திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக 05-08-2023 அன்று, சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் ‘கருஞ்சட்டை விருது’ வழங்கும் விழா நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டுக்கான ‘கருஞ்சட்டை விருது’களைத் தி.மு.க வின் தஞ்சை கூத்தரசன், திராவிடர் கழகப் பிரச்சார அணிச் செயலாளர் அ.அருள்மொழி, பேரவைத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு. மாறன் ஆகிய மூவருக்கும் மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.ஆயிரம் விளக்குச் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் மற்றும் திரைப்பட இயக்குநர் திரு கரு.பழனியப்பன் ஆகியோர் தம் வாழ்த்துரைகளை அரசியலில் கலந்து ஆற்றினர். எதிர்வரும் காலங்களில் காவிக் கூடாரங்களுக்கு எதிராகக் கருஞ்சட்டைக்காரர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை முன்னெடுத்துச் செல்ல இத்தகைய ‘கருஞ்சட்டை விருது’கள் ஊக்கப்படுத்தும் என்பதை மையப்படுத்திப் பேசினார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் புரட்சிப் பாடகர் கோவன் குழுவினரின் அரசியல் இசைப்பாடல்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்தன.
திராவிட நட்புக் கழகத்தின் சார்பாக குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தி வழங்கிய பரிசுகள் நெஞ்சிற்கு நிறைவாக இருந்தன. அத்துடன் தேர்வு செய்யப்பட்ட வலையொழி ஊடகவியலாளர்களும் சிறப்பு செய்யபட்டனர்.
தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தன் தலைமை உரையில், இவ்விழா சிறப்புற அமையக் காரணமான தோழர்கள் செல்வின் செளந்தர்ராஜன் உள்ளிட்ட தோழர்களின் பணிகளை வாழ்த்தியமை, தோழர்களுக்கு ஊக்கமருந்தாக அமைந்தது. விருதாளர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.
தொகுப்புரை ஆற்றினார் தோழர் நெல்லை பாபு. நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார் தோழர் ப.எட்வின்.
- எழில்.இளங்கோவன்