உதிரிக் கட்சி களுடன் கூடிய கூட்டணி உருவாகியிருந்தது. காங்கிரஸ் தனியாகவும் இடதுசாரிகள் இணைந்தும் தேர்தலைச் சந்தித்தார்கள்.

அதிமுக சார்பில் பிரதமர் வேட்பாளரே ஜெயலலிதாதான் என்று சொன்னார்கள். அதை ஆமோதிக்கவோ, அடியோடு மறுக்கவோ செய்யாமல் சிலகாலம் பிரசாரம் செய்த ஜெயலலிதா, மெல்ல மெல்ல ‘அதிமுக அங்கம் வகிக்கும் அரசு’ என்று தன்னுடைய எல்லையைச் சுருக்கிக் கொண்டார். காங்கிரஸ§ம் திமுகவும் ஓரணியில் இல்லை என்ற போதும் இரண்டையும் இணைத்தே விமர்சித்தார். மோடியை விமர்சிக்காதது ஏன் என்ற கேள்வியை எதிர்த்தரப்பு எழுப்பியபிறகு பாஜகவை விமர்சித்தார்.

திமுகவின் ஒற்றைப் பிரசார பீரங்கியாக, அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று பிரசாரம் செய்தார் மு.க.ஸ்டாலின். மத்திய அரசில் திமுக அங்கம் வகித்ததால் தமிழகத்துக்குக் கிடைத்த நன்மைகள் மற்றும் அதிமுக அரசின் அவலங்கள்தான் ஸ்டாலினின் பிரசாரத்தின் பிரதானமாக இருந்தன. உடல்நிலை கருதி சொற்ப தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்தார் கலைஞர்.

பாஜக அணியில் ‘மோடி வந்தால் எல்லாம் நடக்கும்’ என்ற ஒற்றை வாக்கியத்தைக் கொண்டே முழுப்பிரசா ரத்தையும் செய்தனர். ஈழப்பிரச்னைக்கு மோடியே தீர்வு என்றார் வைகோ. அதிமுக, திமுகவையே விமரிசித்த விஜய காந்த், ‘மோடி சிறந்த பிரதமராக இருப்பார்’ என்று எவ்வித ஆதாரமுமின்றி, உத்தரவாதம் கொடுத்தார். டாக்டர் ராமதாஸோ தர்மபுரியைச் சுற்றியே பிரசாரம் செய்தார். பாஜகவும் ஏனைய சிறுகட்சிகளும் மோடி புராணத்தையே பிரசாரமாகச் செய்தனர்.

மேற்கண்ட அத்தனை பேரும் ஒருங்கிணைந்து தாக்கியது காங்கிரஸ் கட்சியைத்தான். ஆனால் பதில் கொடுக்கத்தான் ப. சிதம்பரம் தவிர வேறு யாரு மில்லை. அதேபோல, மேற் கண்ட கட்சிகளால் முழுவது மாகக் கண்டு கொள்ளாமல் விடப்பட்டவர்கள் இடது சாரிகள். ஆனாலும் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அர்ப்பணிப்புடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் பணிகள் செய்ததாகச் சொன்னார் ஒரு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர். அந்த நொடியில், கடந்த காலங்களில் இடதுசாரிகள் கடைப் பிடித்த கூட்டணி தர்மம் கேள்விக்குறியாக மாறியது.

ஊடகங்களும் தேர்தல் ஆணையமும் :

அரசியல் கட்சிகள் ஒருபக்கம் பிரசாரம் செய்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒளி மற்றும் அச்சு ஊடகங்களும் இம்முறை பிரசாரக் களத்தில் இறங்கியிருந்தன. உண்மைதான். கருத்துக் கணிப்பு என்ற பெயரில் வாக்காளர்கள் மத்தியில் அவர்கள் ஏற்படுத்திய குழப்பமும் தாக்கமும் அபரிமிதமானவை. வாக்குவங்கி, கட்டமைப்பு, செல்வாக்கு என்று எவ்வித கணக்கு வழக்கும் இல்லாத, தட்டையான கருத்துக்கணிப்புகளை வழங்கினர். அதன்மூலம் தாங்கள் விரும்பும் திசைக்கு வாக்காளர் களைத் திருப்பும் முயற்சிகள் நடந்தன.

முக்கியமாக, தேர்தல் ஆணையத் தைச் சொல்லவேண்டும். இந்தியாவின் ஏனைய அமைப்புகளைக் காட்டிலும் தேர்தல் ஆணையமே பரிசுத்தமானது என்று நிலைநாட்ட விரும்பும் அமைப்பு தேர்தல் ஆணையம்தான். நேர்மையான, சுதந்தரமான தேர்தலை நடத்துகிறோம் என்று சொல்லி ஏராளமான கெடுபிடி களைச் செய்வார்கள். இம்முறையும் அப்படித்தான்.

பொதுவாக, பதற்றம் நிறைந்த காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில்கூட பின்பற்றப்படாத ஒரு விநோதமான அணுகுமுறை இம்முறை தமிழகத்தில் அரங்கேறியது. தேர்தலுக்கு முன்னர் போடப்பட்ட 144 தடை உத்தரவு. அதன் மூலம், வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்யப்படுவது தடுக்கப்படும் என்றார் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார். ஆனால் அவரே, ‘இந்தத் தேர்தலில் பணம் விளையாடியிருக்கிறது. அதைத் தடுக்க முடியவில்லை’ என்று பின்னர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். ஆக, 144 போடப்பட்டதன் நோக்கமென்ன?

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் அதுதான். தடை உத்தரவைப் பிறப்பித் ததன் மூலம் ஆளுங்கட்சி யினர் எவ்வித சிரமமு மின்றி வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்த னர். அவற்றை எதிர்க்கட்சி யினர் கும்பலாகச் சென்று தடுக்க முடியாமல் செய்து விட்டது 144 தடை உத்தரவு என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

வெற்றிகளும் தோல்விகளும்:

தேர்தலுக்கு முன்பும் பிரசாரத் தின்போதும் அதிமுக வெற்றிபெறும், திமுக கணிசமான இடங்களைப் பெறும், பாஜக கூட்டணி ஓரிரு தொகுதிகளை வெல்லும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது அதிமுக முப்பத்தியேழு தொகுதிகளைக் கைப்பற்றி யிருந்தது. திமுக கூட்டணி வேட்பாளர் களால் பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாம் இடத்தைத்தான் பெறமுடிந் ததே தவிர ஓரிடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.

பல கட்சிகளின் கதம்பமாக இருந்தபோதும், பாஜக அணி இரண்டு இடங்களில் வெற்றிபெற்றது. மத ரீதியாகப் பிரிந்துகிடக்கும் தொகுதி மற்றும் பொன். ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட செல் வாக்கு காரணமாக கன்னியாகுமரியில் பாஜக வென்றது. ஏனைய அனைத் திலும் பாஜகவுக்குத் தோல்வியே.

அதேபோல, தர்மபுரியில் அன்புமணி வெற்றிபெற்றார். முழுக்க முழுக்க சாதிய அடிப்படையில் தர்மபுரி தேர்தலை அணுகிய பாமகவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. பாமக போட்டியிட்ட ஏனைய ஏழு தொகுதிகளிலும் அதே சாதிய அணுகுமுறைதான் பின்பற்றப் பட்டது. ஆனால் அந்த உத்தி அங்கெல் லாம் எடுபடவில்லை. காரணம், அன்பு மணி களமிறங்கியது ஒரு தொகுதியில் தானே!

மதிமுக போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அதைவிட சோகம், அதன் பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்தத் தொகுதி யான விருதுநகரில் தோல்வி அடைந்தது. இது புதிதும் அல்ல, கடந்தமுறை அதிமுக அணியில் இடம் பெற்றிருந்தும் தோல்வியைத்தான் தழுவி னார். ஆனால் இம்முறை அந்தத் தொகுதி யில் அதிக அளவில் பிரசாரம் செய்தார் வைகோ. அவருக்காக விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர். ஆனாலும் தோல்வியே மிஞ்சியது.

பாஜக அணி யின் அச்சாணி யாகக் கருதப்பட்ட தேமுதிக பதினான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. அந்தக் கட்சியின் முக்கிய வேட்பாள ரான சுதீஷ் சேலம் தொகுதியில் தோற்ற தற்குப் பாமகவின் குழிபறிப்பு வேலைகளே காரணம் என்கிறார்கள். என்றாலும், எண்ணிக்கை அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி யாக இருக்கும் தேமுதிகவுக்குக் கிடைத்த தோல்வி ஆய்வுக்குரியது.

காங்கிரஸ் கட்சி ஓரிரு தொகுதி களைத் தவிர ஏனைய அனைத்திலும் கட்டுத்தொகையை இழந்து படுதோல் வியைச் சந்தித்தது. இடதுசாரிகள், ஆம் ஆத்மி மற்றும் சில உதிரிக்கட்சிகளை எல்லாம் இனிமேல்தான் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.

வெற்றி/தோல்வி :காரண, காரியங்கள்

அதிமுக ஆளுங்கட்சி; அதற்கென்று அடிப்படை யான வாக்குவங்கி இருக்கிறது. அந்தக் கட்சியின் சார்பில் பிரசாரமும் பலமாக இருந் தது. ஊடகங்கள், தேர்தல் ஆணையம் போன்றவையும் ஒத்தாசையாக இருந்தன. ஆகவே, அதிமுகவுக்கு தேர்தலை எதிர்கொள்வதும் வெற்றிபெறுவதும் ஒரு பெரிய பிரச்னை யாகவே இருக்கவில்லை.

ஆனால் அதிமுகவுக்கு இல்லாத ஒரு சிக்கல் திமுகவுக்கு இருந்தது. அது ஒருகட்டத்தில் அதிமுகவுக்குச் சாதக மாகவே மாறிப்போனது. அதுதான், திமுக காங்கிரஸ் (இல்லாத) கூட்டணி.

தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக விலகிவிட்டது. மக்களவைத் தேர் தலின்போதும் அந்தக் கட்சியை அணியில் சேர்க்கவில்லை. ஆனால் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் திமுகவையும் காங்கிரஸையும் இணைத்தே விமர்சனம் செய்தனர். காங்கிரஸ் ஆட்சியின் மீதான அத்தனை விமர்சனங்களையும் திமுகவின் மீதும் வைத்தனர். அதுபோலவே, திமுகவின் மீதான விமர்சனங்கள் காங்கிரஸ் மீது வைக்கப்பட்டன.

முக்கியமாக, இப்போது தேர்தல் கூட்டணி இல்லை என்றாலும் தேர்தலுக்குப் பின்னால் திமுக காங்கிர ஸ§டன்தான் கூட்டணி வைக்கும் என்பது போன்ற தோற்றத்தைத் திட்டமிட்டு உருவாக்கினர். அதன்மூலம், காங்கிரஸை ஆட்சியில் அகற்ற விரும்பிய வாக்காளர் கள், அந்தக் கட்சியோடு கடந்த காலத்தில் கூட்டணி யில் இருந்த திமுகவையும் நிராகரிக்கத் தயாராகினர். எனில், திமுகவுக்கு மாற்று எது?

அதைச் சுட்டிக்காட்டுகின்ற பணி யையும் ஊடகங்களே செய்துமுடித்தன. ஆம். எப்படியும் பாஜகவே மத்தியில் அதிக இடங்களைக் கைப்பற்றும். ஆனால் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. அதிமுக ஆதரவளித்தால் மட்டுமே பாஜக அரசு சாத்தியம். ஜெயலலிதாவின் ஆதரவுடனேயே மோடி பிரதமராக முடியும். மோடியும் ஜெயலலிதாவும் நண்பர்கள் என்பன போன்ற கருத்து களைத் தொடர்ச்சியாக மக்கள் மனத்தில் பதியச் செய்தன ஊடகங்கள்.

இதற்கு சரியான உதாரணம், துக்ளக் இதழில் வெளியான சோவின் கேள்வி பதில் பகுதி. பாஜக கூட்டணியில் பாஜக போட்டியிடாத இடங்களில் யாருக்கு வாக்களிப்பது என்ற வாசகர்களின் கேள்விக்கு, அதிமுகவுக்கே வாக்களி யுங்கள் என்றார் சோ. அந்தச் செய்தியை பிற ஊடகங்களும் வெளியிட்டு, பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்ற / மோடி ஆதரவுப் போக்கில் இருக்கின்ற நடுத்தர / மேல்தட்டு வாக்காளர்களை அதிமுகவின் பக்கம் திரட்டின. ஆக, திமுக - காங்கிரஸ் மற்றும் அதிமுக - பாஜக என்ற கற்பனைக் கூட்டணியைக் கட்ட மைத்தது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியது.

திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பைப் பாதித்த இதே காரணம்தான் பாஜக கூட்டணிக்கும் தோல்வியைக் கொடுத்தது. பாஜக கூட்டணியின் அமைப்பாளர் போன்று செயல்பட்ட தமிழருவி மணியனே அதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார் என்பதுதான் நகைமுரண். நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதும், அந்தத் தொகுதியில் பாஜக கூட்டணி வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்றார். கூட்டணி தர்மத்துக்கு வேட்டு வைக்கும் அந்தக் காரியத்தைச் செய்ததற்காக தமிழருவி மணியன் பாஜக அணியினரால் கண்டிக்கப்படவில்லை. அதற்கான விலைதான் இந்தப் படுதோல்வி.

தேர்தல் முடிவு சொல்லும் செய்தி

பெருவெற்றியைப் பெற்றிருந்தபோதும் அதிமுகவால் மத்திய அரசில் ஆதிக்கமென்ன, குறைந்தபட்ச பங்களிப்பைக்கூடச் செய்யமுடியாத நிலை. அது அதிமுகவுக்கு ஏற்படவிருந்த வெற்றி மயக்கத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

அடுத்து, திமுகவின் நிலை. தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தலுக்குப் பிறகும் திமுகவின் மீது சொல்லப்படும் விமர்சனங்கள் அநேகம். அவற்றில் 2ஜியையும் ஈழப்பிரச்னை தாண்டி பல பிரச்னைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. வேட்பாளர்கள் தேர்வு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலா ளர்களின் போக்கு, திமுக மீது இன்றைய இளைய தலைமுறையிடம் உருவாக்கப்பட்டிருக்கும் அதிருப்தி, ஊடகங்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்பு ஆகியவற்றை எல்லால் உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். உண்மையில், அத்தகைய நிலைமை இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் அதை ஆய்வுக்கு உட்படுத்துவது திமுகவுக்கு நல்லது. தமிழகத்துக்கு நல்லது.

அதிமுக, திமுகவுக்கு அடுத்து பெரிய கட்சியாகப் பார்க்கப்பட்ட தேமுதிக இம்முறை படுதோல்வியைச் சந்தித்துள் ளது. பத்து சத விகித வாக்கு வங்கியை வைத்திருப் பதாகச் சொல்லப் பட்ட தேமுதிக வின் இன்றைய வாக்கு சதவிகிதம் ஐந்துக்கு வந்து விட்டது. ஆம், கூட்டணிக் கும்ப மேளாவில் ஐந்து சதவிகித வாக்குகளைத் தொலைத்துவிட்டு வந்திருக்கிறது. ஆக, தேர்தல் களத்தில் ஒன்று தனித்து நிற்கவேண்டும் அல்லது வெற்றிவாய்ப் புள்ள பெரிய கட்சியுடன் கரம்கோக்க வேண்டும் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகள் தேமுதிகவுக்குச் சொல்லும் பாடம். அதைக்காட்டிலும் முக்கிய மானது, முற்றிலும் முரண்பட்ட கட்சிகளுடன் ஓரணியில் சேர்வது வெற்றிக்கு உதவாது என்பது.

அரசியல் ரீதியாகத் தனித்துவிடப் பட்ட பாமகவுக்குத் தர்மபுரி வெற்றி புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாக்கு சதவிகிதம் நான்கு சதவிகிதத்துக்குச் சரிந்துள்ளது. ஆனால் அதைக் காட்டிலும் அதிகமான ஆபத்து ஒன்று அந்தக் கட்சிக்கு உருவாகி யிருக்கிறது. அது, நம்பகத்தன்மை இழப்பு. கடந்த காலங்களில் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறும் கட்சி என்ற விமர்சனம் உருவானது. அதுபோல, இம்முறை கூட்டணிக் கட்சிக்குக் குழிபறிக்கும் கட்சி என்ற பிம்பம் உருவாகியுள்ளது. பாமக அதிகம் விரும்பிய சேலம் தொகுதி அதற்கான உதாரணம்.

அதேபோல, டாக்டர் ராமதாஸ் பெரும்பாலும் தர்மபுரியும் அவ்வப்போது பாமக போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்துவிட்டு, கூட் டணிக் கட்சிகளுக்கு ஆதர வாகப் பிரசாரம் செய்யாமல் விட்டது பலத்த விமர் சனத்தைக் கிளப்பியுள்ளது. ஆக, வாக்கு வங்கி ரீதியாக தங்கள் பகுதியில் செல்வாக்கை கணிசமாக உறுதிசெய்திருந் தாலும், கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றாத கட்சி என்ற அவப்பெயர் எதிர்காலத்தில் பாமகவுக்குச் சிக்கலாகக்கூடும்.

காங்கிரஸ் (நாலரை), மதிமுக (4), கம்யூனிஸ்டுகளின் (1/2 + 1/2 = 1) உண்மையான வாக்குவங்கி என்ன என்பது இந்தத் தேர்தலில் பகிரங்கமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எதிர் காலத்தில் என்ன முடிவை எடுக்க வேண்டும் என்பதை அந்தக் கட்சிகளின் வாக்கு வங்கிகளே சொல்லாமல் சொல்கின்றன.

தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள் வந்தாலும் சரி, அணிகள் உருவாகினாலும் சரி, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றில்லை என்பது இம்முறையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சதவிகிதக் கணக்கை வைத்துப் பார்க்கும்போது அதிமுக - திமுக இடையேயான வாக்கு சதவிகிதம் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஒரு கட்சி பெருவெற்றியை அடையும்போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இருக்கும் சராசரியான இடைவெளிதான் இது. தமிழ்நாடு தேர்தல் அரசியலில் இதுவொன்றும் புதிய புரட்சியன்று!

Pin It