இரண்டு நாள்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை சற்று அழுத்தமாகப் பேசியிருந்தார்.

"மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும், கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இருமடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மைத் தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது... " என்ற அவரின் பேச்சு தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகத் தெரிகிறது.

இந்திய அரசமைப்பின் 82 மற்றும் 170ஆம் பிரிவுகளின்படி, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும், நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்களில் புதிய இடங்கள் உருவாக்கப் படுகின்றன. ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்படுகின்றன.

ஆனால் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ இடங்களில் இருந்து 8 இடங்கள் பறிக்கப் பட்டு, இனி 31 நாடாளுமன்றத் தொகுதிகள்தான் இருக்கும் என்று சொல்வது எப்படிச் சரியாகும்?

அதேசமயம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு, அதே காரணத்தின் அடிப்படையில கூடுதல் தொகுதிகள் கிடைக்கின்றன.

80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசம் கூடுதலாக 11 தொகுகள் பெற்று 99 என்றும், பீகாரில் 40 என்பது 50 ஆகவும், ராஜஸ்தான் 25இல் இருந்து 31 என்றும், மத்தியப்பிரதேசம் 29இல் இருந்து 33 என்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் கூடுதலாகப் பெறுகிறது என்று ஒரு நாளிதழ் செய்தி சொல்கிறது.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்,

'மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு' என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதியை முறியடித்தாக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் அவர்கள், இப்போதும் அதை நினைவு படுத்துகிறார்.

பா.ஜ.கவின் சதிவலைகளில் இதுவும் ஒன்று. ஆரிய-திராவிடப் போர் தொடர்கிறது. முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வாருங்கள், அணிவகுப்போம்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It