கேரளாவில் 25.04.2023 அன்று, வந்தே பாரத், கொச்சி வாட்டர் மெட்ரோ போன்ற ரூபாய் 3200 கோடி முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார் ஒன்றியப் பிரதமர் மோடி! அப்போது, “ஒன்றிய அரசு கூட்டாட்சி முறையை வலியுறுத்துகிறது” என்ற முத்தை உதிர்த்திருக்கிறார் பிரதமர்! நம்மால் நம்பத்தான் முடியவில்லை!
கேரளா வளர்ந்தால் நாடே வளருமாம்! என்ன ஒரு மாநிலப் பற்று! கேரள மக்கள் படித்தவர்களாம்; உலக அரசியல் தெரிந்தவர்களாம். முதல் முறையாக அங்கு இருக்கும் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த பாதிரியார்களை சந்தித்திருக்கிறார்!
அரசியல் ஆதாயம் கருதி, வரும் 2024 தேர்தலைக் கருத்தில் கொண்டு, பிரதமர் ஒவ்வொரு மாநிலத்திலும் செய்யும் வழக்கமான வித்தைகள் என்றாலும், 2014 முதல் “ஒரே இந்தியா”, “ஒரே அட்டை”, “ஒரே சட்டம்” “ ஒரே கல்வி” என மாநில அரசுகளைச் சட்டை செய்யாமல், அரசியலமைப்பின் அதிகார எல்லைகளைக் கூட கருத்தில் கொள்ளாமல், எல்லா அதிகாரங்களையும் ஒன்றியத்தில் குவித்துக் கொண்டு வந்த பிரதமர், கூட்டாட்சி எனும் சொல்லை முதன் முதலில் உதிர்த்திருக்கிறார்.
“நீட்”, “நெக்ஸ்ட்” எனும் பொதுத் தேர்வுகளை நம் மாணவர்கள் மீது திணித்து, அவர்களின் மருத்துவக் கனவுகளைத் தவிடுபொடியாக்கி, முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் இன்னுயிர்களை எடுத்தபோது கூட்டாட்சி சிந்தனை எங்கே போனது? நீட்டிற்கு விலக்கு கோரி நாம் சட்டம் இயற்றிக் கொண்டே இருக்கிறோமே, ஒரு முறையாவது அதை ஒப்புக் கொண்டிருந்தால், நாம் அவர் கூறுவதை நம்பி இருப்போம்! புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்க மாட்டோம் என அறிவித்த பின்னரும் அதைக் கொல்லைப்புறமாக வலியுறுத்துவது தான் கூட்டாட்சியா?
பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களை முதல்வரைப் போலவும், அவருக்கு எதிராகவும் செயல்பட அறிவுறுத்தி, மாநில நலன்களுக்கு எதிராக செயல்படுவதுதான் கூட்டாட்சியை வலியுறுத்தும் அழகா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, அலங்காரப் பதவி வகிக்கும் ஆளுநர்கள் மக்கள் பிரதிநிதிகளோடு மோதிக் கொண்டிருப்பது கூட்டாட்சியின் அழகா?
தங்கள் கட்சி ஆளாத மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரிப் பகிர்வில் நிலுவை வைப்பது, குறைத்துக் கொடுப்பது, திட்டங்களைக் கிடப்பில் போடுவது என்று பாகுபாடு பார்ப்பது தான் கூட்டாட்சித் தத்துவத்தின் சாரமா?
தொடர்ச்சியாக மாநிலத்துக்குள் இயங்கும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், ஒன்றிய அரசின் நிதி உதவியில் இயங்கும் பள்ளிகள், பொதுத் துறை நிறுவனங்களில், மாநில மக்களின் மொழியையோ, இருப்பிடத்தையோ ஒரு தகுதியாக்காமலும், ஏனைய தில்லுமுல்லு விதிமுறைகளாலும் ஒரு தமிழர் கூட இடம்பெறாத வண்ணம் பணி நியமனங்கள் நடப்பதுதான் கூட்டாட்சியின் வலியுறுத்தலா? இந்தி பேசாத மாநிலங்களில்,இரண்டாவது அலுவல் மொழியாக இந்தியைத் திணித்தும், இல்லாத சமஸ்கிருதத்தைக் கொண்டாடவும் வலியுறுத்துவது எவ்விதமான கூட்டாட்சி?
ஆயிரம் கேள்விகள் நம் நெஞ்சில் தைக்கின்றன. கூச்சமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த மக்களுக்கேற்றாற் போலப் பேசிக் கவரும் பிரதமரே, முதல் முறையாக கூட்டாட்சி என வாய்மொழி அருளி இருக்கிறார், அடி பலமா? அல்லது பயம் வந்துவிட்டதா?
கூட்டாட்சிக்கான மாநில உரிமைகளை மக்கள் போராடிப் பெறுவார்கள்.
எனில் இந்தியா என்பது ஒரு தேசம் அன்று, பல்வேறு தேசியங்களின் தொகுப்பு, ஒன்றியம்.
அவரவருடைய மொழியை, நிலத்தை, சுற்றுச்சூழலை, மக்கள் நலனைப் பாதுகாப்பதில் இங்கு எந்த ஒன்றிய அரசும் அந்தந்த மண்ணின் மைந்தர்களை விஞ்சிவிட முடியாது.
- சாரதாதேவி