மக்களிடம் அரசியல் பேசினால் அவர் அரசியல்வாதி. அரசியலைப் போல ஓர் ‘அரை’சியலைப் பேசினால், அவரைத் தமாஷ் பேர்வழி என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வேலையை என் மண், என் மக்கள் என்று சொல்லிக் கொண்டு கச்சிதமாகச் செய்கிறார் அண்ணாமலை.

 இராமேஸ்வரத்தில் இருந்து என் மண், என் மக்கள் என்ற நடை பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க, அண்ணாமலை நடக்க ஆரம்பிக்கிறார். என்ன நோக்கத்திற்காக இந்த நடை பயணம்? ஒன்று தி.மு.க ஊழலுக்கு எதிராகவாம்! இரண்டாவது, மோடியை மூன்றாம் முறையாகப் பிரதமராக்கவாம்!

சொத்திற்கும், ஊழலுக்கும் வித்தியாசம் தெரியாமல் தி.மு.க வின் ஊழல் என்று DMK File 1 ஐ வெளியிட்டார் அண்ணாமலை. அது புஸ்வாணமாகப் போக, அவர் மீதே வழக்கு போட்டு விட்டார்கள் தி.மு.க வினர்.

அ.இ.அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர்கள், குட்கா விலிருந்து அரசு ஒப்பந்தப் பணி வரையும் செய்த ஊழல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டியும் கூட, நம்ம அண்ணாமலை அதைப் பற்றிப் பேசுவதே இல்லையே. பா.ஜ.க வின் ஊழல் பற்றியும் பேசுவது இல்லையே, ஏன்?

என் மண், என் மக்கள் என்று சொல்லும் அண்ணாமலை, இந்திய ஒன்றியத்தை என்மண், என்மக்கள் என்றுதான் சொல்கிறார்.

அப்படியானால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழர் நெறியை மேடையில் பேசும் மோடியின் பேச்சின் அடிப்படையில் மணிப்பூர் மக்களைப் பற்றி, அங்கு நிகழ்ந்த கொடுமைகள் பற்றி நடை பயணத்தில் பேசுவாரா, அண்ணாமலை?

ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் டீசல், பெற்றோல் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பண மதிப்பிழப்பு என்றும், இல்லையில்லை அதைத் திரும்பப் பெறுகிறோம் என்றும் சொன்னது மோடி அரசு அல்லவா! டில்லியில் நடந்தது பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம்.

இவைகளைப் பற்றியெல்லாம் நடைபயணத்தில் பேசி மோடியை மூன்றாம் முறையாகப் பிரதமராக ஆக்குவாரா அண்ணாமலை.

காந்தியடிகளின் தண்டி யாத்திரை மக்களிடம் எழுச்சியை உருவாக்கியது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மக்கள் வரவேற்றார்கள். அந்த நடை பயணங்கள் மக்கள் நலம் சார்ந்து இருந்தன.

மோடியை மீண்டும் பிரதமர் ஆக்கப் புறப்பட்டு விட்ட அண்ணாமலையின் நடைபயணத்தில் சொல்லக் கூடிய வகையில் எந்தவொரு நோக்கமும் இல்லை, மக்கள் பற்றிய சிந்தனையும் அதில் இல்லை, அவ்வளவுதான்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It