நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கூட இன்னும் நடக்கவில்லை. ஆனால் மோடி மூன்றாவது முறையாக மோடி பிரதமராகி விட்டார் என்று மட்டும்தான் இன்னும் சில ஊடகங்கள் எழுதவில்லை. ரஷ்யாவை, சீனாவைப் போல ஒற்றைக் கட்சி ஆட்சிமுறைக்கு இந்தியாவும் வந்துவிட்டதோ எனத் தோன்ற வைக்கும் அளவுக்கு சில ஊடகங்கள் பாஜக செய்திகளை அணுகிக் கொண்டிருக்கின்றன. கடைசியாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான திட்டங்களை தயாரிக்குமாறு கேபினட் அமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இன்னும் சில ஊடகங்களோ ஒரு படி மேலே போய், மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்கும்போது குறைவான எண்ணிக்கையிலான அமைச்சகங்களே இருக்கும் என்று எழுதியிருக்கின்றன. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் மோடிதான் வெற்றியாளர் என்று கருத்துக் கணித்து விட்டன. எதிர்க்கட்சிகளால் நாடு தழுவிய அளவில் இந்தியா கூட்டணி பலமாக அமைக்கப்பட்டுள்ள போதிலும், கண்ணுக்கு எட்டிய வரை மோடிக்கு எதிரியே இல்லை என்று தேசிய ஊடகங்கள் பாஜகவின் குரலை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

கள நிலவரத்துக்கும் ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கும் இடையிலான வித்தியாசம் மலையளவுக்கு இருக்கிறது என்பதை 07.04.2024 அன்று டெகான் கிரானிக்கல் பத்திரிகையில், ஆய்வாளர் பர்சா வெங்கடேசுவர ராவ். எழுதி வெளியாகியிருக்கிற கட்டுரை மிகத் துல்லியமாக படம் பிடிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, டெல்லி, பஞ்சாபில் மாநில கட்சிகளே இப்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாஜக ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களிலும் வாழ்வாதாரச் சிக்கல்களே மேலோங்கி இருக்கின்றன. கர்நாடகாவிலும், குஜராத்திலும் பாஜகவின் உட்கட்சிப் பூசல் தேர்தல் பணிகளை நிலைகுலைய வைத்திருக்கிறது.

பாட்னாவில் சமீபத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் எழுச்சி மிகு கூட்டம், தூங்கச் செல்லும் போது ஒரு அணியிலும், கண் விழிக்கும்போது ஒரு அணியிலும் இருக்கும் பீகாரின் நிதிஷ் குமாரை மக்கள் இனி நம்பப்போவதில்லை என்பதற்கான அச்சாரமாக அமைந்தது. சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி உ.பி.-யில் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு பாஜகவுக்கு எதிரிகளே இல்லை என சாளரம் வீசுகிறது சில ஊடகங்கள்.

அப்படியொன்றும் வீழ்த்தவே முடியாத கட்சியில்லை பாஜக. 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு 31.34%. 2019 தேர்தலில் 37.7% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது ஒன்றும் வியக்கத்தக்க எண்ணிக்கை இல்லை. 1971 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 43.68% வாக்குகளையும், 353 இடங்களையும் பெற்றது. 1980-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது 42.69% வாக்குகளையும் 352 இடங்களையும் பெற்றிருந்தது. அத்தகைய பலம் மிக்க காங்கிரஸ் கட்சியே வீழ்ந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. அதுவும் இல்லாமல், பாஜக இதுவரை ஒருமுறை கூட இந்த எண்ணிக்கையை பெற்றதில்லை. எனவே மோடியை மன்னராக சித்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக எழுதியிருக்கிறார் ஆய்வாளர் பர்சா வெங்கடேசுவர ராவ்.

இன்னும் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. தேர்தல் களத்தில் மோடியின் புகழ் எங்கும் ஒலிக்கவில்லை. விவசாயிகள் பாஜகவினரை ஓட்டு கேட்க அனுமதிக்காமல் விரட்டியிருக்கிறார்கள். பாஜகவின் ஊழல்கள்தான் பேசுபொருளாக இருக்கின்றன. வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான குரல்கள் கேட்கின்றன. இவற்றோடு கூடுதலாக, காங்கிரஸ் கட்சியின் சமூக நீதி ‘தேர்தல் அறிக்கை’ கவனிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றைத் தாண்டி பாஜக 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்ற கணிப்புகள் வெறும் கானல் நீர். வெற்றுக் கருத்துத் திணிப்புகளே அவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

விடுதலை இராசேந்திரன்

***

தமிழ்நாடு மாடல் வளர்ச்சி மாடல்

தேர்தல் கள ஆய்வுக்காக தமிழ்நாடு வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் எக்ஸ் தளத்தில் இட்டிருக்கும் பதிவுகள் கவனம் பெற்றுள்ளன. “தமிழ்நாடு அரசியல் எப்போதுமே என்னை ஈர்த்திருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு தனக்கென ஒரு தனி வழி அமைத்து, அதில் முன்னேறி வந்திருக்கிறது. இந்தியா கொண்டிருக்கும் பன்மைத்துவமே அதன் வலிமை. தமிழ்நாடு அதற்கு நல்ல உதாரணம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான பரந்த கூட்டணியை வீழ்த்துவது எளிதல்ல. யார் எதிர்க்கட்சி என்பதற்கு இங்கே போட்டி நடக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் கோவை 30% சிறு, குறு நிறுவனங்கள் மூடுவிழா கண்டுவிட்டன. தொழில் நிறுவனங்கள் வைத்திருந்த சிலர் இப்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் மட்டுமே சிறிய அளவிலான ஆதாயம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டு களத்தை ஆய்வு செய்ததில் நான் புரிந்து கொண்ட விஷயம் இதுதான். குஜராத் மாடலைப் பற்றி பேசும் நாம், சமூகநீதி மற்றும் வளர்ச்சி கொண்ட தமிழ்நாட்டு மாடலைப் பற்றி எப்போது பேசப் போகிறோம்? இந்தியா முழுவதும் பணிபுரியும் பெண்களில் தமிழ்நாட்டில் மட்டும் 43% இருக்கிறார்கள். அதிகாரம் பெற்ற இப்பெண்கள் சிறந்த தமிழ்நாடு மற்றும் இந்தியாவை உருவாக்குகிறார்கள். தமிழ்நாடு எட்டியிருக்கும் பல சாதனைகளில் இதுவும் ஒன்று” என்றும் பதிவிட்டுக்கிறார்.

Pin It