2008ஆம் ஆண்டு, காங்கிரஸ் அரசினால் கொண்டு வரப்பட்ட தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தில் (National Investigation Agency Act, 2008) மேலும் சில திருத்தங்களை இன்றைய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இது மோசத்திலிருந்து மிக மோசம் என்னும் நிலையை நோக்கியதாக உள்ளது. 2008ஆம் ஆண்டு சட்டத்தை, அன்று திமு கழகம் ஆதரித்ததால், இன்று இத் திருத்தத்தையும் ஆதரிக்க நேர்ந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. திமு கழகத்தை நாம் நூற்றுக்கு நூறு ஆதரித்தாலும், இந்த முடிவை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கத்தி பழைய கத்திதான் என்றாலும், அதனை இப்போது கையில் ஏந்தி இருக்கும் புதியவர் மிக ஆபத்தானவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்தச் சட்டத்தையே முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவதே, திமுகவின் ஜனநாயகக் கோட்பாட்டிற்கும், மாநில சுயாட்சிக் கொள்கைக்கும் ஏற்றதாக இருக்கும்.
- சுப.வீரபாண்டியன்
(இச்சட்டம் குறித்துப் பேரா. அ.மார்க்ஸ் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன...)
NIA சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பார்ப்போம்.
வெளிநாட்டில் செய்யப்படும் குற்றங்களை விசாரிப்பது நடைமுறைச் சாத்தியமா என்பது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறி. 26/11 எனப்படும் மும்பைத் தாக்குதலை ஒட்டி 2008இல் ‘தேசியப் புலனாய்வு முகமை’ (NIA) உருவாக்கப்பட்டபோது இந்தச் சட்டத்தில் எல்லாவற்றையும் மத்தியில் குவிக்கும் போக்கு அதில் தீவிரமாக வெளிப்படுவதாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இருந்தவர்கள் இந்த ஐயத்தையும் விமர்சனத்தையும் மிக எளிதாக ‘டிஸ்மிஸ்’ பண்ணினார்கள்.
முதல் NIA வெடி குண்டுத் தாக்குதலுக்குப் பின்னணியாக இருக்கும் “பயங்கரவாத நிதி உதவி” (terror funding) மற்றும் ‘பயங்கரவாதக் குழுக்கள்’ குறித்த புலன் விசாரணைகளிலேயே அது கவனம் கொண்டிருந்தது. NIA சட்டத்தைப் பொருத்தமட்டில் அதற்குக் கைது செய்யும் அதிகாரம் கிடையாது. NIA அமைப்பு, புலன் விசாரணை செய்யுமே ஒழியக் கைது செய்யும் அதிகாரம் காவல்துறையிடமே இருந்தது. அதே போல NIA வுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்கும் அதிகாரமும் கிடையாது. NIA சட்ட இணைப்பில் கொடுக்கப்பட்ட குற்றங்களைப் புலனாய்வு செய்து வழக்கை நடத்துவது மட்டுமே அதன் பணி.
இப்போது NIA சட்டத் திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு அம்சம் என்னவெனில் இப்போதுள்ள அரசின் ஆதர்சங்களான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க பாணியில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதுதான். அங்குள்ள புலன் விசாரணை முறையை அப்படியே இங்கு காப்பி அடிக்க வேண்டுமானால் அதற்குரிய வகையில் இங்கு அகக் கட்டுமானங்கள் இருக்க வேண்டுமே என்கிற சிந்தனை இவர்களுக்குக் கிடையாது.
எடுத்துக்காட்டாக ஒன்றைப் பாருங்கள். எங்கெல்லாம் இந்தச் சட்டம் செயல்படுத்தப்படும் என்பதை இச்சட்டத்தின் பிரிவு 1 வரையறுக்கிறது. இதில் கூடுதலாக ஒரு கூற்றை இப்போது சேர்க்கிறார்கள். அதன்படி, “பட்டியலிலுள்ள குற்றம் ஒன்றைச் செய்பவர், இந்தியாவுக்கு அப்பால் இருந்து குற்றத்தைச் செய்த போதிலும் அக்குற்றம் இந்தியாவைப் பாதிக்கும் அல்லது இந்தியர்களைப் பாதிக்கும் என்கிறபோது அங்கும் இச் சட்டம் பயன்படுத்தப்படும்”.
இன்னொரு நாட்டில் குற்றம் நடந்தால் அதையும் விசாரிக்கும் அதிகாரம் உள்ள சட்டம் நம்மிடம் இருந்தால் மட்டும் போதுமா? அதற்கு உரிய அனுமதியையும் உதவிகளையும் அந்த நாடு அளிக்குமா? அதுவும் நல்ல உறவு இல்லாத நாடுகளில் இதெல்லாம் சாத்தியமா? அப்படிக் குற்றம் செய்தவர்களை அந்த நாடே பிடித்துக் கொடுக்காத நிலையில் நாம் போய் அதைச் செய்துவிட முடியுமா? அவர்களே பிடித்துக் கொடுப்பார்கள் என்றால் பிறகு இப்படி ஒரு சட்டம் எதற்கு? இதெல்லாம் நடக்கிற காரியமா?
NIA சட்டத்தில் இப்போது செய்யப்படும் இன்னொரு திருத்தம் 11ம் பிரிவில் உள்ள (3) லிருந்து (7) வரைக்குமான உட் பிரிவுகள் இனி செல்லாது. இந்தப் பிரிவுகள் என்ன சொல்கின்றன? ஏன் இப்போது மோடி அரசு அவற்றை நீக்குகிறது? தற்போது உள்ள NIA சட்டப் பிரிவுகளின்படி. புலன் விசாரணை முடிந்து வழக்கு விசாரணை தொடங்கும்போது அவ்வப் பகுதி மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பரிந்துரையின்படி சிறப்பு நீதிமன்றத்திற்கான நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்கும். இதை இப்போது மோடி அரசு மாற்றுகிறது. எப்படி? இனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படாமல் இப்போதுள்ள செஷன்ஸ் கோர்ட்டுகளே இந்த NIA வழக்குகளையும் விசாரிக்குமாம். இது ஏற்கனவே வழக்குச் சுமைகளால் கூன் விழுந்து கிடக்கும் நீதித்துறையை மேலும் பிரச்சினைக்கு உள்ளாக்கும்.
(இக்கட்டுரையை முழுமையாகப் படிக்க விரும்புவோர் அ.மார்க்ஸ் (Marx Anthonisamy) அவர்களின் முகநூல் பக்கத்தைப் பார்க்கவும்.)