நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். “உலகத்தின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம்” என்று ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் குறைந்தது இரு அமைச்சர்களாவது எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து இந்தக் கேள்வியை எதிர் கொண்ட படியே இருக்கிறோம். எனவே இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதில் சொல்கிறோம்.

சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கிடைத்தது கிபி 300இல். தமிழில் முதல் கல்வெட்டு கிடைத்தது அதற்கு 600 வருடத்திற்கு முன்னால். பாட்டி தான் வயதில் மூத்தவள் என்று நான் சொல்கிறேன். பேத்தி தான் மூத்த ஆள் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் சொல்வது அறிவியல். நான் சொல்றது ஆறாவது அறிவு.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் தங்க ஆபரணம் கிடைத்தது. இது மிக முக்கியமான கண்டுபிடிப்பு. அந்த அகழாய்வினை செய்தது தமிழக தொல்லியல் துறை அல்ல, ஒன்றிய அரசினுடைய தொல்லியல் துறை. ஆனால் அகழாய்வின் மூலம் 3000 ஆண்டுகள் பழமையான தங்க ஆபரணம் கிடைத்ததை பிறகு கடந்த ஒரு வாரமாக ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் இணையதளத்தில் பதிவிடவில்லை. அதுவே வட இந்தியாவில் நடைபெற்ற அகழாய்வில் இத்தகைய பொருள் கிடைத்திருந்தால், சீதையின் வளையம், திரௌபதியின் காதணி என்று எத்தனை கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

2016ஆம் ஆண்டு மதுரைக்குப் பக்கத்தில் வைகைக் கரை கிராமம் ஒன்றில் ஒரு மாலை நேரத்தில் பெரிய புயல் காற்றோடு மழை அடித்தது. அந்த அந்த ஊர் நடுவில் இருந்த பெரிய மரம் கீழே விழுந்தது.

அந்த மரத்தின் உடைய வேர்ப் பகுதிக்குள் மண்ணோடு சேர்ந்து சில குட்டிப் பானைகள் இருந்தன. அதனை எடுத்து வந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்படி உருட்டி விளையாடிக் கொண்டிருந்த பொழுது தங்கக் கட்டிகள் ஏழெட்டுக் கட்டிகள் இருந்தது. உடனே அதனை ஆளாளுக்கு எடுத்துச் சென்றார்கள் அதன்பிறகு காவல்துறை வந்து ஏழு கட்டிகளை பறிமுதல் செய்து உள்ளே வைத்தது. இரண்டு வருடத்திற்கு பிறகு தொல்லியல் துறை ஆய்வு செய்த பொழுது அந்த ஏழு தங்கக் கட்டிகளிலும் தமிழ் பிராமி, தமிழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இருந்தன. ஏழு தங்கக் கட்டிகளிலும் ஒரே பெயர் எழுதப்பட்டிருந்தது. மொகஞ்சதாரோ காலத்தில்கூட தங்கம் கண்டறியப்பட வில்லை. உலகத்திலேயே தங்கத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ் மொழி என்பது மிக முக்கியமானது. “சங்கத் தமிழ் மட்டுமல்ல, தங்கத் தமிழ்” என்று உரக்க முழங்குவோம். இங்கே இந்த உண்மையை பேசுவது மிக முக்கியமானது.

வைஷ்ணவ மதம் இந்தியா முழுவதும் இருக்கிற மதம். வைதீக மதங்களில் மிக முக்கியமானது. ஆனால் தமிழ்நாட்டு வைணவத்தில் மட்டும் ஒரு மரபு இருக்கிறது. அது என்னவென்றால் பெருமாளுக்கு முன்னால் தமிழ்ப் பாசுரங்கள் பாட வேண்டும்; பெருமாளுக்கு பின்னால் சமஸ்கிருத ஸ்லோகங்கள் கூற வேண்டும். இந்தியாவில் எந்த நிலத்திலாவது வைதீகத்தில் சமஸ்கிருதத்தை இறைவனுக்குப் பின்னாலும், சொந்த தாய் மொழியை முன்னாலும் வைத்த மரபு இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எங்கேயும் கிடையாது, இன்றைக்கு வரை இந்த மரபு தமிழகத்தில் தொடர்கிறது. ஏன் தெரியுமா? தமிழகத்தில் தான் மதம் என்ற நிறுவனம் கால்கொள்வதற்கு முன்பே மொழி என்கிற கட்டமைப்பு வலிமையாக நிலை நின்றுவிட்டது. எனவே இங்கே எந்த மதம் வந்தாலும் மொழிக்கு உரிமை கொண்டாடுகிற வேலையை முதலில் செய்தார்கள். மிக முக்கியமான செய்தி இது.

தமிழகத்திலே கிடைத்துள்ள மிகப் பழமையான கல்வெட்டு புள்ளிமான் கோம்பையிலே இருக்கிற கல்வெட்டு. அது அசோகன் பிராமி எழுத்துக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்து என்று பல தொல்லியல் அறிஞர்கள் கூறுவதை நீங்கள் பார்க்கலாம். அந்த கல்வெட்டு ஒரு மாடு பிடிக்கிற சண்டையில் இறந்து போன அந்துவன் என்ற ஒரு வீரனுடைய நினைவாக அந்தக் கிராமத்து மக்கள் எழுதியுள்ள ஒரு கல்வெட்டு. அந்த கல்வெட்டிலே இருக்கிற ஒரு சொல் “கால்கோள்” என்பது. ஒரு திருமணம் நடந்தால் கால்கோள் நடுவது; ஒரு மாநாடு நடந்தால் கால்கோள் விழா நடுவது இன்றவைக்கு வரைக்கும் புழக்கத்தில் இருக்கிற சொல். இந்தச் சொல்லுக்கு ஒரு பெரும் இலக்கணத்தை எழுதியிருக்கிறார் தொல்காப்பியர். இந்தச் சொல்தான் தமிழகத்தில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிற இந்தியாவிலேயே மிகப் பழமையான பெயர் பொறிக்கப்பட்ட அந்துவன் கல்வெட்டு. அந்தக் கல்வெட்டில் இருக்கிற “கால்கோள்” என்ற சொல் சுமார் 2500 ஆண்டுகள் தொடர்ந்து மக்களிடம் இருந்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பண மதிப்பிழப்பு இந்தியாவில் நடந்தது. ரூ.500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாததாக ஆக்கப்பட்டு புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. அதுவரை அனைத்து ரூபாய் நோட்டு தாள்களிலும் உலகம் ஏற்றுக் கொண்ட எல்லா இடங்களிலும் புழக்கத்தில் இருக்கிற எண்கள் தான் எழுதப்பட்டது. பண மதிப்பிழப்பிற்கு பிறகு அச்சடிக்கப்பட்ட அனைத்து 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகளிலும் தேவ நாகரி வடிவிலான எண்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் நோட்டுகளில் இருக்கும் எண்களை மாற்ற வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனம் இருக்கிறது. ஆனால் சத்தமே இல்லாமல் யாருடைய இசைவையும் பெறாமல் தேவநாகரி எண்கள் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் கொடுக்கப்பட்டுவிட்டது. இது மக்கள் புழங்குகின்ற மொழிக்கும் அதிகாரத்தின் குறியீட்டுக்கான மொழிக்கும் இடையிலே நடக்கிற போராட்டம்.

கடந்த தலைமுறை நடத்திய போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டத்தை இந்தத் தலைமுறை நடத்த வேண்டிய இடத்தில் இருக்கிறது என்பதுதான் சமீபத்திய நிகழ்வுகள். நிச்சயம் புதிய தலைமுறைக்கான மொழியாக, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வினைபுரிகிற ஆற்றல் மிக்க மொழியாக தமிழ் மொழியை தகவமைக்கிற வேலையை அனைத்து நிறுவனங்களும் செய்ய வேண்டும். அதனை உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

- சு.வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர் (CPM)

Pin It