கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

சாமி கயிறு, காசிக் கயிறு, காத்து கருப்பு அண்டாமல் இருப்பதற்கான கயிறு என்று பல்வேறு விதமான நோக்கங்களில் கைகளில் கயிறுகளைக் கட்டி இருப்பவர்களைப் பார்க்கலாம். இப்போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வெவ்வேறு வண்ணங்களில், பள்ளி மாணவர்கள் உள்பட, பலரும் கயிறு கட்டி இருக்கிறார்கள். இந்தக் கயிறுகள் கடவுள், மதம் தொடர்புடையவை அல்ல. சாதியின் அடையாளங்கள்!

இந்தக் கயிறுகள், தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே பல சாதி மோதல்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன. சாதியின் பெயரால்தான், நாங்குநேரியில் சின்னத்துரை என்னும் பள்ளி மாணவனும், அவன் தங்கையும் வெட்டுப் பட்டார்கள். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணி, தமிழ்நாடு அரசு நீதிபதி சந்துரு அவர்களைக் கொண்டு, இது பற்றி ஆராய, ஒரு நபர் குழுவை அமைத்தது.

annamalai cartoon 257அந்தக் குழுவின் அறிக்கையை, நீதிபதி அவர்கள் அண்மையில் நம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார். அதனுடைய சாரம் செய்தித் தாள்களில் வெளிவந்திருந்தது. அது ஒரு நீண்ட அறிக்கை. 680 பக்கங்களைக் கொண்டது!

கைகளில் கட்டப்படும் கயிறுகள், சாதி மோதல்களுக்குக் காரணமாகிச் சிலர் கொல்லப்படவும் பின்புலமாக இருந்திருக்கிறது என்பதால், அதனைத் தடை செய்ய வேண்டும் என்று நீதிபதியின் அறிக்கை பரிந்துரை செய்கிறது. கைகளில் கட்டப்படும் கயிறு கழுத்தில் மாட்டப்படும் தூக்குக் கயிறாக ஆகிவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் அந்த அறிக்கை அவ்வாறு கூறுகின்றது!

எல்லாவற்றையும் எதிர்க்கும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இதனையும் எதிர்த்திருக்கிறார். நீதிபதி தன் சொந்தக் கருத்துகள் பலவற்றை அறிக்கையில் சேர்த்திருப்பதாகவும், அண்ணல் அம்பேத்கரின் வரிகளைத் தொடக்கத்தில் மேற்கோள் காட்டி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

ஏற்கனவே 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்திருக்கிற அண்ணாமலை அவர்கள், இந்த அறிக்கையையும் முழுமையாகப் படித்து விட்டாரா என்று தெரியவில்லை. அல்லது படிக்காமலேயே இப்படி ஒரு கருத்தைச் சொல்கிறாரா என்றும் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது! அடுத்ததாக, அம்பேத்கரின் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கின்றன என்பதற்காக அண்ணாமலை வருத்தப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர் தலைமையில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் பெயரில்தான், அவர்கள் கட்சியினரும்

சட்டமன்றங்கள், நாடாளு மன்றத்தில் உறுதி எடுத்து இருக்கிறார்கள் என்பதை இங்கு நினைவூட்ட வேண்டி இருக்கிறது!

நீதிபதியின் அறிக்கையை நிராகரிக்கிறேன் என்றால் என்ன பொருள்? நாடெங்கும் சாதிச் சண்டைகள் மூள வேண்டும் என்று அவர் கட்சி விரும்புகிறதா? அப்படிக் கலவரங்கள் மூண்டால்தான், அதனைக் காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்லி, ஆட்சியைக் கலைத்து விட முடியும் என்று கருதுகிறார்களா?

எதிர்க்கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு யார் சொல்லி கொடுத்தார்களோ தெரியவில்லை!

நமக்கு அண்ணாமலையை விட, அவர் சார்ந்திருக்கும் கட்சியை விட, இந்த நாடு பெரியது! இந்த நாட்டையும், இந்த நாட்டின் அமைதியையும் காப்பாற்ற வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது! தமிழ்நாடு அரசுக்கு மிகக் கூடுதலாக இருக்கிறது!!

- சுப.வீரபாண்டியன்