தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து அவைகளை ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைக்கும் ஒரு திட்டத்தோடு தி.மு.க. களமிறங்கியிருப்பது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு அணுகுமுறையாகும்.
கடந்த காலங்களில் குறிப்பாக ‘எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா’ என்ற திரைப்பட பிம்பங்கள் அரசியலுக்கு வந்த பிறகு தேர்தல் பரப்புரையின் முறைமைகளே மாறிப் போனது. இந்த ‘பிம்பங்களை’ நேரில் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண் டிருந்த மக்கள் கூட்டத்தைத் திரட்டி அவர்கள் முன் தோன்றினாலே போதும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கான பரப்புரைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு மக்களை உரிய ‘வசதி’களைத் தந்து திரட்டிக் கொண்டு வருவார்கள். இதற்கு பல கோடி ரூபாய் பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்படும். ஹெலிகாப்டர்களில் தலைவர்கள் வந்து இறங்கி எழுதி வைத்த உரையைப் படிப்பார்கள்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும்போது, அந்த 15 அல்லது 20 நாட்கள் மட்டுமே மக்கள் சந்திப்பு நடக்கும். வழக்கம்போல தேர்தலுக்கு முன்பு நடக்கும் ‘வாக்காளர் கவனிப்புகளோடு’ தேர்தல் களம் நிறைவடைந்து விடும். மக்கள் சந்திப்புகளுக்கும் திரை போடப்பட்டுவிடும்.
இதற்கு மாறாக, மக்களை கிராமம் கிராமமாகச் சென்று சந்திப்பது, மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது என்று தமிழகம் முழுதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கிராம சபைகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் நடத்தினர்.
இப்போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துகிறார் தி.மு.க. தலைவர். மக்கள் தங்களின் உள்ளூர் பிரச்சினைகள் அரசு நிர்வாக வழியாக தீர்க்கப் படாமல் இழுத்தடிக்கப்படும் சொந்தப் பிரச்சினைகளை மனுக்களாக வழங்குகிறார்கள்.
மனுக்களைப் பெற்று ஒரு பெட்டியில் மூடி மக்கள் முன்னால் சீல் வைத்து ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்ற உறுதிமொழியோடு இந்த ஆக்கபூர்வ சந்திப்பு நிகழ்வை நடத்தி வருகிறார், மு.க. ஸ்டாலின்.
பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்த பிறகு மாநில உரிமைகளை படிப்படியாகப் பறித்து வருகிறது. கல்வி உரிமை, வரி விதிப்பு உரிமை, விவசாயம் சார்ந்த உரிமை, மொழி உரிமை, மருத்துவ உரிமை என்று அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு மாநிலங்கள் முடக்கப்பட்டுக் கிடக்கின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் தீர்க்க வேண்டிய ‘சிவில்’ உரிமைகள் மட்டுமே மாநில அரசுகளிடம் தங்கி நிற்கிறது. ஒரு பக்கம் பறிக்கப்படும் அரசியல் உரிமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியே தீர வேண்டிய நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியமாகிப் போன நிர்வாகம் சார்ந்த மக்கள் பிரச்சினைகளை அரசு நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை.
இந்தப் பின்னணியில் அரசு அதிகாரத்துக்கு உட்பட்ட மக்கள் சார்ந்த பிரச்சினை களுக்கு முகம் கொடுத்து தேர்தல் களத்தை ஆக்கப்பூர்வமாக மாற்றியமைத்திருக்கிறார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதையே ஆளும் அ.இ.அ.தி.மு.க.வோ, பா.ஜ.க.வோ செய்திருந்தால் ஊடகங்கள் ஊதிப் பெருக்கி கொண்டாடி கும்மாளம் போட் டிருக்கும். ஆனால் தி.மு.க. செய்கிறது என்பதால் முழுமையாக இருட்டடிக்கப்படுகின்றன.
சொல்லப் போனால் மக்களை நேரடியாக சந்திக்காமல் அவர்களின் பிரச்சினைகளுக்கு காது கொடுக்காமல் தேர்தல் களத்தைச் சந்திக்க முடியாது என்ற நெருக்கடியை அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே உருவாக்கியிருக்கிறது தி.மு.க.வின் இந்த மக்கள் சந்திப்பு இயக்கங்கள்.
‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கைக்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்களிடம் நாடு கையளிக்கப்பட்டது. அதன் பிறகு ‘கார்ப்பரேட்’ கலாச்சாரமான நவீன தொழில் நுட்பமும் கோடியாக பணப் புழக்கமும் அரசியல் கட்சிகளின் கலாச்சாரமாகிப் போனது. இதிலிருந்து விலகி நிற்கும் எந்தக் கட்சியும் தேர்தல் களத் துக்குள்ளேயே நுழைய முடியாது என்பதே எதார்த்தம்.
அதன் காரணமாக புதிது புதிதாக அரசியல் கட்சிகள் ஒவ்வொரு நாளும் முளைவிட்டுக் கொண்டிருக் கின்றன. தொண்டர்களே இல்லாத தலைவர்கள்கூட சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
ஆன்மீக அரசியல்கூட இதில் தப்பிடவில்லை. திரைப்படத் துறையில் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் வாங்கும் நடிகர்கள்தான் அதற்கும் தேவைப்பட்டார்கள். இந்த நிலையில் தி.மு.க.வை மட்டும் குறி வைத்து தனிமைப்படுத்தி அதைத் ‘தீண்டப்படாத’ கட்சியாகக் காட்ட வேண்டும் என்பதில் பார்ப்பனர்களும், ஊடகங்களும், போலி தமிழ் தேசிய வாதிகளும் உறுதியாக நிற்கிறார்கள்.
மார்க்சியம் - மார்க்சிய - லெனினிய தத்துவங்களோடு தேர்தல் பாதைக்குப் போகாத இயக்கங்கள்கூட ‘பா.ஜ.க. வை வீழ்த்துவோம்; பாசிசத்தை முறியடிப்போம்’ என்ற முழக்கத்தோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.
அதை வீழ்த்துவதற்கு பா.ஜ.க.வின் எடுபிடிகளை எதிர்க்க வேண்டாமா? இன்று பா.ஜ.க. பார்ப்பனிய சக்திகளால் குறி வைத்து தாக்கப்படும் தி.மு.க.வை ஆதரிப்பதில், ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? இது பார்ப்பன பாசிசத்தை வீழ்த்தும் நடைமுறை செயல் உத்தியல்லவா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள்.
‘மக்கள் பிரச்சினை; மக்கள் அரசியல்’ என்றெல்லாம் பேசும் இந்த முற்போக்கு இயக்கங்கள் கூட மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தல் களத்தின் பண்புகளை மாற்றியமைக்க விரும்பும் தி.மு.க.வைப் பாராட்ட மனம் வரவில்லை; மாறாக குற்றங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் நவீன பார்ப்பனிய பார்வை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது!
பார்ப்பனர் ஒருவரைக்கூட சட்ட மன்ற உறுப்பினராக்காத - பார்ப்பனர் ஒருவரைக்கூட அமைச்சரவையில் இடம் பெறச் செய்யாத கட்சி, தி.மு.க.வைத் தவிர வேறு ஏதாவது இருக்கிறதா?
நாளைக்கு தி.மு.க., பா.ஜ.க.வை ஆதரிக்காது என்பதற்கு என்ன உறுதி என்று எதிர் கேள்வி வைக்கிறார்கள். வாதத்துக்காக ஒப்புக் கொண்டாலும் அதற்காக இப்போதே பா.ஜ.க.வை ஆதரிக்கும் கட்சிகளின் முகத்திரையைக் கிழிக்காமல் ஒதுங்கி நிற்பது என்ன நியாயம்?
பார்ப்பன எதிர்ப்பு - வெறுப்புப் பின்னணியில் தி.மு.க.வின் இந்த மக்கள் சந்திப்பு அணுகு முறையை தேர்தல் அரசியல் பார்வைகளையும் கடந்து பாராட்ட வேண்டும். அரசியல் மக்களுக்கானது என்ற கருத்தை உண்மையாக ஏற்கக் கூடிய எவராக இருந்தாலும் இதை பாராட்டவே செய்வார்கள்.
- இராசேந்திரன்