இளம் பருவத்தினர் தங்கள் எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள வந்து தஞ்சமடையும் சரணாலயங்களே கல்வி நிறுவனங்கள். அது பள்ளிகளாக இருந்தாலும், கலை நிறுவனங்களாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், பல்கலைக்கழகங்களாக இருந்தாலும், அங்கு தான் நம் எதிர்கால சந்ததியினரின் திறமைகளை, அறிவை, கலைகளை, ஆய்வு நோக்கை, வளர்த்தெடுக்கிறோம். மாணவர்களுக்கு அவர்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறோம்.

மேம்பட்ட மனிதவளத்தை புத்துருவாக்கம் செய்து இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தொடர்ச்சியாக வழங்கி வருபவை கல்வி நிறுவனங்களே! அத்தகைய கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் எவ்வாறு மாணவச் செல்வங்களை நடத்த வேண்டும்? குருகுலக் கல்வி பயிற்று முறையிலிருந்து, நிறுவனப் பயிற்று முறைக்கு மாறி, கல்வியில் சனநாயகப் பண்புகளை வளர்த்தெடுத்து வரும் இவ்வேளையில், மாணாக்கரின் மீதான் பாலியல் வன்முறைகள், சீண்டல்கள், என வெளிவரும் செய்திகள் பேரதிர்ச்சியைத் தருகின்றன.kalashetra students agitation 7002021இல் சென்னை, பத்மா சேஷாத்ரி பால பவனில் முன்னாள் மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் இராஜகோபால் என்பவர் பாலியல் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார். சென்ற ஆண்டு, ஒரு கிறித்துவ பாதிரியார் சில மாணவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காகக் கைது செய்யப்பட்டார். இதோ இந்த ஆண்டு தொடங்கியவுடன், சென்னை கலாஷேத்ரா மாணவிகள் போர்க்கோலம் பூண்டு தங்கள் நிறுவனத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர். ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் சில ஆசிரியர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

ஆசிரியரை, தங்கள் பெற்றோருக்கு அடுத்தபடியாக தங்கள் நலன் நாடுபவர்களாகப் பார்க்கும் மாணவ சமுதாயத்தை, தங்கள் காம இச்சைகளுக்கான இலக்காக ஒரு ஆசிரியர் எவ்வாறு பார்க்க இயலும்? அவர்கள் எளிய இலக்காக அமைந்து விடுவார்கள் என்று ஆசிரியர் துணிவு கொள்வது எவ்வாறு? இவை, சாதிய, மதக் கட்டுமானத்தில் பின்னிக் கிடக்கும் இச்சமூக அமைப்பின் கோளாறுகளே!.

தமிழ்நாடு அரசு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவருக்கு உதவ, அவசர உதவி எண் 14417 ஐ பாடப் புத்தகங்களின் அட்டைகளிலேயே அச்சிட உத்தரவிட்டது. சென்ற ஆண்டிலிருந்தே அவை அச்சிடப்பட்டுள்ளன. துணிவுடனும் நம்பிக்கையுடனும் மாணவர்கள் தங்கள் மீதான பாலியல் சுரண்டல்களை வெளிக்கொணர்வதை ஊக்குவிப்பதும், அவர்களுக்கான பாதுகாப்பையும், தீர்வையும் உறுதி செய்வதும் அரசின் கடமை!

வேறுபட்ட வர்க்க, ‘ சாதியப் பின்புலங்களிலிருந்து வரும் மாணவர்களை ஒன்று போல் கருதி, அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் சமூகப் புரைகளை நீக்குவதே “ஆசு இரிய”ப் பணி! அதை விடுத்து தாமே இன்னும் பல மாசுகளை மனத்தில் இருத்திக்கொண்டு மாணவச் சமூகத்தைத் தன் சுயநலத்துக்குப் பயன்படுத்துவோரை தகுந்த கண்காணிப்பு நடைமுறைகள் கொண்டு நீக்குவதும், தண்டிப்பதும் நன்று. ஆசிரியப் பெருமக்களை பணிக்கு எடுக்கு முன், அவர்களுக்கு சமூகம் குறித்த, மாணாக்கர் குறித்த சமத்துவ, பாதுகாக்கும் சீரிய பார்வை இருக்கிறதா என அறிய நேர்முகத் தேர்வு ஒன்றைக் கட்டாயமாக்குதல் நலம்!

சாரதாதேவி

Pin It